search icon
என் மலர்tooltip icon

    உண்மை எது

    • தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது.
    • பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன் என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டின் பெயரை 'பாரத்' என மாற்ற போவதாக செய்திகள் வெளியாகிவரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் முகப்பு படத்தை மாற்றியதாக தகவல் பரவி வருகிறது. 



    'பாரதியனாக இருப்பதை பாக்கியமாக கருதுகிறேன்' என்ற வாசகத்துடன் டோனியின் இன்ஸ்டாகிராம் முகப்பு படம் உள்ளது. ஆனால் அவர் கடந்தாண்டு சுதந்திர தினத்தையொட்டி இதனை முகப்பு படமாக வைத்திருப்பதே உண்மை நிலவரம் ஆகும். அப்போது முதல் தற்போது வரை டோனி தனது முகப்பு படத்தை மாற்றாமல் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நடிகை திவ்யா ஸ்பந்தனா காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார்.
    • பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கினார்.

    கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் 2013-ஆம் ஆண்டு மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். பின்னர் அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்.


    ஜெனிவாவில் திவ்யா ஸ்பந்தனா

    தற்போது 40 வயதான நடிகை திவ்யா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று காலமானதாக செய்தி பரவி வந்தது. இந்நிலையில், நடிகை திவ்யா ஜெனிவாவில் நலமுடன் இருப்பதாகவும் அவர் இறந்ததாக வெளியான செய்தி வதந்தி என்றும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    • வெள்ளையர்கள் பலர் இந்திய வேத மந்திரங்களை சரியாக உச்சரித்தனர்
    • வேத யூனியன் எனும் அமைப்பு ஐரோப்பாவில் உள்ள இந்து மதத்திற்கான அமைப்பு

    இந்தியாவின் தொன்மையான மதமான இந்து மத தெய்வ வழிபாட்டு முறைகளில், வேதம் கற்றறிந்த பண்டிதர்கள் புனித வேத மந்திரங்கள் முழங்க யாகங்கள் மற்றும் ஹோமங்கள் நடத்துவது வழக்கம். கடந்த 4 தசாப்தங்களாக அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளிலும் இந்து மத நம்பிக்கைகளும் வழிமுறைகளும் அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு பரவி வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ பரவலானது. அதில் வெள்ளையர்கள் பலர் ஒன்று கூடி அமர்ந்து இந்திய வேத மந்திரங்களை சரியான உச்சரிப்புடன் இந்தியர்களை போலவே முழங்கினர்.

    இந்நிகழ்வு அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்றதாக குறிப்பிட்டிருக்கும் அந்த வீடியோவில், "வெள்ளை மாளிகையில் இது நடைபெற்றது., அமெரிக்கர்கள் இவ்வளவு சிறப்பாக சமஸ்கிருத வேத மந்திரங்களை உச்சரிக்கின்றனர் என்பது கற்பனை செய்யவே முடியவில்லை" என ஒரு குறுஞ்செய்தியும் பதிவிடப்பட்டிருந்தது. வெள்ளை மாளிகையில் இது என்று நடந்தது என்கிற தேதி குறிப்பிடப்படாமல் வீடியோ பரவியது.

    ஆய்வில் இது உண்மையல்ல என்பது தெளிவாகியுள்ளது.

    யூடியூப் மற்றும் பேஸ்புக் எனப்படும் இணையவழி சமூக வலைதளங்களில் இந்த வீடியோ ஏற்கெனவே 2018ல் பதிவிடப்பட்டிருப்பதும், அதில் காணப்படும் நிகழ்வு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள குரோஷியா நாட்டில் நடந்த ஒரு இந்து மத வைதீக சம்பவத்தில் வெள்ளையர்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதும் தெரிய வந்துள்ளது.

    ஐரோப்பாவில் உள்ள இந்து மத வேதங்கள் ஓதும் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் "வேத யூனியன்" எனும் இந்து மத அமைப்பு, 2018 மார்ச் 3-லிருந்து 4 வரை ஐரோப்பா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்வில் வெள்ளையர்களும் பங்கு பெற்றார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் ஒன்று தவறுதலாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் பெயருடன் பரவியிருக்கிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • கிங் கான் என அழைக்கப்படும் ஷாருக்கிற்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்
    • டிசம்பர் 22, 2011 அன்று டான்-2 பட விளம்பரத்திற்காக பாட்னா வந்திருந்தார்

    இந்தி திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் ஷாருக் கான்.

    ஷாருக் கதாநாயகனாக நடித்து, தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ இயக்கி இந்த வாரம் திரைக்கு வரவிருக்கும் இந்தி திரைப்படம், ஜவான். இப்படத்தை இந்தியாவிலும் உலகெங்கிலும் இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழி திரைப்பட ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

    இந்நிலையில், இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி சம்பந்தமான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் பெருமளவில் மக்கள் திரளாக கூடி பாலிவுட் திரையுலகில் "கிங் கான்" என அழைக்கப்படும் ஷாருக்கை காண உற்சாகமாக கூடியிருக்கிறார்கள்.

    ஆனால், ஆய்வில் இது தவறு என தெரிகிறது.

    உண்மை என்னவென்றால், ஷாருக் கான் நடித்த டான்-2 எனும் திரைப்படம் டிசம்பர் 23, 2011 அன்று திரையரங்குகளில் வெளியானது.

    அதற்கு முந்தைய நாள், டிசம்பர் 22, 2011 அன்று, அத்திரைப்படத்திற்கான விளம்பர நிகழ்ச்சிக்காக பீகார் தலைநகர் பாட்னாவிற்கு ஷாருக் வந்திருந்தார். அப்போது அவர் பாட்னாவின் முக்கிய குறியீட்டு இடங்களில் ஒன்றான பிஸ்கோமான் பவன் (Biscomaun Bhawan) அருகே உள்ள மவுர்யா ஓட்டலில் தங்கியிருந்தார்.

    அவரை காண பெருமளவில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். தனது ரசிகர்களை ஓட்டல் பால்கனியிலிருந்து கண்ட ஷாருக் அவர்களை நோக்கி உற்சாகமாக கையசைத்தார். அவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

    இப்போது வைரலாகியிருக்கும் வீடியோ காட்சியில் மக்கள் வெள்ளத்திற்கு பின்னால் பிஸ்கோமான் பவன் தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் இப்போது தவறுதலாக ஜவான் பட நிகழ்ச்சி எனும் பெயரில் வைரலாகி உள்ளது என தெரியவந்துள்ளது. இதற்கும், ஜவான் பட இசை வெளியீட்டு விழாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • ட்வெர் பகுதிக்கு அருகே குசென்கினோ கிராமத்தில் விமானம் விபத்திற்குள்ளானது
    • கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்ததை அடுத்து, ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் அப்போது தொடங்கி தற்போது வரை நடக்கும் போரில் ரஷியாவிற்கு உதவியாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழு எனும் ஒரு அமைப்பும் பங்கேற்றது.

    இதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். ரஷியாவிற்கு உதவி வந்த பிரிகோசின் திடீரென இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார். ஆனால், புதின் இக்கிளர்ச்சியை சாமர்த்தியமாக எதிர்கொண்டு பெரிதாகாமல் அடக்கினார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ரஷியாவின் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி எம்ப்ரேயர் லெகசி 600 ஜெட் விமானத்தில், ட்வெர் பகுதிக்கு அருகே பயணம் செய்த போது, குசென்கினோ கிராமத்தில் அந்த விமானம் விபத்திற்குள்ளாகியது. அதில் பயணம் செய்த 10 பேருடன் அவரும் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது.

    இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியானது. அதில் ஒரு விமானம் விபத்திற்குள்ளாகி தீப்பிடித்து கீழே விழும் காட்சியுடன் அது எவ்ஜெனி பயணம் செய்த விமானம் என குறுஞ்செய்தியும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை உண்மையென நம்பி பலரும் இணையத்தில் இதனை பரவலாக்கினர்.

    ஆனால், ஆய்வில் இந்த செய்தி உண்மையல்ல என தெரிய வந்துள்ளது.

    இந்த வீடியோவில் காணப்படும் விமானம், ரஷிய விமான படையை சேர்ந்த ஏ.என்.-26 (AN-26) ரக விமானம் என்றும் அதை வாக்னர் குழு ஜூன் 24 அன்று சுட்டு வீழ்த்தும் காட்சிதான் வீடியோவில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. தனது கிளர்ச்சியின் போது வாக்னர் குழு 7 ரஷிய விமானங்களை சுட்டு வீழ்த்தியது. அதில் ஒன்று விழும் காட்சிதான் வீடியோவில் பரவலாக்கப்பட்டது.

    ஜூன் மாதம் வீழ்த்தப்பட்ட இந்த விமானத்தின் காட்சிக்கும் ஆகஸ்ட் மாதம் பிரிகோசினை பலி வாங்கிய விபத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் வெளிவரும் அனைத்து செய்திகளும் முழுவதுமே உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • 2023 ஆகஸ்டில் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்தார்
    • 2022 பிப்ரவரி மாதமே அமெரிக்கா பயண கட்டுப்பாடுகளை வெளியிட்டு இருந்தது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை சிறப்பு ராணுவ நடவடிக்கை எனும் பெயரில் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ மற்றும் பொருளாதார உதவியுடன் ரஷியாவுடன் கடுமையாக போரிட்டு வருகிறது.

    ரஷியாவிற்கு போரில் உதவி வந்த தனியார் ராணுவ அமைப்பும், கூலிப்படையுமான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின், இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷியாவிற்கு எதிராகவும், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் இறங்கினார்.

    சாமர்த்தியமாக இதனை புதின் எதிர்கொண்டு இந்த கிளர்ச்சியை அடக்கினார். இதனையடுத்து பிரிகோசின், தனது உயிருக்கு ஆபத்து வரலாம் என அஞ்சி, ரஷியாவின் அண்டை நாடான பெலாரசில் தஞ்சம் புகுந்தார்.

    இந்நிலையில் ஆகஸ்ட் 23-ம் தேதி, வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் ஒரு விமான விபத்தில் உயிரிழந்ததாக ரஷியா அறிவித்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவியது.

    அமெரிக்க அரசாங்கம், தனது குடிமக்கள் யாரேனும் பெலாரஸ் நாட்டில் இருந்தால் அவர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டிருந்ததை குறிப்பிட்டு பேஸ்புக் மற்றும் எக்ஸ் (டுவிட்டர்) வலைதளங்களில், "பெலாரஸ் நாட்டை விட்டு தனது குடிமக்கள் வெளியேற வேண்டுமென அமெரிக்கா முதல்முறையாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அது வந்த இரு நாட்களில் பிரிகோசின் பலியானார். ஒரு வேளை பிரிகோசினிற்கு ஏற்படப்போகும் நிலை குறித்து அமெரிக்கா முன்னரே அறிந்திருக்கலாம்" என குறுஞ்செய்தியுடன் அந்த தகவல் பரவியது.

    எவ்ஜெனி பிரிகோசின் மரணத்தில் ரஷியாவிற்கு பங்கு இருக்கலாம் என பலர் நம்பி வந்த நிலையில், இச்செய்தியின் மூலம், அமெரிக்காவிற்கு பிரிகோசின் மரணம் குறித்து முன்னரே தகவல் தெரிந்திருக்கும் என கருத்துக்களை பறிமாறி கொண்டனர்.

    ஆய்வில் இந்த தகவல்கள் அனைத்தும் தவறு என நிரூபணமாகியுள்ளது.

    2022 பிப்ரவரி மாதமே பெலாரஸ் நாட்டின் தலைநகர் மின்ஸ்க்கில் உள்ள அமெரிக்க தூதரகம் உலகெங்கிலும் உள்ள தனது குடிமக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

    அதில், "ரஷியா, பெலாரஸ் நாட்டின் எல்லைகளில் படைகளை குவித்து வருவதாலும், வெளிநாட்டினர் அங்கிருந்து வெளியேறுவது தடுக்கப்படும் ஆபத்து உள்ளதாலும், அமெரிக்கர்கள் பெலாரஸ் நாட்டிற்குள் வர வேண்டாம். பெலாரஸிலுள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்," என்று அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது.

    இந்த பயண கட்டுப்பாடு குறித்த உத்தரவு மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் 12 மற்றும் ஜூலை 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவால் புதுப்பிக்கப்பட்டது.

    பிரிகோசின் இறப்பதற்கு 2 தினங்களுக்கு முன், பெலாரஸ்ஸின் அண்டை நாடான லிதுவேனியா, லிதுவேனியா-பெலாரஸ் எல்லைகளில் உள்ள பெலாரஸ் நோக்கி செல்லும் 2 முக்கிய வழிகளை மூடியது. இதனால் அமெரிக்காவின் பயண கட்டுப்பாடு மீண்டும் ஆகஸ்ட் 21 அன்று புதுப்பிக்கப்பட்டது.

    ஆக, எவ்ஜெனி பிரிகோசின் இறப்பை முன்கூட்டியே அறிந்துதான் அமெரிக்கா பயண தடை விதித்தது எனும் செய்திகளில் உண்மை இல்லை.

    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது
    • ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் ராஞ்சியில் உள்ள ஒரு பொதுத்துறை நிறுவனம்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதி அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    இதற்காக உலகெங்கிலும் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள் இன்னமும் தொடர்ந்து குவிந்து வருகிறது.

    இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் விமர்சகரும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளருமான டெஹ்ஸீன் பூனாவாலா, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 3 மாதமாக சம்பளம் தரப்படவில்லை என கூறி, அவர் பங்கு பெற்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளரை, தான் கூறும் விவரங்களை சரிபார்க்குமாறு சவால் விடும் வகையில் கூறியிருந்தார்.

    இவர் கூறியது உண்மையென நம்பி சில அரசியல் விமர்சகர்களும், பா.ஜ.க. எதிர்ப்பாளர்களும், தொலைக்காட்சி பேட்டியிலும், சமூக வலைதளங்களிலும், மத்திய அரசை கிண்டல் செய்தும், விமர்சித்தும் கருத்துக்களை வெளியிட்டனர்.

    ஆனால், ஆய்வில் டெஹ்ஸீன் பூனாவாலா கூறியது உண்மையல்ல என்பது தெரிய வந்திருக்கிறது.

    உண்மை என்னவென்றால், சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன.

    அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது. பல காரணங்களுக்காக பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

    இதன் காரணமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்களுக்கு

    சம்பளம் தர இயலவில்லை. இதனை இஸ்ரோவுடன் தொடர்புபடுத்தி சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவ ஆரம்பித்தன.

    டெஹ்ஸீன் தவறாக புரிந்து கொண்டு கூறியது போல் பலரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சம்பளம் தரப்படவில்லை என நம்ப ஆரம்பித்தனர். உண்மையில் ஒவ்வொரு மாதமும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மாதத்தின் கடைசி தேதியன்று அம்மாத சம்பளம் எந்தவித தடையும் இன்றி கொடுக்கப்பட்டு வருகிறது.

    இணையத்திலும், ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளிலும் செய்திகளிலும் வரும் அனைத்து செய்திகளும் உண்மை என நம்புவது தவறு என செய்தித்துறை வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • ரோவர் அனுப்பிய முதல் வீடியோ என சுமார் 03:03 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோ பரவியது
    • கியூரியாசிட்டி ரோவரை அட்லஸ் வி-451 ராக்கெட்டில் 2011 நவம்பரில் அனுப்பியது

    இந்தியா கடந்த ஜூலை மாதம் விண்ணில் ஏவிய சந்திரயான்-3, ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவின் தென் துருவ மேற்பரப்பை தொட்டது.

    இதில் உள்ள "விக்ரம்" எனும் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும், அதிலிருந்து "பிரக்யான்" எனும் ரோவர் வாகனம் கீழிறங்கியது. திட்டமிட்டபடி பிரக்யான் ரோவர், நிலா குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை பூமிக்கு அனுப்பும்.

    இந்நிலையில் சமூக வலைதளங்களில் நிலவிலிருந்து ரோவர் அனுப்பிய முதல் வீடியோ என சுமார் 03:03 நிமிடங்கள் ஓடும் ஒரு வீடியோ பரவியது. பாறை நிறைந்த சாம்பல் நிற மேற்பரப்பை காட்டிய இந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர்.

    ஆனால் இதனை ஆய்வு செய்த போது, இந்த வைரல் வீடியோவின் 02:40 நிமிடத்தின் போது "நாசா" (NASA) மற்றும் "மார்ஸ்" (செவ்வாய் கிரகம்) எனும் வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதனை மேலும் ஆய்வு செய்ததில், செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்காவின் நாசா எனும் தேசிய வானியல் மற்றும் விண்வெளி அமைப்பு, அட்லஸ் வி-451 எனும் ராக்கெட்டில் 2011 நவம்பர் 26 அன்று அனுப்பி வைத்த விண்கலன், செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்ட் 5, 2012 அன்று தரையிறங்கியதும் அதன் ரோவர் வாகனமான, கியூரியாசிட்டி (Curiosity), தனது மாஸ்ட்-காம் (Mastcam) கேமரா மூலம் எடுத்து அனுப்பிய வீடியோ இது என தெரிய வந்துள்ளது.

    இந்த வீடியோவில் காணப்படும் சாம்பல் நிறமும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் தருகின்ற தகவல்கள் அனைத்தையும் உண்மை என நம்புவது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • வீட்டிற்கு வெளியே சாலையின் நடுவே தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு செல்கிறார்
    • மக்களுக்கு கோவிட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பணியாளர்கள் எடுத்த வீடியோ

    இணையத்தில் சமீபத்தில் ஒரு வீடியோ பரவியது.

    அதில் ஒரு பெண்மணி தனது வீட்டு வாசலில், தனது முகத்தை மூடிக்கொண்டு, வேறு சில பெண்மணிகளை வீட்டிற்கு உள்ளே வர விடாமல் வெளியே நிற்குமாறு சைகை காட்டுகிறார். அவர்கள் தூர நிற்கும் போது இந்த பெண்மணி வீட்டு வாசலில் உள்ள சாலைக்கு நடுவில் ஒரு தண்ணீர் பாட்டிலை வைத்து விட்டு செல்கிறார்.

    "இந்த வீடியோவை கண்டால் இட ஒதுக்கீடு தேவை என்பது விளங்கும். இப்படி ஒரு பாகுபாடு பிராமண அல்லது தாக்கூர் அல்லது பனியா சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு எதிராக நடைபெறுமா?" என ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டு ஒரு குறுஞ்செய்தியையும் இணைத்திருந்தார்.

    இந்த வீடியோவை உண்மை என நம்பிய பல பயனர்கள் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, அந்த பெண்மணியை கடுமையாக விமர்சித்து, உயர் வகுப்பை சேர்ந்தவர்களையும் தாக்கி பரவலாக கருத்துக்களை வெளியிட்டனர்.

    ஆனால் ஆய்வில் இந்த வீடியோ உண்மையில் ஜூன் 22, 2020 அன்று கோவிட் காலகட்டத்தில் நிலவிய கோவிட சுகாதார கட்டுப்பாடுகளின் போது ஒரு வீட்டு வாசலில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரிய வந்துள்ளது.

    கோவிட் கட்டுப்பாடுகள் குறித்து அக்காலகட்டத்தில் மக்களிடையே நிலவிய அச்சத்தை போக்கும் வகையில் கர்நாடகாவின் பெங்களூரூவில் சுகாதார பணியாளர்கள் எடுத்திருந்த வீடியோ என தெரிய வந்துள்ளது.

    • ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினமாகவும், ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது
    • இந்தியா என்னவாக வேண்டும் என விரும்பியதோ அதனை பொறுத்தே எல்லாம் அமைந்திருக்கிறது

    பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமைப்படுத்தப்பட்டு இருந்த ஒன்றுபட்ட இந்தியா, 1947 ஆகஸ்ட் மாதம், சுதந்திரத்தின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிவினை செய்யப்பட்டது.

    இதனையொட்டி வருடாவருடம் ஆகஸ்ட் 14 பாகிஸ்தானின் சுதந்திர தினமாகவும், மறுநாளான ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

    சென்ற வாரம் இந்தியாவின் 77வது சுதந்திர தினம் மிக விமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்தியா சமீபகாலமாக பல நாடுகளுடன் நல்லுறவை வளர்ப்பதில் முயற்சி எடுத்து வருகிறது. இதில் அரபு நாடுகளும் அடங்கும்.

    அரபு நாடான துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா, இந்திய சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக கட்டிட வெளிப்புறம் முழுவதும் பல்வேறு அலங்கார ஒளி வடிவங்களால் இந்திய மூவர்ண கொடியை அழகாக பரவ விட்டிருந்தது. இது காண்போரை பரவசப்படுத்தியது.

    இக்காட்சி உலகெங்கும் சமூக வலைதளத்தில் வைரலானது.

    இந்நிலையில் பாகிஸ்தானின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 14ம் தேதியை குறிக்கும் விதமாக புர்ஜ் கலிஃபா அலங்கார மின்னொளி காட்சிகளை வெளிப்படுத்தவில்லை என ஒரு வீடியோ பரவியது.

    இதனை பரவலாக்கியவர்களில் ஒரு பயனர், "பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று அதனை ஏமாற்றிய புர்ஜ் கலிஃபா, இந்திய சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஒளிர செய்திருக்கிறது. ஒரே சுதந்திர போர்தான், ஒரே சுதந்திரம்தான். ஆனால் இந்தியா என்னவாக வேண்டும் என விரும்பியதோ அதனை பொறுத்தே எல்லாம் அமைந்திருக்கிறது" என இந்தியாவை பாராட்டும் விதமாக ஒரு குறுஞ்செய்தியையும் இதனுடன் பதிவு செய்திருந்தார்.

    உண்மையில் நடந்தது என்னவென்றால், புர்ஜ் கலிஃபாவில் ஆகஸ்ட் 14 -ம் தேதி மாலை 07:50 மணிக்குத்தான் பாகிஸ்தான் கொடி ஒளிர செய்யப்பட்டது. ஆனால், அக்கட்டிடத்திற்கருகே பாகிஸ்தானியர்கள் ஆகஸ்ட் 14 அன்று, நாள் தொடங்கும் நள்ளிரவு நேரத்தில் கூடியிருந்தனர்.

    அவர்களில் ஒரு பெண் "மணி 12:01 ஆகிறது. ஆனால் பாகிஸ்தான் கொடி கட்டிடத்தில் ஒளிரப்படவில்லை" என ஒரு வீடியோவை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதனை நம்பிய ஒரு சில இந்தியர்கள், மறு நாள் இந்திய மூவர்ண கொடியால் ஒளிரும் புர்ஜ் கலிஃபாவையும், அப்பெண்மணி பரப்பிய செய்தியையும் இணைத்து தவறுதலாக ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கின்றர்.

    அந்த வகையில், புர்ஜ் கலிஃபாவில் பாகிஸ்தான் கொடி தாமதமாக ஒளிர செய்ததே, இந்த தகவல் பரவ காரணமாகி விட்டது. உண்மையில், இந்திய தேசிய கொடியை போன்றே, பாகிஸ்தானின் கொடியும் புர்ஜ் கலிஃபாவில் ஒளிர செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • இச்சம்பவம் ஆகஸ்ட் 11 அன்று நடந்துள்ளது
    • ஹைதர் கடைக்கு சென்ற போது மீண்டும் அவரை சூழ்ந்து கொண்டு தாக்கியுள்ளனர்

    சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில் உத்தர பிரதேசத்திலுள்ள ஹர்டோய் பகுதியில், ரெயில் தண்டவாளத்திற்கு அருகே ஒரு மனிதரை பல ஆண்கள் சேர்ந்து தாக்கும் காட்சிகள் இருந்தன.

    இதனை பகிர்ந்தவர்களில் ஒரு பயனர் பகிரும் போது அவ்வீடியோவுடன், "ரெயில்வே கேட் காவலாளியை ஜிஹாதிகள் தாக்குகிறார்கள். அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் அவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்." என குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தியும் அத்துடன் இணைத்திருந்தார்.

    ஆனால், விசாரணையில் அந்த வீடியோவில் உள்ள சம்பவம், ஆகஸ்ட் 11 அன்று, உத்தர பிரதேச ஹர்டோய் பகுதியில் உள்ள பிஹானி கோட்வாலி வட்டாரத்தில் உள்ள மஹ்முத்புர் சரயா கிராமத்தில் ஒரு விபத்து குறித்து நடந்த வாக்குவாதம், முற்றி கைகலப்பாக மாறிய போது எடுக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.

    மஹ்முத்புரில் வசிக்கும் சபா ஹைதர் என்பவர் மோட்டார்சைக்கிளில் சென்ற போது பர்வீன் என்பவர் மீது மோதி விட்டு, அவரது மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார். ஆனால், அவர்தான் மோதியது என்பதை அறிந்து கொண்ட பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள், சபா வீட்டிற்கு செல்லும் முன்பே அவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இரு குடும்பத்து பெரியவர்களும் தங்களுக்குள் பேசி சமாதானப்படுத்தியதால் பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள் திரும்பி சென்றனர். இதையடுத்து ஹைதர் தன் கடைக்கு சென்றார். அப்போது பர்வீன் வீட்டை சேர்ந்தவர்கள் மீண்டும் அவரை சூழ்ந்து கொண்டு ரெயில்வே கிராசிங்கிற்கு அருகே அவரை அடித்தனர். இந்த சம்பவம் வீடியோவாக அப்போதே வெளியிடப்பட்டது.

    இச்சம்பவத்தில் ரெயில்வே கேட்மேனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் இதில் எந்தவிதத்திலும் மத சம்பந்தமான காரணங்கள் இல்லை என ரெயில்வே உயர் அதிகாரிகளும், காவல்துறையினரும் உறுதி செய்துள்ளனர்.

    • காட்டுத்தீ லஹாய்னா பகுதியில் சுமார் 100 பேரை பலி வாங்கியது
    • வீடியோக்களின் உண்மைதன்மை குறித்து அறியாதவர்களால் அவை வேகமாக பரப்பப்பட்டது

    மேற்கு அமெரிக்காவில் உள்ள தீவு ஹவாய்.

    இம்மாத தொடக்கத்தில் இத்தீவில் உள்ள மவுய் தீவிலும், அருகிலுள்ள சிறு தீவுகளிலும் ஒரு காட்டுத்தீ தொடங்கி படுவேகமாக பரவியது.

    பலமாக வீசிய காற்று இதனை மேலும் வேகமாக பரவ செய்ததால் தீ கட்டுக்கடங்காமல் காடுகளை சேதம் செய்தது. ஹவாய் தீவின் லஹாய்னா பகுதியில் சுமார் 100 பேரை இது பலி வாங்கியது. இதில் 1000 பேருக்கு மேல் காணாமல் போனார்கள்.

    இந்த காட்டுத்தீ குறித்து இணையத்தில் செய்திகளும், வீடியோக்களும் பரவி வந்தன. ஆனால், இவற்றில் ஒரு சில ஹவாய் காட்டுத்தீ சம்பந்தமானது என வேண்டுமென்றே பொய்யாக பதிவேற்றப்பட்டவை.

    அதன் உண்மைதன்மை அறியாதவர்களால் இந்த வீடியோ காட்சிகள் வேகமாக வைரலாக்கப்பட்டது.

    முதல் வீடியோவில் தீ வேகமாக பரவுகிறது. அதை தூர நின்று பார்வையாளர்கள் பதிவு செய்கின்றனர். இதை வெளியிட்ட பயனர் "தெருவையே தீ நாசம் செய்கிறது" என குறுஞ்செய்தியும் இதனுடன் பதிவு செய்திருந்தார்.

    ஆனால், ஆய்வில் இது அமெரிக்காவில் ஓஹியோ மாநிலத்தின் க்ளீவ்லேண்ட் பகுதியில் ஜூன் 2022 காலக்கட்டத்தில் காய்ந்த தழைகளில் ஏற்பட்ட தீ பரவலை குறித்த வீடியோ என தெரிய வந்துள்ளது.

    இதேபோல் மற்றொரு வீடியோவில் ஒரு மின்னல் போன்ற ஒளி ஒன்று ஒரு இடத்தை தாக்கி தீயை உண்டாக்குகிறது. இதனை வெளியிட்டவர், "மவுய் காட்டுத்தீ குறித்த மனதை வருந்த வைக்கும் காட்சிகள்" என ஒரு குறுஞ்செய்தியும் இதனுடன் பதிவிட்டிருந்தார்.

    ஆனால், ஆய்வில் இது 2 மாத பழைய வீடியோ என்றும் இது இந்த வருடம் ஜூன் மாதம் ஒரு மின்மாற்றியில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்த வீடியோ என தெரிய வந்துள்ளது. இது அனேகமாக சிலி நாட்டில் நடைபெற்றிருக்கலாம் என சில தகவல்கள் தெரிவித்தாலும் ஊர்ஜிதம் செய்ய முடியவில்லை. ஆனால் இதுவும் ஹவாய் தீவின் காட்டுத்தீ குறித்த வீடியோ அல்ல என தெளிவாக தெரிகிறது.

    இணையத்தில் பகிரப்படும் செய்திகள், தகவல்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் எப்போதுமே உண்மையானவை என பொது மக்கள் நம்பி விட வேண்டாம் என செய்தித்துறை வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×