என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    சென்னை மாநகர் முழுவதும் 323 இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019

    சென்னை:

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெறுவதையொட்டி அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    தமிழகம் முழுவதும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சத்தமில்லாமல் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.

    சென்னை மாநகர் முழுவதும் 323 இடங்களில் பணப்பட்டுவாடா நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை பதட்டமான இடங்கள் என்று அறிவித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #LokSabhaElections2019

    மண்ணடியில் விடுதியில் தங்கி இருந்தவரிடம் ரூ. 3½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #LokSabhaElections2019

    ராயபுரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல் பகுதியில் உள்ள விடுதிகளில் வெளியாட்கள் யாரேனும் தங்கி உள்ளனரா? என்று போலீசார் நேற்று இரவு அதிரடி சோதனை நடத்தினர்.

    மண்ணடி, ராமசாமி தெருவில் உள்ள விடுதியில் சோதனை நடத்திய போது தென்காசியை சேர்ந்த நாகூர் மெய்தீன் என்பவர் தங்கி இருந்தார்.

    அவர் வைத்திருந்த பையில் ரூ. 3½ லட்சம் ரொக்கம் இருந்தது. இந்த பணத்துக்கான ஆவணம் நாகூர் மொய்தீனிடம் இல்லை.

    இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.

    உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும்படி நாகூர் மொய்தீனிடம் தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். #LokSabhaElections2019

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமானவரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் துப்பாக்கி சூடு நடத்தியும் ஆளும் அ.தி.மு.க.வினர் நடத்திவரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தமிழகத்தின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்கான தொகையை வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன.

    ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை.

    தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும், காவல்துறையும் துணை போவது வெட்கக்கேடானதாகும்.

    துணை முதல்-அமைச்சரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்-அமைச்சரே பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

    எம்.எல்.ஏ விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் பல இடங்களில் அ.தி.மு.க. வினரிடம் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஆனால் அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.

    தேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி தி.மு.க. அணியின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என ஆளும் பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் நினைக்கின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    தமிழகத்தில் பல தொகுதிகளில் பண விநியோகம் ஆளுங்கட்சியினரால் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த புகார்கள் எவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை சட்டமன்ற விடுதிக்குள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அவரை நேரிடையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை கைப்பற்றிய பணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-பா.ஜ.க. அணி 40 தொகுதிகளிலும் படு தோல்வி அடையும் என்ற அச்சத்திலேயே மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இம்மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரா.முத்தரசன்:-

    வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும். குறுக்கு வழியில் வெற்றி பெற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, அதிகார துஷ்பிரயோக செயலில் அ.தி.மு.க.வும், பா. ஜனதாவும் ஈடுபட்டு வருகிறது. இதனை தமிழக மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்:-

    தமிழக மக்கள் இந்த ஜனநாயக படுகொலையை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள். தேர்தல் நடைபெறும் புதுச்சேரி உள்ளிட்ட 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் படுதோல்வி அடைவது நிச்சயம். பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியிலும் தேர்தல் நடந்துதான் ஆக வேண்டும். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற அனைவருக்கும் டெபாசிட் கிடைக்காத அளவுக்கு வெற்றியை தேடி தந்து வேலூர் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
    பண விநியோகம் நடைபெறும் தேனி பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை நிறுத்தியிருக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #Loksabhaelections2019 #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் அளித்த பேட்டி வருமாறு:-

    மோடி பிரதமராக இருக்கின்ற வரைக்கும் எது வேண்டுமானாலும் நடக்கும். ஏற்கனவே, அமலாக்கத் துறையை, சி.பி.ஐ.யை, வருமான வரித்துறையை வைத்து எப்படி மிரட்டி உருட்டி செய்து கொண்டிருக்கின்றார்களோ அதே அடிப்படையில் தான் இப்பொழுது தேர்தல் கமி‌ஷனையும் செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

    அதன் வெளிப்பாடுதான் வேலூர் பாராளுமன்றத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது ஆண்டிப்பட்டி தொகுதி, தேனி தொகுதி தேர்தல்களை நிறுத்தவேண்டும் என்ற ஒரு செய்தி வந்து இருக்கின்றது. ஆனால், நியாயமாக தேனி என்றால் தேனி பாராளுமன்றத் தொகுதி தேர்தலை தான் நிறுத்த வேண்டும்.

    ஏனென்றால் அங்கு வேட்பாளராக நிற்கக்கூடிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் சார்பில் 1000 ரூபாய், 2000 ரூபாய் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது அனைவரும் அறிந்தது. அவையெல்லாம் வீடியோக்களாக பதிவு செய்யப்பட்டு, பரவலாக ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதற்கு உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கவில்லை.

    அதேபோல், வேலுமணியின் பினாமியாக இருக்கக் கூடிய சபேசன் என்கின்ற ஒரு ஒப்பந்ததாரர். எல்லாப் பணிகளும் இந்த ஆட்சியில் அவருக்குத்தான் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. குறிப்பாக உள்ளாட்சித் துறையைப் பொறுத்த வரையில் எல்லாப் பணிகளும் அவருக்குத்தான் வழங்கப்பட்டிருக்கின்றது. சமீபத்தில் அவரது இல்லத்தில் ரெய்டு நடந்திருக்கின்றது. அதைப்பற்றி இதுவரை எந்த செய்தியும் வரவில்லை,

    இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் என்னைப் பொருத்தவரையில், தேர்தலைப் பொறுத்த வரையில். நான் உணர்ந்து கொண்டிருப்பது, ஆளும் கட்சியை சார்ந்து இருக்கக் கூடியவர்கள் எவ்வளவு தான் கோடி கோடியாக இந்த தேர்தலுக்கு செலவழித்தாலும், குறிப்பாக வாக்காளர்களுக்கு 1000, 2000, 5000, 10,000 ரூபாய் எனவும், ஏன் அதையும் தாண்டி வழங்கினாலும் மக்கள் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சியையும், மத்தியில் நடந்து கொண்டிருக்கக் கூடிய ஆட்சியையும் அப்புறப்படுத்துவதற்கான உறுதியை எடுத்து இருக்கின்றார்கள். எவ்வளவு தான் பணத்தை கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும். இந்தத் தேர்தலில் அவர்களுடைய பாச்சா பலிக்காது என்பதுதான் என்னுடைய திடமான நம்பிக்கை.

    இந்தத் தேர்தல் ஒரு புதுமையான தேர்தலாக அமையப் போகின்றது. பணத்திற்கு அடிமையாகாத, பணத்திற்கு வளைந்து போகாத, வாக்காளர்களை இந்த தேர்தல் நிரூபிக்கப் போகின்றது என்பது தான் என்னுடைய திடமான நம்பிக்கை.

    வேலூரில் தேர்தல் ரத்து என்ற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களில் தூத்துக்குடியில் ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது. அது மிரட்டலுக்காக அச்சுறுத்தலுக்காக, அந்த வேட்பாளர் பயந்து விடுவார் வேட்பாளருக்காக பணியாற்றிக் கொண்டு இருக்கக்கூடிய தி.மு.க.வை சார்ந்த கூட்டணிக் கட்சித் தோழர்கள் வேலை செய்யாமல் படுத்து விடுவார்கள், அதேபோல் பூத் ஏஜென்ட்கள் எல்லோரும் சோர்ந்து போய் விடுவார்கள் என்ற மிரட்டலுக்காக நடத்தப்பட்டது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் தி.மு.க அஞ்சாது.

    ஜனாதிபதியே கையொப்பமிட்டிருக்கின்ற பொழுது நீதிமன்றத்தில் அதற்குரிய பரிகாரம் வராது என்பது தான் எங்களுடைய நம்பிக்கை. இருந்தாலும் முறையாக என்ன செய்ய வேண்டுமோ அதனை சட்ட ரீதியாக நாங்கள் சட்ட வல்லுனர்களோடு கலந்து பேசி விட்டு அதன் பிறகு முடிவு செய்வோம்.

    சந்திரபாபு நாயுடு நேற்று வந்திருந்த பொழுது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லியிருக்கின்றார். அதை நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றோம், அதைத் தான் அவரும் சொல்லி இருக்கின்றார். அதையெல்லாம் மீறி இந்த தேர்தலில் மக்கள் சரியான ஒரு முடிவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

    சேலத்தில் முதல்வர் பணம் கொடுத்து இருக்கின்றார், கேட்டால் பழம் வாங்கினேன், அந்த பழத்திற்கு பணம் கொடுத்தேன் என்பது மாதிரி சொல்கின்றார்.

    அது ஊரை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற பதில். ஊரை ஏமாற்றுவதற்காக சொல்கின்ற நாடகம் அது. அதை ரகசியமாக கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வெளிப்படையாக அதை கொடுத்துவிட்டு போயிருக்கலாம்.

    தேர்தல் ஆணையம் கூட வரக்கூடிய காலகட்டத்தில், அதையும் ஒரு முறைப்படுத்த வேண்டிய அவசிய சூழ்நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்றது என்பதுதான் என்னுடைய கருத்து.

    நான் தெளிவாக மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில், பணத்திற்கு அடிமையாகாத நிலையில்தான் மக்கள் வாக்களிக்க இருக்கின்றார்கள். அதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #DMK #MKStalin
    ஜனநாயகத்தை காப்பாற்ற மதசார்பற்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார். #LoksabhaElections2019 #Congress #KSAlagiri
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சுதந்திரம் பெற்ற 72 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டு, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. அந்த வகையில் கடந்த 2004 முதல் காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மகத்தான சாதனைகளை புரிந்தது. அத்தகைய சாதனைகளை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குங்கள் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை ராகுல்காந்தி வெளியிட்டுள்ளார்.

    அந்த தேர்தல் அறிக்கை ஒரு அறையில் கூடி தயாரிக்கப்பட்டதல்ல. தனிப்பட்ட நபரின் குரலாக இல்லாமல் மக்களின் குரலாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அமைந்திருக்கிறது. இதில் கூறப்பட்ட பல வாக்குறுதிகள் நாட்டு மக்களிடையே நம்பகத்தன்மையையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

    கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் பா.ஜ.க. ஆட்சியில் அதிகரித்திருப்பதால் புதிதாக தொழில், சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உருவாக்கப்படும். மத்திய அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் தற்போது காலியாக உள்ள 4 லட்சம் பணியிடங்கள் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கும் நிரப்பப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி கூறுகிறது.

    இந்தியாவின் முதுகெலும்பாக 70 சதவீத மக்கள் சார்ந்திருக்கிற விவசாயத்திற்கு தனி பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    விவசாயிகள் காப்பீட்டுத் திட்டம் முழுமையான பலன்கள் தருகிற வகையில் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண் கல்லூரி துவக்கப்படும் என்பன உள்பட பல்வேறு வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கை என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு வலு சேர்க்கிற வகையில் அமைந்திருக்கிறது. பொதுப் பட்டியலில் உள்ள கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும். 1 முதல் 12-ம் வகுப்பு வரை கட்டாய இலவசக் கல்வி அனைவருக்கும் வழங்கப்படும். கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் திருத்தம் கொண்டு வரப்படும். கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதமாக உயர்த்தப்படும்.

    தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கிற வகையில் நீட் நுழைவுத் தேர்வு 2017, 2018-ம் ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகளால் திணிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களின் நலன்களை பாதுகாக்கிற வகையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

    உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இடஒதுக்கீட்டை மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றினார். அதே போல, பாராளுமன்றம், சட்டமன்றங்களில் 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கு சோனியா காந்தி முயற்சியால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் மக்களவையில் நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரிக்காத காரணத்தால் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதென காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உறுதி கூறுகிறது.

    அரசு வேலை வாய்ப்பில் 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும். 1976-ல் கொண்டு வரப்பட்ட சம ஊதிய சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும். இவையெல்லாம் பெண்ணுரிமையை காப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

    ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வருகிறார். ஜனநாயகத் தூண்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக உணர்வே இல்லாமல் செயல்படுகிற நரேந்திர மோடி ஆட்சியை அகற்றி, மக்கள் நலன்சார்ந்த ஆட்சியை மீண்டும் அமைக்க வேண்டிய பொறுப்பு வாக்காளர்களுக்கு இருக்கிறது.

    அதை நிறைவேற்றுவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எதிர்கால பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். அதே போல, தமிழகத்தின் முதல்- அமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் விரோத ஆட்சிகளை அகற்றுவதற்கு முடிவு செய்யப்பட வேண்டிய நாள் ஏப்ரல் 18. தமிழக வாக்காளப் பெருமக்கள் எதிர்காலத்தை வளமானதாக அமைத்துக் கொள்வதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #LoksabhaElections2019 #Congress #KSAlagiri
    தான் பிற்படுத்தப்பட்டவன் என்பதால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன்னை கேலி செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். #PMModi #RahulGandhi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி இன்று மராட்டிய மாநிலத்தில் அக்லுச் என்ற ஊரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    வாரிசு அரசியல் உள்ளவர்கள் தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். காங்கிரசும், அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த சமுதாயத்தில் உள்ள எல்லா மோடிகளும் திருடர்கள் என்று சொல்கிறார்கள்.

    என்னை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரே இனத்தையே களங்கப் படுத்துகிறார்கள். அவர்களது பேச்சு எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. இனியும் நான் பொறுத்துக் கொள்ளமாட்டேன்.

    நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன். அதனால் வாரிசுதாரர்கள் என்னை பார்த்து கேலி செய்கிறார்கள். நான் காவலாளி என்றால் திருடன் என்கிறார்கள்.



    உண்மையில் இந்த நாட்டை திருட நினைப்பவர்களுக்கு நான் காவலாளிதான். இதனால் அவர்களது கோ‌ஷம் என்னையும் தாண்டி என் சமுதாயத்தின் மீதும் பாய்ந்துள்ளது.

    இந்த தொகுதியில் முன்பு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போட்டியிட்டார். இந்த தடவை அவர் இங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

    நீங்கள் இங்கு கடல்போல் திரண்டு இருக்கிறீர்கள். எங்கு பார்த்தாலும் காவி கொடி பறக்கிறது. சரத்பவார் ஏன் இங்கிருந்து ஓடினார் என்பது உங்களை பார்த்தபிறகுதான் தெரிகிறது.

    நமது நாடு மிகப்பெரிய ஜனநாயக நாடு. இந்த நாட்டை வழி நடத்த வேண்டும் என்றால் வலிமையான தலைவர் வேண்டும்.

    மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தால்தான் வலிமையான தலைமை கிடைக்கும். வாரிசுகளுக்கு இடம் கொடுக்காதீர்கள்.

    இவ்வாறு மோடி பேசினார்.  #PMModi #RahulGandhi
    மோடியின் திட்டங்களால் இந்திய பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #RahulGandhi #PMModi #Loksabhaelections2019
    திருவனந்தபுரம்:

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார்.

    ராகுல் காந்தி கடந்த 4-ந்தேதி வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அன்றே அவர் தனது சகோதரி பிரியங்காவுடன் வயநாட்டில் ரோடு ஷோ நடத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    2-வது கட்டமாக ராகுல்காந்தி கேரளாவில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். பத்தனாபுரம், பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் அவர் பேசினார்.

    இன்று அவர் தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். காலையில் சுல்தான்பத்தேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் ஆதரவு திரட்டினார்.

    முன்னதாக கண்ணூரில் ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-



    மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் நாடு பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இப்போது 3 முக்கிய பிரச்சனைகள் நாட்டை பாதித்துள்ளது. முதலாவது பாதிப்பு பொருளாதார சீர்குலைவாகும். மோடியின் திட்டங்களால் ஏற்பட்ட வேலையில்லா திண்டாட்டம், பண மதிப்பிழப்பு, தொழில்துறையில் புகுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. என்னும் கொள்கை வரி விதிப்பு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    2-வது நாட்டின் முதுகெலும்புகளாக கருதப்படும் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததும், விவசாயிகளை இந்த அரசு புறக்கணித்ததும் ஒரு காரணமாகும். விவசாயிகளை புறந்தள்ளியதால் இந்நாட்டில் பல விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர்.

    3-வதாக நாட்டில் நடந்த மிகப்பெரும் ஊழல்கள். அம்பானி குடும்பத்தினருக்கு மக்களின் வரிப்பணத்தில் கொள்ளையடித்து கொடுக்கப்பட்ட ரூ.30 ஆயிரம் கோடி பணம் இதற்கு ஒரு உதாரணமாகும்.

    இந்த பிரச்சனைகளை பற்றி தான் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தேர்தலுக்கு பிறகு இவை அனைத்தையும் காங்கிரஸ் சரி செய்யும். காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்ததும் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ராகுல்காந்தி திருவம்பாடி , வண்டூர் , சாலிச்சேரி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார். அதன் பிறகு 5.10 மணிக்கு கேரள பிரசார கூட்டங்களை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். முன்னதாக காலையில் கண்ணூரில் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை நடத்தினார். #RahulGandhi #PMModi #Loksabhaelections2019
    கனிமொழி வீட்டில் சோதனை நடந்தது ஏன்? என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். #Kanimozhi #ITRaid

    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 138 கோடியே 57 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ரூ.3.16 கோடி பறிமுதலாகி இருக்கிறது. ரூ.43.5 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் பிடிபட்டுள்ளன.

    தூத்துக்குடியில் கனிமொழி தங்கி இருந்த வீட்டில் திட்டமிட்டு சோதனை நடத்தப்படவில்லை. அங்குள்ள தேர்தல் அதிகாரிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் வந்ததையடுத்து பறக்கும் படையினர் அங்கு சென்றனர். வருமான வரித் துறையினருக்கும் தகவல் வந்ததால் அங்கு சென்றனர். பணம் எதுவும் அங்கு இல்லை என்பது தெரிய வந்தது. அதிகாரிகள் திரும்பி வந்து விட்டனர்.


    ஆண்டிப்பட்டியிலும் பணம் பதுக்கி வைத்து இருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு தகவல் வந்ததால், பறக்கும் படையினரும், வருமான வரித் துறையினரும் சோதனை நடத்தினார்கள். இதில் ஒரு கோடிக்கு மேல் பணம் பிடிபட்டதாக தகவல் வந்துள்ளது. முழு விவரம் இனிமேல்தான் தெரிய வரும்.

    தேர்தல் ஆணையம் அதிகாரிகளுக்கு வரும் தகவலையடுத்து கட்சி பாகுபாடு இல்லாமல் சோதனை நடத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஒரு நிருபர், ‘‘எதிர்க்கட்சியை சேர்ந்த துரைமுருகன், கனிமொழி, வசந்தகுமார் ஆகியோருடைய வீடுகளில் சோதனை நடத்தும் அதிகாரிகள் அ.தி.மு.க. கூட்டணி சம்பந்தபட்டவர்களின் வீடுகளில் சோதனை நடத்த வில்லை. ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாக கூறப்படுகிறதே? என்று கேட்டார்.

    இதற்கு பதில் அளித்த தேர்தல் அதிகாரி எங்களுக்கு கிடைக்கும் தகவல்களை வைத்து சோதனை நடத்துகிறோம். பாரபட்சம் பார்ப்பது இல்லை. விதி மீறலில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார். #Kanimozhi #ITRaid

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. #LokSabhaElections2019 #VelloreConstituency
    சென்னை:

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

    ‘பணப் பட்டுவாடா விவகாரத்தில் சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும்? தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரைத் தான் தகுதி நீக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மட்டுமே மக்கள் பிரதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம்  செய்ய முடியும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.



    வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் பணப் பட்டுவாடா குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டால் தகுதிநீக்கம் செய்யப்படுவர் என்றும் கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறினர். எனவே, வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பது மாலை தெரிந்துவிடும்.  #LokSabhaElections2019 #VelloreConstituency
    இந்த தேர்தலில் நிச்சயம் 10 சதவீத வாக்குகள் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் பிரசாரம் கடினமாக இருந்ததா?

    பதில்:- கடினமாக இல்லை. சினிமாவில் பணிபுரிவது என்பது வேறு. வெயில், பயணம், கதாநாயகிகளுடன் நடனம், வில்லன்களுடன் சண்டை என்று இருக்கும். அரசியலில் அப்படி இல்லை. வில்லன்களுடன் அமைதியாக மோதவேண்டி இருக்கிறது. ஆனால் நடிகனாக எனக்கு மக்களிடம் கிடைத்த அன்பைவிட இப்போது அதிக அன்பு கிடைக்கிறது.

    கே:- இந்த தேர்தலை உங்களுக்கான ஆசிட் டெஸ்ட் என்று சொல்லலாமா?

    ப:- இல்லை. எனக்கான ஆசிட் டெஸ்ட் என்பது நான் டுவிட்டரில் இருந்து நேரடி கள அரசியலுக்கு வந்தபோதே முடிந்துவிட்டது. நான் மனதளவில் ஏற்படுத்திக்கொண்ட ஆசிட் டெஸ்ட் அது.

    கே:- உங்கள் கணிப்புபடி உங்கள் கட்சியின் கள நிலவரம் என்ன?

    ப:- நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் கணித்ததைவிட சிறப்பாகவே இருக்கிறது. 5 சதவீதத்துக்கு மேல் நாங்கள் வாக்குகள் பெற்றாலே பெரிது என்றார்கள். ஆனால் நான் அப்படி திருப்திபட்டுக் கொள்ளவில்லை. பதிலாக எங்களை நாங்களே தீவிரப்படுத்திக் கொண்டோம். பணம் கொடுக்காமல் முழுக்க முழுக்க பிரசாரத்தை மட்டுமே நம்பினோம். நிச்சயம் 10 சதவீத வாக்கு பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    கே:- 10 சதவீதம் என்பது முழு வெற்றி ஆகாது. ஆனால் குறிப்பிடத்தக்க சதவீதம் தான். மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு தயாராகிறதா?

    ப:- சூழ்நிலை வரும்போது அதை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி தருகிறேன். இவர்கள் இருவருடனும் நான் கூட்டணி சேர மாட்டேன்.

    கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் அவர்கள் தவறான கூட்டணியில் சேர்ந்து விடுகிறார்கள்.

    அவர்கள் என்னுடன் இருந்து இருக்க வேண்டும். அந்த கூட்டணியை மட்டும்தான் நான் எதிர்பார்த்தேன். தி.மு.க., அ.தி.மு.க, ஒன்றும் தீண்டத்தகாத கட்சிகள் இல்லை. ஆனால் அவை விமர்சனங்களுக்குட்பட்டவை. எனவே அவர்களிடம் இருந்து விலகி இருக்க விரும்புகிறேன்.



    கே:- அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்களும் முக.ஸ்டாலினும் நண்பர்களாக இருந்தீர்கள். இப்போது அந்த நட்பு எப்படி இருக்கிறது?

    ப:- நான் அவர் தந்தையுடன் நெருக்கமாக இருந்த அளவுக்கு அவருடன் இல்லை. எனவே அரசியலுக்குள் நுழைந்ததால் நண்பரை இழந்த உணர்வு இல்லை. அவர் தந்தையை சந்திக்கும்போது அவரையும் சந்தித்துள்ளேன். மிகவும் கண்ணியமாகவும் அன்பாகவும் நடந்துகொள்வார். நானும் அப்படியே அவரிடம் இருப்பேன். இவ்வளவுதான் எங்கள் நட்பு.

    கே:- சக அரசியல் தலைவர்களின் பேச்சை கேட்டு டிவியை உடைக்கும் வீடியோவை வெளியிட்டீர்கள். அவர்கள் மீதான கசப்புணர்வுதான் காரணமா?

    ப:- நான் மீண்டும் கூட டிவியை உடைப்பேன். ஆனால் அது தனிப்பட்ட நபரை குறித்து அல்ல. நான் அரசியலுக்குள் நுழையும்போது அவர்கள் மீதும் அரசியல் மீதும் கசப்புணர்வு இருந்தது. ஆனால் இப்போது மக்களை களத்தில் சந்தித்த பின்னர் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசியலை பொறுத்தவரை நான் ஒழுக்கத்தையும் சுயக்கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பேன். எனவே என்னிடம் தனி நபர் தாக்குதல் இருக்காது.

    கே:- ஆக்ரோ‌ஷம் என்பதுதான் உங்கள் அரசியல் பாணியா?

    ப:- நான் காந்தியை பின் தொடர்பவன். அவர் செய்த ஆக்ரோ‌ஷ அரசியல் தான் என்னுடையதும். ஆக்ரோ‌ஷம் என்பது என்னுடைய பேச்சில் தான் இருக்கும். நேர்மை இருக்கும் இடத்தில் ஆக்ரோ‌ஷம் இருக்கும். இந்த கோபம், ஆக்ரோ‌ஷம் என்பதை நம்முடைய செய்தியை வலுவாக கொண்டு சேர்க்க மட்டுமே பயன்படுத்துவேன்.

    கே:- கேரள முதல்வர் பினராயி விஜயனும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்களா?

    ப:- நான் அரசியலுக்கு வருகிறேன் என்றதுமே பினராயி என்னை நீண்ட பயணத்துக்கு தயாராகுமாறு கூறினார். கெஜ்ரிவால் என்னிடம் ‘நாங்கள் செய்து காட்டி விட்டோம். உங்களாலும் முடியும்’ என்று ஊக்கப்படுத்தினார். என்னுடைய முதல் பொதுக் கூட்டத்தில் கெஜ்ரிவால் தான் எனக்காக வாக்கு கேட்டார். எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

    கே:- நீங்கள் எதிர்பார்த்த 10 சதவீதத்துக்கும் குறைவான அல்லது 5 சதவீத வாக்கு பெற்றால் என்ன செய்வீர்கள்?

    ப:- நான் நீண்ட பயணத்துக்கு தயாராகி தான் வந்துள்ளேன். என் எஞ்சிய முழு வாழ்க்கையையும் அரசியலுக்காக அர்ப்பணித்துவிட்டேன். இந்த பாராளுமன்ற தேர்தல் என்பது அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான அடிப்படை தளம் தான்.

    கே:- ஒரு அரசியல்வாதியாக உங்கள் பலம், பலவீனம் என்ன?

    ப:- என்னுடைய பலம் என்பது அரசியல்வாதிகளை மாற சொல்லாமல் மக்களிடத்தில் இருந்து மாற்றங்களை தொடங்குவது. நான் எப்போதுமே என் கட்சியின் தலைவராக நினைப்பது அல்ல. துணைத்தலைவர் தான். தலைவராக நினைப்பது மர்பியின் விதியைத் தான். அந்த விதியில் கூறப்பட்டு இருப்பது என்ன என்றால் தவறாக சென்றுவிடும் என்று நினைத்தால் அது தவறாகவே சென்று முடியும்.

    கே:- அரசியலுக்குள் வந்தபின்னரும் முக தோற்றங்களை மாற்றுகிறீர்களே?

    ப:- அது இந்தியன் 2 படத்துக்கான கெட்டப். அரசியலுக்காக நீண்ட மீசை வைத்தேன். மக்கள் இதுபோன்ற மாற்றங்களை ரசிக்கிறார்கள். எல்லா கெட்டப்புகளும் போரடித்து விட்டது. இப்போது முழு அரசியல்வாதியாக மீசையை வைத்துள்ளேன்.

    கே:- இந்த மீசை ஸ்டைல் குறிப்பது என்ன?

    பதில்: அது சஸ்பென்சாகவே இருக்கட்டும்.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #KamalHaasan
    கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் தெரிவித்தார். #KarurPolls #CollectorAnbazhagan
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் நேற்று மாலையுடன் பிரசாரம் முடிந்தது. இதற்கிடையே அ.தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒரே இடத்தில் பிரசாரத்தை நிறைவு செய்வதில் போட்டி ஏற்பட்டு பெரும் வன்முறை வெடித்தது.

    இதில் போலீசார் மற்றும் பொதுமக்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதி மணி கூறுகையில், கரூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய சதி நடப்பதாக தெரிவித்தார்.

    மேலும் கரூர் மாவட்ட கலெக்டர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகவும் கூறி டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் வக்கீல் மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

    இந்த புகார் தொடர்பாக கரூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அன்பழகன் கூறுகையில், கரூர் பாராளுமன்ற தொகுதி நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்தேன். கரூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து ஆணையம் தான் முடிவு எடுக்கும்.

    காய்ந்த மரம் தான் கல்லடி படும், நேர்மையாக இருப்பவர்கள் மீது புகார் கூறுவது இயல்புதான்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarurPolls #CollectorAnbazhagan
    தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேட்டியளித்ததாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க. சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin
    சென்னை:

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க. சார்பில் இன்று ஒரு மனு அளிக்கப்பட்டது.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், இது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகும்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி 16-ந்தேதி மாலை 6 மணி முதல் அமைதி காலம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த விதியை கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் கடைபிடிக்க வேண்டும். ஆனால் மு.க.ஸ்டாலின் இன்று பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிரானது.


    எனவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Loksabhaelections2019 #ADMK #MKStalin
    ×