search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் தேர்தல் ரத்து: மத்திய, மாநில அரசுகளின் பழிவாங்கும் செயல்- தலைவர்கள் கண்டனம்
    X

    வேலூர் தேர்தல் ரத்து: மத்திய, மாநில அரசுகளின் பழிவாங்கும் செயல்- தலைவர்கள் கண்டனம்

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
    சென்னை:

    வேலூர் பாராளுமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து செய்தும், தூத்துக்குடியில் வருமானவரித்துறை சோதனையை ஏவியும், ஆண்டிப்பட்டியில் துப்பாக்கி சூடு நடத்தியும் ஆளும் அ.தி.மு.க.வினர் நடத்திவரும் ஜனநாயகப் படுகொலைக்கு தேர்தல் ஆணையம் துணை போவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தமிழகத்தின் பல இடங்களில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆளும் கட்சியைச் சார்ந்த பலரது இடங்களிலிருந்தும் கோடிக்கணக்கான தொகையை வருமான வரித்துறை, தேர்தல் பறக்கும் படை ஆகியவை கைப்பற்றியுள்ளன.

    ஆனால் வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். சுதந்திர இந்தியாவில் தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு நம்பகத்தன்மையை இழந்து நிற்பது வேறெப்போதும் நடந்ததில்லை.

    தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பது தெளிவாகிவிட்ட நிலையில் பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி ஆத்திரத்தில் வன்முறையில் ஈடுபடுகிறது. அதற்கு தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும், காவல்துறையும் துணை போவது வெட்கக்கேடானதாகும்.

    துணை முதல்-அமைச்சரின் மகன் போட்டியிடும் தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்கும் வீடியோ வெளியாகியிருக்கிறது. முதல்-அமைச்சரே பணம் கொடுக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

    எம்.எல்.ஏ விடுதியில் அமைச்சர் உதயகுமாரின் அறையில் சோதனையிடப்பட்டதில் வாக்குக்கு பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. தமிழ்நாட்டின் பல இடங்களில் அ.தி.மு.க. வினரிடம் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஆனால் அது தொடர்பாக எந்தத் தொகுதியிலும் தேர்தல் நிறுத்தப்படவில்லை. வேலூரில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவான ஒரு சார்பு தன்மையை வெளிப்படுத்துகிறது.

    தேர்தல் ஆணையத்தையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி தி.மு.க. அணியின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என ஆளும் பா.ஜனதா, அ.தி.மு.க.வினர் நினைக்கின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன்:-

    தமிழகத்தில் பல தொகுதிகளில் பண விநியோகம் ஆளுங்கட்சியினரால் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்த புகார்கள் எவற்றிற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சென்னை சட்டமன்ற விடுதிக்குள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. அவரை நேரிடையாக விசாரணைக்கு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, ஆனால் இதுவரை கைப்பற்றிய பணம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க-பா.ஜ.க. அணி 40 தொகுதிகளிலும் படு தோல்வி அடையும் என்ற அச்சத்திலேயே மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மீது அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இம்மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி இரா.முத்தரசன்:-

    வேலூர் தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயக விரோத செயலாகும். குறுக்கு வழியில் வெற்றி பெற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, அதிகார துஷ்பிரயோக செயலில் அ.தி.மு.க.வும், பா. ஜனதாவும் ஈடுபட்டு வருகிறது. இதனை தமிழக மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன்:-

    தமிழக மக்கள் இந்த ஜனநாயக படுகொலையை ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள். தேர்தல் நடைபெறும் புதுச்சேரி உள்ளிட்ட 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் பா.ஜனதா கூட்டணி கட்சியினர் படுதோல்வி அடைவது நிச்சயம். பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதியிலும் தேர்தல் நடந்துதான் ஆக வேண்டும். அப்போது தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து நிற்கிற அனைவருக்கும் டெபாசிட் கிடைக்காத அளவுக்கு வெற்றியை தேடி தந்து வேலூர் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #Vellorepolls #Loksabhaelections2019
    Next Story
    ×