என் மலர்
தேர்தல் செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு கடந்த 10-ந்தேதி வெளியானது. அப்போது முதலே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதையும் மீறி தினந்தோறும் பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள், தொழிலதிபர்கள் எடுத்து செல்லும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். இதில் ஏராளமான வெளிநாட்டு பணம், தங்கம், வெள்ளி நகைகள், மின் சாதன பொருட்களும் சிக்கியுள்ளன.
இந்த நிலையில் கரூர் அருகே நள்ளிரவில் நடந்த வாகன சோதனையில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுபற்றிய விபரம் வருமாறு:-
மதுரை அய்யர்பங்களா சரோஜினி காலனியில் தனியார் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு தங்கம், வெள்ளி நகைகள் வியாபாரிகள், நகை செய்வோர்களிடம் இருந்து பெறப்பட்டு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுவது வழக்கம்.
அதேபோல் நேற்று இரவு மதுரையில் இருந்து சேலத்தில் உள்ள 13 நகைக்கடைகளில் ஒப்படைப்பதற்காக நகைகளை எடுத்துக்கொண்டு ஆம்னி வேன் ஒன்று புறப்பட்டது. அந்த வேனை டிரைவர் கிருபாகரன் ஓட்டிச் சென்றார். மேலும் கூரியர் நிறுவன மேலாளர் மற்றும் துப்பாக்கியுடன் 2 பாதுகாவலர்களும் அந்த வேனில் வந்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த ஆண்டி பட்டிக்கோட்டை சோதனைச்சாவடி அருகே நள்ளிரவில் அந்த வேன் வந்தபோது அங்கு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் மறித்தனர். நிலையான ஆய்வுக்குழு அதிகாரி குழந்தைவேலு வேனில் எடுத்து வரப்பட்ட பொருட்கள் குறித்து கேட்டபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.
ஆனால் அதில் பெரும்பாலான நகைகளுக்கு உரிய ஆவணம் இல்லாதது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நகைகளுடன் அந்த வேன் இன்று அதிகாலை கரூர் கலெக்டர் அலுவலக வளாத்திற்கு கொண்டு வரப்பட்டது. வேனில் வந்தவர்களிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அதில் 94 கிலோ 894 கிராம் தங்க நகைகள் கொண்டு வரப்பட்டது தெரிந்தது.
அதன் மதிப்பு ரூ.5 கோடியே 63 லட்சத்து 13 ஆயிரம் என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நகைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மீனாட்சி வேனில் எடுத்து வரப்பட்ட நகைகளை ஆய்வு செய்து, உரிய ஆவணங்கள் இருந்தால் திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும், இல்லையேல் அவை அனைத்தும் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். கரூரில் 94 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #LSPolls

இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-
அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தப்படும். பொது சிவில் சட்டதை அமல்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதல்வரும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். #LSPolls #ADMK #ADMKmanifesto
லக்னோ:
பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதா, சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
என்றாலும் மரியாதை நிமித்தமாக சோனியா போட்டியிடும் ரேபரேலி தொகுதியிலும், ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியிலும் வேட்பாளர்களை சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிறுத்தவில்லை.
இந்த நிலையில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சிகளின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் 7 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுத்து இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது.
இதற்கு சமாஜ்வாடி- பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் நாங்கள் கூட்டணியில் சேர்க்காததால் எங்கள் மீது காங்கிரஸ் தலைவர்கள் கோபத்துடன் உள்ளனர். எங்கள் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே 7 தொகுதியில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளனர்.
இப்படி குழப்பத்தை பரப்புவதை காங்கிரஸ் தலைவர்கள் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்களுக்குள் நல்ல நட்புறவு உள்ளது. அதை கெடுப்பதற்கு காங்கிரஸ் முயற்சி செய்ய வேண்டாம்.
காங்கிரஸ் பரப்பும் வதந்திகளையும் குழப்பத்தையும் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் நம்ப வேண்டாம். காங்கிரஸ் கட்சி இனி தினமும் ஒரு வதந்தியை பரப்பும். எனவே நமது கூட்டணி தொண்டர்கள் உஷாராக இருக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கு உத்தரபிரதேசத்தில் போட்டியிட ஆள் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு துணிவு இருந்தால் 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? அந்த துணிவு காங்கிரசுக்கும் இல்லை.
80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு காங்கிரஸ் கட்சியால் பாரதிய ஜனதாவை தோற்கடித்து விட முடியுமா? எனது இந்த சவாலுக்கு காங்கிரசார் முதலில் பதில் சொல்லட்டும்.
இவ்வாறு மாயாவதி கூறினார்.
மாயாவதியின் கருத்தை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வழிமொழிவதாக கூறியுள்ளார். #Mayawati
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளித்தது ஏன்? என்பது பற்றி தி.மு.க. நாளேடான முரசொலி விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக அதில் வெளியாகி உள்ள கட்டுரை வருமாறு:-
கழக வரலாற்றைஊன்றிக் கவனிப்பவர்களுக்கு அது தெரியும். பேரறிஞர் அண்ணா காலத்திலேயே நாவலர் இரா.நெடுஞ்செழியன் சட்டமன்ற வேட்பாளர், அவரது தம்பி இரா.செழியன் பாராளுமன்ற வேட்பாளர். பேராசிரியர் அன்பழகன் பாராளுமன்ற உறுப்பினர், அவரது இளவல் பேராசிரியர் அறிவழகன் சட்டமன்ற மேலவை உறுப்பினர்.
அன்றைய கழக முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஏ.கோவிந்தசாமி மறைவுக்கு பின் அவரது தொகுதியில் அவரது மனைவியை வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவித்தார் அண்ணா.
அண்ணா தென்சென்னை தொகுதியில் வெற்றிபெற்று பாராளுமன்றத்துக்கு சென்றார். ஆனால் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதனால் தென்சென்னை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞரின் மருமகனான முரசொலி மாறனை அண்ணா தேர்ந்தெடுத்தார்.
அண்ணாவின் மறைவுக்கு பின் அண்ணியாரை தலைவர் கலைஞர் சட்ட மன்ற மேலவை உறுப்பினராக்கினார்.
இவை மட்டுமல்ல, கழக முன்னணி தலைவர் என்.வி. நடராசன் தமிழக அமைச்சராக இருந்தார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது அவரது துணைவியார் புவனேஸ்வரி அம்மாள் அதிலே பங்கேற்று கைக்குழந்தையுடன் சிறை சென்றார். அவரது மடியில் தவழ்ந்த கைக்குழந்தை தான் பிற்காலத்தில் கலைஞர் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்த என்.வி.என்.சோமு.
இப்படி பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது.
வாரிசுகள் என்பதற்காக மட்டும் அவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் தரப்படுவதில்லை. அவர்கள் இந்த இயக்க வளர்ச்சிக்காக இயக்கத்துடன் இணைந்து பணியாற்றுவதால்தான், அதனுடன் தொடர்ந்து பயணிப்பதாலும்தான் அவர்கள் பரிசீலனைக்குள்ளாகிறார்கள்.
பொன்முடியின் மகனுக்கு ‘சீட்’டா? துரைமுருகன் புதல்வருக்கு வாய்ப்பா? என்றெல்லாம் கேட்டு கழகத் தோழர்களை குழப்ப நினைப்பவர்களுக்கு ஒன்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
துரைமுருகனையும், பொன்முடியையும் வேட்பாளர்களாக தேர்ந்தெடுத்த போது “காலம் காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் இருக்க இவர்களுக்கு சீட்டா” எனக் கேட்டு குழப்பம் விளைவிக்க முனைந்தவர்களும் உண்டு. துரைமுருகன், பொன்முடி போன்றோர் மகன்களாக பிறந்ததால் அவர்களுக்குரிய உரிமைகளை இழக்க வேண்டுமா? தந்தையுடன் சேர்ந்து இந்த இயக்கத்துக்கு ஆற்றிய பணிகள் புறந்தள்ளப்பட வேண்டுமா?
பொன்முடி அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற கழக மாநாடுகளுக்கு விழுப்புரத்தில் இருந்து மகளிரை திரட்டி லாரிகளில் அவர்களை ஏற்றிக் கொண்டு, அதே லாரியின் முன்னால் அமர்ந்து தான் அமைச்சரின் மனைவி என்ற மமதையின்றி கோஷம் எழுப்பிக் கொண்டு வருபவர்தான் பொன்முடியின் துணைவியார்.
விழுப்புரத்தில் இருந்து இளைஞர்களை திரட்டி தான் ஒரு மருத்துவர் என்று எண்ணிடாமல் தொண்ட ரோடு தொண்டராக பயணித்தவர்தான் இன்றைய கள்ளக்குறிச்சி வேட்பாளர்.
தான் வெளிநாடு சென்று படித்தவன், எம்.பி.ஏ. பட்டதாரி என்ற தற்பெருமையின்றி கழகத் தோழர்களை தன் உறவினராக பாவித்து, அவர்கள் சுகதுக்கங்களில் பங்கேற்று கழக மேடைகளில் ஓரமாக நின்று தொண்டருக்கும் தொண்டராக விளங்குபவர் இன்றைய வேலூர் வேட்பாளர்.
அடுத்து டாக்டர் கலாநிதி வீராசாமி. இவர் ஆற்காட்டாரின் வாரிசு மட்டுமல்ல, கழக மருத்துவர் அணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு கழகத்தோடு நீண்ட நெடுநாட்களாக பயணித்துக் கொண்டிருப்பவர். தொண்டர்களோடு தொண்டராக ஒன்றறக் கலந்தவர். ஆற்காட்டாரின் குடும்ப வாரிசாக மட்டுமின்றி கொள்கை வாரிசுகளில் ஒருவராக திகழ்பவர்.
அதேபோல தமிழச்சி தங்கப்பாண்டியன். தென் மாவட்டங்களில் தென்னரசுவுடன் இணைந்து கழகம் வளர்த்த காவலர் தங்கப் பாண்டியனின் புதல்வி. பிறக்கும்போதே கழக குழந்தையாக பிறந்தவர். கழக பணிக்காக பேராசிரியர் பதவி துறந்து, கழக மாநாட்டில் பங்கேற்று உரையாற்றியவர். சிறந்த படிப்பாளி மட்டுமல்ல, படைப்பாளியும் கூட. இப்படி சிறப்புமிகு தேர்வாக வேட்பாளர் தேர்வுகள் அமைந்து விட்டன.
தி.மு.கழகத்தை பொறுத்தவரை குடும்ப அரசியல் நடத்த தேவை இல்லை. ஏனென்றால் அதன் தலைவர்கள், தொண்டர்கள் குடும்பமே அரசியல் குடும்பம். அங்கே விளையாட்டு நடத்த நினைத்தால் ஆப்பசைத்த குரங்கு கதிதான் ஏற்படும்.
இவ்வாறு கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. #DMK
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க 10ம் வகுப்பு வரை படித்துள்ள ஒரு கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கிராமப்புறங்களுக்கு 10ம் வகுப்பு வரை படித்தவர்கள் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள். கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
அகதிகள் முகாம்களில் உள்ள அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச ரெயில் பயண சலுகை வழங்கப்படும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய திட்டங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும். காவிரி டெல்டா பகுதியானது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். கேபிள் டிவி கட்டணம் முந்தைய அளவுக்கு குறைக்கப்படும். கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும்.
இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LSPolls #DMKManifesto
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அந்த தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.

இந்த தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் அறிக்கை முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும். எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளன. அவ்வகையில் திமுக தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மக்களின் அடிப்படைத் தேவைகள், பொருளாதார திட்டங்கள், வேலைவாய்ப்பு திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. #ParliamentElections #TamilnaduByElection #DMKManifesto
மதுரை:
17-வது பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தீவிர நடவடிக்கை காரணமாக நாள்தோறும் ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி டோல்கேட் பகுதியில் மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அதிகாலை 4.30 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த கண்டெய்னர் வேனை மறித்து டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததையடுத்து சந்தேகம் அடைந்த அதிகாரிகள் கண்டெய்னரை திறந்து சோதனை செய்தனர்.
அப்போது அதில், 8 கிலோ தங்கம், வைரம், வெள்ளி கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இது குறித்து ஆவணங்கள் கேட்டபோது, டிரைவரிடம் எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து அதிகாரிகள் கண்டெய்னருடன் தங்கம், வெள்ளி, வைரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான நடராஜன் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட தங்கம், வெள்ளி, வைர கட்டிகளை ஆய்வு செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரத்தின் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட பறக்கும் படை அதிகாரிகள் சிட்டம்பட்டி டோல்கேட் அருகில் இன்று அதிகாலை வாகன சோதனை செய்தபோது 8 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி, வைரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.3.64 கோடி ஆகும்.
டிரைவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்ததில் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு செல்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் மதுரைக்கு ஏன் கொண்டு வரப்பட்டது? என தெரியவில்லை. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் தேர்தலை நியாயமாக நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.4.74 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மதுரை மாவட்டத்தில் ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட் களுக்கு உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் அதனை உரியவரிடம் அளிப்பது குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், தி.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வரும் 26-ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படுகிறது. வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (23 மற்றும் 24-ந் தேதிகளில்) விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது. #ParliamentElections #TamilnaduByElection #Nomination
ராமநாதபுரம்:
தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் மாநிலச் செயலாளர் நெல்லை பைசல், ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொள்ளாட்சி பாலியல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படாததால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலங்கள் பட்டியலில் தற்போது தமிழகமும் சேர்ந்துள்ளது.
முழுக்க முழுக்க அரசியல் பின்னணியை கொண்டு செயல்பட்டுள்ள இந்த சம்பவத்தில் ஆளுங்கட்சியினர் சிலரின் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.
பா.ஜனதா கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. பண மதிப்பிழப்பால் உள்நாட்டு சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. காவிரி பிரச்சினை உள்ளிட்ட தமிழக உரிமைக்கு பாதகமளிக்கும் வகையிலேயே மத்திய அரசு செயல்பட்டுள்ளது.
நீட் தேர்வு உள்ளிட்டவற்றிலும் தமிழக மாணவ, மாணவிகளை பாதிக்கும் வகையிலேயே பா.ஜனதா அரசின் செயல்பாடு அமைந்திருந்தது. பா.ஜனதா ஆட்சியில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் நிகழ்வுகளே நடந்துள்ளன.
வருகின்ற பாராளுமன்ற பொது தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelection

இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுமலதா மனம் தளராமல் தொடர்ந்து மாண்டியாவில் தனக்கு ஆதரவு திரட்டி வந்தார். இதற்கிடையே அவரை பா.ஜனதா தங்கள் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. இதனால் மாண்டியாவில் சுயேச்சையாக களமிறங்குவதா? அல்லது கட்சி சார்பில் போட்டியிடுவதா? என்பது பற்றி மார்ச் 18-ந்தேதி (அதாவது நேற்று) அறிவிப்பதாக சுமலதா கூறியிருந்தார்.
அதன்படி சுமலதா, மாண்டியா தொகுதியில் தான் சுயேச்சையாக போட்டியிடுவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து அவர் பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் அடிப்படையில் அரசியல்வாதி அல்ல. அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கவில்லை. எனது கணவர் எம்.பி., எம்,.எல்.ஏ. மற்றும் மந்திரியாக பணியாற்றியபோது, நாங்கள் அரசியலை பற்றி கவலைப்பட்டது இல்லை.
தவிர்க்க முடியாத சூழ்நிலையால் நான் தற்போது அரசியலுக்கு வந்துள்ளேன். மக்கள் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அம்பரீஷ் ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் மாண்டியா தொகுதியில் நான் சுயேச்சையாக போட்டியிடுகிறேன்.
என்னிடம் ஆட்சி அதிகாரம், பணம் எதுவும் இல்லை. அம்பரீஷ், மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றார். அது தான் எங்கள் சொத்து. மாண்டியா மக்கள் சுயமரியாதைக்காரர்கள். பணத்திற்காக வாக்கை விற்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.
வருகிற 20-ந் தேதி (நாளை) மாண்டியா தொகுதியில் நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். வெற்றி, தோல்வி எனக்கு முக்கியம் அல்ல. மாண்டியா மக்களுக்கு நாங்கள் பட்டுள்ள நன்றிக்கடனை தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எனக்கு காங்கிரசில் பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு தொகுதிகளை ஒதுக்குவதாக கூறினர். எம்.எல்.சி. பதவியை வழங்குவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் நான் எதற்கும் மதிப்பு கொடுக்காமல் அம்பரீஷ் மீது மாண்டியா மக்கள் வைத்திருந்த அன்பு, நம்பிக்கையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
தனிப்பட்ட முறையில் எனக்கு யார் மீதும் விரோதம் இல்லை. தேர்தல் களத்தில் இருந்து விலகும்படி எனக்கு பெரிய அளவில் பணம், பொருள் ஆசைகள் காட்டப்பட்டன. வேறு வேறு அரசியல் பதவிகள் வழங்குவதாகவும் கூறினர். நான் அதை பற்றி கவலைப்படாமல், அம்பரீசின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்.
எனக்கு எவ்வளவு பெரிய சவால்கள் இருக்கிறது என்பது தெரியும். மாண்டியாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது, சுமலதா எங்கே இருந்தார் என்று சிலர் கேட்கிறார்கள். காவிரி நதிநீர் பிரச்சினை வந்தபோது, அம்பரீஷ் மத்திய மந்திரியாக இருந்தார். மாண்டியா மக்கள் மீது வைத்திருந்த அன்புக்காக, அவர் மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடக வரலாற்றில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக அம்பரீசை தவிர வேறு யாராவது மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்தது உண்டா?. எங்கள் குடும்பம் எப்போதும், விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்கிறது. விவசாயிகளுக்கு அம்பரீஷ் எவ்வளவோ உதவி செய்தார். அது யாருக்கும் தெரியாது.
நான் இருக்கும் வரை குடும்பத்தினர் அரசியலுக்கு வரக்கூடாது என்று அம்பரீஷ் கூறினார். அதன்படி நாங்கள் நடந்து கொண்டோம். நாங்கள் எப்போதும் குடும்ப அரசியல் செய்தது இல்லை. கடவுளின் விருப்பம், மக்களின் ஆசி மற்றும் அம்பரீசின் வழிகாட்டுதல்படி நான் நடந்து கொள்வேன். மாண்டியாவில் பல்வேறு சட்டசபை தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்து, மக்களின் கருத்தை சேகரித்தேன்.
அப்போது அவர்கள், தேர்தலில் நிற்குமாறு என்னிடம் கூறினர். அதன்படி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். நான் கஷ்டத்தில் இருக்கும்போது, கன்னட திரைத் துறையினர் எனக்கு உதவி செய்தனர். தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், எனது பெரிய மகனை போன்றவருமான நடிகர் தர்ஷன், சிறிய மகனை போன்றவரான நடிகர் யஷ் ஆகியோர் தாமாக முன்வந்து முழு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அரசியலில் பரஸ்பர குற்றச்சாட்டுகளை கூறுவது சகஜமானது. தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வதை நான் விரும்பவில்லை. எங்களின் எதிரிகளை கூட உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும்.
காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் ஆதரவை கேட்டுள்ளேன். எனக்கு எதிராக முதல்-மந்திரியின் மகன் போட்டியிடுகிறார். ஆனால் மாண்டியா மக்களின் முழு ஆதரவு எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எத்தகைய அழுத்தம் வந்தாலும், நான் போட்டியில் இருந்து விலக மாட்டேன். இந்த திடமான முடிவில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை.
இவ்வாறு சுமலதா கூறினார்.
இந்த பேட்டியின்போது நடிகை சுமலதாவின் மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், யஷ், திரைப்பட தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், தொட்டண்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர். #Sumalatha #MandyaConstituency
தீவிர அரசியலில் சமீபத்தில் இணைந்த பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்குப்பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலத்தில் அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.
இதில் முதற்கட்டமாக கங்கை நதியில் படகுமூலம் சென்று கரையோர மக்களின் ஆதரவை திரட்ட விரும்பிய அவர் இதற்காக 3 நாள் கங்கை நதி யாத்திரையை நேற்று தொடங்கினார். இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே அவர் லக்னோ சென்றடைந்தார். பின்னர் மாலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார்.

முன்னதாக திரிவேணி சங்கமத்தில் உள்ள அனுமன் கோவிலில் பிரியங்கா வழிபாடு செய்தார். மேலும் அங்குள்ள ஸ்வராஜ் இல்லத்துக்கு சென்ற அவர், தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கும், ஸ்வராஜ் இல்லத்துக்குமான தொடர்புகளை நினைவுகூர்ந்து தனது டுவிட்டர் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுவராஜ் பவன் முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது, எனது பாட்டி (இந்திரா காந்தி) பிறந்த அறையை பார்க்க முடிகிறது. இங்கு வைத்துதான் நான் தூங்குவதற்காக அவர் மடியில் என்னை படுக்க வைத்து கதைகளை கூறுவார். அவரது வார்த்தைகள் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ‘எதற்கும் அஞ்சக்கூடாது, எல்லாம் சரியாகிவிடும்’ என அவர் சொல்லித்தருவார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
பிரியங்காவின் கங்கை யாத்திரை நாளை (புதன்கிழமை) வாரணாசியில் நிறைவு பெறுகிறது. இந்த யாத்திரை மாநில காங்கிரசாருக்கு உற்சாகத்தை அளித்து இருக்கிறது. இதனால் கங்கை நதிக்கரையில் பிரியங்கா செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. #PriyankaGandhi #IndiraGandhi #Congress






