என் மலர்
விருதுநகர்
- தாய்-மகள் திடீர் மாயமானார்கள்.
- சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன்கொல்ல ங்கொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டிட தொழிலாளி. இவரது மனைவி வெண்ணிலா (வயது 37). இவர்களது மகள் நந்தினி (17). சம்பவத்தன்று வீட்டில் இருந்த தாய்-மகள் திடீரென மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து மாரிமுத்து சேத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகளை தேடி வருகின்றனர்.
- ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- ராஜபாளையம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதி தெற்கு வெங்காநல்லூர் ஊராட்சி கருங்குளம் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 6-வது நெல் கொள்முதல் நிலையத்தை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகை யில், தொகுதியிலுள்ள அனைத்து விவசாயிகளும் அரசிடமே நெற்களை விற்க விரும்புகின்றனர். அந்தளவிற்கு நமது தமிழக வேளாண்மைத்துறை விவசாயிகளின் நலனுக்காக சிறப்பாக செயல்பட்டடு வருகிறது. விரைவில் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதியதாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்றார்.
இதில் வேளாண்மை துறை அலுவலர் தனலட்சுமி கருங்குளம், அப்பநேரி கண்மாய் நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர் ரவிச்சந்திரராஜா, உறுப்பினர்கள் பலராம ராஜா, ராமராஜா, கண்ணன் உட்பட ஏராளமான விவ சாயிகள் கலந்து கொண்ட னர்.
- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடம் பிடித்துள்ளது.
- இதில் 24 ஆயித்து 514 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர்
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் 25 ஆயிரத்து 446 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 24 ஆயித்து 514 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 98.1 சதவீதம் தேர்ச்சி ஆகும். மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
- பிளஸ்-2 தேர்வில் விருதுநகர் மாவட்டம் 2-வது இடம் பிடித்தது.
- விருதுநகர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர்.
விருதுநகர்
தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை கோட்டூர்புரம் நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை வெளியிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் 22 ஆயிரத்து 208 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தனர். இதில் 21 ஆயிரத்து 602 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.25 சதவீதம் தேர்ச்சி ஆகும். விருதுநகர் மாவட்டம் மாநில அளவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
- அருப்புக்கோட்டையில் செயல்படாத புறக்காவல் நிலையம் உள்ளது.
- மாவட்ட காவல் நிர்வாகம் உடனடியாக புறக்காவல் நிலையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அருப்புக்கோட்டை
ஆங்காங்கே நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்கும் வகையில் நகர் எல்லை பகுதிகளில் புறக்காவல் நிலையங்களை அமைத்து இரவு பகலாக போலீசார் சோதனையிடவும், சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரிக்கவும் புறக்காவல் நிலையங்கள் அமைக்க காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நீண்ட காலமாகியும் அதனை செயல்படுத்த காவல்துறை முன்வரவில்லை. நகர் காவல் நிலையம் சார்பில் நகர் எல்லையான காந்திநகர், ராமசாமிபுரம், கோபாலபுரம் விலக்கு மற்றும் பாவடி தோப்பு ஆகிய 4 பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இந்த புறக்காவல் நிலையத்திற்கு காவலர்கள் சரிவர வருவதில்லை. இரவு நேரங்களில் ரோந்து பணிகளுக்கு காவலர்கள் வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. மாவட்ட காவல் நிர்வாகம் உடனடியாக புறக்காவல் நிலையங்களில் காவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
- கண்களை கட்டிக்கொண்டு சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவ, மாணவியர்கள்.
- தமிழக அரசின் வேலை வாய்ப்பில் சிலம்பக்கலைக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது.
வத்திராயிருப்பு
தமிழக அரசின் வேலை வாய்ப்பில் சிலம்பக்கலைக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கபட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்குட்பட்ட கூமாப்பட்டியில் வீரராவணன் சிலம்பக் கூடம் சார்பில் 5 வயது முதல் 18 வயது வரை உள்ள 150 மாணவர்கள் கண்களை கட்டிக்கொண்டு 20 நிமிடத்தில் 575 தடவை சிலம்பம் சுற்றினர்.
இந்த நிகழ்வு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. சிலம்பத்தில் சாதனை புரிந்த மாணவர்களை அந்த பகுதி மக்கள் பாராட்டினர். இந்த சாதனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் சான்றிதழ்களை ஒருங்கிணைப்பாளர் மணி முத்துவிடம் வழங்கினர்.
- குடிநீர் வழங்க கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- குன்னூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட குன்னூர் ஊராட்சியில் திருவள்ளுவர் காலனி, கலைஞர் காலனி என இரு காலனிகள் உள்ளன. இங்கு 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் சரியாக ஏற்றப்படாமல் இருப்பதால் கிராம மக்களுக்கு தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் அந்த பகுதி மக்கள் குன்னூர் செல்லும் சாலையில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்க வலியுறுத்தி காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த கிருஷ்ணன்கோவில் போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.
இதில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் குன்னூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார்.
- அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.
விருதுநகர்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் தனது தாயுடன் சென்னையில் வசித்து வந்தார்.
அங்கு சித்ராவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே குடித்தனம் நடத்தி வந்தனர்.
அஜித்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்தபடி இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.
கணவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து கோவில்பட்டிக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சித்ரா மறுமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதற்காக ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.
அதில் தனது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வாலிபர் ஒருவர் சித்ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி, தான் பெண் பார்த்து வருவதாகவும், ஆகவே உங்களது புகைப்படத்தை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார். அதன்பேரில் அந்த வாலிபர் சித்ராவை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ஆனால் அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.
இருந்தபோதிலும் அந்த வாலிபர் சித்ராவின் செல்போனுக்கு பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பெங்களூருவில் உள்ள வங்கியில் வேலை பார்ப்பதாகவும், தனது தாய்-தந்தையுடன் இருப்பதாகவும், தங்கைக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
மேலும் சித்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஆவகே அவரை சந்திக்க கோவில்பட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு சித்ராவும் சம்மதித்துள்ளார். அதன்படி நேற்று காலை கோவில்பட்டி பஸ் நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்துடன் சித்ரா காத்திருந்தார்.
அப்போது அவருடன் பேசிய வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தார். ஓட்டலுக்கு சாப்பிட செல்லலாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சித்ராவின் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அங்கு சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது அந்த வாலிபர் சித்ராவின் கழுத்தில் தங்கச்சங்கிலி என்று கூறி ஒரு செயினை அணிவித்தார். மேலும் சித்ரா அணிந்திருந்த செயினை கழற்றி தனது கழுத்தில் அணிந்து கொண்டார். பின்பு இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு திரும்பிச் சென்றனர்.
அப்போது இருசக்கர வாகனத்தை அந்த வாலிபரே ஓட்டி வந்தார். சித்ரா வைத்திருந்த அவரது கைப்பை மற்றும் செல்போனை அந்த வாலிபர் வாங்கி வைத்துக் கொண்டார். திடீரென அவர் வாகனத்தில் பழுது இருப்பது போல் தெரிகிறது என கூறியிருக்கிறார். அதனை சரி செய்து வருவதாக கூறி சித்ராவை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. தனது செல்போனும் அந்த வாலிபரிடம் சிக்கிக் கொண்டதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் சித்ரா தவித்தார். சாத்தூரில் பலமணி நேரமாக காத்திருந்த சித்ரா, அந்த வாலிபர் தன்னை ஏமாற்றி நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனுடன் சென்றதை அறிந்தார்.
பின்னர் வேறு வழியில்லாமல் அங்கு நின்ற முதியவர் ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு பஸ்சில் தனது ஊருக்கு சென்றார். அங்கு சென்று அந்த வாலிபர் அணிவித்த நகையை சோதனை செய்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தனது நகை, இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவைகளை பறி கொடுத்தது குறித்து சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா புகார் செய்தார்.
தன்னிடம் நூதன மோசடி செய்த வாலிபர் பெயர், ஊர், முகவரி உள்ளிட்ட எந்த விவரமும் சித்ராவுக்கு தெரியவில்லை. இதனால் சித்ராவை ஏமாற்றிய வாலிபர் யார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழகத்தில் பெண்களும், ஆண்களுக்கு நிகராக குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் அவர்களுக்கு பல்வேறு வழிகளை காட்டுகிறது.
- தூத்துக்குடியை சேர்ந்த ஒரு இளம்பெண் பேஸ்புக் மூலம் பலருடன் பழகி ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒரு வாலிபரின் கொலைக்கும் காரணமாக இருந்துள்ளார்.
ராஜபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் வளாகத்தைச் சேர்ந்த துரைபாண்டி என்பவர் மகன் மாரிமுத்து (வயது 27). இவர் டிப்ளமோ படித்து விட்டு தனியார் நிறுவனத்தின் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் திடீரென மாயமான அவர் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரைக்கும் (32), மாரிமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், வில்வதுரை மற்றும் 2 பேர் மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை சாக்குபையில் வைத்து கட்டி கண்மாயில் வீசி சென்றது தெரியவந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மணிமுத்தாறு போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக விசாரித்த போது, வில்வதுரை தற்போது அங்கு இல்லை என்ற தகவல் கிடைத்தது.
இதற்கிடையே அவர் செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போது அவர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் நெல்லைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கிருந்த வில்வதுரையை பிடித்தனர்.
அப்போது அவருடன் தங்கியிருந்த கூட்டாளிகள் இசக்கிராஜா (32), ரவிக்குமார் (29) ஆகியோரும் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. அதுபற்றி போலீசார் கூறியதாவது:-
மாரிமுத்துவுக்கு பேஸ்புக் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி (வயது26) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னை பணக்கார வீட்டு பெண் என்று கூறி பழகி வந்துள்ளார். மாரிமுத்துவும், ராகினியும் அடிக்கடி செல்போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் ராகினி தனக்கு அவசரமாக ரூ.5 லட்சம் வேண்டும் என்று மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார். அதனை நம்பிய மாரிமுத்து உடனடியாக ராகினியின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் அனுப்பியுள்ளார்.
அதன்பின்னர் ராகினி, மாரிமுத்துவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அவரது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை ராகினி ஏமாற்றி பணம் பறித்துவிட்டதாக மாரிமுத்து கருதினார். அதனை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டார்.
இந்த நிலையில் மாரிமுத்துவின் உறவினரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரை என்பவருடனும் ராகினி பேஸ்புக் மூலம் பழகி தனது காதல் வலையில் அவரை சிக்க வைத்துள்ளார்.
வில்வதுரை மட்டுமின்றி அவரது உறவினர்கள் இசக்கிராஜா, அவரது மனைவி இளவரசி மற்றும் ரவிக்குமார் ஆகியோரும் ராகினியுடன் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது வில்வதுரை, ராகினிக்கு ரூ.15 லட்சம் வரை கொடுத்துள்ளார்.
பின்னர் வில்வதுரை மூலம் ஒரு குழுவாக செயல்பட்டு பல்வேறு நபர்களிடம் இருந்து ராகினி லட்ச, லட்சமாக பணம் பறித்துள்ளனர். அவர் ரூ.50 லட்சத்துக்கு மேல் பணம் பறித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த மாரிமுத்து, ராகினிக்கு அடிக்கடி போன் செய்து தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டு வற்புறுத்தி வந்தார்.
இது ராகினிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் இதுபற்றி வில்வதுரையிடம் தெரிவித்து, மாரிமுத்துவை தீர்த்து கட்டும்படி கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து வில்வதுரை, மாரிமுத்துவிடம் ராகினி வாங்கிய பணத்தை திருப்பி தருகிறேன் என்று கூறியுள்ளார். எனவே நீ என்னுடன் வந்தால் பணத்தை பெற்றுகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மாரிமுத்து கடந்த மாதம் 28-ந் தேதி வில்வதுரையுடன், காரில் சென்றார்.
மாரிமுத்துவை காரில் அழைத்து சென்ற வில்வதுரையுடன் கூட்டாளிகளான இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சங்கரன்கோவில் அருகே ஒரு கண்மாய் பகுதியில் சென்றதும் மாரிமுத்து கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர்.
பின்னர் அவரது உடலை சாக்கு பையில் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம்-புனல்வேலி செல்லும் சாலையில் வந்ததும் அந்த பகுதியில் உள்ள இரட்டை கண்மாய் பகுதியில் வீசி சென்று விட்டனர். இது தொடர்பாக துப்புதுலக்கிய போலீசார் மாரிமுத்துவை கொலை செய்த வில்வதுரை, இசக்கி ராஜா, ரவிக்குமார், ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
போலீசாரின் தீவிர விசாரணையில் மாரிமுத்து கொலைக்கு மூளையாக செயல்பட்டது ராகினி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகினி எத்தனை பேரிடம் பண மோசடி செய்தார். அவருக்கு பின்னணியில் யார், யார்? உள்ளனர்.
ராகினி சினிமா வில்லி போல் செயல்பட்டது எப்படி? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த இசக்கிராஜா மனைவி இளவரசியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராகினி, இளவரசி ஆகியோர் எவ்வாறு பணமோசடியில் ஈடுபட்டனர் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கல்குறிச்சி சமத்துவபுரத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- இதனை கலெக்டர் ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் மேகநாத ரெட்டி ஆய்வு செய்தார்.
காரியாபட்டி அருகே உள்ள கல்குறிச்சி ஊராட்சி யில் உள்ள சமத்துவபுரத்தில் வீடுகள், பள்ளிகள், கழிப்பறைகள், நுழைவு வாயில் உள்ளிட்டவைகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைதொடர்ந்து, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுபட்டி ஊராட்சியில் ரூ.1.84 லட்சம் மதிப்பில் மறுசீரமைத்து புதுப்பிக்கப்பட்ட நூலகத்தையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.1.15 இலட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் முருங்கை நர்சரி அமைக்கும் பணியையும், கம்பிக்குடி ஊராட்சியில் ரூ.4.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நாற்றாங்கால் பண்ணை யை(நர்சரி)யும், வினோபா நகரில் பிரதான் மந்திரி ஆவாஸ் பிளஸ் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் பார்வை யிட்டார்.
சத்திரபுளியங்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.7.68 லட்சம் மதிப்பில் மியாவாக்கி முறையில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளையும், முடுக்கன்குளம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.10.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதிய அங்கன்வாடி கட்டிடத்தையும், சூரனூர் ஊராட்சி, உவர்குளம் கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணையினையும், உவர்குளம் கண்மாயில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் ரூ.15.55 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நீர்உறிஞ்சி குழிகளையும் கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு இந்த பணிகளை விரை வாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திலகவதி, உதவி செயற்பொறியாளர் கருப்பையா, உதவி பொறி யாளர்கள் சுப்பையா, காஞ்சனாதேவி, காரியா பட்டி ஊராட்சி ஒன்றியகுழு துணைத்தலைவர் ராஜேந்தி ரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தங்க தமிழ்வாணன், பிரமுகர் கண்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- அருப்புக்கோட்டையில் ஆபத்தான நிலையில் இயங்கும் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.
- டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது.
அருப்புக்கோட்டை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 5 வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் படிப்பதற்காக நகர் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன.
சின்ன புளியம்பட்டி, காந்தி மைதானம், சின்னக்கடை தெரு போன்ற பகுதிகளில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் சுகாதாரமான காற்றோட்ட வசதி கட்டிடம் கிடையாது. டிரான்ஸ்பார்மர் அருகிலேயே அங்கன்வாடி மையம் உள்ளது இதனால் குழந்தைகள் வெளியில் விளையாட முடியாமல் ஆபத்தான சூழல் உள்ளது.
குழந்தைகளுக்கு சரியான முறையில் கழிப்பறை வசதி இல்லை என பொதுமக்கள் மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர். சில அங்கன்வாடி மைய கட்டிடம் விரிசல் அடைந்து சேதமடைந்துள்ளது. சிறு குழந்தைகள் நல்ல காற்றோட்ட வசதியுடன் கூடிய கட்டிடத்தில் படிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- 8 ஆயிரம் ஆசிரியர்களுக்கு எமிஸ் இணைய தள பயிற்சி அளிக்கப்பட்டது.
- மாணவர்களுக்கான உடல் நல பாதுகாப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டத்தில் முதல் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எமிஸ் (கல்வி தகவல் மேலாண்மை இணையதளம்) குறித்த பயிற்சி 226 மையங்களில் நடந்தது. இதில் 7792 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நகர்மன்ற ஊரணிபட்டி நடுநிலைப் பள்ளி, நகர்மன்ற திரு.வி.க. மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் நடந்த இந்த பயிற்சியை, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
ஆசிரியர்களுக்கு, எமிஸ் இணையதளம் மூலம் ஆசிரியர், மாணவர் வருகை பதிவு செய்வது, ஆசிரியர்களின் விடுப்புகளை பதிவேற்றம் செய்வது, தொடர்ந்து எமிஸ் இணைய தளத்தில் வரவிருக்கும் வசதிகள், மாணவர்கள்- ஆசிரியர்களுக்கான மதிப்பீட்டுத் தளம் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மாணவர்களுக்கான உடல் நல பாதுகாப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் வளர்ச்சிக்கேற்ப தற்போது அரசு, கல்வித் துறையில் பல்வேறு நவீன உயர் தொழில் நுட்ப வசதிகளைப் புகுத்தி வருகிறது. இதனால் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்பாடுகள் நவீனமயமாக்கப்பட்டு மாணவர்கள்- ஆசிரியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல்கள் முழுமையாக எமிஸ் இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு காலவிரையம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது என்றார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட எமிஸ் ஒருங்கிணைப்பாளர் முருகுதிருநாவுக்கரசு, வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை, ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராஜ், கற்பகம், செல்வம், லிங்கேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






