search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை வாலிபர் கொலையில் திருப்பம்- பேஸ்புக் மூலம் காதல்வலை வீசி பணம் பறித்த பெண் சிக்கினார்
    X

    மதுரை வாலிபர் கொலையில் திருப்பம்- பேஸ்புக் மூலம் காதல்வலை வீசி பணம் பறித்த பெண் சிக்கினார்

    • தமிழகத்தில் பெண்களும், ஆண்களுக்கு நிகராக குற்றச்செயல்களில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பம் அவர்களுக்கு பல்வேறு வழிகளை காட்டுகிறது.
    • தூத்துக்குடியை சேர்ந்த ஒரு இளம்பெண் பேஸ்புக் மூலம் பலருடன் பழகி ரூ.50 லட்சத்துக்கு மேல் மோசடி செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் ஒரு வாலிபரின் கொலைக்கும் காரணமாக இருந்துள்ளார்.

    ராஜபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சிப்காட் வளாகத்தைச் சேர்ந்த துரைபாண்டி என்பவர் மகன் மாரிமுத்து (வயது 27). இவர் டிப்ளமோ படித்து விட்டு தனியார் நிறுவனத்தின் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் திடீரென மாயமான அவர் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியனில் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரைக்கும் (32), மாரிமுத்துவுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததும், வில்வதுரை மற்றும் 2 பேர் மாரிமுத்துவை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை சாக்குபையில் வைத்து கட்டி கண்மாயில் வீசி சென்றது தெரியவந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் மற்றும் கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் மணிமுத்தாறு போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக விசாரித்த போது, வில்வதுரை தற்போது அங்கு இல்லை என்ற தகவல் கிடைத்தது.

    இதற்கிடையே அவர் செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போது அவர் நெல்லையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கும்மிடிப்பூண்டி போலீசார் நெல்லைக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கிருந்த வில்வதுரையை பிடித்தனர்.

    அப்போது அவருடன் தங்கியிருந்த கூட்டாளிகள் இசக்கிராஜா (32), ரவிக்குமார் (29) ஆகியோரும் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. அதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    மாரிமுத்துவுக்கு பேஸ்புக் மூலம் தூத்துக்குடியை சேர்ந்த ராகினி (வயது26) என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர் தன்னை பணக்கார வீட்டு பெண் என்று கூறி பழகி வந்துள்ளார். மாரிமுத்துவும், ராகினியும் அடிக்கடி செல்போனில் பேசி தங்கள் நட்பை வளர்த்து வந்தனர்.

    இந்த நிலையில் ராகினி தனக்கு அவசரமாக ரூ.5 லட்சம் வேண்டும் என்று மாரிமுத்துவிடம் கேட்டுள்ளார். அதனை நம்பிய மாரிமுத்து உடனடியாக ராகினியின் வங்கி கணக்கில் ரூ. 5 லட்சம் அனுப்பியுள்ளார்.

    அதன்பின்னர் ராகினி, மாரிமுத்துவிடம் பேசுவதை தவிர்த்து வந்தார். அவரது செல்போன் அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை ராகினி ஏமாற்றி பணம் பறித்துவிட்டதாக மாரிமுத்து கருதினார். அதனை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்டார்.

    இந்த நிலையில் மாரிமுத்துவின் உறவினரான கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிமுத்தாறு சிறப்பு போலீஸ் பட்டாலியன் 2-வது நிலை போலீஸ்காரராக பணியாற்றும் வில்வதுரை என்பவருடனும் ராகினி பேஸ்புக் மூலம் பழகி தனது காதல் வலையில் அவரை சிக்க வைத்துள்ளார்.

    வில்வதுரை மட்டுமின்றி அவரது உறவினர்கள் இசக்கிராஜா, அவரது மனைவி இளவரசி மற்றும் ரவிக்குமார் ஆகியோரும் ராகினியுடன் அடிக்கடி பேசி வந்தனர். அப்போது வில்வதுரை, ராகினிக்கு ரூ.15 லட்சம் வரை கொடுத்துள்ளார்.

    பின்னர் வில்வதுரை மூலம் ஒரு குழுவாக செயல்பட்டு பல்வேறு நபர்களிடம் இருந்து ராகினி லட்ச, லட்சமாக பணம் பறித்துள்ளனர். அவர் ரூ.50 லட்சத்துக்கு மேல் பணம் பறித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ரூ.5 லட்சத்தை பறிகொடுத்த மாரிமுத்து, ராகினிக்கு அடிக்கடி போன் செய்து தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டு வற்புறுத்தி வந்தார்.

    இது ராகினிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அவர் இதுபற்றி வில்வதுரையிடம் தெரிவித்து, மாரிமுத்துவை தீர்த்து கட்டும்படி கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து வில்வதுரை, மாரிமுத்துவிடம் ராகினி வாங்கிய பணத்தை திருப்பி தருகிறேன் என்று கூறியுள்ளார். எனவே நீ என்னுடன் வந்தால் பணத்தை பெற்றுகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதனை நம்பிய மாரிமுத்து கடந்த மாதம் 28-ந் தேதி வில்வதுரையுடன், காரில் சென்றார்.

    மாரிமுத்துவை காரில் அழைத்து சென்ற வில்வதுரையுடன் கூட்டாளிகளான இசக்கி ராஜா, ரவிக்குமார் ஆகியோரும் சென்றனர். அவர்கள் சங்கரன்கோவில் அருகே ஒரு கண்மாய் பகுதியில் சென்றதும் மாரிமுத்து கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர்.

    பின்னர் அவரது உடலை சாக்கு பையில் போட்டு கட்டி எடுத்துக்கொண்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தளவாய்புரம்-புனல்வேலி செல்லும் சாலையில் வந்ததும் அந்த பகுதியில் உள்ள இரட்டை கண்மாய் பகுதியில் வீசி சென்று விட்டனர். இது தொடர்பாக துப்புதுலக்கிய போலீசார் மாரிமுத்துவை கொலை செய்த வில்வதுரை, இசக்கி ராஜா, ரவிக்குமார், ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    போலீசாரின் தீவிர விசாரணையில் மாரிமுத்து கொலைக்கு மூளையாக செயல்பட்டது ராகினி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகினி எத்தனை பேரிடம் பண மோசடி செய்தார். அவருக்கு பின்னணியில் யார், யார்? உள்ளனர்.

    ராகினி சினிமா வில்லி போல் செயல்பட்டது எப்படி? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக இருந்த இசக்கிராஜா மனைவி இளவரசியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

    ராகினி, இளவரசி ஆகியோர் எவ்வாறு பணமோசடியில் ஈடுபட்டனர் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×