என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க நிதியுதவி கோரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் சொந்தக்கட்டடங்களில் இயங்கும் கிறித்துவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் 2016-17ஆம் ஆண்டு முதல் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கீழ்கண்ட தகுதிகள் உடைய, கிறித்துவ தேவாலயங்களிடமிருந்து புனரமைப்பிற்கான நிதி உதவி கோரி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படிகிறித்துவ தேவாலயம் 10 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த கட்டடத்தில் இயங்கி இருத்தல் வேண்டும்.

    தேவாலயம் கட்டப்பட்ட இடம் பதிவுத்துறையில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். தேவாலயமும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.தேவாலயத்தின் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.

    விண்ணப்பப்படிவம் மற்றும் சான்றிதழ் இணை யதள முகவரியில்www.bcmbcmw@tn.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை படியிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பிற்சேர்க்கை -IIமற்றும் III ஐ பூர்த்தி செய்து அனைத்து உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களோடு மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    மாவட்ட கலெக்டரால் நியமிக்கப்பட்ட குழுவினரால் கிறித்துவ தேவாலயங்களை ஸ்தல ஆய்வு செய்து, கட்டடத்தின் வரைபடம் மற்றும் திட்ட மதிப்பீடு ஆகியவற்றுடன் தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்து முன்மொழிவுடன் சிறுபான்மையினர் நல இயக்ககத்திற்கு நிதி உதவி வேண்டி மாவட்ட கலெக்டரால் பரிந்துரை செய்யப்படும். நிதி உதவி இரு தவணைகளாக தேவாலயத்தின் வங்கிக் கணக்கில் மின்னனு பரிவர்தனை மூலம் செலுத்தப்படும்.மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்றக்கப்படுகிறது.
    • இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளக் கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது" ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 -ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது .

    விண்ணப்பங்கள் பெற http://awards.tn.gov.in/ என்ற இணை வழியாக மட்டும் 30.06.2022 -ற்குள் பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

    விளையாட்டு துறை சார்ந்த 'கல்பனா சாவ்லா விருது" -ற்கான பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 26.06.2022 -ம் தேதிக்குள் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரையுடன் விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சென்னை- 600 003 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள் செவிலியர்கள், லேப் டெக்னீசியன் நியமிக்க வேண்டும். புதிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

    மாநில குழு உறுப்பினர் மகாலட்சுமி, நகர செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பேசினர். நகர் குழு உறுப்பினர்கள் மேரி, முருகானந்தம், செல்வராஜ், மாதர் சங்க நகரத் தலைவர் மைதிலி, மாணவர் சங்க தாலுகா செயலாளர் ஹரிராஜ், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் சரவணன், செயலாளர் பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி வருகிற 25,26-ந் தேதிகளில் நடக்கிறது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட செய்தி-மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வரலாற்றில் முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட் எனப்படும் பிரமாண்டமான 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1800-க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது.

    வரலாற்று சிறப்பு மிக்க போட்டி என்பதால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 15 வயதிற்குட்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விருதுநகர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிசிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் வருகிற ஜூன் 25,26 தேதிகளில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியை சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், காளீஸ்வரி கல்லூரியின் செயலாளர் ஏ.பி. செல்வராஜன் ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைக்கிறார்.

    இதில் முதலிடம் பெறும் மாணவர் மற்றும் மாணவியரை தேர்வு செய்து 44-வது ஒலிம்பியாட் போட்டியை நேரில் கண்டுகளிக்க தமிழக அரசு மற்றும் அணைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பு செலவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெறும் முதல் 25 மாணவர்களுக்கும், 25 மாணவிகளுக்கும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் 8வயது, 11 வயதிற்குட்பட்ட 3 சிறுவர், சிறுமியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 3 வெகு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.

    இந்த போட்டியில் பங்குபெற நுழைவு கட்டணம் இல்லை. அனைத்திந்திய சதுரங்க கூட்டமைப்பில் பதிவு செய்திருந்த அனைவரும் கலந்து கொள்ளலாம். பதிவு செய்ய இன்று (22-ந் தேதி) கடைசி நாள் ஆகும். போட்டியில் பங்குபெற விருப்பம் உள்ளவர்கள் கணேஷ்பாண்டி (98437 57767), இன்பராஜலிங்கம் (70106 56213) ஆகியோரது கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் மாணவர் அமைப்பு தொடக்க விழா நடைபெற்றது.
    • இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமுதாயத்தில் தொழில் நுட்பங்களின் பங்கு, ஆகியோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் கணிப்பொறியியல் துறை சார்பில் ''அசோசியேஷன் பார் கம்ப்யூட்டிங் மெஷினரி'' (ஏ.சி.எம்.) என்ற மாணவர் அமைப்பின் தொடக்க விழா நடந்தது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம் தலைமையுரை ஆற்றினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

    சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கணிப்பொறியியல் துறை பேராசிரியர் ஷேக் அப்துல்லா கலந்து கொண்டார்.

    துறையின் 3-ம் ஆண்டு மாணவியும், ஏ.சி.எம். மாணவர் அமைப்பின் தலைவருமான வைஷ்ணவி வரவேற்றார். சிறப்பு விருந்தினரை 3-ம் ஆண்டு மாணவியும், ஏ.சி.எம். மாணவர் அமைப்பின் செயலாளருமான குருகீர்த்திகா அறிமுகம் செய்தார்.

    கணிப்பொறியியல் துறைத்தலைவர் ராமதிலகம், பேராசிரியர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ஷேக் அப்துல்லா பேசுகையில், மாணவர்களின் வெற்றிக்கு கல்விப்படிப்பு மட்டுமல்லாது பிற திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். மாணவர் அமைப்பின் நன்மைகளையும், ஏ.சி.எம். மாணவர் சேப்டரின் பயன்பாடுகள் குறித்தும் எடுத்துரைத்தார். இந்த அமைப்பின் மூலமாக சர்வதேச அளவிலான மற்றும் தேசிய அளவிலான ேபராசிரியர்களின் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, நவீன தொழில் நுட்பங்கள் பற்றியும், அவற்றைக் கையாளுவது எப்படி எனவும் தெரிந்து கொள்ள கருத்தரங்குகள், போட்டிகள் ஆகியவை நடத்தப்படும்.

    இந்த அமைப்பின் மூலம் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமுதாயத்தில் தொழில் நுட்பங்களின் பங்கு, ஆகியோருக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஏ.சி.எம். சேப்டர் மற்றும் பி.எஸ்.ஆர்.இ.சி. ஏ.சி.எம். ஸ்டூடண்ட் சேப்டர் ஆகிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர். ஏ.சி.எம். மாணவர் குழு உறுப்பினரும், மாணவியுமான ஜெயஸ்ரீ நன்றி கூறினார்.

    • சிறப்பாக பணியாற்றிய தாசில்தார்களுக்கு பரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
    • வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று வருவாய்த் துறை அலுவலர்களுடனான பணி ஆய்வுக்கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சிறந்த வருவாய் வட்டாட்சி யர்களில் சிவகாசி வருவாய் வட்டாட்சியர் ராஜகுமார் முதல் பரிசும், சாத்தூர் வருவாய் வட்டா ட்சியர் வெங்கடேஷ், வெம்பக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் ரங்கநாதன், ராஜபாளையம் வருவாய் வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு 2-ம் பரிசும், திருச்சுழி வருவாய் வட்டாட்சியர் சிவக்குமார் 3-ம் பரிசும் பெற்றனர்.

    சிறப்பாக பணியாற்றிய தனி வட்டாட்சியர்களில் (ச.பா.தி) சிவகாசி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ஆனந்தராஜ் முதல் பரிசும், சாத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சீதாலட்சுமி 2-ம் பரிசும், ஸ்ரீவில்லிபுத்தூர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ராம்தாஸ், திருச்சுழி தனி வட்டாட்சியர் (ச.பா.தி) சிவக்குமார், விருதுநகர் தனி வட்டாட்சியர் (ச.பா.தி) ரமணன் ஆகியோருக்கு 3-ம் பரிசும் பெற்றனர்.

    முழுப்புலம் பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த மண்டல துணை வட்டாட்சியர்களில் திருச்சுழி மண்டல துணை வட்டாட்சியர் சரவ ணக்குமார் முதல் பரிசும், சாத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் முத்துலட்சுமி 2-ம் பரிசும், காரியாபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கருப்பசாமி 3-ம் பரிசும் பெற்றனர்.

    உட்பிரிவு பட்டா மாறுதல் மனுக்களை அதிகளவில் ஏற்பளிப்பு செய்த வட்ட துணை ஆய்வாளர்களில் விருதுநகர் வட்ட துணை ஆய்வாளர் சங்கரக்குமார் முதல்பரிசும், காரியாபட்டி வட்ட துணை ஆய்வாளர் ரைகான் 2-ம் பரிசும், சாத்தூர் வட்டத்துணை ஆய்வாளர் தங்கபாண்டியன் 3-ம் பரிசும் பெற்றனர்.

    அதிக எண்ணிக்கையில் கள ஆய்வு செய்து உட்பிரிவு மனுக்களை முடிவு செய்த சிறந்த வட்ட சார் ஆய்வாளர்களில் விருதுநகர் நில அளவர் வாசிமலை முதல் பரிசும், சாத்தூர் சார் ஆய்வாளர் நாகவித்யா 2-ம் பரிசும், வெம்பக்கோட்டை சார் ஆய்வாளர் முனியராஜ் 3-ம் பரிசும் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராம சுப்ரம ணியன், சார் ஆட்சியர் (சிவகாசி) பிருத்திவிராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, கோட்டாட்சியர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை அலுவ லர்கள் மற்றும் அரசு அலு வலர்கள் கலந்து கொண்டனர்.

    • மனைவியை பிரிந்த தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45), தொழிலாளி. கருத்து வேறுபாடு காரணமாக 7 வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். சம்பவத்தன்று பசும்பொன் தெருவில் உள்ள அவரது வீட்டில் செல்வகுமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

    வத்திராயிருப்பு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    • மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    பாலையம்பட்டி

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த மருத்துமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் நியமிக்க வேண்டும். நோயாளிகளுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை பற்றாக்குறை இல்லாமல் வழங்க வேண்டும், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், சி.டி. ஸ்கேன் வசதி ஏற்படுத்த வேண்டும்.

    அதை இயக்குவதற்கு தேவையான ஊழியர்களையும் நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    நகர செயலாளர் காத்தமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் தாமஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொறுப்பாளர் தமிழ்ச்செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.

    • அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாவட்ட செயலாளர் பேட்டியளித்தார்.
    • பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க நகர, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமையில் செயல்படுவது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கூட்டங்களை நடத்தி யாருக்கு ஆதரவு என தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பங்கேற்க நகர, ஒன்றிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    கூட்டத்துக்கு பின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் நலன் கருதி ஒற்றை தலைமைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    • யோகா பயிற்சியில் நீதிபதிகள் பங்கேற்றனர்.
    • யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பாலையம்பட்டி

    ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதையொட்டி விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார் தலைமையி் யோகா பயிற்சி நடந்தது. இதில் நீதிபதிகள் ராஜ்குமார், சிந்துமதி, கவிதா மற்றும் நீதித்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி நடந்தது. இதில் அருப்புக்கோட்டை நீதிமன்ற சார்பு நீதிபதி ராமலிங்கம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்துஇசக்கி ஆகியோர் பங்கேற்றனர்.

    யோகா ஆசிரியர் சுந்தர்ராஜன் பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் குருசாமி, செயலாளர் பாலச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களும் கலந்து கொண்டனர். சாத்தூரில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது.

    சாத்தூர் நீதித்துறை நடுவர்கள் இதில் பங்கேற்று ஆசனங்கள் செய்தனர். சார்பு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட உரிமையியல் நீதித்துறை நடுவர் அனுராதா, நீதித்துறை குற்றவியல் நடுவர் ராஜபிரபு ஆகியோர் பலவிதமான யோகா ஆசனங்களை செய்தனர்.

    யோகா ஆசிரியர் ஆசனங்களை செய்து காண்பித்து அதற்கான பலன்களை விளக்கிக் கூறினார்.

    • மூதாட்டியிடம் நூதன முறையில் 7 பவுன் தங்க நகைகள் திருட்டுப்பட்டது.
    • தேவகோட்டை நகர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    தேவகோட்டை

    தேவகோட்டை மாணிக்க விளாஸ் வீதியைச் சேர்ந்த சிதம்பரம். இவரது மனைவி தெய்வானை (வயது 80). இவர் கணவரை இழந்து தனியாக வசித்து வருகிறார். நேற்று மாலை தனது வீட்டிலிருந்து அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார்.

    அப்ேபாது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மூதாட்டியிடம் நாங்கள் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு, நேற்று இதே பகுதியில் திருடர்கள் வயதான பெண்களிடம் நகைகளை பறித்து சென்று விட்டார்கள். உங்களுடைய நகைகளை மணிபர்சில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறினர்.

    மேலும் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க செயின், கையில் அணிந்திருந்த 3 பவுன் தங்க வளையல்கள், 2 கழட்டி ஆகியவற்றை ஒரு மணி பர்சில் வைத்து பத்திரமாக கொண்டு செல்லுங்கள் என்று கூறி விட்டு சென்றுள்ளனர்.

    மூதாட்டி வீட்டுக்கு சென்று அந்த பர்சை திறந்து பார்த்த ேபாது தனது நகைகள் அதில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தேவகோட்டை நகர் ேபாலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல் ஆய்வாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

    தேவகோட்டை நகரில் இதே முறையில் நூதன திருட்டு 2 முறை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்களிடம் 11 பவுன் நகை திருடு போனதும் குறிப்பிடத்தக்கது.

    • கரித்தூள் நிறுவனத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
    • தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள போக்குவரத்து நகரில் பாண்டியராஜ் என்பவருக்கு சொந்தமான கரித்தூள் நிறுவனம் உள்ளது.

    இங்கு மரத்துகள்களை துண்டுகளாக மாற்றும் பணி நடைபெறுகிறது. 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பற்றியது.

    இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான எந்திரங்கள் காப்பாற்றப்பட்டது. சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×