என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ராஜபாளையம் நகர் பகுதியில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட பூமி பூஜை நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகர் 9,10,11 ஆகிய வார்டு பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சம்மந்தபுரம் சீதக்காதி தெருவில் நியாய விலைக்கடை கட்டிடம் கட்ட சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த பணிக்கு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் முன்னிலையில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ராஜபாளையம் நகர, கிராமப்பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 10 நியாய விலைக்கடைகள் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. அதில் சம்மந்தபுரம் பகுதி நியாய விலைக் கடை அமைக்க பூமி பூஜை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் ரத்தினவேல், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகாசியில் மின்னொளி கபடி போட்டி நடந்தது.
    • இந்த போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்

    சிவகாசி

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் இணைந்து சின்னமருது கபடி குழு மற்றும் பன்னீர்செல்வம் கபடி குழுவினர் நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி கபடி போட்டியை சிவகாசி அருகே ரிசர்வ்லைன் மினி ஸ்டேடியத்தில் 2நாட்கள் நடத்தியது.

    எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும், தமிழ்நாடு ஒலிம்பிக் கமிட்டி சங்க துணைத் தலைவருமான ராஜ்சத்யன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பரிசு தொகை வழங்கினர்.

    இந்த போட்டியில் விருதுநகர், மதுரை தேனி, திண்டுக்கல், நெல்லை உட்பட தென் மாவட்டங்களில் இருந்து 100 அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இறுதிப்போட்டியில் தமிழ்பாடி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. முதல் பரிசாக 12 அடி கோப்பை மற்றும் ரூ.15ஆயிரமும், 2-ம் பரிசாக 10 அடி கோப்பை ரூ.12ஆயிரமும், 3-ம் பரிசாக 8 அடி கோப்பை ரூ.10ஆயிரமும் வழங்கப்பட்டது.

    4-ம் பரிசாக 6 அடி கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம், 5-ம் பரிசு முதல் 8-ம் பரிசு வரை 4 அடி கோப்பை மற்றும் ரூ.4 ஆயிரம் 9-வது பரிசு முதல் 12-ம் பரிசு வரை 2 அடி கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய் ஆனந்த், வழக்கறிஞர் மாரீசுவரன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, வெங்கடேஷ், லட்சுமி நாராயணன், ஆரோக்கியராஜ், சிவகாசி மாநகர பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் உள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

    செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் பூவேஸ் ராஜமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மின் நுகர்வோர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் கிராம மக்களிடம் உதவி செயற்பொறியாளர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அதிகாரியிடம் குற்றம் சாட்டினர்.

    லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தெரிவித்தார்.

    • கோவில் திருவிழாவில் கடைகளை திடீரென அடைக்க சொல்லி போலீசார் பதட்டத்தை ஏற்படுத்தினர்.
    • போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டார்.

    விருதுநகர்

    விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 1 வாரமாக நடந்து வருகிறது. இதில் விருதுநகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று முன்தினம் திருவிழா வில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான அக்னிசட்டி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை விடிய விடிய 21,101 பக்தர்கள் அக்னிசட்டிகளை எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேலும் பெண்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதுபோன்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.

    இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள் 24 மணி நேரமும் திறக்கப் பட்டிருந்தன. மேலும் திருவிழாவை முன்னிட்டு பல புதிய கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை கூறி விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரி திடீரென நேற்று இரவு கடைகளை அடைக்க கோரி வியாபாரிகளை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் திருவிழா வியாபாரத்தை நம்பி விடிய, விடிய கடை திறப்பது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் திடீர் கெடு பிடியால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை திருவிழா நடந்த பகுதியில் பதட்டத்தை உருவாக்கியது. விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரியின் நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்தார்.

    மேலும் அதற்குரிய பாதுகாப்பு அளிக்குமாறும் போலீசாருக்கு உத்தர விட்டார்.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் காதல் விவகாரத்தில் 2 வாலிபர்கள் தாக்கப்பட்டனர்.
    • இதுகுறித்து விருதுநகர் மேற்கு, எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி காலனியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் மகேந்திரன்(வயது23). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். இதற்கு பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    சம்பவத்தன்று மகேந்திரன் வீட்டின் முன்பு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் தந்தை உள்பட 3 பேர் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். படுகாயமடைந்த மகேந்திரன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டான்பட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கணேஷ்(28). இவர் பெருமாள்பட்டியை சேர்ந்த புழுகாண்டி என்பவரின் மகளுடன் பழகியதாக தெரிகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புழுகாண்டி, அவரது மகன் கதிர்வேல், உறவினர் நடராஜன் ஆகிய 3 பேர் சம்பவத்தன்று கணேசை சரமாரியாக தாக்கினர்.

    படுகாயமடைந்த அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருத்தங்கல் முத்துமாரி நகரை சேர்ந்த உதயகுமார்(26). தனியார் கிளப் பார் ஊழியரான இவரை மது கேட்டு வடபட்டி மேலூரை சேர்ந்த மாரிச்செல்வம், கபாலி, சதீஸ் ஆகியோர் தாக்கினர். இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்-கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
    • புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை புல்லநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சிவபெருமாள்(21). கட்டித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று வேலை பார்த்த இடத்தில் உள்ள மோட்டார் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் சூலக்கரை மேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி(50). கட்டிட தொழிலாளியான இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.

    சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த கிருஷ்ணசாமி, தனி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி முருகலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலை தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
    • விசாரணையில், கொலையுண்ட சுந்தர பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் தனலட்சுமி. இவரது மகன் சுந்தர பாண்டி(வயது36).

    இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்தார். அப்போது பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது.

    பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடிய சுந்தர பாண்டியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிசிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்தப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    கொலை தொடர்பாக சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கொலையுண்ட சுந்தர பாண்டிக்கும், அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரின் மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    இதனை கைவிடுமாறு சுந்தர பாண்டியை, சந்திரன் பலமுறை கண்டித்துள்ளார். இந்தநிலையில் சந்திரனின் ஆதரவாளர்கள் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல், கண்ணன், சுருட்டை குமார், வீரபுத்திரன், குட்டை ஆனந்த் ஆகிய 5 பேர் சந்திரனுக்கு ஆதரவாக நேற்று மாலை சுந்தர பாண்டியை சந்தித்து கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த 5 பேரும் சுந்தரபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடைய வீரபுத்திரன் என்பவரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்துள்ளனர். சாமுவேல் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர்.

    • நாளை செப்புத்தேரோட்டம் நடக்கிறது.
    • மேளதாளங்கள் முழங்க மங்கலப்பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் ஆண்டாள், ரெங்க மன்னார் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வந்தனர்.

    நாளை (புதன்கிழமை) காலை 7 மணிக்கு செப்புத்தேரோட்டம் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

    மாலை 4 மணிக்கு பெரியாழ்வார் கன்னிகாதானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன் பிறகு தங்க பல்லக்கில் ஆண்டாள் அழைத்து வரப்படுகிறார். இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ஆண்டாள்-ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இதற்காக ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண மண்டபம் முன்பு பிரமாண்ட பந்தல் அமைந்து, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இருந்து அறங்காவலர் குழு தலைவரின் மனைவி சொர்ணலதா சுப்பாரெட்டி தலைமையில் தேவஸ்தான அதிகாரிகள் ஆண்டாளுக்கு பட்டுப்புடவை மற்றும் வஸ்திரம் மங்கலப் பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர்.

    கோவில் முன்பு மேளதாளங்கள் முழங்க மங்கலப்பொருட்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த பொருட்கள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் 23-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் பாலமுருகன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி செயலர் அ.பா.செல்வராசன் தலைமை தாங்கினார்.

    அவர் பேசுகையில், காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு நிறைவின் பொழுது தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகள் நலன் கருதியும், சுற்று வட்டார கிராமப்புற குழந்தைகளின் நலன் கருதியும் இந்தகல்லூரி உருவாக்கப்பட்டது.

    மாணவர்கள் படித்தால் மட்டும் போதாது வேலைவாய்ப்பை பெறுவதற்கான தகுதிகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அலைபேசியில் நேரத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை விடுத்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு முதல் பட்டப்படிப்பின் இறுதியில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர் களுக்கு, அவர்கள் செலுத்திய கல்விக் கட்டணம் முழுவதும் திரும்ப வழங்கப்படும் என்றார்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ.வும், அரசன் குழும தலைவருமான அசோகன் பேசுகையில், இன்றைய சூழலில் மாணவர்கள் படிப்புடன் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்துல்கலாம் கூறியது போல கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க கடுமையாக உழைக்க வேண்டும்.

    தொழில் முனைவோராக உருவெடுத்து பலருக்கு வேலை வழங்கும் நிலைக்கு மாணவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டுவிடாமல் அந்த தோல்வியை உங்கள் வெற்றியின் படிக்கட்டாக மாற்றி வாழ்வில் முன்னேற வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் மாணவர்கள் மனஉறுதியை கைவிடாமல் பெற்றோரின் நலனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றார்.

    இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு நளினி அசோகன் பரிசு வழங்கினார். விழாவில் ஆங்கிலத்துறை, வணிகவியல் துறை, தமிழியல் துறை பேராசிரியர்கள் எழுதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    முன்னதாக துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். முடிவில் வணிகவியல் (கணினிப்பயன்பாட்டியல்) துறைத்தலைவர் நளாயினி நன்றி கூறினார்.

    • சாத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் பெண்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நாள் தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

    மேலும் அம்பாள் தினமும் சப்பரங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான பூக்குழி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.

    திருநங்கைகள் உள்பட சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காளியம்மன் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட பூக்குழியில் தீ மிதித்தும், அலகு குத்தியும், அம்மன் வேடமிட்டும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    இதில் சாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாத்தூர் டி.எஸ்.பி வினோஜி தலைமையில், இன்ஸ் பெக்டர் செல்லப்பாண்டின், சப் இன்ஸ்பெக்டர் பாண்டி யன் மற்றும் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • ராஜபாளையத்தில் காரை நிறுத்துவது தொடர்பாக இருதரப்பினர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
    • 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் வடக்கு மலையடிபட்டி காட்டுநாயக்கர் தெருவில் வசிப்பவர் ஈஸ்வரன் (வயது 25) இவர் தனது காரை நிறுத்த சென்றபோது வழியில் நின்ற ஆட்டோவை ஒதுக்கி விடுமாறு கூறியுள்ளார். அதற்கு ஆட்டோ டிரைவர் சீனிவாசன் (35 )என்பவர் மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனைக் கண்ட ஈஸ்வரனின் உறவினர் முனீஸ்வரன், சீனிவாசனை கண்டித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து சீனிவாசன், அவரது தம்பி முருகன் ஆகியோர் அரிவாளை எடுத்து வந்து முனீஸ்வரனை வெட்டி உள்ளனர். அப்போது ஈஸ்வரன் தரப்பை சேர்ந்த பார்த்திபன், மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகியோர் சீனிவாசனை தாக்கி உள்ளனர். இந்த மோதலில் முனீஸ்வரன், சீனிவாசன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    இது பற்றி ஈஸ்வரன் ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சீனிவாசன், முருகன் ஆகியோர் மீதும், சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் ஈஸ்வரன், பார்த்திபன், மாரிமுத்து, முனீஸ்வரன் ஆகிய 4 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சிவகாசி தனியார் கல்லூரி வரலாற்று துறை மாணவர்கள் கீழடி, விஜயகரிசல்குளம், சிவகளை உள்ளிட்ட அகழாய்வு மையங்கள் மற்றும் வரலாற்று தொன்மை வாய்ந்த பல்வேறு இடங்களுக்கு சென்று கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் வரலாற்று துறை மாணவர்களுக்கு கல்வெட்டுகள் குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பு நடந்தது. வட்டெழுத்து, தமிழி, கிரந்தம் உள்ளிட்ட எழுத்துக்களை கண்டறிவது, படிப்பது குறித்து மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் உள்ள வடபத்ரசயனர் சன்னதியில் மாணவிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது வடபத்ரசயனர் உட்பிரகாரத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுப்பது குறித்து வரலாற்று ஆய்வாளர் உதயகுமார், உதவியாளர் முத்துபாண்டி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    இதில் வரலாற்று துறை தலைவர் ம்யா, பேராசிரியர்கள் வெண்ணிலா, கலைவாணி மற்றும்

    150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×