என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் திருவிழா: கடைகளை திடீரென அடைக்க சொல்லிய போலீசார்
- கோவில் திருவிழாவில் கடைகளை திடீரென அடைக்க சொல்லி போலீசார் பதட்டத்தை ஏற்படுத்தினர்.
- போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்து தீர்வு கண்டார்.
விருதுநகர்
விருதுநகரில் பிரசித்தி பெற்ற பராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா கடந்த 1 வாரமாக நடந்து வருகிறது. இதில் விருதுநகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நேற்று முன்தினம் திருவிழா வில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான அக்னிசட்டி, பால்குடம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நேற்று காலை முதல் நள்ளிரவு வரை விடிய விடிய 21,101 பக்தர்கள் அக்னிசட்டிகளை எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் பெண்கள் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. இதுபோன்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
இதன் காரணமாக நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை கோவில் அமைந்துள்ள பகுதி மற்றும் பல்வேறு பகுதிகளில் கடைகள் 24 மணி நேரமும் திறக்கப் பட்டிருந்தன. மேலும் திருவிழாவை முன்னிட்டு பல புதிய கடைகளும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாதுகாப்பு காரணங்களை கூறி விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரி திடீரென நேற்று இரவு கடைகளை அடைக்க கோரி வியாபாரிகளை வற்புறுத்தியதாக தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் திருவிழா வியாபாரத்தை நம்பி விடிய, விடிய கடை திறப்பது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு போலீசாரின் திடீர் கெடு பிடியால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கை திருவிழா நடந்த பகுதியில் பதட்டத்தை உருவாக்கியது. விருதுநகர் கோட்ட போலீஸ் அதிகாரியின் நடவடிக்கை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கடைகளை திறந்து வைக்க அனுமதி அளித்தார்.
மேலும் அதற்குரிய பாதுகாப்பு அளிக்குமாறும் போலீசாருக்கு உத்தர விட்டார்.