என் மலர்
வேலூர்
வேலூர்:
தென்மேற்கு வங்க கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று 3-வது நாளாகவும் தொடர்ந்து பெய்தது.
சில நேரங்களில் சாரல் மழை போன்றும் சில நேரங்களில் பலத்த மழையும் பெய்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லமுடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டமின்றி வேலூர் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது. வெளியில் சென்ற பொதுமக்கள் குடைபிடித்தும், மழை கோட்டு அணிந்தும் சென்றனர். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
தொடர் மழையால் வேலூர் சூரியகுளம் பர்மாகாலனி பகுதியில் உள்ள சில வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீரும் புகுந்தது. தெருவிலும் முழங்கால் வரை தண்ணீர் தேங்கி நின்றது. அதேபோன்று சேண்பாக்கம் ராகவேந்திரா நகரில் உள்ள சில வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

வேலூர் ஆற்காடு ரோடு, புதிய பஸ்நிலையம் அருகே கிரீன்சர்க்கில், சர்வீஸ் ரோடு, ஆரணிரோடு பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக ஆற்காடு பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்துள்ள மழையளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
வேலூர்-47.3, ஆம்பூர்-25.4, வாணியம்பாடி-19.7, ஆலங்காயம்-25.9, அரக்கோணம்-37.8, காவேரிபாக்கம்-32.2, வாலாஜா-29.2, சோளிங்கர்-14, திருப் பத்தூர்-3.8, ஆற்காடு-59, குடியாத்தம்-23.3, மேலாலத்தூர்-29.6, பொன்னைடேம்-16.2, காட்பாடி-44.8, அம்முண்டிமில்-30.2. #Rain
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்குட்பட்ட சேண்பாக்கத்தில் தி.மு.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு எதிர்கட்சி துணை தலைவரும், காட்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வுமான துரைமுருகன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயல் தஞ்சை உள்பட 7 மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. பயிர், கால்நடைகள், வீடுகள் சேதத்தால் மக்களின் வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதை சரிசெய்ய எவ்வளவு நிதி தேவைப்படும், மக்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவற்றை எல்லாம் அமைத்து தர எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை கணக்கீடு செய்வது என்பது சாதாரணமான வேலையில்லை.

அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் கணக்கீடு செய்தார்கள் என்று கூறுகிறார்கள். ஒட்டுமொத்த கணக்கீடு குறித்து தலைமை செயலாளரோ, வருவாய்த்துறை செயலாளரோ சேத மதிப்பு குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இவைகளை எல்லாம் கணக்கீடு செய்யாமல் ஒப்புக்கு சப்பானியாக தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது.
மத்திய அரசு கணக்கீடு இல்லாமல் நிதி அளிக்காது. ஏற்கனவே வீசிய தானே புயலுக்கே இன்னும் நிவாரணம் வரவில்லை. தற்போது வீசிய புயல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதி மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். தமிழகத்தை பிரதமரோ, மத்திய உள்துறை மந்திரியோ, நிதி மந்திரியோ எட்டிக்கூட பார்க்கவில்லை. மத்திய அரசுக்கு தமிழகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை.
நிவாரண நிதி கேட்பதை தமிழக அரசு தைரியமாக கேட்க வேண்டும். கஜா புயலை தி.மு.க. அரசியலாக்கவில்லை. பாதிப்பு இடங்களை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தான் முதலில் சென்று பார்வையிட்டார். ஆனால் முதல்-அமைச்சர் ஹெலிகாப்டரில் பறந்து விட்டு வந்துவிட்டார். அவர் கீழே இறங்கி நடந்து சென்று பார்த்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm #Storm #DuraiMurugan
வேலூர் அடுத்த கணியம்பாடி கணிகணியானை சேர்ந்தவர் சிவா (வயது 30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக செல்வி அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இந்நிலையில் கடந்த 15-ந் தேதி அன்று சிவா செல்வியின் வீட்டிற்கு சென்று மீண்டும் தன்னுடன் வந்து குடும்பம் நடத்துமாறு அழைத்துள்ளார்.
அதற்கு செல்வி வரமறுத்ததால் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவா தான் வைத்திருந்த கத்தியால் செல்வியின் கழுத்து மற்றும் உடலில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதில் செல்வி ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
குடியாத்தம் அடுத்த காளியம்மன்பட்டி சாமியார் மலையை சேர்ந்தவர் சிவசெங்கோலன் (வயது 50). இவரது மகன் விஜய் (25). இவர்கள் 2 பேரும் கட்டிட தொழிலாளி.
நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு 2 பேரும் சைனகுண்டாவில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். பைக்கை விஜய் ஓட்டிவந்தார். சிவசெங்கோலன் பின்னால் அமர்ந்து வந்தார்.
கொட்டமிட்டா ஆம்பூரான்பட்டி என்ற இடத்தில் பைக் வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் சிவசெங்கோலன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். விஜய் படுகாயமடைந்தார்
பொதுமக்கள் விஜய்யை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் வடஅக்ரஹார தெருவைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகள் திவ்யா (வயது21). திவ்யாவின் தந்தை குமரேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் திவ்யாவை அவரது பாட்டி வளர்த்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திவ்யாவின் பாட்டியும் இறந்து விட்டார் . இதனால் தனிமையில் இருந்த அவர் மிகவும் மனவேதனையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் மண்எண்ணை கேனை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் இருந்து காட்பாடி, அரக்கோணம், வழியாக சென்னை சென்று அங்கிருந்து டேராடூன் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை சோளிங்கர் அடுத்த சித்தேரியில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ரெயில் என்ஜீனில் சிக்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த என்ஜீன் டிரைவர் அரக்கோணம் ரெயில்வே நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த ரெயில்வே போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்தும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.
ஆம்பூர்:
ஆம்பூர் மணல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் வெங்கிளி, ஜமீன் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிரே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து லாரி டிரைவர் அமரேசன் (வயது 30). என்பவரை கைது செய்தனர். மேலும் லாரியை பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த தோட்டாளத்தை சேர்ந்த சாமிநாதன் மகன் ரமேஷ் (வயது 27). வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக ஆம்பூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் ரமேஷ் வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.
வீட்டில் நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து ரமேசை கைது செய்தனர்.
ஆற்காடு தாஜ்புரா பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். ஆற்காடு கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் (26). 2 பேருக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது.
இதையடுத்து அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
சில நாட்களுக்கு பிறகு இளம்பெண் ராஜசேகரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயபடுத்தி வந்துள்ளார். இதையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணிடம் பேசுவதையும், பார்ப்பதையும் முற்றிலும் தவிர்த்து வந்தார்.இளம்பெண் ராஜசேகரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது தான் தெரியவந்தது. ராஜசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி 1 மகன் 2 மகள்கள் உள்ளனர் என்று அதிர்ச்சியடைந்த இளம்பெண்.
இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வாலாஜா:
வாலாஜா லோகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 61). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வேலையை முடித்து விட்டு வாலாஜாவில் இருந்து வீட்டிற்கு சைக்களில் சென்று கொண்டிருந்தார்.
கீழ்புதுப்பாளையம் என்ற இடத்தில் சைக்கிள் சென்ற போது பின்னால் வந்த தனியார் பஸ் சைக்கிள் மீது மோதியது. இதில் கன்னியப்பன் பலத்தகாயமடைந்தார்.
அவரை மீட்ட பொதுமக்கள் வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்த்திரியில் அனுமதித்தனர்.அங்கு கன்னியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அருகே தாஜ்புரா ஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீட்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த ரவி (வயது 45) என்ற தொழிலாளியை காணவில்லை என அவரது மனைவி மாரி (38), ஏற்கனவே ஆற்காடு தாலுகா போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் தாஜ்புரா ஏரிக்கரையில் கிடந்த பிணத்தை மாரியை அழைத்து சென்று காண்பித்தனர். அவர் பிணமாக கிடப்பவர் எனது கணவர் இல்லை என்றார். பின்னர் பிணத்தை வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், ரவியின் மனைவி மாரி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மாரியும் கள்ளக்காதலன் முருகனும் ரவியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி குடிபோதையில் இருந்த ரவியை மாரியும், முருகனும் சேர்ந்து விறகுகட்டையால் அடித்து கொலை செய்து தாஜ்புரா ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மாரி, முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
ஆம்பூர்:
ஆம்பூர் மாராபட்டு பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி இவர் வடச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறி சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.
சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி சம்பந்திகுப்பம் பகுதியை சேர்ந்த கெங்கையன் மகன் விக்ரமன் (வயது 22). என்பவர் எனது மகளை கதாலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருக்கலாம் என்று ஆம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியை தேடி வந்த நிலையில் நேற்று ஆம்பூர் ரெயில் நிலையத்தில் சிறுமி இருப்பதாக தகவல் கிடைத்து.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு விக்ரமனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் பேரணாம்பட்டு அருகே உள்ள பாலூர் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இருவரும் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பிரகாசை கைது செய்து சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.






