என் மலர்tooltip icon

    வேலூர்

    நாட்டறம்பள்ளி அருகே நடந்த விபத்தில் குடியாத்தம் மாணவர் உள்பட 2 பேர் இறந்தனர்.

    நாட்டறம்பள்ளி:

    குடியாத்தம் சென்றாம் பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது24). பெங்களுருவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (24). சென்னையில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார்.

    இவர்கள் 2 பேரும் இன்று காலை பெங்களுருவில் இருந்து புறப்பட்டு குடியாத்தத்திற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். நாட்டறம்பள்ளி கல்லாறு என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்ற லாரி மீது பைக் மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமார், ராஜேஷ் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். இது குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே தலைமை ஆசிரியையை தாக்கி நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    அரக்கோணம்:

    அரக்கோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தக்கோலம், கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். உடனே போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அரக்கோணம் அருகே உள்ள கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 29), மேலாந்தூரை கிராமத்தை சேர்ந்த தினேஷ் (24) என்பதும், அரக்கோணம், ஏ.என்.கண்டிகை பகுதியை சேர்ந்த தலைமை ஆசிரியை கோமளாவை தாக்கி நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், அவர்கள் 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 பவுன் நகையையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
    வேலூர் கலெக்டர் ஆபீசில் முதியவர் மண்எண்ணையை குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் கன்சால் பேட்டையை சேர்ந்தவர் சின்னப்பன். கொணவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் 15 வருடமாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார்.

    அவருக்கு கிடைக்க வேண்டிய நிதி பயன்களை வழங்குமாறு தொழிலாளர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தொழிற்சாலை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த சின்னப்பன் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்க வந்தார்.

    அப்போது தான் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணையை எடுத்து குடித்து விட்டார். மேலும் மண்எண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த போலீசார் உஷாராகி அவரை தடுத்தனர்.

    அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆம்பூர் அருகே விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த கண்ணடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் சைனா (வயது 26). ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கும் கண்ணடி குப்பம் பகுதியை சேர்ந்த அர்ச்சனா (22) என்பவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    அர்ச்சனா தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதனால் நேற்று அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனால் உற்சாகத்தில் இருந்த சைனா தனது நண்பர்களுக்கு மது விருந்து வைத்துள்ளார்.

    பின்னர் நேற்றிரவு 8 மணியளவில் கண்ணடி குப்பம்- நாச்சார்குப்பம் இடைப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் செல்போன் பேசியபடி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது விண்ணமங்கலத்தை சேர்ந்த சீனிவாசன் ஓட்டி வந்த ஆட்டோ சைனா மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சைனா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னுடைய மனைவியின் வளைகாப்பு அன்றே புது மாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் சென்னை பீர்க்கங்கரணை காட்டன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தகோவிந்தன் (45). ஆம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் வடபுதுப்பட்டு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். 

    அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி வேகமாக சென்ற கார் வசந்த கோவிந்தன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. விபத்தில் படுகாயம் அடைந்த வசந்தகோவிந்தனை மீட்ட ஆம்பூர் தாலுகா போலீசார் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் ஆடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    பள்ளிகொண்டா அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் தெருவில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் பள்ளிகொண்டா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க வாலிபர் ஒருவர் கடப்பாரையால் உடைத்து கொண்டிருந்தார். ஏ.டி.எம். மையம் அருகே போலீசார் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனையடுத்து போலீசார், வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரவி மகன் நந்தா என்கிற முத்துக்குமார் (வயது 22) என்பதும், செங்கல்சூளை வியாபாரி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துக்குமாரை கைது செய்தனர்.

    வாலாஜா அருகே பஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலாஜா:

    வாலாஜா அடுத்த கிருஷ்ணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மனைவி பத்மாவதி (வயது 65).

    இவருடைய கணவர் எத்திராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    வாலாஜா அரசு பெண்கள் கல்லூரி பின்புறம் உள்ள அம்மனந்தாங்கல் ஏரிக்கு 100 நாள் வேலைக்காக சென்றார்.

    அப்போது தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து மேட்டுரூக்கு சென்ற தனியார் பஸ் பத்மாவதி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பத்மாவதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் கோவில் உண்டியலை உடைத்து மர்ம கும்பல் பணத்தை திருடி சென்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் டவுன் கிருஷ்ணாபுரம் பகுதியில் பெருமாள் கோவில் உள்ளது. அதன் அருகிலேயே 9-வது தெருவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து முருகர் கோவில் கட்டினர்.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு முருகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு வைக்கப்பட்டு இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    5 நாட்களுக்க முன்பு தான் கோவில் கும்பாபிஷேகம் நடந்ததால் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது என கோவில் நிர்வாகிகளுக்கு தெரியவில்லை.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைத்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அணைக்கட்டு அருகே மின்வாரியத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    அணைக்கட்டு:

    அணைக்கட்டை அடுத்த ஊணை மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் வினோத்குமார் (வயது 22), கார்த்திகேயன் (23). இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த பாலு என்பவரிடம் அரசு வேலையில் சேர்ப்பதற்கு யாராவது இருக்கின்றார்களா? என்று கேட்டுள்ளனர். அதற்கு பாலு, குடியாத்தம் தாலுகா மேலாலத்தூர் ஊராட்சி வடக்குபட்டறை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (33) என்பவர் இருக்கிறார் என்று சொல்லி அவரை வரவழைத்து வினோத்குமார் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரிடம் வேலை சம்பந்தமாக பேசியுள்ளனர்.

    அப்போது சுரேஷ் மின்வாரியத்துறையில் முக்கியமான அதிகாரிகள் தெரியும் முன்பணமாக 2 பேரும் சேர்ந்து ரூ.3 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவரும் ரூ.3 லட்சத்தை சுரேசிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இன்று வரை வேலையும் கிடக்கவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை.

    இதுகுறித்து வினோத்குமார் அணைக்கட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேசை கைது செய்தனர்.

    வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். #Nalini #Gajastorm

    வேலூர்:

    கஜா புயல் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளை இழந்தும், மின்சாரம், குடிநீர் இல்லாமல் தவிக்கின்றனர்.

    பல ஆயிரம் ஏக்கர் வாழை, தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல்வேறு தரப்பில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொருட்கள், உணவு ஆகியவற்றை நிவாரணமாக வழங்கி வருகின்றனர். மேலும் நிவாரண நிதியும் வழங்கி வருகின்றனர்.

    வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி கொலை கைதி நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு ரூ.1000 வழங்கியுள்ளார். நளினி ஜெயிலில் டெய்லரிங் வேலை செய்து வருகிறார். கைதிகளுக்கான துணிகளை தினமும் தைத்து கொடுக்கிறார்.

    இதன் மூலம் கடந்த மாதம் ரூ.1000 கூலி வாங்கினார். அந்த பணத்தை ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாளிடம் நிவாரணத்துக்கு அளிக்கும்படி வழங்கினார். அதனை சிறைத்துறை மூலம் அனுப்பி வைத்தனர்.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென பல்வேறு தப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    சட்டரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நளினியின் வக்கீல் புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நளினி கஜா புயல் நிவாரண பணிக்கு உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #Nalini #Gajastorm

    அரியூர் அருகே டாஸ்மாக் கடை சுவரில் துளை போட்டு பல ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    அரியூர் அருகே ஜமால்புரம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று இரவு விற்பனை முடிந்து சூப்பர் வைசர் அண்ணாதுரை மற்றும் விற்பனையாளர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர்.

    நள்ளிரவில் மர்ம கும்பல் கடப்பாறை கொண்டு கடையின் சுவற்றை இடித்து துளைபோட்டனர். உள்ளே புகுந்த அவர்கள் பல ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை அள்ளி சென்றுவிட்டனர்.

    இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். இது தொடர்பாக அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.

    இந்த டாஸ்மாக் கடையில் ஏற்கனவே இதேபோல் கும்பல் துளையிட்டு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதையடுத்து அங்கு கேமரா பொருத்து பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் மற்றொரு பக்க சுவரை துளையிட்டு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.திருட்டு கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் கிரீன் சர்க்கிளில் டாக்டரிடம் செல்போன் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூர்:

    வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்தவர் வாசு (வயது 50). ஹோமியோபதி டாக்டர். இவர் நேற்று கிரீன் சர்க்களில் செல்போன் பேசிக் கொண்டு நின்றிருந்தார். அப்போது அங்கு ஒரு பைக்கில் வந்த 3 பேர் கும்பல் திடீரென வாசுவை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

    அதிர்ச்சியடைந்த வாசு திருடன், திருடன் என கத்தி கூச்சலிட்டார். அதற்குள் அந்த மர்ம கும்பல் தப்பிச் சென்று விட்டது. இது குறித்து வாசு வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் செல்போன் பறிப்பு சம்பவம் பதிவாகி உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு பெண்ணிடம் செயின் பறிப்பு நடந்தது. இந்த பகுதியில் தொடர் வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைத்து ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    வேலூரில் காய்ச்சலை தடுக்க நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.
    வேலூர்:

    தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் காய்ச்சல் அதிகரித்து வருவதால், நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாமினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், நகரம் மட்டுமல்லாது கிராமங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்குகிறது. இதன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

    இதனை தடுக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் ஒவ்வொரு பகுதியாக சென்று மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 3 மருத்துவ முகாம் என 20 ஒன்றியங்களில் மொத்தம் 60 முகாம்கள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்த பின்னர், 'டெங்கு' அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்வார்கள்.

    அத்துடன் காய்ச்சல் பாதிக்கப்பட்டவரின் வீடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுகாதார ஊழியர்கள் மூலம் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களும் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

    உதாரணமாக, மழைக்காலத்தில் தண்ணீரை நன்கு காயவைத்து குடிக்க வேண்டும். உணவுகளை சமைத்த உடனே சிறிது நேரத்தில் உட்கொள்வது நல்லது. நீண்ட நேரம் கழித்து உட்கொள்வதால் ஆரோக்கியம் பாதிக்கப்படும். உணவுக்கு முன் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவ வேண்டும்.

    அதுமட்டுமின்றி, திறந்த வெளியில் மலம் கழித்தலை தவிர்க்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனைகளையோ அணுகி சிகிச்சை பெற வேண்டும். வீட்டின் அருகில் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×