என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் ரூ.2 ஆயிரம் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து சப்ளை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே ஆலாங்குப்பம் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு வந்த வாலிபர் ரூ.2,000 நோட்டை கொடுத்து சிகரெட் பாக்கெட் வாங்கினார்.

    அந்த நோட்டை பார்த்ததும் சந்தேகம் அடைந்த கடைக்காரர் அது குறித்து கேட்டுள்ளார். இதனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.

    கடைக்காரர் சத்தம் போடவே அங்கு இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அவரது பாக்கெட்டை பார்த்த போது அதில் 2,000 ரூபாய் நோட்டுகள் 11 இருந்தது.

    இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த சதாம் உசேன் (வயது28) என்பது தெரியவந்தது. ஜோலார்பேட்டை நகர அ.ம.மு.க. இளைஞர் பாசறை செயலாளராக உள்ளார். அவரிடம் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள் கலர் ஜெராக்ஸ் எடுத்து இருப்பது தெரியவந்தது.

    ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டியை சேர்ந்த அ.ம.மு.க. நகர துணை செயலாளர் அலெக்சாண்டர் (35). ரூ.2 ஆயிரம் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்து கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

    அலெக்சாண்டர்-சதாம்உசேன்

    இதையடுத்து ஆம்பூர் போலீசார் அலெக்சாண்டர் வீட்டுக்கு சென்று அவரை கைது செய்தனர். அங்கு ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுக்கும் எந்திரம் இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இருவரும் சேர்ந்து வாணியம்பாடி வார சந்தையில் ரூ.40 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றியுள்ளனர்.

    ரூ.40 ஆயிரம் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றிக் கொடுத்தால் அலெக்ஸ் சாண்டர் ரூ.4 ஆயிரம் கமி‌ஷன் கொடுத்துள்ளார். இவர் பல ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் ஆம்பூர், ஜோலார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வாலாஜா அருகே சொகுசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் அதிர்ஷ்டவசமாக 37 பேர் உயிர் தப்பினர்.

    வாலாஜா:

    பெங்களூருவில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை சொகுசு பஸ் புறப்பட்டது. டிரைவர் உமேஷ் (வயது 46). என்பவர் ஓட்டிவந்தார். கண்டக்டராக மோகன் (57). என்பவர் உள்பட 37 பயணிகள் இருந்தனர்.

    ராணிப்பேட்டை அருகே உள்ள காரை என்ற இடத்தில் பஸ் சென்ற போது லாரி ஒன்று பஸ்சை முந்தி சென்றது. இதனால் பஸ் டிரைவர் உமேஷ் பிரேக் போட்டுள்ளார். அப்போது பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் கண்டக்டர் மோகன் காயமடைந்தார். பயணிகள் 37 பேர் அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    காயமடைந்த மோகனை வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பயணிகளை மாற்று பஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    வாணியம்பாடியில் ரெயிலில் கடத்த முயன்ற 7 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    வாணியம்பாடி:

    வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார் ஆகியோர் தலைமையில் வட்ட வழங்கல் அலுவலர்கள் பாலசந்தர், கண்ணன், தேவராஜ், ராம்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று ஜோலார்பேட்டை, பச்சூர், காட்பாடி உள்பட பல்வேறு ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு ரெயில்களில் ரே‌ஷன் அரிசி கடத்துவதை கண்டறிந்து 150 மூட்டைகளில் இருந்த 7 டன் ரே‌ஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

    ஆம்பூர் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்ததில் ரஜினி பட டெக்னீசியன் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். #Accident

    ஆம்பூர்:

    சென்னை பட்டாபிராம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தர் (வயது 34). இவர் ரஜினி நடித்து சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் கிராபிக்ஸ் டெக்னீசியனாக பணியாற்றி உள்ளார். இவரது மனைவி மாயா (25). இவர்களது குழந்தை கீர்த்தி (2).

    சுந்தர் தனது குடும்பத்துடன் இன்று காலை பெங்களூருக்கு காரில் புறப்பட்டு சென்றார். ஆம்பூர் அடுத்த மின்னூர் என்ற இடத்தில் கார் சென்ற போது நிலை தடுமாறி சாலை ஓரம் இருந்த தரைமட்ட கிணற்றில் கார் கவிழ்ந்தது. இதில் சுந்தர், மாயா, குழந்தை கீர்த்தி ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

    கிணற்றுக்குள் கிடந்ததால் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பது தெரியாமல் 3 பேரும் தவித்தனர். அங்கிருந்து கத்தி கூச்சலிட்டனர். யாரும் காப்பாற்ற வரவில்லை. சுந்தர் தனது செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து காருடன் விபத்துக்குள்ளாகி கிணற்றில் கிடப்பதாக தகவல் தெரிவித்தார்.

    அவர்கள் போலீசார் உதவியுடன் வந்த அங்கு தேடி பார்த்தனர். அவர்களுக்கும் காயமடைந்த 3 பேரும் இருந்த இடம் உடனடியாக தெரியவில்லை. தற்சமயமாக விபத்து நடந்த கிணற்றில் எற்றி பார்த்த போது அவர்கள் அங்கு இருப்பது தெரியந்தது. இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடனடியாக அவர்களை மீட்டனர். சுந்தர் அவரது குடும்பத்துடன் 1½ மணி நேரம் கிணற்றுக்குள் தவித்தனர். கிணற்றில் குறைந்த அளவே தண்ணீர் இருந்ததால் அவர்கள் உயிர் தப்பித்தனர்.

    அவர்கள் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  #Accident

    வேலூர் அருகே கார்த்திகை தீப விளக்கு ஏற்றிய போது தீயில் கருகிய சிறுமி இறந்தார்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த நாயக்கன் நேரியை சேர்ந்தவர் ரமேஷ். விவசாயி இவரது மகள் ஹரிணி (வயது 5). இவர் கார்த்திகை தீபத்தன்று வீட்டில் அகல்விளக்குகளை ஏற்றி உள்ளார்.

    அப்போது எதிர்பாராமல் அவர் அணிந்திருந்த ஆடையில் விளக்கில் இருந்து தீபற்றி எரிந்தது. உடல் முழுவதும் பற்றிய தீயால் சிறுமி அலறிதுடித்தார். அவரது அலறல் சத்தம்கேட்டு வந்த உறவினர்கள் சிறுமியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிகக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ஹரிணி சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் செய்தனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த பட்டு கிராமத்தையொட்டி உள்ள பாலாற்றில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் மாட்டு வண்டிகளில் மட்டும் மணல் எடுக்க மணல் குவாரி அமைக்கப்பட்டது.

    இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெகு தூரத்தில் இருந்தும் மாட்டுவண்டிகள் வர தொடங்கின. அதிகாலை முதல் நள்ளிரவு வரை தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி செல்கின்றனர்.

    இதனால் பாலாறு சுரண்டப்பட்டு நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்படுவ தோடு விவசாயம் முற்றிலும் நாசமாகிறது.

    சுடுகாட்டை அழித்தும் மணல் சுரண்டப் பட்டுவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மணல் குவாரியை உடனடியாக மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கடந்த அக்டோபர் மாதம் மாட்டு வண்டிகளை சிறை பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது அதிகாரிகள் மணல்குவாரியை மூட நடவடடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தனர்.

    இந்நிலையில் இதுவரையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திர மடைந்த கிராமமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மீண்டும் பாலாற்றில் குவிந்து மணல் குவாரியை முற்றுகையிட்டு மணலை ஆள்ளவிடாமல் போராட்டம் செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 21), திருநெல்வேலியை சேர்ந்த மதன் (23), ராமநாதபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் (23) என்பதும், ஓடும் ரெயிலில் பயணிகளிடம் செல்போன்கள் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆம்பூர் அருகே பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் பேபி காலனி பகுதியில் ஆம்பூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகபடும்படி சுற்றிதிரிந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 18). தன்சூர் அகமது (19). நூரில் அமின் (23). என்பது தெரிய வந்தது.

    மேலும் ஆம்பூர் சுற்று வட்டார பகுதியில் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை அருகே ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அப்துல்பஷித் (வயது 76). இவர் சம்பவத்தன்று புதூர் ரெயில்வே கேட்டினை கடக்க முயன்றார். அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரெயில் அப்துல்பஷித் மீது மோதியது. இதில் அவர் பலத்தகாயமடைந்தார்.

    இதனை கண்ட பொதுமக்கள் படுகாயமடைந்தவரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அப்துல் பஷித் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஜேலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூரில் வக்கீல் மனைவியிடம் 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் தியாகராஜநகர் பகுதியை சேர்ந்த வக்கீல் ஒருவர் மனைவியுடன் கொணவட்டத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் இரவு காரில் சென்றார்.

    பின்னர் இருவரும் அங்கிருந்து காரில் வீட்டிற்கு புறப்பட்டனர். காரை வக்கீல் ஓட்டினார். அவரது மனைவி பின் இருக்கையில் இடது ஓரத்தில் அமர்ந்திருந்தார். அவர்களை ‘ஹெல்மெட்’ அணிந்தபடி 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    இரவு 11 மணியளவில் கார், வீட்டின் முன்பாக வந்து நின்றது. மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் காரை கடந்து சென்று அருகில் உள்ள ஒரு இடத்தில் நின்றனர்.

    காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த வக்கீலின் மனைவி இறங்குவதற்காக கதவை திறந்தார். காரை ஓட்டி வந்த வக்கீலும் இறங்குவதற்காக ஆயத்தமானார்.

    அப்போது மோட்டார்சைக்கிளில் சற்று தொலைவில் நின்றவர்கள் மீண்டும் காரை நோக்கி திரும்பினர். அப்போது வக்கீலின் மனைவி காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் செல்ல முயன்றார். ஆனால் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரும் அவர் மீது மோதுவதுபோல் நெருங்கினர். அதிர்ச்சியடைந்த வக்கீலின் மனைவி ஒதுங்கி நிற்பதற்குள் அந்த 2 பேரும் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர்.

    நகையை பறிகொடுத்த பெண் ‘திருடன்’... ‘திருடன்’... என சத்தம் போட்டார். உடனே டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது கணவரும் இறங்கி ஓடி வந்தார். அருகில் வசிப்பவர்களும் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் நகை பறித்த 2 வாலிபர்களும் அதே மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றனர். நகைபறித்த கொள்ளையர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை.

    இது குறித்து தகவல் அறிந்த வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். வக்கீல் மனைவியிடம் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்ற ‘ஹெல்மெட்’ கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூரில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    வேலூர் தியாகராஜ புரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 35). நேற்று இரவு இவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்த வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ராஜலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    இதனால் திடுக்கிட்ட ராஜலட்சுமி கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூரில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    வேலூர்:

    வேலூர் துணை மின்நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புதிய பஸ் நிலையம், பைபாஸ் ரோடு, தோட்டப்பாளையம், பழைய பஸ் நிலையம், வேலூர் டவுன், பஜார், சலவன்பேட்டை, அண்ணாசாலை, கஸ்பா, ஊசூர், விரிஞ்சிபுரம், செதுவாலை, கொணவட்டம், சேண்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    ×