என் மலர்
வேலூர்
சித்தூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கார்கள் திருட்டு நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இதையடுத்து சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த்பட்டேல் பலமனேர் குற்றவியல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராம்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து கார் திருட்டு கும்பலை பிடிக்க உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை சித்தூரை அடுத்த கங்காவரம் மண்டலம் தண்டலம்பள்ளி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒன்றன்பின் ஒன்றாக 7 கார்கள் தொடர்ந்து வந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் கார்களை மடக்கி நிறுத்தினர். இதை பார்த்த காரில் வந்த 7 பேரும் காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினர். போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றபோது ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதையடுத்து போலீசார் 7 கார்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியபோது வேலூர் அடுத்த காட்பாடியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற குட்டி (வயது 32) என்பதும், இவர்கள் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் கார்களை திருடி, நம்பர் பிளேட், என்ஜின் எண் ஆகியவற்றை மாற்றி சென்னையில் உள்ள தனியார் கார் ஷோரூமில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 6 பேரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 7 கார்களை போலீஸ் சூப்பிரண்டு விக்ராந்த் பட்டேல் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறுகையில், ‘தப்பி ஓடிய கார் திருட்டு கும்பலை சேர்ந்த 6 பேரும் விரைவில் பிடிபடுவார்கள்’ என்றார்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியை சேர்ந்தவர் விஜயகுமார் (31). இவர் ஜோலார்பேட்டை அடுத்த ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தத்தில் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்றிரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை செல்போன் கடை அருகில் சலூன் கடைக்காரர் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது செல்போன் கடை பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜயகுமாருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
விரைந்து வந்த விஜயகுமார் கடையை திறந்து பார்த்தபோது விலை உயர்ந்த 7 செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். வழக்குபதிவு செய்த போலீசார் கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்தவர் குத்துஷ் (வயது 56). இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் தனகொண்ட பள்ளியில் உள்ளது. அந்த 5 ஏக்கரில் வாழை பயிரிடபட்டு வாழைகள் குலைதள்ளி அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்நிலையில் ஆந்திர வனபகுதியில் இருந்து 8 பெரிய யானை 3 குட்டியானை உள்பட 11 காட்டு யானைகள் இன்று அதிகாலை 2,30 மணிக்கு அவரது தோட்டத்தில் புகுந்தது. அங்கு 1 மணி நேரம் துவம்சம் செய்த யானைகள் வாழை தோட்டத்தினை நாசப்படுத்தியது.
இதில் வாழை மரங்கள் சாய்ந்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி குத்துஷ் யானைகளை கண்டு மிரண்டு போனார்.
இது குறித்து குடியாத்தம் வன அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். வன அலுவலர் மகேந்திரன், வனவர் ரவி, காப்பாளர் பூபதி, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசுகள் வெடித்து யானைகளை அங்கிருந்து விரட்டினர்.
அந்த யானைகள் ஆம்பூரான்பட்டி, தீர்த்தமலை பகுதிக்கு சென்றது. செல்லும் வழியில் உள்ள மரங்களையெல்லாம் துவம்சம் செய்தது. தற்போது யானைகள் தீர்த்த மலையில் முகாமிட்டு உள்ளது. இந்த யானைகளை ஆந்திர வனபகுதிக்கு விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை அந்த பகுதியில் ஆய்வு செய்தார்.
அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் சிறு கவர்களில் சாராயத்தை நிரப்பி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
போலீசாரை கண்டதும் அங்கு விற்பனை செய்தவர் மற்றும் வாங்க வந்தவர்கள் என அனைவரும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை விரட்டி சென்று சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சிவாஜி (55) என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 105 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை:
ஏலகிரி நிலாவூரை சேர்ந்தவர் பாபு (வயது 30). இவரது மனைவி செல்வி (27). இவர்கள் நேற்றிரவு ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
கோடியூர் என்ற இடத்தில் பைக் சென்ற போது எதிரே வந்த கார் மோதியது. இதில் 2 பேரும் பைக்கில் இருந்து தூக்கிவீசபட்டு படுகாயமடைந்தனர். இதனை கண்ட பொதுமக்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா அடுத்த எருகன்தொட்டி சின்ன தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது49). அரசு பஸ் கண்டக்டராக வேலைபார்த்து வந்தார். இவர் இன்று காலை ஆற்காடு போக்குவரத்து பணிமனைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
ராணிப்பேட்டை மாந்தாங்கல் அருகே சென்ற போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் வாலாஜா அடுத்த பாணாவரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி இவரது மகன் கோபி (வயது 32). இவர் நேற்றிரவு வாலாஜா பச்சையம்மன் கோவில் எதிரே உள்ள எம்.பி.டி. சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், காட்பாடி வழியே செல்லும் யஷ்வந்த்பூர், கவுஹாத்தி, கோவை, பெங்களூரு டபுள் டெக்கர் ரெயில்கள் உள்ளிட்ட அனைத்து ரெயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. 2 மணிநேரத்திற்கும் மேலாக ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். #CrackonRailwayTrack
உலகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி வேலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழா வேலூரில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அரக்கோணம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், குழந்தைகள் பாதுகாப்பு நலஅலுவலர் நிஷாந்தினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி கலந்து கொண்டு 191 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 68 ஆயிரத்து 880 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் வளம்பெற மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு விதமான நலத்திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தினார். அந்த திட்டங்கள் தற்போதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வேலூர் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது.
வேலூர் மாவட்டத்தில் 84 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் நலத்திட்டங்களை பெற அரசு உறுதுணையாக இருக்கும்.
மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க வங்கியில் மானியக்கடன், கல்விக்கடன், 3 சக்கர சைக்கிள்கள், சிறப்பு சக்கர நாற்காலிகள், பிரெய்லி கைக்கெடிகாரம், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று மாற்றுத்திறனாளிகள் பயனடைய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசுகையில், ‘உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். இந்தியாவில் 2.1 சதவீதமும், தமிழகத்தில் 1.8 சதவீதமும் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். சராசரி மனிதர்களை போன்று மாற்றுத்திறனாளிகளையும் நடத்த வேண்டும், அவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பை கொடுக்க வேண்டும். கர்ப்பத்தின்போது உரிய ஊட்டச்சத்து சாப்பிடாதது, நெருங்கிய உறவினர்கள் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்வது உள்ளிட்ட காரணங்களால் மாற்றுத்திறனாளிகள் பிறக்கிறார்கள். 1995-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. அது கடந்த 2016-ம் ஆண்டு 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. உயர்கல்வியில் 5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் ‘வெல்மாவில்’ ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர்’ என்றார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகளின் கைவினை பொருட்கள் கண்காட்சியினை அமைச்சர் கே.சி.வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இதில் வேலூர் தாசில்தார் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகதீஸ்வரன், ஆவின் முன்னாள் தலைவர் வேலழகன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் எம்.ராகவன், பெல் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் இஞ்சிபுத்தூர் அன்னை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 33). வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர் போலீசாரிடம், எனது கணவர் என்னை தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சசிகலா திடீரெனத் தான் கையில் மறைத்து வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த போலீசாரும், சசிகலாவின் சகோதரரும் ஓடி வந்து விஷ பாட்டிலை தட்டி விட்டனர்.
போலீசார், சசிகலா வைத்திருந்த மனுவை வாங்கி கொண்டனர். அவரை, அருகில் உள்ள பென்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனது கணவர் பெயர் குமார். கஸ்பாவில் வசிக்கிறார். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். அவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுபானம் குடித்து விட்டு வந்து, என்னிடம் தகராறு செய்வார். நான் பல நாட்கள் பொறுமையாக இருந்தேன். எனினும் அவர் எல்லை மீறி பல தொந்தரவுகளை செய்தார். நான் எனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டேன். கணவரை பிரிந்து 6 மாதங்கள் ஆகின்றன. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை மிரட்டுகிறார்.
எனது பெற்றோரையும் அவர் தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் அவரது நண்பர்களிடம் எனது செல்போன் எண்ணை கொடுத்து, ஆபாசமாக பேசுமாறு தூண்டி விடுகிறார். அவர்களும் ஆபாசமாக பேசுகிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலாவின் கணவர் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
வேலூர்:
காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (47), ஆட்டோ மெக்கானிக். இவரது தங்கை பக்கத்து வீட்டில் கணவர், 5 வயது மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று மாலை 5 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். கந்தசாமி சிறுமியை வீட்டுக்குள் அழைத்தார். மாமா என்று பாசத்தோடு குழந்தை ஓடிச் சென்றது. அவளை வீட்டுக்குள் தூக்கி சென்ற கந்தசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறுமியை மீட்ட அவர்கள் கந்தசாமியை அடித்து உதைத்தனர். பின்னர், காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பெருமுகை தனியார் என்ஜினியரிங் கல்லூரி சாலை பகுதியில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதி (50). இவரது வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.
இதனை நோட்டமிட்ட மாம் நபர்கள் முகமூடி அணிந்து பைக்கில் வந்தனர். அவர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 10 1/2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர். இதனால் திடுக்கிட்ட சரஸ்வதி கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரை சேர்ந்தவர் சந்திரன். 108 ஆம்புலன் டிரைவர். இவர் நேற்று திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ்சில் அமர்ந்திருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த 3 பேர் கும்பல் சந்திரனிடம் வீண்தகராறு செய்து சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்று விட்டனர். காயமடைந்த சந்திரன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவரது தரப்பில் மருத்துவ அலுவலர் செல்வகுமார் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து திருப்பத்தூர் சிவராஜ்நகரை சேர்ந்த கணேசன் (வயது 25). என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தன்ராஜ் மற்றும் ஜெயகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.






