என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் ஜெயிலில் கைதிக்கு செல்போன் சப்ளை செய்த சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் கைதிகளிடம் செல்போன், கஞ்சா, புகையிலை என சகல உல்லாச வசதிகள் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உயரதிகாரிகள் அடிக்கடி சிறைக்குள் ஆய்வு நடத்தி செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

    கடந்த மாதம் செய்யப்பட்ட ஆய்வில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், சிறையில் உள்ள காவலர்கள் உதவியுடன் தான் கைதிகள் இதுபோன்று உல்லாசம் அனுபவிப்பதாக உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவலர்களை கையும் களவுமாக பிடிக்க ரகசியமாக குழு அமைத்து சிசிடிவி கேமராக்கள் மூலமாக ஆய்வு செய்தனர்.

    கடந்த மாதம் 17-ந் தேதி தலைமை காவலர் தேவதாஸ் என்பவர் சிறை கைதிகளுடன் மிக நெருக்கமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது நடமாட்டத்தை கண்காணித்த போது கைதிகளுக்கு வெளியில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சப்ளை செய்ததார். அவரை கையும் களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். இதையடுத்து தேவதாஸ் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் மேலும் ஒரு சிறைக்காவலர் கைதிக்கு செல்போன், பணம் சப்ளை செய்ததாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

    வாணியம்பாடி சேர்ந்த கார்வின் மோசஸ் (45) சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கும் சிறைகாவலர் கணபதிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    கணபதியிடம் செல்போன், பணம் ஆகியவற்றை வீட்டில் வாங்கி தருமாறு மோசஸ் கூறியுள்ளார். அதன்படி சிறைகாவலர் கணபதி வாணியம்பாடியில் உள்ள மோசஸ் குடும்பத்தினரிடம் புதிய செல்போன், பணம் ஆகியவற்றை வாங்கி ஜெயிலில் மோசசிடம் கொடுத்தார்.

    ஜெயிலில் காவலர்கள் நடத்திய சோதனையில் மோசஸ் அறையில் இருந்து செல்போன், பணம் பறிமுதல் செய்தனர். விசாரணையில் சிறைகாவலர் கணபதி அதனை வாங்கி கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி சிறைக்காவலர் கணபதியை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    வேலூர் பெண்கள் தனிச்சிறையில் பணியாற்றும் 2ம் நிலை காவலர் திலகவதி (54) கடந்த செம்படம்பர் மாதம் பணிக்கு வந்தபோது நுழைவாயிலில் அவரை போலீசார் சோதனையிட்டனர்.

    அப்போது அவர் செல்போனை மறைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் பெண் போலீஸ் திலகவதியிடம் செல்போன் பறிமுதல் செய்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    வாணியம்பாடி அருகே லோடு ஆட்டோ பைக் மீது மோதிய விபத்தில் பாலிடெக்னிக் மாணவன் பலியானார்.

    வாணியம்பாடி:

    ஆம்பூர் அடுத்த ரெட்டிதோப்பு பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் மாதவன் (வயது 18). இவர் வாணியம்பாடியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் நித்தியரசன் (20). இவர்கள் 2 பேரும் இன்று காலை வாணியம்பாடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

    நெக்குந்தி என்ற இடத்தில் பைக் சென்றபோது பின்னால் வந்த லோடு ஆட்டோ பைக் மீது மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    இதனை கண்ட அப்பகுதியினர் 2 பேரையும் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதவன் இறந்தார். நித்தியரசன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வாணியம்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடி அருகே ரெயிலில் பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடாசலம் தெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மனைவி ராகினி (வயது 65). கணவன்-மனைவி இருவரும் கோவையில் நடைபெறும் யோகா பயிற்சியில் கலந்துகொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட்கோட்ஸ் ரெயிலில் சென்றுள்ளனர்.

    காட்பாடி ரெயில்நிலையத்தில் நின்று பயணிகள் இறங்கியதும் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. இந்த நேரத்தில் ராகினி பயணம் செய்த அதே பெட்டியில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி, ராகினி கழுத்தில் கிடந்த 16 பவுன் செயினை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பிச்சென்றுவிட்டார். ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திற்குவந்ததும் இதுபற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் ராகினி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமியை தேடிவருகிறார்.

    ஆம்பூரில் மாணவியை கடத்தி சென்று பெங்களூருவில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் பகுதியை சேர்ந்த 6-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியை, ஆம்பூர் மோட்டுக்கொல்லையை சேர்ந்த அர்ப்பான் (வயது 24), நியூபெத்லகேமை சேர்ந்த இர்பான்கான் (22), மு.க.கொல்லையை சேர்ந்த முதஸீர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் ஒரு காரில் கடத்தினர். காரில் பெங்களூருவுக்கு சென்று அங்கு ஒரு விடுதியில் மாணவியை அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் பள்ளி மாணவியை காணாமல் தவித்த பெற்றோர் இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசிலும், அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் மாணவியை கடத்தி சென்ற கும்பலை தேடி வந்தனர். போலீஸ் தேடுவதை அறிந்த அந்த கும்பல் மாணவியை பெங்களூரில் விட்டுவிட்டு காரில் தப்பி சென்றுவிட்டனர். இதையடுத்து போலீசார் பெங்களூரு சென்று மாணவியை மீட்டு வந்தனர்.

    மேலும் இதுதொடர்பாக மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்ப்பான், இர்பான்கான், முதஸீர் ஆகிய 3 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

    கழிவறை கேட்டு சிறுமி நடத்திய போராட்டம் வெற்றி பெற்றது. அவரது வீட்டில் உடனடியாக கழிவறை கட்டிக்கொடுக்க நகராட்சி கமிஷனருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #Toilet
    வேலூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி இஷானுல்லா. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். இஷானுல்லா குடும்பம் வறுமையில் காணப்பட்டதால் வீட்டில் கழிவறை வசதி கிடையாது. அதனால் குடும்பத்தினர் திறந்தவெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது.



    இதனால் அவதியடைந்த ஹனீபாஜாரா தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டி தரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார். இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தாள். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை. கழிவறை கட்டும்படி தந்தையிடம் தொடர்ந்து போராடி வந்தார்.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், கழிவறை கட்டி தருவதாக எழுத்துமூலம் உறுதி பெற்றுத் தரும்படி கோரி தன்னுடைய கைப்பட புகார் மனு எழுதி மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.



    அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து அதிர்ச்சியடைந்தார். இருப்பினும் அவர், சிறுமியின் தொடர் போராட்டத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியையும் பார்த்து பாராட்டினார்.

    பின்னர் போலீசார், சிறுமியின் பெற்றோர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனை அழைத்து பேசினார். அதைத்தொடர்ந்து சிறுமி, தனது தாயுடன் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தார்.

    இந்த நிலையில் சிறுமி ஹனீபாஜாரா தனது வீட்டில் கழிவறை கட்டித்தர எடுத்து வரும் முயற்சி குறித்து அறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், ஆம்பூர் நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதியை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டிற்கு உடனடியாக தனிநபர் கழிவறை கட்டி கொடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் திறந்தவெளியை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வும், அதற்காக அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிக்கும் கலெக்டர் ராமன் பாராட்டு தெரிவித்தார்.

    ஹனீபாஜாரா வீட்டில் உடனடியாக கழிவறை கட்டும் பணியை நகராட்சி சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹனீபாஜாராவை கவுரவிக்கும் வகையில் ஆம்பூர் நகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் தூதுவராக அவரை நியமித்து நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி உத்தரவிட்டார்.
    காட்பாடியில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 12 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    காட்பாடி சில்க்மில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள தாயுமானவர் தெருவை சேர்ந்தவர் சத்தியநாராயணன். இவரது மனைவி சாந்தி (வயது 45). காட்பாடி பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை வைத்துள்ளனர்.

    நேற்று இரவு 11.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர்.தாயுமானவர் தெருவில் சென்றபோது ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட தம்பதி கூச்சலிட்டனர்.

    அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக காட்பாடி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.காட்பாடியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடு புகுந்து பெண்களை கட்டிப்போட்டு 35 பவுன் நகையை வடமாநில கும்பல் கொள்ளையடித்து சென்றனர். தொடர் சம்பவங்களால் காட்பாடியில் திருட்டு பீதி ஏற்பட்டுள்ளது.

    காட்பாடி அருகே நில அளவையாளர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்தவர் தியாபிளஸ் (வயது 68). ஓய்வு பெற்ற நில அளவையாளர். இவரது மனைவி வசந்தி, சம்பவத்தன்று தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு காட்பாடியில் உள்ள வங்கிக்கு வந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 8 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    வீட்டிற்கு திரும்பிய தம்பதியினர் வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தியாபிளஸ் திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி ஹனீபாஜாரா புகார் குறித்து தகவலறிந்த கலெக்டர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனரை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார். #Toilet #CollectorRaman
    ஆம்பூர்:

    சிறுமி ஹனீபாஜாரா புகார் குறித்து தகவலறிந்த கலெக்டர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி கமி‌ஷனரை தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித்தர உத்தரவிட்டார்.

    இதற்கான பணிகளை நகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். ஒரு சில நாட்களில் கழிவறை கட்டும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வேலூர் மாவட்டத்தில் 2014 அக்டோபர் 2 முதல் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டம் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை இல்லை என்ற மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு வருகிறது.

    கழிப்பறை வசதி இல்லாத சிறுமியின் வீடு.

    பொதுமக்கள் கழிவறைகளை கட்டாயம் பயன்படுத்துவதன் அவசியம் குறித்து வீடு வீடாக சென்று கழிப்பறையின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனையடுத்து கிராம புறங்களில் மகளிர் குழுவினர் விழிப்புணர்வு பிரசாரம் அதிகளவில் செய்தனர். இதுவரை சுமார் 3 லட்சம் கழிவறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

    திறந்தவெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து சிறுமிக்கு ஏற்பட்டுள்ள விழிப்புணர்வை கண்டு கலெக்டர் ராமன் பாராட்டியுள்ளார்.

    இதேபோல கழிவறை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு பொதுமக்களுக்கு வரவேண்டும் என அவர் கூறியுள்ளார். #Toilet #CollectorRaman
    ஆம்பூரில் வீட்டில் கழிவறை கட்டி தராத தந்தையை கைது செய்யுங்கள் என்று 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Toilet
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இஷானுல்லா. கூலி தொழிலாளி. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லா கூலி வேலை பார்த்து வருவதாலும், ஏழ்மையில் இருப்பதாலும் வீட்டில் கழிவறை வசதி கிடையாது.

    இதனால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றியும், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஹனீபாஜாராவும் திறந்த வெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மகள் தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டிதரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தார். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யுங்கள். கழிவறை கட்டி தருவதாக எழுத்து மூலம் உறுதி பெற்றுத் தரும்படி தன்னுடைய கைப்பட எழுதி புகார் மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.

    அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து பார்த்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சிறுமியின் மன தைரியத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியை பார்த்து சிறுமியை பாராட்டினார்.

    தந்தை மீது புகார் அளித்த மகள், தாயாருடன் இருப்பதை படத்தில் காணலாம்.

    பின்னர் சிறுமியின் பெற்றோரை அழைத்து பேசினார். இதுகுறித்து ஆம்பூர் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால் அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதாக கூறினார்.

    அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அதன்பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு, அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கழிவறை இல்லாத காரணத்தால் தந்தையின் மீது 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.  #Toilet
    ஜோலார்பேட்டை பைக் மீது லாரி மோதிய விபத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர் பலியானார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் அருகே உள்ள சுந்தரம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி மகன் செந்தில்குமார் (42), ஜோலார்பேட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ்காரர். இவரது மனைவி ஷாலினி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்பத்துடன் ஹயாத் நகரில் வசித்து வந்தார். நேற்று இரவு பைக்கில் திருப்பத்தூர் சென்று கொண்டிருந்தார்.

    அன்னாண்டபட்டி கூட்ரோடு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. லாரி டயர்கள் ஏறியதில் செந்தில்குமார் 2 கால்களும் நசுங்கியது.

    லாரியை நிறுத்திய டிரைவர் தப்பி ஓடி விட்டார். பொதுமக்கள் செந்தில்குமாரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் இறந்தார்.

    இதுதொடர்பாக, ஜோலார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடியில் 2 பெண்களை கட்டிபோட்டு 35 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை வடமாநில கொள்ளை கும்பல் திருடிச்சென்று விட்டனர். அவர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    காட்பாடி பர்னீஷ்புரம் மிஷின் காம்பவுண்டு பகுதியை சேர்ந்தவர் வில்லியம்ஸ். இவரது மனைவி இந்திராணி (80). இவரது மகள் நளினி (40). சி.எம்.சி.யில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்திராணி, நளினி இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். இரவு 2 மணிக்கு முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட வடமாநில கொள்ளை கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் 2 பேரையும் தனி அறையில் பூட்டி நாற்காலியில் கட்டிபோட்டு 35 பவுன் நகைகள், ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாக நளினி காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி. பிரவேஷ்குமார், டி.எஸ்.பி. லோகநாதன், இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அவர்கள் அந்த பகுதியில் கொள்ளை நடந்த நேரத்தில் பதிவான செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை கும்பல் ஆந்திராவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    ஜோலார்பேட்டை அருகே சாலையை கடக்க முயன்ற பெண் மீது பைக் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெட்டியூரை சேர்ந்தவர் சந்திரா (வயது 50), இவர் நேற்றிரவு அப்பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த பைக் இவரது மீது மோதியது, இதில் சந்திராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்னின்றி இறந்தார்.

    இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×