search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் நிலையத்தில் தந்தை மீது சிறுமி ஹனீபாஜாரா புகார் அளித்தபோது எடுத்த படம்.
    X
    போலீஸ் நிலையத்தில் தந்தை மீது சிறுமி ஹனீபாஜாரா புகார் அளித்தபோது எடுத்த படம்.

    கழிவறை கட்டி தருவதாக ஏமாற்றி வரும் தந்தையை கைது செய்யுங்கள்- 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார்

    ஆம்பூரில் வீட்டில் கழிவறை கட்டி தராத தந்தையை கைது செய்யுங்கள் என்று 7 வயது மகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #Toilet
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம், ஆம்பூர் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் இஷானுல்லா. கூலி தொழிலாளி. இவரது மகள் ஹனீபாஜாரா (வயது 7). ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இஷானுல்லா கூலி வேலை பார்த்து வருவதாலும், ஏழ்மையில் இருப்பதாலும் வீட்டில் கழிவறை வசதி கிடையாது.

    இதனால் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமின்றியும், 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஹனீபாஜாராவும் திறந்த வெளியில் கழிப்பிடம் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மகள் தனது தந்தையிடம் வீட்டில் கழிவறை கட்டிதரக்கோரி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு தந்தை பள்ளியில் முதலிடம் பிடித்தால் வீட்டில் கழிவறை கட்டி தருவதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சிறுமி நன்கு படித்து எல்.கே.ஜி. முதல் 2-ம் வகுப்பு வரையிலும் பள்ளியில் முதலிடம் பெற்று வந்தார். ஆனால் தந்தை கூறியப்படி கழிவறை கட்டிதரவில்லை.

    இதனால் ஏமாற்றம் அடைந்த சிறுமி திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்துவது அவமானமாக இருப்பதாகவும், தன்னை ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யுங்கள். கழிவறை கட்டி தருவதாக எழுத்து மூலம் உறுதி பெற்றுத் தரும்படி தன்னுடைய கைப்பட எழுதி புகார் மனுவுடன் ஆம்பூர் மகளிர் போலீஸ் நிலையம் சென்றார்.

    அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வளர்மதி மனுவை வாங்கி படித்து பார்த்தார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் சிறுமியின் மன தைரியத்தையும், தூய்மை, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது அவருக்கு உள்ள உறுதியை பார்த்து சிறுமியை பாராட்டினார்.

    தந்தை மீது புகார் அளித்த மகள், தாயாருடன் இருப்பதை படத்தில் காணலாம்.

    பின்னர் சிறுமியின் பெற்றோரை அழைத்து பேசினார். இதுகுறித்து ஆம்பூர் நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன், மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால் அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதாக கூறினார்.

    அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் நகராட்சி அலுவலகத்திற்கு சென்று மனு அளித்தனர். அதன்பேரில் நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் நேரடியாக அவர்கள் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு, அரசு திட்டத்தின் மூலம் கழிவறை கட்டி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

    கழிவறை இல்லாத காரணத்தால் தந்தையின் மீது 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.  #Toilet
    Next Story
    ×