என் மலர்
செய்திகள்

ஆற்காடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
ஆற்காடு:
ஆற்காடு அருகே தாஜ்புரா ஏரிக்கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீட்கப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஆற்காடு பூபதி நகரை சேர்ந்த ரவி (வயது 45) என்ற தொழிலாளியை காணவில்லை என அவரது மனைவி மாரி (38), ஏற்கனவே ஆற்காடு தாலுகா போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
அதன்பேரில் போலீசார் தாஜ்புரா ஏரிக்கரையில் கிடந்த பிணத்தை மாரியை அழைத்து சென்று காண்பித்தனர். அவர் பிணமாக கிடப்பவர் எனது கணவர் இல்லை என்றார். பின்னர் பிணத்தை வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், ரவியின் மனைவி மாரி திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே உள்ள அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் (48) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த ரவி மனைவியை கண்டித்துள்ளார். இதனால் மாரியும் கள்ளக்காதலன் முருகனும் ரவியை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி குடிபோதையில் இருந்த ரவியை மாரியும், முருகனும் சேர்ந்து விறகுகட்டையால் அடித்து கொலை செய்து தாஜ்புரா ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து மாரி, முருகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ரவிக்கு 2 மகள்கள் உள்ளனர்.






