என் மலர்
வேலூர்
குடியாத்தம் பரவக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 57). டிரைவர். இவர் ஆம்பூர் சர்க்கரை ஆலையில் கரும்பு லோடு இறக்கிவிட்டு, டிராக்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வெங்கிலி என்ற இடத்தில் சென்றபோது எதிரே ஆம்பூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த டீசல் லாரி டிராக்டர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி டிரைவர் செல்வமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
சென்னை வடபழனியை சேர்ந்தவர் வில்சன் விமல் (வயது 44). ரியல் எஸ்டேட் உரிமையாளரான இவரை கடந்த மாதம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் தங்களை விக்னேஷ், தமிழ்செல்வன் என அறிமுகப்படுத்தி, வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் நிலம் விற்பனைக்கு உள்ளது, அதனை நேரில் பார்க்க வரும்படி கூறினர்.
இதையடுத்து வில்சன்விமல் நிலத்தை வாங்க ரூ.5 லட்சத்துடன் கடந்த மாதம் தனது காரில் வேலூருக்கு வந்தார். விக்னேஷ், தமிழ்செல்வன் மற்றும் நண்பர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் வில்சன்விமலை தங்கள் காரில் அழைத்து சென்று சில இடங்களை காண்பித்தனர்.
பின்னர் 6 பேரும் சேர்ந்து வில்சன்விமலை தாக்கி கண்களை கட்டி காரில் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு கடத்தினர். அங்கு வைத்து ரூ.26 லட்சத்து 20 ஆயிரத்தை பறித்து கொண்டனர். இதுதொடர்பாக வில்சன்விமல் அளித்த புகாரில் வேலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்தார். 2 தனிப்படை போலீசார் பெருந்துறையில் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் வாணியமபாடியை சேர்ந்த சீனிவாசன் (44), கரூரை சேர்ந்த விக்னேஷ் என்ற விஷ்வா (31) ஆகிய 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சோளிங்கர்:
சோளிங்கர், பாத்திகுளம், மேற்கு பாஜார், திருகுளமேடு ஆகிய பகுதிகளில் காட்டன் சூதாட்டம் நடைபெற்று வருவதாக அரக்கோணம் டி.எஸ்.பி. துரைபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரின் உத்தரவின் பேரில் சோளிங்கர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மார்க்கெட் பகுதியில் ராஜா (வயது 45). ரங்கன் (50). ஆகியோர் காட்டன் சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோளிங்கர்:
சோளிங்கர் அடுத்த பாராஞ்சியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமா (வயது 30). இவர் நேற்று மாலை வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்க வீட்டை பூட்டி சென்றார்.
இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 12 பவுன் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்று விட்டனர்.
சிறிது நேரம் கழித்து விட்டிற்கு வந்த உமா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை கொள்ளை போனது தெரிய வந்தது.
இது குறித்து உமா சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் லட்சுமிகாந்தன் (வயது 27). அரக்கோணத்தில் மளிகை கடை வைத்துள்ளார். தக்கோலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார்.
இதுபற்றி அரக்கோணம் டி.எஸ்.பி. துரைபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.
அப்போது குட்காவை காரில் ஏற்றிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் (45) என்பவரை மடக்கி பிடித்தனர். அந்த காரில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
அங்கு ஏராளமான அட்டை பெட்டிகள், மூட்டைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தன. அங்கிருந்த 2½ டன் குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை பொருட்களை லாரி மூலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த வீட்டை தக்கோலத்தில் மளிகை கடை நடத்தி வரும் காமராஜ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் குட்கா பதுக்கி வைக்க உதவியாக இருந்தது தெரியவந்தது.
போலீசார் 3 பேரையும் தக்கோலம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gutka
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த மாதனூர் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் இவரது மகன் கோகுல் (வயது 25). இவர் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் இன்று காலை அவரது வீட்டில் திடீர் சோதனை செய்தனர். அப்போது கோகுல் வீட்டில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது.
போலீசார் நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்து கோகுலை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நாட்டுத்துப்பாக்கி பயன்படுத்தி வன விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
தமிழக காவல்துறையில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு, வேலை நிமித்தமான விபரம் சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டு வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. தனிநபர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்காக பார்ஸ்போர்ட்டு மற்றும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதற்கு நன்னடத்தை சான்றிதழ் பெறுவது அவசியமான ஒன்றாகும்.
இந்த சேவையில் பொதுமக்களின் வீண் அலைச்சலை தடுக்க முதன் முறையாக இணையதளம் மூலம் நன்னடைத்தை சான்றிதழை பெறும் வசதியை தமிழக காவல்துறை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் தனிநபர் விபரம் சரிபார்ப்பு சேவை உள்ளிட்ட 4 விதமான சேவைகளை இணையதளம் மூலம் வழங்கும் புதிய திட்டத்தை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவல்துறையின் இந்த சேவைகளை பெற பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் www.ese-rv-i-ces.tnp-o-l-i-ce.gon.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதல் கடிதம் அல்லது அடையாள அட்டை போன்றவற்றை இணைக்க வேண்டும். ஒருவர் யாருடைய விபரத்தை கேட்டும் விண்ணப்பிக்கலாம். காவல்துறையினர் விசாரணைக்கு செல்லும்போது சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா? என விசாரிப்பார்கள். ஒருவேளை ஒப்புதல் பெறவில்லை என்றால் விபரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்படாது. இந்த புதிய நடைமுறையால் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் அனைத்து விபரங்களும் இணையதளத்தில் பதிவு செய்யப்படும்.
விண்ணப்பித்த நபரின் செல்போனுக்கு 4 இலக்க எண்கள் அனுப்பப்படும். அதன் மூலம் விண்ணப்பத்தின் நிலைகுறித்து தெரிந்து கொள்ளலாம். இந்த சேவையை பெற தனிநபர் ஒரு விண்ணப்பத்துக்கு 500 ரூபாயும், தனியார் நிறுவனங்கள் ஆயிரம் ரூபாயும் இணையதளம் வழியாக டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மற்றும் இணையவழி வங்கி சேவை மூலம் கட்டணத்தை செலுத்தலாம். இந்த புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் யாரும் காவல் நிலையங்களுக்கு நேரில் அலைய தேவையில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் வழியாக சேவையை பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் வலைப்பின்னல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

குடியாத்தம்:
குடியாத்தம் - காட்பாடி ரோடு ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் உதயசூரியன் (வயது 25), மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.
உதயசூரியன் 2 ஆண்டுகளுக்கு முன்புஉஷா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உஷா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று மாலையில் உதயசூரியனும், அதே பகுதியை சேர்ந்த சுமன் என்பவரும் குடியாத்தம் காந்திநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருந்தி உள்ளனர். அப்போது செதுக்கரை அண்ணாநகரை சேர்ந்த பெயிண்டர் ராஜா மதுகுடிக்க வந்தார். குடிபோதையில் இருந்த உதயசூரியன் நண்பர் மகேந்திரனுக்கும், ராஜாவுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது மகேந்திரனுக்கு ஆதரவாக சென்று ராஜாவை உதயசூரியன் தாக்கினார். இதனையடுத்து ராஜா தனது உறவினரான பெயிண்டர் ரமேசை போன் செய்து அழைத்தார்.
இந்த நிலையில் சுமனும், உதயசூரியனும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சக்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜா, ரமேஷ் ஆகியோர் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.
பின்னர் திடீரென ராஜா, ரமேஷ் ஆகியோர் உதயசூரியனை கத்தியால் கழுத்து, தொடை பகுதியில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் உதயசூரியன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதயசூரியன் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, ரமேஷ் மற்றும் இந்த கொலைக்கு மூலக்காரணமாக இருந்ததாக உதயசூரினின் நண்பர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் வேனில் கடத்தி வரப்பட்ட 6800 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக கீழ்விஷாபுரத்தை சேர்ந்த விஜயகுமார் (48). தவமணி (28). ஆம்பூர் ரங்காபுரத்தை சேர்ந்த கோபி (47) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் இவர்கள் தொடர்ந்து எரிசாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்று கலெக்டர் ராமன் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பின்னர் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை:
ஈரோடு மாவட்டம் கோலநல்லி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 50). மார்பிள்ஸ் காண்டிராக்டர். இவர், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.10 லட்சத்தை கொடுப்பதற்காக சூட்கேசில் எடுத்து கொண்டு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் ஏ.சி. பெட்டியில் சென்றார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது மர்மநபர்கள் பணம் இருந்த சூட்கேசை பெரியசாமிக்கு தெரியாமல் திருடிச்சென்றனர். அதில் இருந்த ரூ. 10 லட்சத்தை எடுத்து விட்டு காலியான சூட்கேசை ஆம்பூர் அடுத்த பச்சகுப்பத்தில் தண்டவாளத்தில் வீசி உள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ரெயில் மொரப்பூரில் நின்ற போது பெரியசாமி பெட்டியை பார்த்துள்ளார். அதன் பிறகு தூங்கியுள்ளார். ஜோலார்பேட்டையை ரெயில் கடந்த பிறகு அவர் கண் விழித்து பார்த்துள்ளார்.
அப்போது பெட்டியுடன் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு ஆம்பூரில் ரெயில் நின்றுள்ளது. ஆம்பூரை கடந்து பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் பெட்டியை வீசியுள்ளனர்.
அதன் பிறகு ரெயில் குடியாத்தத்தில் நின்றது. இதனால் கொள்ளையர்கள் குடியாத்தத்தில் இறங்கி தப்பி சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குடியாத்தம் ரெயில் நிலையத்தில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் குடியாத்தத்திற்கு பின்னர் காட்பாடி, அரக்கோணம் ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. ஒருவேளை கொள்ளையர்கள் இந்த ரெயில் நிலையங்களில் இறங்கி தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இதனால் கொள்ளையர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.
இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani






