என் மலர்tooltip icon

    வேலூர்

    திருப்பத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவத்தில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள குரும்பேரி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில், ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ‘சைலன்சரை’ கழற்றிவிட்டு, அதிக ஒலி எழுப்பியவாறு மற்றொரு பிரிவினர் இருக்கும் பகுதிக்குள் சென்றனர். அதனை அவர்கள் தட்டிக்கேட்ட போது, மீண்டும் தகராறு ஏற்பட தொடங்கியது.

    அதேபோல் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம், கோவில் மாட்டினை அழைத்து வரும்போது தகராறு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள தலைவர் ஒருவரின் சிலை அருகில் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. அதனை மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் தான் வீசியுள்ளார்கள் என நினைத்து கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    நேற்றும் வாக்குவாதம் நீடித்தது. இதில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கையால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் வெங்கடேசன் தரப்பை சேர்ந்த நீலகண்டன் (வயது 24), ஸ்ரீதர் (24) ஆகிய 2 பேருக்கும், சாந்தலிங்கம் தரப்பை சேர்ந்த அன்பரசு, செங்கல்வராயன், ஜெகதீசன் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

    பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதாக தெரிகிறது.

    இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக 3 மோட்டார்சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையிலும் பதற்றத்தை தணிக்கவும் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருதரப்பை சேர்ந்தவர்களை பார்த்துவிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் திருப்பத்தூர் சப்-கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அங்கிருந்து குரும்பேரி கிராமத்திற்கு தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, 4 கார்களில் புறப்பட்டார்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்களை நிறுத்தினர். அவர்களிடம், ‘‘ஊர் முழுவதும் போலீசாரின் முழுகட்டுப்பாட்டிற்குள் உள்ளது, யாரும் அத்துமீறி உள்ளே வரக்கூடாது’’ என கூறி, அவர்களை திருப்பி அனுப்பினர்.

    இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    வாலாஜா எடக்குப்பம் கிராமம் அருகே மணல் லாரி காம்பவுண்ட் சுவர் மீது மோதியதில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தார். இதனையடுத்து போலீசார் லாரி டிரைவரை கைது செய்தனர்.
    வாலாஜா:

    வாலாஜா எடக்குப்பம் கிராமம் ரோட்டுத் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 37). தொழிலாளி. இவரது மனைவி யாமுனாநதி. இவர்களுக்கு 2 மகளும் 1 மகனும் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு ராதாகிருஷ்ணன் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு அவரின் வீட்டு வழியாக மணல் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது.

    ராதாகிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி ராதாகிருஷ்ணன் இறந்தார்.

    இதையடுத்து யமுனாநதி தனக்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் தனது பிள்ளைகளுடன் வந்து மனு அளித்திருந்தார்.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த லாரி டிரைவர் வாலாஜா அடுத்த தகரகுப்பம் திருமலை நகர் பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது 35). என்பவரை நேற்று மாலை வாலாஜா போலீசார் கைது செய்தனர். மேலும் லாரி உரிமையாளர் சீனு என்பரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர் அருகே 17 வயது மாணவியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பள்ளிதெரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது கல்லூரி மாணவி. இவருக்கும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா பகுதியை சேர்ந்தவர் சண்முகம் மகன் தனசேகரன் (வயது 26). என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த மாதம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல இடங்களில் தேடியும் காணவில்லை .

    இது குறித்து மாணவியின் பெற்றோர் உமராபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் தனசேகர் என்பவர் ஆசை வார்த்தை கூறி எனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறியிருந்தனர். இதையடுத்து போலீசார் தனசேகரனை பிடித்து மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் 17 வயது மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்ததிற்காக தனசேகரனை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    அரக்கோணம் அருகே பைக் விபத்தில் மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம்:

    பாணாவரம் அடுத்த தப்பூர் கிராமத்தை சேர்ந்த அரிராமன் மகன் லோகேஷ் (18) தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் தனது நண்பரை பார்த்துவிட்டு பைக்கில் அரக்கோணம் அடுத்த மின்னல் ‌‌‌கிராமம் சாலையில் வரும்போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

    அந்த வழியாக வந்த சிலர் அவரை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் தனியார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி, டபுள்ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தோட்டப்பாளையம் கெஜராஜ் நகர் பகுதியில் ஸ்ரீ கிருஷ்ணா ஏஜென்சி மற்றும் குடோன் வைத்துள்ளார்.

    இந்த குடோனில் சமையல் எண்ணை, நெய், பிஸ்கட், பேரீச்சை பழம், சர்க்கரை, சாக்லெட் போன்ற 25 நிறுவனங்களின் மொத்த வியாபார பலசரக்கு வைத்திருந்தார். குடோனில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    அங்கிருந்த பொருட்களில் பற்றி எரிந்த தீயால் கடும் புகைமூட்டம் எழுந்தது. இதை கண்டு அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர்.

    தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேலூர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் 7 தீயணைப்பு வாகனங்களில் வந்தனர். அவர்கள் தண்ணீரை அடித்து சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மேலும் தீ அதிகமாக இருந்ததால் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர் இடிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் 30 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    இந்த தீ வீபத்தில் குடோனில் இருந்த 10 இருசக்கர வாகனம் உட்பட சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.

    வேலூர் வடக்கு போலீசார் மற்றும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் லட்சுமி நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கட்டிடத்தின் உள்ளே ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தீ விபத்து ஏற்பட்ட குடோனில் போதுமான அளவு தீ தடுப்பான்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லை என்றும் இவற்றை கடை பிடிக்காததே இவ்வளவு பெரிய தீ விபத்திற்கு காரணம் என தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஜோலார்பேட்டை அருகே காதல் தோல்வியால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் அச்சுதன் இவரது மகன் குணசேகரன் (வயது 20). கூலிதொழிலாளி. இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

    பலமுறை அந்த பெண்ணிடம் தன் காதலை தெரியப்படுத்தியும் அந்த பெண் குணசேகரனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

    நேற்று வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் குணசேகரன் வி‌ஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்ட நண்பர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    குணசேகரன் சிக்ச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மணி நேர தொடர் முயற்சியில் 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு ஆகியவற்றை தங்க நகை தொழிலாளி சி.எஸ்.தேவன் உருவாக்கியுள்ளார். #Pongal
    வேலூர்:

    ஆம்பூரை சேர்ந்த தங்க நகை தொழிலாளி சி.எஸ்.தேவன் (வயது 52). இவர், வங்கி ஒன்றில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், உலக சாதனை புரிவதற்காக முன்னாள் முதல்-அமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் மகாத்மா காந்தி, அப்துல்கலாம் ஆகியோரின் உருவங்களையும், கிறிஸ்துமஸ் குடில், மிகச்சிறிய அளவில் கிரிக்கெட் உலக கோப்பை, திருக்குறள் சுவடி ஆகியவற்றையும் தங்கத்தில் உருவாக்கி சாதனை படைத்து உள்ளார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 மணி நேர தொடர் முயற்சியில் 1.9 கிராம் தங்கத்தில் பொங்கல் பானை, கரும்பு, மாடு ஆகியவற்றை உருவாக்கியுள்ளார். 4 செ.மீ உயரத்தில் கரும்பு, 1 செ.மீ உயரத்தில் மாடு ஆகியவற்றை தங்கத்தில் செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்துவிட்டு செல்கின்றனர். #Pongal
    வாலாஜா அருகே மணல் லாரி கட்டுப்பாட்டை இழந்து வீட்டு சுவரை இடித்து தள்ளி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

    வாலாஜா:

    வாலாஜா அருகே உள்ள எடகுப்பம் வள்ளுவம்பாக்கம் ரோட்டை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 37). கூலிதொழிலாளி. இவர் நேற்றிரவு வீட்டின் வாசலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

    நள்ளிரவு அவரது வீட்டின் வழியாக சென்ற மணல் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ராதாகிருஷ்ணன் வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி கவிழ்ந்தது. அப்போது காம்பவுண்ட்சுவர் இடிந்து படுத்திருந்த ராதாகிருஷ்ணன் மீது விழுந்தது. இதில் அவர் பலத்தகாயமடைந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு ராதாகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
    வேலூர்:

    அணைக்கட்டு விநாயகர் கோவில் தெருவில் காளை விடும் விழா நடந்தது.

    கால்நடை மருத்துவர் ஹரீஷ் தலைமையில் மருத்துவர்கள் காளைகளை பரிசோதித்தனர். வாணியம்பாடி, வேலூர், காட்பாடி, குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான காளைகள் கொண்டுவரப்பட்டன.

    காளை விடும் விழாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் கோவில் மீதும் மாடிவீடுகளின் மீதும் அமர்ந்து காளைகள் ஓடுவதை ஆர்வமுடன் பார்த்தனர்.

    இளைஞர்களின் ஆரவாரத்தில் மாடுகள் மிரண்டு தெருவில் குறுக்கு நெடுக்குமாக ஓடின. அப்போது வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களை மாடுகள் முட்டியது. இதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் லேசான காயமும், 4 பேர் படுகாயமும் அடைந்தனர்.

    இதனையடுத்து படுகாயம் அடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    மற்றவர்களுக்கு காளை விடும் விழாவில் முகாமிட்டிருந்த மருத்துவ அலுவலர் கைலாஷ் சாந்தினி மற்றும் சுகாதார குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    காளை விடும் திருவிழாவில் வேகமாக ஓடியபோது நிலைத்தடுமாறி கீழே விழுந்து 8 காளைகளுக்கு காயம் ஏற்பட்டது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    ஊசூரை அடுத்த சிவநாதபுரத்தில் நடந்த காளை விடும் விழாவுக்காக காலை முதலே பல்வேறு கிராமங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் தங்களது கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர். பலர் மேள தாளம் முழங்க தங்களது காளைகளை ஊர்வலமாக கொண்டு வந்து வீதியில் ஓடவிட்டனர்.

    வேலூர் ரங்காபுரத்திலும் காளை விடும் திருவிழா நடந்தது. பலர் தங்கள் வீடுகளில் வளர்க்கும் காளைகளை கொண்டு வந்து விட்டனர். சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இளைஞர்கள் விரட்டினர். அப்போது சிலர் கீழே விழுந்தனர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீடுகளின் மாடிகளில் நின்று வேடிக்கை பார்த்தனர். தங்களது செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    காட்பாடி தாலுகா பனமடங்கி கிராமத்தில் காளை விடும் திருவிழா நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 150 காளைகள் சாலையில் அவிழ்த்து விடப்பட்டது. சாலையின் இருபுறமும் மூங்கில்களால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

    அப்போது சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை இருபுறமும் நின்றிருந்த இளைஞர்கள் ஆரவாரம் செய்து கைகளால் மாடுகளை தட்டி உற்சாகப்படுத்தினர். பெண்களும், குழந்தைகளும் வீட்டின் மாடிகளில் நின்று பார்த்து ரசித்தனர்.

    நேற்று பல்வேறு கிராமங்களில் நடந்த மாடு விடும் விழாவில் 15 பேர் படுகாயமடைந்தனர்.

    இன்று மூஞ்சூர்பட்டு, கீழ்முட்டுக்கூர், புலிமேடு ஆகிய ஊர்களில் மாடு விடும் விழா நடந்தது.
    ராணிப்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கெடுத்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராமதாஸ் (வயது 25),எலக்ட்ரீசியன், இவர் மலைமேடு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுபற்றி சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் சுப்புலெட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் ராமதாஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பனப்பாக்கம் அண்ணாநகர் பஸ் நிறுத்தம் எதிரில் நேற்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பனப்பாக்கம்:

    பனப்பாக்கம் அண்ணாநகர் பஸ்நிறுத்தம் எதிரில் புதர்மண்டிய பகுதி உள்ளது. இங்கு நேற்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் நெமிலி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக நெமிலி இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று பார்வையிட்டனர். பின்னர் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிணமாக கிடந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பனப்பாக்கம் பஸ் நிறுத்தம் பகுதியில் பிச்சையெடுத்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். அவர் பெயர், எந்த ஊர் என்பது தெரியவில்லை.

    இந்த சம்பவம் குறித்து பனப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத், நெமிலி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து பிணமாக கிடந்த பெண் யார்? கற்பழித்து கொலை செய்ய பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் கொலையா என்பது தெரியவரும். மேலும் பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    வேலூர் அருகே பைக் மோதி கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அடுத்த சந்தனகொட்டா கொளமேட்டை சேர்ந்தவர் ரேணு (வயது 58). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாலை மேல்வெங்கம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த பைக் இவர் மீது மோதியது இதில் அவர் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரேணு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×