என் மலர்tooltip icon

    வேலூர்

    ஆம்பூர் அருகே வனப்பகுதியில் பெண்ணை அடித்து கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலூர் சாலையில் வனத்துறை அலுவலகம் உள்ளது. அதன் அருகே யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்திலிருந்து நேற்று மாலை துர்நாற்றம் வீசியது.

    பொதுமக்கள் அருகில் சென்று பார்த்தபோது ஒரு பெண்ணின் சேலை, செருப்புகள் கிடந்தன. இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த பெண் பாலூர் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பாலூரை சேர்ந்த அண்ணாதுரை மகன் ஆனந்தன் (20) என்பவரை அழைத்து சென்று இறந்தவரின் அருகே கிடந்த சேலையை காண்பித்தனர்.

    சேலையை பார்த்த ஆனந்தன் தன்னுடைய தாயின் சேலைதான் என கூறினார்.

    இதையடுத்து இறந்து கிடந்தது அண்ணாதுரையின் மனைவி செல்வி என தெரியவந்தது. அண்ணாதுரையை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சனிக்கிழமை செல்வியை பைக்கில் அழைத்து சென்ற அண்ணாதுரை மாதனூர் சந்தையில் செல்வியை விட்டு விட்டு சென்றதாக கூறியுள்ளார்.

    இதனால் அண்ணாதுரை மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரையும், அவருடைய மகன் ஆனந்தனையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் புதைக்கப்பட்ட செல்வியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். செல்வியை யார், எதற்காக கொலை செய்து புதைத்து விட்டு சென்றனர் என வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடியில் திமுக பிரமுகர்களிடம் ரூ.11 கோடி பணம் சிக்கியது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ITRaid #DMK

    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    துரைமுருகனும், கதிர் ஆனந்தும் வேலூர் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. பிரமுகர்கள் பணப் பரிமாற்றம் செய்வதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு புகார்கள் வந்தன. 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடப்பதாக தெரிய வந்ததால் அது பற்றி வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது தேர்தல் நடத்தை விதிகளில் ஒன்றாகும்.

    அதன் அடிப்படையில் வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் பணப்பரிமாற்றம் நடப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது சில ஆவணங்களையும், 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    காட்பாடி அருகே கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள துரைமுருகன் குடும்பத்தினருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளில் திடீரென மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். 6 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது தி.மு.க. விவசாய அணி மாநகர துணை அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி விஜயாவின் சிமெண்ட் குடோனில் இருந்து சாக்கு மூட்டைகள், அட்டைப் பெட்டிகள், பெரிய துணிப் பைகளில் கட்டு, கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு பணக்கட்டிலும் ஊரின் பெயர், வார்டு நம்பர் எழுதப்பட்டு இருந்தது.

    துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர்அலி வீட்டில் இருந்தும் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய தயார் நிலையில் அந்த பணக்கட்டுக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வங்கிகளில் இருந்து பணம் எண்ணும் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அந்த பண கட்டுகள் எண்ணப்பட்டன.

    இன்று அதிகாலை பணம் எண்ணும் பணி முடிந்தது. அப்போது ரூ.11.48 கோடி கைப்பற்றப்பட்டு இருப்பது தெரிந்தது. கைப்பற்றப்பட்ட பணம் அனைத்தும் புத்தம் புது நோட்டுகளாக இருந்தன.

    வருமான வரித்துறை வசம் உள்ள அந்த ரூ.11.48 கோடியாருக்கு சொந்தமானது என்பதை இதுவரை உறுதி செய்ய இயலவில்லை. இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் முதல் கட்ட விசாரணை நடத்தினார்க்ள. ஆனால், “பிடிபட்ட பணத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று துரைமுருகன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

     


    ஆனால் துரைமுருகன் குடும்பத்தினருக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியில் இருந்து அந்த பணம் சிமெண்ட் குடோனுக்கு கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரிலேயே சோதனை நடத்தியதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். என்றாலும் அந்த பணத்துக்கு உண்மையான சொந்தக்காரர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை தீவிரமாகியுள்ளது. முதல் கட்டமாக பூஞ்சோலை சீனிவாசன், அவரது சகோதரி விஜயா இருவரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர். இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

    அவர்களிடம் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் எப்படி வந்தது என்று விசாரணை நடைபெற உள்ளது. அவர்கள் கொடுக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட விசாரணை தீவிரப்படுத்தப்படும். தேவைப்பட்டால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்துக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    பொதுவாக வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரு இடத்தில் சோதனை நடத்துகிறார்கள் என்றால் எந்த ஒரு சிறு தகவலையும் வெளிப்படுத்த மாட்டார்கள். என்ன ஆவணம் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதை கூட யாரிடமும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நேற்று தி.மு.க. பிரமுகர்கள் வீட்டில் நடந்த சோதனை விவரங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

    குறிப்பாக சிமெண்ட் குடோனில் சாக்குமூட்டைகள், அட்டை பெட்டிகளில் இருந்த கட்டு கட்டான பணம் அடங்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும், வாட்ஸ்அப்பிலும் பரவின. அந்த பணம் பற்றிய தகவலை பெற வேண்டும் என்பதற்காகவே வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டு அந்த காட்சிகளை கசிய விட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்க வில்லை. இதையடுத்து வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    கைப்பற்றப்பட்ட ரூ.11.48 கோடியில் 80 சதவீத நோட்டுகள் புத்தம் புதியதானவை. எனவே அந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள சீரியல் எண்களை வைத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி எந்த கால கட்டத்தில் அச்சடிக்கப்பட்டன? அவை எந்த நகர வங்கிகளுக்கு அனுப்பப்பட்டன? என்று விசாரணை நடக்கிறது.

    ரூபாய் நோட்டு எண்கள் மூலம் எந்த வங்கியில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் எந்தெந்த வங்கி கணக்குகளில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டுபிடித்து விட முடியும் என்றார்.

    மேலும் பணம் எடுக்கப்பட்ட வங்கி விவரம் தெரிந்த பிறகு அந்த வங்கியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் அந்த பணக்கட்டுகளை வாங்கி சென்ற நபர்கள் யார் என்பதையும் கண்டுபிடித்து விட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    துரைமுருகனின் ஆதரவாளர்கள் அனைவரிடமும் 2 நாட்களுக்குள் இந்த விசாரணையை முடித்து விட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர். அதன் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட ரூ.11 கோடி குறித்து வருமான வரித்துறை சார்பில் தமிழக தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்படும்.

    அந்த அறிக்கையை தமிழக தேர்தல் அதிகாரி இந்திய தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அதன்பேரில் தலைமை தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்பார்கள். அதன் பிறகே வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்படுமா? அல்லது திட்டமிட்டப்படி நடக்குமா? என்பது தெரிய வரும். #ITRaid #DMK

    வருமானவரி அதிகாரிகள் கைப்பற்றிய பணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DuraiMurugan #ITRaid
    வேலூர்:

    தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவிட்டு, இரவு 8.15 மணி அளவில் அதிகாரிகள் சென்றனர். அதைத்தொடர்ந்து வெளியே வந்த துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சோதனை என்ற பெயரில் 3 நாட்கள் எங்களது தேர்தல் பணிகளை தடுத்துள்ளனர். இவ்வாறு தடுத்தால் நாங்கள் பயந்து விடுவோம் என்று நினைத்துள்ளனர். இதற்கு ஒரே காரணம் அரசியல் உள்நோக்கம் தான். அதிகாரிகள் வந்தார்கள் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கேட்டார்கள், எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்றோம். சென்று விட்டார்கள்.



    2 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை எவ்வாறு நிறுத்தலாம் என்பது அவர்களின் கணக்கு. வெற்றி பெறமுடியாதவர்கள் போடுகிற தப்புக்கணக்கு. இது முட்டாள் தனமான கணக்கு. கழக பொருளாளர் துரைமுருகனை (சோதனை எனும் பெயரில்) அடித்தால் தி.மு.க.வினர் பயப்படுவார்கள் என்ற தப்புக்கணக்கு போட்டுள்ளனர். இதற்கு பின்புலமாக மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சியினர் இருக்கலாம். இதுகுறித்து எங்களுக்கு கவலை இல்லை.

    தி.மு.க.வினர் வெற்றியை எவ்வாறு தடுக்கலாம் என்று திட்டமிட்டு இன்று என் வீடு, திருச்செந்தூர் அனிதா ராதாகிருஷ்ணன் வீடு போன்ற பல இடங்களில் இதுபோன்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இது மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படும் என்ற அரசியல் அறிவு இல்லாதவர்கள் செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #DuraiMurugan #ITRaid
    வேலுர் மாவட்டத்தில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயிலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 5-ந் தேதி 103 டிகிரி, அடுத்த நாள் 6-ந் தேதி 105 டிகிரி, 29-ந் தேதி 104 டிகிரி வெயில் என அதிக பட்சமாக, இருந்தது. நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால், சாலையில் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. வெயிலின் தாக்கம் காரணமாக பெரும்பாலானவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. பலரும் நிழலைத்தேடி தஞ்சமடைந்தனர். கொளுத்திய வெயிலால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 13 நாட்கள் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் அளவு பதிவாகியுள்ளது. குறிப்பாக, நேற்றைய தினம் 106 டிகிரி பதிவானதே அதிகபட்சம் ஆகும். இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது.

    அரக்கோணம் அருகே கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தக்கோலம்:

    அரக்கோணம் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண். இவர் சென்னை திருநின்றவூரில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அரக்கோணத்தில் இருந்து ரெயில் மூலம் தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி கல்லூரிக்கு செல்வதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற மாணவி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், உறவினர்கள், மாணவியின் நண்பர்கள் உள்ளிட்டோர் பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவி கிடைக்கவில்லை.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து மாணவி எப்படி மாயமானார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காட்பாடியில் ரெயில்வே போலீஸ்காரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் கி‌ஷண்குமார் (வயது 35). இவர், ரெயில்வே குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீடு திரும்பிய இவர், மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இது குறித்து அவரது குடும்பத்தினர் கேட்டபோது எதுவும் பேசாமல் மவுனமாக இருந்துள்ளார்.

    இந்நிலையில், நள்ளிரவு 12 மணிக்கு திடீரென வீட்டில் தூக்குமாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். நாற்காலி விழுந்த சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்த குடும்பத்தினர், கி‌ஷண்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, கி‌ஷண்குமார் தற்கொலை முயற்சிக்கு குடும்ப பிரச்சனை காரணமா அல்லது பணிச்சுமையா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தக்கோலம்:

    அரக்கோணம் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாரத்தில் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அரக்கோணம் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்பாபு, வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்தவர் குறித்து விசாரைணை நடத்தினர். ஆனால் அவர் யார் என தெரியவில்லை. இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், உடல்நல குறைவால் இறந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எங்கள் கூட்டணிக்கு 40 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #premalatha #dmdk

    பனப்பாக்கம்:

    வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற பிரசன்ன வெங்கடேசபெருமாள் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் கோவிலை சுற்றி வலம் வந்து வணங்கினார்.

    அதனை தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வேலூர் தொகுதி உள்பட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மத்தியில் எங்கள் கூட்டணி ஆட்சி உறுதியாக அமையப்போகிறது. நான் இதுவரை 10 தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளேன். செல்லும் இடங்களெல்லாம் எங்கள் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிகிறது.

    தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் தூண்டுதல் எதுவுமில்லை. இதற்கு முன்பு தலைமை செயலாளர் வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நிலை நன்றாக உள்ளது. அவருடைய தேர்தல் பிரசாரம் குறித்து கட்சி தலைமை அறிவிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கிழக்குமாவட்ட செயலாளர் நித்யா உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    காட்பாடியில் தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் வீட்டில் இன்று காலை நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. #ITRaid #DMK
    வேலூர்:

    காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள பள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் சீனிவாசன். தி.மு.க. பகுதி செயலாளராக உள்ளார். இவரது வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

    சீனிவாசன் வீட்டில் உள்ள அறைகள், வீட்டின் அருகே உள்ள பூட்டப்பட்ட கடை ஆகியவற்றில் சோதனை செய்தனர். அதே பகுதியில் சீனிவாசனின் அக்கா வீடு உள்ளது. இங்கும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    சீனிவாசன் வீட்டில் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்ட கட்டு கட்டாக பணம் இருந்துள்ளது. அதனை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளன.

    வருமானவரி சோதனையில் சிக்கிய பண மூட்டைகள்

    இந்த பணம் எப்படி வந்தது. மூட்டைகளில் பணத்தை கட்டி வைக்க என்ன காரணம் என்பது குறித்து வருமான வரி அதிகாரிகள் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

    தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்.

    நேற்று முன்தினம் காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள், ரூ.10 லட்சம் சிக்கியது.

    காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் துரைமுருகன் மகனுக்கு சொந்தமான என்ஜினீயரிங் கல்லூரி, பள்ளி உள்ளது. இங்கு 12 மணி நேரம் நடந்த சோதனையில் கல்லூரி அலுவலகத்தில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதேபோல் துரைமுருகனுக்கு நெருக்கமான முன்னாள் மாவட்ட செயலாளர் வாணியம்பாடி தேவராஜ் வீட்டில் 2 மணி நேரம் சோதனை நடந்தது. இதில் ஆவணங்கள், பணம் கைப்பற்றப்படவில்லை.

    குடியாத்தம் முன்னாள் தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர் சக்கரவர்த்தி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் பாராளுமன்ற தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் அவரது வீடு, கல்லூரி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை கண்டு தி.மு.க. அஞ்சாது நாங்கள் பனங்காட்டு நரி எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம் என்றார்.

    இன்று காலை சோளிங்கரில் நடந்த கூட்டத்தில் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் தி.மு.க. பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. #ITRaid #DMK

    அரக்கோணத்தில் உள்ள சோளிங்கரில் நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், இந்துக்களுக்கு நான் எதிரி இல்லை என கூறியுள்ளார். #MKStalin #DMK #LoksabhaElections2019
    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

    இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அரக்கோணம் பாண்டிய நல்லூரில்  உள்ள சோளிங்கர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு,  திமுக வேட்பாளர் அசோகனை ஆதரித்து  பேசியதாவது:

    அரக்கோணத்திலே நமது கழக வேட்பாளர், அசோகனை எதிர்த்து அதிமுகவுடன் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்திருக்கும் பாமக வேட்பாளர் போட்டியிடவுள்ளார்.  அதிமுக - பாமக சேர்ந்ததில் ஆச்சரியத்திற்கு இடமில்லை. பாமக தலைவர் டாக்டர். ராமதாஸ் குறித்து உங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.  தமிழக சட்டப்பேரவையிலே ஜெயலலிதாவின் படம் வைக்கக்கூடாது எனவும்,  அவர் மக்களுக்கு நன்மை செய்துள்ளாரா? என கேள்வியும் எழுப்பியவர்.

    அப்படி இருக்கையில் இன்று, கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். இதிலிருந்தே  பேரத்தின் அடிப்படையில் தான் இந்த கூட்டணி என தெரிகிறது. மேலும் அதிமுக மோடியின் பினாமி அரசு. எடப்பாடி ஆட்சியின் திட்டங்களை விளக்க தயாரா? எனவும், மறைந்த ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டுவதால், நாட்டு மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும் மிக மோசமாக விமர்சித்தார்.



    வன்னியர் சங்க சொத்துக்கள் முறைகேடு வழக்கிலிருந்து தப்பிக்கவே,  பாமக- அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. வரும் தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். திமுகவை ஏளனம் செய்யும் தகுதி பாமகவிற்கு இல்லை.  

    அவர்கள் கூறிவருவதை போல், சாதாரணமாக  நான் தலைவர் ஆகவில்லை. 50 ஆண்டுகள் கழகத்திற்காக உழைத்துள்ளேன். மேலும் நான் இந்துக்களுக்கு விரோதி என கூறிவருகின்றனர். என் மனைவி கோவிலுக்கு செல்வதை  நான் ஒரு போதும் தடுத்ததில்லை. நான் இந்துக்களுக்கு எதிரியும் இல்லை. என்னை குறித்து தவறான தகவல்கள் பரப்புகின்றனர்.

    இன்று  திமுக ஆட்சி ஒரு வன்முறை ஆட்சி என கூறும் பாமகவினர் தான், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர் என நான் கூறவில்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார். சட்டப்பேரவையின் அவைக் குறிப்பிலே இருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #DMK #LoksabhaElections2019

    மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிய வேண்டும் என்று ஆம்பூரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். #LokSabhaElections2019 #MKStalin
    ஆம்பூர்:

    வேலூர் மாவட்டம் ஆம்பூரில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், ஆம்பூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் அ.செ.வில்வநாதன் ஆகியோரை ஆதரித்து நேற்று ஆம்பூர் பைபாஸ் சாலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்றத்துக்கு நடைபெறும் தேர்தல், மத்தியில் உள்ள மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காகவும், 18 சட்டமன்ற தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தல், தமிழகத்தில் உள்ள எடப்பாடி ஆட்சியை அப்புறப்படுத்துவதற்காகவும் நடைபெறும் தேர்தல் ஆகும்.

    நமது உடலில் தேவையில்லாத கட்டி வந்தால் அதனை வெட்டி எடுக்க வேண்டும். இல்லையெனில் உடலுக்கு கெடுதல். அதேபோல் மக்களுக்கு பயன்படாத, மக்கள் நலனில் அக்கறை இல்லாத மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறிய வேண்டும். வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.



    பிரதமராக உள்ள நரேந்திர மோடி மக்களுக்கு எந்தவொரு நல்ல திட்டத்தையும் நடைமுறைப்படுத்தவில்லை. அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை தந்தார். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவதாக கூறினார். ஆனால் அதை நடைமுறைப்படுத்தவில்லை. அதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தருவதாக கூறினார். ஆனால் அதையும் செய்யவில்லை. வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறினார். ஆனால் எதுவும் தரவில்லை. மக்களை ஏமாற்றியதுதான் மிச்சம்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆட்சி ஆரம்பித்தபோது அடிக்கல் நாட்டிவிட்டு 5 ஆண்டுகளுக்குள் திறந்து இருக்க வேண்டும். ஆனால் ஆட்சி முடியும் நிலையில் அடிக்கல் நாட்டி உள்ளார். மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்கே 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதனை எப்போது கட்டி திறப்பார்கள் என்று தெரியவில்லை. பிரதமர் மோடியை அனைவரும் இரும்பு மனிதர் என்று சொல்கிறார்கள். அவர் இரும்பு மனிதர் அல்ல, கல் மனிதர் தான்.

    அதேபோல் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை, சி.பி.ஐ. சோதனை, கோடநாடு கொலை வழக்கு, அனைத்து துறையிலும் ஊழல், லஞ்சம் ஆகிய பிரச்சினைகள் காரணமாகவும், வழக்குகளில் இருந்து காப்பாற்றி கொள்ளவும், ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் கட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மோடியிடம் அடமானம் வைத்து பதவிக்காக சரண் அடைந்துள்ளார். அதனால்தான் பா.ஜ.க.வுடன் கூட்டணியும் அமைத்துள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களை பற்றியும் சிந்திக்கவில்லை, நாட்டை பற்றியும் சிந்திக்கவில்லை. தமிழகத்தில் கருணாநிதி 5 முறை முதல்-அமைச்சராக இருந்தபோது சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும், திட்டங்களையும் வழங்கி உள்ளார்.

    குறிப்பாக மிலாது நபிக்கு அரசு விடுமுறை, வேலை வாய்ப்பில் 3.5 சதவீதம் இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நல ஆணையம், வக்பு வாரிய சொத்துகளை பராமரிக்க மானியம், தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் ஆகியவை தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு எந்தவொரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னென்ன செய்யபோகிறோம் என்று பாராளுமன்றத்துக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆம்பூர் தொகுதிக்கு சுற்றுச்சாலை, புறவழிச்சாலை, பேரணாம்பட்டு, மாதனூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #MKStalin
    சிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும் என்று தேர்தல் பிரசாரத்தில் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார். #opanneerselvam #admk

    வாணியம்பாடி:

    வேலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து இன்று துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார். வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தத்தில் திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த காலத்தில் காங்கிரசும், தி.மு.க.வும் கூட்டணி அமைத்து மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினையான காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.

    கருணாநிதியின் ஆட்சி காலத்திலேயே கர்நாடகாவில் 4 அணைகள் கட்டப்பட்டன. அதற்கு உரிய அனுமதியை அவர் அளித்ததால் தமிழகத்திற்கு காவிரி நீர்வரத்து குறைந்துவிட்டது.

    அதன்பிறகு ஆட்சி பொறுப்பேற்ற ஜெயலலிதா சட்ட போராட்டம் மூலமாக காவிரி நதிநீரில் தமிழகத்திற்கான உரிமையை பெற்று தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான தீர்ப்பை பெற்று அதை அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுத்தார்.

    இலங்கையில் போர் தீவிரமடைந்தபோது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து நாடகம் ஆடினார். அப்போதைய மத்திய அரசிடம் பேசி போரை நிறுத்துவதாக அறிவித்தார். அதை நம்பி இலங்கையில் பதுங்கு குழிகளில் இருந்து வெளியேறிய தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்தது. அதில் சுமார் 5 ஆயிரம் தமிழர்கள் உயிரிழந்தனர். இலங்கையில் நடந்த இறுதி கட்டபோரில் 4 லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

    இதையெல்லாம் மறந்து விட்டு அப்போதைய மத்தியஅரசு குழுவுடன் இணைந்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த குழுவினர் ராஜபக்சேவை சந்தித்து பரிசு பொருட்களை வாங்கி வந்தனர். ஆனால் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபோது ராஜபக்சேவை போர்குற்றவாளி என்று அறிவித்தார்.

    ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும், சேர்ந்து தமிழகத்தை தீவைத்து கொளுத்துவதாக மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். உண்மையில் நாங்கள் தீ வைக்கவில்லை. மாமா, மச்சான் சண்டையில் பத்திரிகை அலுவலகத்தை தீவைத்து கொளுத்தியது அவர்கள்தான்.

    தி.மு.க. ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நிலஅபகரிப்பு என நடத்தப்பட்ட அராஜகங்களை பொதுமக்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

    ஓட்டல்களில் சென்று சாப்பிட்டால் கூட பிரியாணிக்கும், புரோட்டாவுக்கும் காசுகொடுக்காமல் அடித்து நொறுக்குவது அவர்களுடைய வழக்கம். இதற்காகவே பல ஓட்டல்களில் தற்போது சாப்பிடுவதற்கு முன்பு டோக்கன் வாங்கும் முறையை கொண்டு வந்துவிட்டனர்.

    எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வை 1½ கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கமாக ஜெயலலிதா வளர்த்துள்ளார். அ.தி.மு.க. ஆட்சியை பற்றி குறை கூறும் வகையில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க ஆட்சி தொடரும். இது பெரிய ஆலமரம். எந்த புயலுக்கும் அசையாது.தொண்டர்கள் இயக்கமான அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது.

    முதல் அமைச்சராக வர வேண்டுமென ஆசைப்படும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது. சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க. கொண்டு வந்தபோது மணல் நகரும் தன்மை கொண்டது. அதனால் இந்த திட்டத்தால் பிரயோஜனம் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். சேது சமுத்திர திட்டத்திற்கு ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் 40 ஆயிரம் கோடியை கடலில் போட்டுவிட்டார்கள். கடலில் போட்டார்களா அல்லது வேறு யாரிடமாவது போட்டார்களா என்பது தெரியவில்லை.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்தனர். அது தொடர்ந்து நிறைவேற்றப்படுகிறது.

    சிறுபான்மை மக்களுக்கு பல திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார். ரம்ஜானுக்கு இலவச அரிசி, ஹஜ் பயனாளிக்கு சிறப்புநிதி , ஜெருசலேம் செல்பவர் களுக்கு உதவி தொகை வழங்கப்படுகிறது. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பாக வாழும் மாநிலம் தமிழகம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். சிறுபான்மை மக்களுக்கு உற்ற துணையாக அ.தி.மு.க. அரசு இருக்கும். பகிர்ந்து உண்டால் பசி தீரும் விட்டு கொடுப்பவன் கெட்டுபோவ தில்லை. என்று ஜெயலலிதா அடிக்கடி கூறுவார். அதன் அடிப்படையில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதியிலும் வெற்றி பெறும். இந்த தொகுதியில் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் எம்.பி உடன் இருந்தவர் அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவருக்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×