என் மலர்tooltip icon

    தூத்துக்குடி

    • ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
    • வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.

    சண்முகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) அருள் செல்வி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.

    வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தார்கள். உலக வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் போன்ற தலைப்பில் வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் கருத்துரையாற்றினார்கள்.

    பள்ளியில் அனைத்து மாணவ-மாணவிகளும் கண்காட்சியை கண்டு களித்தனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தங்கபாண்டி மற்றும் கணித ஆசிரியை பர்வீன் ராணி மற்றும் ஆய்வக உதவியாளர் லதாவும் செய்திருந்தார்கள். சிறந்த படைப்புகளுக்கு வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் புத்தக பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கமளித்தார்.

    • டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி கொள்ளையடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
    • ஒத்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம்.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    நேற்று முன்தினம் உள்துறை மந்திரியை சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவை தொகையை பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கின்றேன்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுக்கு வர வேண்டிய நிதி தாமதமாகி உள்ளது. அதுதொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

    தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை தான் தொடர வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. அதனை வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளோம்.

    எங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தின் அடிப்படையில் முக்கியமான நிகழ்வுகளை சுட்டிக்காட்டினோம். தமிழ்நாட்டில் நிலவும் மக்கள் பிரச்சனைகள் குறித்தும் மனு அளித்தோம்.

    ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு சாத்தியமே கிடையாது. பிரிந்தது பிரிந்ததுதான். பிரிந்தது மட்டுமல்ல, இந்த கட்சியை எதிரிகளிடம் அடமானம் வைப்பதை எங்களால் தாங்க முடியவில்லை.

    என்றைக்கு அ.தி.மு.க.வின் கோவிலாக இருக்கும் கட்சி தலைமை அலுவலகத்தில் இவர் தலைமையில் ரவுடிகள் மூலம் தாக்கினார்களோ அன்றைக்கே அவர் இந்த கட்சியில் இருப்பதற்கு தகுதி இல்லை. அந்த அடிப்படை யில் அவர் இணைத்து கொள்ளப்படுவதற்கு வாய்ப்பே கிடையாது.

    அவர் தவிர, நிறைய பேர் இந்த கட்சியில் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் கூட பல பேர் இணைந்து கொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் பலர் இணைந்து வருகிறார்கள்.

    தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்கள். அந்த மீனவர்களை காக்க வேண்டும். மீனவர்கள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் ஆட்சியில் இருக்கும்போதும், அம்மாவின் ஆட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    இலங்கை அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு நம்முடைய மீனவர்களை தாக்குவது, அவர்களுடைய பொருட்களை கொள்ளையடிப்பது, படகுகளை சேதப்படுத்துவது, அவர்களை கைது செய்வது எல்லாம் கண்டனத்துக்குரியது. அதை நாங்கள் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.

    நான் முதலமைச்சராக இருக்கும்போதும், அம்மா முதலமைச்சராக இருக்கும் காலத்திலும் சரி, கைது செய்யப்பட்ட மீனவர்களை மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு பேசி அவர்களை விடுதலை செய்து அழைத்து வந்திருக்கிறோம்.

    அதுமட்டுமல்லாமல் இலங்கை கடற்படையால் எடுத்து செல்லப்பட்ட படகுகளுக்கு நிவாரணம் கொடுத்தோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கொடுத்திருக்கிறோம்.

    நாங்கள் எதிர் கட்சிதான். ஆட்சியில் இல்லாத போது உருட்டல், மிரட்டல்கள் எல்லாம் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் ஆளும் கட்சியல்ல.

    டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி கொள்ளையடித்தது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். போதைப்பொருள் நடமாட்டத்திற்கு அளவே இல்லை.

    காவல்துறைக்கு அவர்கள் அச்சப்படவில்லை. சர்வ சாதாரணமாக கொலை சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காவல்துறை ஏவல் துறையாக மாறிவிட்டது.

    தி.மு.க. மட்டும்தான் அ.தி.மு.க.வின் ஒரே எதிரி. தி.மு.க.வை தவிர வேறு எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல. ஒத்த கருத்துள்ள கட்சிகள் அ.தி.மு.க. கூட்டணியில் இணையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
    • மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ரூ.1,000 கோடி டாஸ்மாக்கில் கொள்ளையடித்தது யார் என்று கண்டுபிடியுங்கள்.

    * தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    * சிறுமி முதல் மூதாட்டி வரை தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பில்லை.

    * பத்திரிகை செய்திகளின் அடிப்படையிலேயே சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகிறோம்.

    * காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.

    * மீனவர்கள் பிரச்சனை குறித்தும் அமித்ஷாவிடம் பேசினோம்.

    * ஆர்.பி.உதயகுமார் கூறியது பற்றி தெரியவில்லை. தெரியாதது குறித்து தவறாக சொல்லி விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.
    • காவல்துறை ஏவல்துறையாக மாறி விட்டது.

    தூத்துக்குடி விமான நிலையத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * ஓ.பன்னீர்செல்வம் இணைப்புக்கு சாத்தியமில்லை. அ.தி.மு.க.வில் இருப்பதற்கே ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை.

    * அ.தி.மு.க.வில் இணைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு தகுதியில்லை.

    * குண்டர்களை அழைத்துச் சென்று தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தியவர்களை கட்சியில் இணைப்பது சாத்தியமற்றது.

    * கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தற்போது இணைப்பட்டு வருகிறார்கள். ஆனால் ஓ.பி.எஸ்.க்கு தகுதியில்லை. பிரிந்தது பிரிந்தது தான்.

    * தேர்தல் நெருங்கும்போது கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    எட்டயபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள இளம்பவனம் கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனது குழந்தைகளுடன் பரமக்குடியில் வசித்து வருகிறார்.

    அவரது 17 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்று வாலிபரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் வீட்டிற்கு தெரிந்ததும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதையடுத்து 17 வயது சிறுமி, அந்த வாலிபரிடம் நாம் இருவரும் நண்பர்களாக பிரிந்து விடுவோம் என்று தெரிவித்ததாகவும், ஆனால் சந்தோஷ் விடாமல் தொடர்ந்து அந்த 17 வயது சிறுமிக்கு தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்தநிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சந்தோஷ் மீது சிறுமியின் தாயார் பரமக்குடி போலீஸ் நிலையத்தில், புகார் கொடுத்துள்ளார். இதனை விசாரித்த போலீசார் இருதரப்பினையும் அழைத்து விசாரணை நடத்தி எழுதி வாங்கி வழக்கை முடித்ததாக கூறப்படுகிறது.

    அதன்பிறகும், சந்தோசினால் பிரச்சனை வந்ததால் சிறுமியை அவரது தாயார் எட்டையபுரம் அருகே கீழ நம்பிபுரத்தில் இருக்கும் தனது தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டார்.

    17 வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் இருந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு, அருகில் இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது தீ பற்றி எரிந்த நிலையில் 17 வயது சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் தீயை அணைத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எட்டையபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 2 வாலிபர்கள் வந்து சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் சந்தோஷ் தன்னை காதலிக்க வேண்டும் என தொந்தரவு கொடுத்ததாகவும், தான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரும், அவரது நண்பரான முத்தையா என்பவரும் சேர்ந்து தன் மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்ததாக கூறினார்.

    அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    • இல்லத்தை சுற்றிப்பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.
    • நினைவிடத்தை பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    மகாகவி பாரதியாரின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அவரது இல்லம் அமைந்துள்ளது.

    அவரை போற்றும் வகையில் கடந்த 1973-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி எட்டயபுரத்தில் உள்ள பாரதியாரின் பிறந்த வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவு இல்லமாக மாற்றினார்.

    எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள அவரது நினைவு இல்லம் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் பகுதி நேர நூலகமும் இயங்கி வருகிறது.

    மகாதேவி என்பவர் இல்லத்தின் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த இல்லத்தை சுற்றிப்பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று பார்வையிட்டு செல்கின்றனர்.

    தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை பார்வையாளர் நேரம் முடிந்த உடன் இல்லத்தின் காப்பாளர் கதவுகளை மூடினார். அப்போது பாரதியார் இல்லத்தின் முன்பு மேல்மாடியின் மேற்கூரை திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ்தளத்தின் மேற்கூரையும் இடிந்து அதில் இருந்து கற்கள் விழுந்தன.

    இந்நிலையில் பாரதியார் நினைவு இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைப்பு செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    எட்டயபுரத்தில் அமைந்துள்ள நூறாண்டு பழமையான பாரதியார் பிறந்த இல்லத்தின் மேல் தளம் மழையால் பாதிக்கப்பட்டு நேற்று மாலை விழுந்துவிட்டது. இந்த நினைவிடத்தை பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    தமிழக நிதி அமைச்சர் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாரதியார் பிறந்த இல்லத்தை பழமை மாறாமல் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்து இருந்தார்.

    பொதுப்பணிதுறையின் பாரம்பரிய கட்டிடங்கள் பிரிவு பொறியாளர்களால் பாரதியார் பிறந்த இடம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு விரைவில் மறுசீரமைக்கப்படும். அதுவரை சுற்றுலா பயணிகள் யாரும் பாரதியார் பிறந்த இல்லத்தை பார்வையிட வர வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது.
    • பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம் பட்டியில் செயல்பட்டு வரும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல அறக்கட்டளை பெயரில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ், பள்ளிக்கு தனது சொந்த செலவில் கட்டிடம் மற்றும் கணினி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்து இருந்த நிலையில், பள்ளியில் போக்குவரத்து பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது ஒரு மாணவன் தலைக்கு மேலே பறக்கக்கூடிய விமானத்தில் நாம் என்று பறப்போமோ என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளார்.

    அது மட்டுமல்லாமல் சொந்த ஊர் அருகே ரெயில்வே நிலையம் இருக்கிறது. ஆனால் ரெயிலில் கூட பயணித்ததில்லை எனக் கூறிய மாணவ-மாணவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்கு முடிவு செய்தார் தலைமை ஆசிரியர் பொன்ராஜ்.

    மாணவர்களிடம் தன் சொந்த செலவில் விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறிய தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் 3 மாதங்களுக்கு முன்பே தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து அதன்படி இன்று காலை 18 மாணவ-மாணவிகளை விமானத்தில் அழைத்துச் சென்று சென்னையில் வண்டலூர் பூங்கா மற்றும் மெட்ரோ ரெயில் பூண்டவட்டில் அழைத்துச் சென்று பார்வையிட உள்ளனர். நாளை மாலை சென்னையில் இருந்து முத்துநகர் ரெயில் மூலம் தூத்துக்குடிக்கு வருகை தர இருக்கின்றனர்.

    மிகவும் வறுமையில் இருக்கக்கூடிய நிலையில் நாங்கள் விமானத்தில் பறப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறும் மாணவர்கள் எங்களால் விமானத்தில் பணம் கொடுத்து பயணம் செய்ய முடியாத நிலையில் எங்கள் ஆசிரியர் அவரது சொந்த செலவில் சென்னைக்கு அழைத்துச் சென்று உயிரியல் பூங்காக்களை பார்வையிட வைப்பது ரெயிலில் அழைத்துச் செல்வது போன்ற விஷயங்கள் தங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்திருப்பதாகவும் நல்லாசிரியர் பொன்ராஜ்க்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் உருக்கமாக மாணவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் கூறுகையில், 2014-ம் ஆண்டு முதல் பண்டாரம் பட்டிக்கு தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பாடம் சம்பந்தமாக மாணவர்களை எனது சொந்த செலவில் அழைத்துச் செல்வது வழக்கம், பள்ளி மாணவர்கள் பாடம் படிக்கும்போது போக்குவரத்து தலைப்பில் ரெயில் மற்றும் விமானங்கள் பற்றி வந்திருந்தது. பிள்ளைகள் நாங்கள் விமானத்தில் போக முடியுமா? ரெயிலில் போக முடியுமா? என கேள்வி எழுப்பினார்கள்.

    அது எனது மிகுந்த கஷ்டமாக இருந்தது. தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து 17 மாணவ-மாணவிகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள், தான் உட்பட 20 பேர் செல்கிறோம். இதற்கு சுமார் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் செலவு ஆகிறது என்றார். மேலும் மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது தனக்கு சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்தார்.

    • உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிப்பு.
    • தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.

    அண்ணாநகர், பிரையன்ட்நகர், செயின்ட் பீட்டர் கோவில் தெரு, லயன்ஸ் டவுன் மற்றும் வி.வி.டி. சிக்னல் முதல் பிரதான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. திருச்செந்தூர் சாலை உட்பட முக்கிய சாலைகளில் உள்ள கிடங்குகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதி அடைந்தனர்.

    இந்த பலத்த மழையால் தாமோதரன் நகரில் உள்ள ராஜா என்பவரது வீடு இடிந்து விழுந்தது. அவரது மனைவி மற்றும் மகன் வெளியூர் சென்று இருந்ததால் ராஜா அவரது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பினர். எனினும் அவர்கள் வீட்டில் இருந்த டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதம் அடைந்தது.

    இந்த மழையால் தூத்துக்குடி, முள்ளக்காடு, பழையகாயல், புல்லாவெளி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மீண்டும் உப்பு உற்பத்தி தொடங்க சிலர் நாட்கள் ஆகும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மழைநீர் வளாகத்தை சுற்றி குளம்போல் காணப்படுவதுடன், போலீஸ் நிலையத்திற்கு உள்ளேயும் தண்ணீர் புகுந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்த காவலர்கள் கோப்புகள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தண்ணீர் தேங்கியதால் அங்கிருந்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    சாயர்புரம் வட்டார பகுதியில் அதிகாலை 4 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.
    • வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் திடீரென மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    கோவிலில், 100 ரூபாய் கட்டண வரிசையில் நின்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் (50) என்ற பக்தர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.

    ஞாயிற்றுக்கிழமையான இன்று திருச்செந்தூர் கோவிலில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதியது.

    இதற்கிடையே, வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஓம் குமாருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

    மயங்கி விருந்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் கோவில் சுற்று வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மீக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது.

    இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இன்று விடுமுறை தினம் மற்றும் சுப முகூர்த்த நாள் என்பதால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (ஞாயிற்றுக் கிழமை) கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    சுப முகூர்த்தம் நாள் என்பதால் இன்று கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது.

    இன்று காலை 9.15 மணிக்கு திடீரென சாரல் மழை பெய்தது. பக்தர்கள் சாரல் மழையில் நனைந்தவாறு கடலில் புனித நீராடினர்.

    • பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
    • பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பணி செய்து வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் துறைமுகத்தையொட்டி அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த அனல் மின் நிலையத்தில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி நடைபெறுகிறது.

    இங்கு 210 மெகாவாட் உற்பத்தித்திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளது. இதன் மொத்த உற்பத்தித்திறன் 1050 மெகாவாட் ஆகும். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் அனல்மின் நிலையத்தில் திடீரென புகை மூட்டம் ஏற்பட்டது.

    சிறிது நேரத்தில் தீ விபத்தாக மாறி முதல் மற்றும் இரண்டு அலகுகளில் தீ எரியத்தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 3-வது அலகுக்கும் தீ பரவும் சூழல் ஏற்பட்டது. இதனால் உடனடியாக 1,2,3 அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தீ விபத்து குறித்த தகவலை தொடர்ந்து சிப்காட், ஸ்பிக் தொழிற்சாலை, என்.டி.பி. எல்., தூத்துக்குடி புறநகர் பகுதிகள் மற்றும் ஏரல் உட்பட 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தில் கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும் சூழலில், அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையத்தில் நிரந்தர தொழிலாளர்களாக 1,550 பேரும், ஒப்பந்த அடிப்படையில் 1,270 தொழிலாளர்களும் பணி செய்து வருகின்றனர்.

    இதுபோக பல ஆயிரக்கணக்கானோர் மறைமுகமாக பணி செய்து வருகின்றனர். கப்பலில் வரும் நிலக்கரியை துண்டுகளாக நொறுக்கப்பட்டு சிறு துண்டுகள் நிலக்கரி அரவை எந்திரங்களில் செலுத்தப்பட்டு தூளாக்கப்படுகிறது.

    தூளாக்கப்பட்ட நிலக்கரி பொடியாக்கி செலுத்தி விசிறிகள் மூலமாக உலைக்குள் வேகமாகச் செலுத்தி எரிக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அந்த அலகுகளில் தான் தற்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் பிளஸ்-1 மாணவனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினர்.
    • படுகாயம் அடைந்த தேவேந்திரன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவன் தேவேந்திரன் (வயது 17) நேற்று பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக பஸ்சில் சென்றார்.

    அப்போது பஸ்சை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் தேவேந்திரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. இதில் படுகாயம் அடைந்த தேவேந்திரனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, போலீசார் விசாரணை நடத்தி மாணவனை வெட்டியதாக கெட்டியம்மாள்புரம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் லெட்சுமணன் என்ற பெரியவன் (வயது 19) மற்றும் 2 இளஞ்சிறார்களை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மாணவர்களிடம் பெயிண்ட்டை கொடுத்து சுவரில் வரையப்பட்டிருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தனர்.

    மேலும் சாதி பாகுபாட்டுக்கு எதிரான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் வாசிக்க மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.

    ×