என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நான் குறிப்பிட்டு பேசிய வேறு ஒரு ஞானசேகரனின் பெயரை குற்றவாளி ஞானசேகரனுடன் ஒப்பிட்டு சர்ச்சையாக்கி விட்டனர்.
    • இந்த 2 பேர் ஒப்பீடு போல் நிறைய சம்பவங்களை ஒப்பிட்டு உள்ளேன்.

    நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் தம்பி ஞானசேகரன் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:

    கடந்த 10-ந்தேதி நிரஞ்சன் என்ற தம்பி இந்தியாவின் வெற்றி என்று ஒரு புத்தகம் வெளியிட்டார்.

    அதை வெளியிடப்போகும்போது நீங்கள் சொன்ன பெயருடைய ஒருவர் துண்டு போட வந்தார்.

    அவர் ஞானசேகரன் என்றதும் பயமாக இருக்கிறது. நீ அந்த ஞானசேகரனா... என்றேன். அவரும் நான் அவர் இல்லை என்று கூறினார்.

    அந்த ஞானசேகரனை கை காட்டி தான் என் தம்பி ஞானசேகரன் பெயர் கொண்டவர் தான் இந்த தவறு செய்துள்ளார். அதற்குத்தான் 3 ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகள் போட்டு இருக்கிறோம் என்று சொன்னேன்.

    நான் குறிப்பிட்டு பேசிய வேறு ஒரு ஞானசேகரனின் பெயரை குற்றவாளி ஞானசேகரனுடன் ஒப்பிட்டு சர்ச்சையாக்கி விட்டனர்.

    இந்த 2 பேர் ஒப்பீடு போல் நிறைய சம்பவங்களை ஒப்பிட்டு உள்ளேன். வீடியோவில் இன்னும் நிறைய இருக்கிறது. அதை நீங்கள் போய் கேளுங்கள். அதை எடுத்து போடுவதற்கு தயாரா என்று கேளுங்கள் என்று அவர் கூறினார்.

    • நேற்று முளைத்தவர் எல்லாம் தி.மு.க.வுக்கு சவால் விடுகிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசுகிறார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர தி.மு.க.வுக்கு உட்பட்ட பாளை பகுதி சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பாளை ஜோதிபுரம் திடலில் நடைபெற்றது. இதில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் ஆட்சி செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகளில் 40 ஆண்டுகால சாதனையை செய்து முடித்துள்ளார். மகளிருக்கு உரிமைத் தொகை உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

    நேற்று முளைத்தவர் எல்லாம் தி.மு.க.வுக்கு சவால் விடுகிறார்கள். அவரது அப்பாவையும் நாங்கள் தான் அறிமுகம் செய்தோம். நாடாகமாடுவதில் தி.மு.க. கை தேர்ந்தவர்கள் என நேற்று முளைத்தவரெல்லாம் சொல்கிறார். அவரும் ஒரு நடிகர் என்பதை மறக்க கூடாது.

    முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு சமாதி கட்டி கொடுத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்பதை மறக்ககூடாது. வாரம் ஒரு முறை தமிழகத்தின் ஊர் ஊராக வந்து மோடி பொய்யாக பேசி சென்றார். அனைத்தையும் சந்தித்து பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதற்கு மகளிர் தான் காரணம். எம்.ஜி.ஆருக்கு ஏஜெண்டாக தேர்தலில் செயல்பட்டவன் நான்.

    எம்.ஜி.ஆர். பிரசாரத்திற்கு சாலையில் சென்றால் கூட்டம் புற்றீசல் போல் சாரை சாரையாக வந்துவிடும். எம்.ஜி.ஆருக்கு வந்தது போல் இப்போது மு.க. ஸ்டாலினுக்கு கூட்டம் அதிகமாக வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் ஆண்கள் வாக்குகளை விட பெண்கள் வாக்குகள் தான் அதிகமாக தி.மு.க.வுக்கு வந்தது. பட்டியலின மக்கள் வாழும் பகுதியில் 100-க்கு 90 வாக்கு தி.மு.க.வுக்கு கிடைத்தது. மக்களுக்கான ஆதரவை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் எடப்பாடி பழனிசாமி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பேசுகிறார்.

    தமிழகத்தின் இளைஞர்களை சீமான் ஏமாற்றுகிறார். சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது. நான் நீதிமன்றத்தை நாடினால் அந்த பெயரையே இனி சீமான் பயன்படுத்த முடியாது.

    பிரபாகரன் படத்தை ஒட்டிவைத்து சீமான் போர்ஜரி செய்து வருகிறார். விடுதலை புலிகள் பிரபாகரன் சீடர்கள் 48 பேர் ஜாமீன் மீதான வழக்கில் நான் ஆஜராகி காப்பாற்றிய கட்சி தி.மு.க. என்பதை சீமான் மறக்க கூடாது.

    பிரபாகரனையும், விடுதலை புலிகளையும் காப்பாற்றியது தி.மு.க. மற்ற கட்சிகள் எல்லாம் பிரபாகரனை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

    பரந்தூர் விமான நிலைய பிரச்சனையில் ஒரு நடிகர் நேற்று நாடகம் ஒன்றை ஆடினார். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டுக்காகவா விமான நிலையம் கேட்கிறார். தூத்துக்குடி விமான நிலையத்தை மதுரைக்கு நிகராக கனிமொழி எம்.பி. முயற்சியால் மாற்றியுள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கு இடம் கொடுக்க மக்கள் தயாராக உள்ளனர். விமான நிலைய பிரச்சினை குறித்து முன் பின் விசாரிக்காமல் விஜய் பேசுகிறார். பரந்தூரில் விஜய் வியாபாரம் செய்துள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பரந்தூர் பகுதியில் 443 பேர் வாக்களித்ததில் 51 சதவீதம் தி.மு.க.வுக்கு தான் விழுந்துள்ளது. இதில் தி.மு.க.வை அப்பகுதி மக்கள் விரும்புகிறார்கள் என்பதே அர்த்தம். பரந்தூர் பகுதி வாக்குசாவடியில் அனைத்து கட்சிகளைவிட தி.மு.க.விற்கு தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
    • காற்று வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூரில் தனியார் பஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக புறநகர் பஸ்கள், மினி பஸ்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பஸ்கள் மாநகரிலும், நெல்லை மாவட்டத்திலும் இயங்கி வருகிறது.

    இந்த பஸ்களுக்கான பராமரிப்பு மேற்கொள்ளும் பணிமனை தச்சநல்லூர் பகுதியில் உள்ளது.

    இதில் நேற்று இரவு சுமார் 20-க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அப்போது பழுதாகி நின்ற பஸ்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை 1 மணி அளவில் பழுது பார்க்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பஸ்சில் திடீரென தீப்பிடித்தது. இதைத்தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. தொடர்ந்து அருகில் மற்றொரு பஸ்சிலும் தீ பரவி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காற்று வேகம் காரணமாக தீ வேகமாக பரவியது.

    உடனடியாக பாளை தீயணைப்பு படை நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் 2 பஸ்சிலும் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனாலும் ஒரு பஸ் முற்றிலும் எரிந்தது. மற்றொரு பஸ் பாதி எரிந்தது.

    இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீ பற்றியது எப்படி என்பது குறித்து விசாரித்தனர். மின் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா? அல்லது வெல்டிங் எந்திரத்தினை பயன்படுத்தி பணி செய்தபோது, தீப்பொறி பரவியிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • எப்போதும் நாட்டிலேயே அதிக மழை இந்த மாஞ்சோலை வனப்பகுதியில் பெய்வது வழக்கம்.
    • காக்காச்சியில் 786 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை இந்தியாவின் தனித்துவமிக்க இடமாக கருதப்படுகிறது.

    இந்தியாவில் வடகிழக்கு பருவமழை மற்றும் குளிர்காலத்தில் மாஞ்சோலையை போல அதிகமழை பெறும் பகுதியை நம் நாட்டில் எங்குமே காண முடியாது.

    இந்த ஆண்டு மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய மலை கிராமங்களில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. ஜனவரி 11-ந்தேதி ஆரம்பித்த மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது.

    தினமும் கனமழை, மிக கனமழை என பெய்து வருகிறது.

    எப்போதும் நாட்டிலேயே அதிக மழை இந்த மாஞ்சோலை வனப்பகுதியில் பெய்வது வழக்கம்.

    இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் இன்று வரை இந்தியாவிலேயே மிக அதிகமான மழை நெல்லை மாவட்டம் ஊத்து எஸ்டேட் பகுதி பெற்றிருக்கிறது.

    இன்று காலை வரை கடந்த 20 நாட்களில் 1022 மில்லிமீட்டர் (102 சென்டிமீட்டர்) மழையை பெற்றிருக்கிறது. இம்மழை நாட்டிலேயே மிக அதிகம். ஊத்துக்கு அடுத்தபடியாக நாலுமுக்கு பகுதியில் 912 மில்லிமீட்டர் மழையும், காக்காச்சியில் 786 மில்லிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

    • மணிமுத்தாறு அணைக்கு 1000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • ஒரே நாளில் சேர்வலாறு அணை நீர்மட்டம் 4½ அடி உயர்ந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், மணிமுத்தாறு வனப்பகுதிகளிலும் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று அதிகாலை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை அதிகபட்சமாக நெல்லை மாவட்டத்தில் சேர்வலாறு பகுதியில் 35 மில்லி மீட்டரும், பாபநாசம் பகுதியில் 28 மில்லி மீட்டரும், கன்னடியன் பகுதியில் 15.20 மில்லி மீட்டரும் மழை பெய்தது.

    இதேபோல் நெல்லை, பாளையங்கோட்டை, மணிமுத்தாறு, களக்காடு, சேரன்மகாதேவி, மூலைக்கரைப்பட்டி, அம்பாசமுத்திரம், நாங்குநேரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில் சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 117.05 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 4½ அடி உயர்ந்து 121.72 அடியாக உள்ளது.

    இதேபோல் 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 110 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1½ உயர்ந்து 111.40 அடியாக காணப்படுகிறது.நேற்று 99.92 அடியாக காணப்பட்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் இன்று ½ உயர்ந்து 100.45 அடியாக உள்ளது.

    பிரதான அணையான பாபநாசத்திற்கு வினாடிக்கு 1517 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று 600 கனஅடி தண்ணீர் வந்த நிலையில் இன்று கூடுதலாக 900 கணஅடி தண்ணீர் கூடுதலாக வருகிறது.

    இதேபோல் மணிமுத்தாறு அணைக்கு 1000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளில் நலன் கருதி கடந்த 5 நாட்களாக மணிமுத்தாறில் குளிக்க தடை விதித்கப்பட்டிருந்தது. இன்று 6-வது நாளாக அங்கு குளிக்க அனுமதிக்கபடவில்லை.

    இதேபோல் களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து தடுப்பணையை மூழ்கடித்த படி தண்ணீர் பாய்ந்து ஓடுவதால் நேற்று தலையணையில் குளிக்க களக்காடு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

    தென்காசி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து வருகிறது. அதிகப்பட்சமாக புளியங்குடியில் 44 மில்லி மீட்டரும், சிவகிரியில் 20 மில்லி மீட்டரும், ராமநதியில் 19 மில்லி மீட்டரும் மழை பாதிவாகி இருந்தது.

    இதேபோல் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, கடனாநதி, கருப்பாநதி பகுதி, அடவிநயினார் பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் சூரன்குடியில் 42 மில்லி மீட்டரும், கழுகுமலையில் 28 மில்லி மீட்டரும், வேடநத்தத்தில் 22 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது.

    இதேபோல் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், மணியாச்சி, கயத்தாறு, கடம்பூர், சாத்தான்குளம், திருச்செந்தூர், குலசேகரபட்டினம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், கீழ அரசரடி, காடல்குடி, வைப்பாறு உள்ளிட்ட மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை பெய்தது.


    மழை காரணமாக சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலை குண்டும்,குழியாக காணப்படுகிறது. இதில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் தெரியாததால் விபத்தில் சிக்கி வருகிறார்கள்.

    நேற்று இந்த சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற புதுமாப்பிள்ளை ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். உடனடியாக இந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினம்.
    • காலை 8.15 மணிக்கு மூர்த்திகளுக்கும், விமான கலசத்திற்கும் கலசாபிஷேகம் நடந்தது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தினமான இன்று தை உத்திர வருஷா பிஷேகம் நடந்தது.

    வருஷாபிஷேகத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 5மணிக்கு உதயமார்த் தாண்ட அபிஷேகம், காலை 8.15 மணிக்கு மூர்த்திகளுக்கும், விமான கலசத்திற்கும் கலசாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலியும் நடக்கிறது. இரவு அபிஷேகம் நடைபெறாது. மாலையில் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.

    இரவு புஷ்பாஞ்சலி நடக்கிறது. இன்று காலையில் நடைபெற்ற வருஷாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • சிறுமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.

    நெல்லை:

    தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகஅர்ச்சுனன். மாப்பிள்ளையூரணி கே.வி.கே.சாமி நகரை சேர்ந்தவர் அய்யப்பன். நண்பர்களான இவர்கள் 2 பேரும், தங்களது குடும்பத்தினருடன் காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக, நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வேளார்குளத்தில் உள்ள தங்களது நண்பர் வீட்டுக்கு நேற்று வந்தனர்.

    பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். முத்துமாலையம்மன் கோவில் அருகே ஆற்றில் 3 பேர் குடும்பத்தையும் சேர்ந்த சுமார் 15 பேரும் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அதில் சிறுமிகள் உள்பட 6 பேர் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்தவர்களும், அவர்களது உறவினர்களும் அவர்களை காப்பாற்ற முயன்ற நிலையில் 4 பேரை மீட்டனர்.

    இதில் நாகஅர்ச்சுனன் மகள் வைஷ்ணவி (வயது 13), அய்யப்பன் மகள் மாரி அனுஷியா (16) ஆகிய 2 பேரையும் காணவில்லை. அவர்கள் ஆழமான பகுதியில் மூழ்கினர். இதுகுறித்து உடனடியாக முக்கூடல் மற்றும் வீரவநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரவநல்லூர் போலீசார் விரைந்து வந்தனர்.

    மேலும் சேரன்மகாதேவி மற்றும் அம்பை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் விரைந்து வந்தனர்.

    மாயமான 2 சிறுமிகளையும் ஆற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். இந்த நிலையில் பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் வைஷ்ணவி பிணமாக மீட்கப்பட்டாள். தொடர்ந்து மாரி அனுஷியாவை தேடி பார்த்தனர். ஆனால் இரவு வரை தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனால் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று அதிகாலை முதல், மாயமான மாரி அனுஷியாவை தேடும் பணியில் 2-வது நாளாக தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது மாரி அனுஷியா மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் சடலமாக மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.

    சிறுமியின் உடலை பார்த்து அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது அங்கிருந்தவர்களை கண் கலங்க செய்தது.

    • கணவன்-மனைவி இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் கிராமம் நயினார்குளம் களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர் பலவேசம் (வயது 34). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பலவேசம் அடிக்கடி தனது மனைவி தமிழரசியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சமீப காலமாக தமிழரசியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு பலவேசம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கினார். இன்று அதிகாலை 4 மணி அளவில் கணவன்-மனைவி இடையே மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த பலவேசம், சமையல் அறையில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தமிழரசியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த தமிழரசி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் பலவேசம் அங்கிருந்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு சென்று தனது மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டதாக தெரிவித்து சரண் அடைந்தார்.

    உடனே போலீசார் நயினார் குளத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்த தமிழரசி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து பலவேசத்தை கைது செய்தனர்.

    • அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
    • தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 9 நாட்கள் வரை தொடர் விடுமுறை கிடைத்ததால் சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் தென்மாவட்டங்களில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இந்நிலையில் விடுமுறை முடிந்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் நேற்று முதல் சென்னை உள்ளிட்ட தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சிரமமின்றி செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான பஸ்கள் மற்றும் ரெயில்கள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. ரெயில்களில் காத்திருப்பு பட்டியலில் ஏராளமான பயணிகள் காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில் அரசு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் முழுவதுமாக நிரம்பிவிட்டதால் பொதுமக்கள் தனியார் பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி தனியார் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் விலையை கடுமையாக உயர்த்தி உள்ளனர்.

    தனியார் டிராவல்ஸ்களில் சாதாரண நாட்களில் இருக்கும் டிக்கெட் விலையை விட 2 முதல் 3 மடங்கு வரை டிக்கெட் விலை உயர்ந்துள்ளது. நெல்லையில் இருந்து சென்னைக்கு வழக்கமாக ஆம்னி பஸ்களில் ரூ. 800 வரை வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ரூ.2 ஆயிரத்துக்கும் மேல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதிநவீன குளிர்சாதன வசதி கொண்ட வால்வோ பஸ்களில் சென்னை செல்ல ரூ.3 ஆயிரத்து 700 வரை டிக்கெட் விற்கப்படுகிறது. நாளை நெல்லையில் இருந்து சென்னை செல்ல ஆம்னி பஸ்களில் ரூ.4 ஆயிரம் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    அதிகப்படியான சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டாலும் முன்பதிவு இருக்கைகள் கிடைக்காததால் பொது மக்கள் கடும் அவதி அடைந்துவரும் நிலையில், தனியார் ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.

    • தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
    • சிறுவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள தேவர்குளத்தை அடுத்த வன்னிக்கோனேந்தல் பஞ்சாயத்து வடக்கு புளியம்பட்டியை சேர்ந்தவர் சேதுபதி (வயது 27).

    இவர் கேரளாவில் பழைய இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், ஹாசினி(2) என்ற மகளும் உள்ளனர். சேதுபதி தனது பெற்றோர், சகோதரர் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக கேரளாவில் வசித்து வருகிறார்.

    பொங்கல் பண்டிகையையொட்டி சேதுபதி சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.

    நேற்று மாலை வெளியே சென்ற சேதுபதி வடக்கு புளியம்பட்டியில் இருந்து தெற்கு அச்சம்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல், சேதுபதியை சரமாரி வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 1 வருடத்திற்கு முன்பு சேதுபதி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது தனது வாகனத்திற்கு டீசல் நிரப்புவதற்காக வன்னிகோனேந்தல் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பங்கில் வேலை பார்த்த வன்னிகோனேந்தலை சேர்ந்த பெனிஸ் குமாருக்கும் (26), சேதுபதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரம் அடைந்த சேதுபதி, பெனிஸ்குமாரை அடித்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனை மனதில் வைத்துக்கொண்டு பெனிஸ்குமார், சேதுபதியை கொலை செய்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டியுள்ளார்.

    சமீபத்தில் சேதுபதி கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நிலையில், அவர் தனது ஊரில் நின்றவாறு செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ் -அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

    இதனை பெனிஸ்குமாரின் நண்பர்களான வினித் (23) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவன் பார்த்து பெனிஸ்குமாரிடம் தெரிவித்துள்ளனர். தற்போது பெரம்பலூரில் உள்ள தனியார் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் பெனிஸ் குமார், இந்த தகவலை கேள்விப்பட்டு சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.

    உடனே பெனிஸ்குமார், தனது நண்பர்களான வினித் மற்றும் சிறுவனுடன் சேர்ந்து கடந்த 3 நாட்களாக சேதுபதியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார். சேதுபதி செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து சென்று நோட்டமிட்டு வந்த நிலையில் நேற்று மாலையில் 3 பேரும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    பின்னர் சேதுபதியை அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக சிறுவன் உள்பட 3 பேரையும் தேவர்குளம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிவபெருமாள் வாங்கிய பணத்தையும், அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே களக்காடு ரோட்டில் உள்ள பூதத்தான்குடியிருப்பை சேர்ந்தவர் சிவ பெருமாள் (வயது 24). பி.டெக். படித்துள்ளார்.

    இவர் ஆன்லைனில் பணத்தை செலுத்தி வர்த்தகம் செய்து வந்துள்ளார். ஆன்லைன் வர்த்தகம் செய்யவும், புதிதாக தொழில் தொடங்கவும் ஆன்லைன் செயலி மூலம் 3 தவணையாக ரூ.5 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். ஆனால் அந்த செயலியில் 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கந்து வட்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் சிவபெருமாள் வாங்கிய பணத்தையும், அதற்கான வட்டித் தொகையையும் செலுத்த முடியாமல் திணறி வந்துள்ளார். அவரிடம் ஆன்லைனில் வட்டிக்கு பணம் கொடுத்த களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் சக்தி குமரன் (28) என்பவரும், திருக்குறுங்குடி அருகே உள்ள மாவடி ராமச்சந்திராபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் (22) என்பவரும் பணத்தை திரும்பக்கேட்டுள்ளனர்.

    இந்நிலையில் அவர்கள் சிவபெருமாளை நேரில் அழைத்து பணத்தை குறிப்பிட்ட தேதியில் செலுத்தக்கோரி ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து போடுமாறும், அல்லது அவரது மோட்டார் சைக்கிளை தங்களிடம் ஒப்படைத்து விடுமாறும் நெருக்கடி கொடுத்து வந்துள்ளனர். இதனால் சிவபெருமாள் 2 பேரிடமும் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்து விட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார்.

    விரக்தியில் இருந்த சிவபெருமாள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சிவபெருமாளை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார் கந்து வட்டி கேட்டதாகவும், தற்கொலைக்கு தூண்டி யதாகவும் சக்திகுமரன், வெங்கடேஷ் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    இளைஞர்கள் பலர் ஆன்லைன் டிரேடிங் அல்லது ஆன்லைன் விளையாட்டு உள்ளிட்டவற்றில் பணத்தை வைத்து விரைவில் அதிக பணத்தை சம்பாதிக்க முடியும் என நினைத்து பல லட்சங்களை கடனாக பெற்று அதை செலுத்த முடியாமல் திணறுவதை பார்க்க முடிகிறது. எவ்வளவு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும் இது போன்று பலரும் சிக்கிக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    • தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு.
    • வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.

    பணகுடி:

    தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஜல்லிக்கட்டிற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக இளவட்டக்கல் தூக்கும் போட்டி பிரசித்தி பெற்றது.

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்று வருவது வியப்பை அளித்து வருகிறது.

    தமிழகத்தில் தென்மாவட்டங்களில் இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு நடைபெற்று வருவது இயல்பு. இளவட்டக் கல்லைத் தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கு பெண்ணை மணமுடித்துக் கொடுத்தது அந்த காலத்தில் ஒரு வழக்கமாக இருந்தது. நாகரிக காலத்தில் அந்த வழக்கம் மறைந்து போனாலும் தென்மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றளவும் இளவட்டக் கல்லைச் தூக்கும் போட்டி நடத்தப்படுகிறது.

    தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. இளவட்டக்கல் பொதுவாகச் சுமார் 55, 60, 98, 114 மற்றும் 129 கிலோ எடை கொண்டதாகவும் முழு உருண்டையாக வழுக்கும் தன்மை கொண்டதாக எந்தப்பிடிப்பும் இல்லாமல் கைக்கு அகப்படாத வடிவத்தில் இருக்கும். இளவட்டக் கல்லுக்குக் கல்யாணக்கல் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    இளவட்டக்கல்லைச் சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்துக்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து லேசாக எழுந்து கல்லை முழுங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாகச் சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழுமாறு செய்யவேண்டும்.


    தமிழரின் உடல் பலத்திற்கும், வீரத்திற்கும் சாட்சியாகத் திகழ்ந்த இந்த இளவட்டக் கற்கள் இன்றைக்குப் பல ஊர்களில் தம்மைத் தூக்கிச் சுமப்பார் யாரும் இல்லாமல் பாதியளவு மண்ணில் புதைந்துகிடக்கும் பரிதாபத்தை காணமுடிகிறது . இருந்தபோதிலும் தற்போது நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

    அதேபோல் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம் பெண்களும் தங்களை தயார்படுத்தி விளையாடினர். இப்போட்டியில் உரலை ஒரு கையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற்றது.

    இதில் 55 கிலோ இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் ராஜகுமாரி என்ற பெண்மணி 23 முறை கழுத்தை சுற்றி முதலிடத்தை பிடித்தார். 2-வது இடத்தை தங்க புஷ்பம் என்ற பெண் வெற்றி பெற்றுள்ளார்.


    ஆண்களுக்கான 98 கிலோ இளவட்ட கல்லை கழுத்தை சுற்றி போடும் போட்டியில் முதல் பரிசை விக்னேஸ்வரனும் 2-வது பரிசை பாலகிருஷ்ணனும் தட்டி சென்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசும் பொன்னாடை அணிவித்து கவுர விக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வடலிவிளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×