என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • சங்கரநாராயணன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
    • மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்திருப்பதை அறிந்த சங்கரநாராயணன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சிவா தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன்(வயது 43). இவர் அப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

    இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு வழக்கமான பணிகளை முடித்துவிட்டு அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டுமுன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்றுவிட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது இருச்சக்கர வாகனம் முழுதும் தீயில் கருகி எலும்புக்கூடாக காட்சியளித்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    மர்ம நபர்கள் தீவைத்திருப்பதை அறிந்த அவர் இதுதொடர்பாக டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை மேற்கொண்டதுடன் அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • அரவிந்த் ஜெபமலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • அரவிந்த் ஏமன்குளத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    களக்காடு:

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 30). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் அருகே உள்ள பல்லடத்தில் வசித்து வந்த போது, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்த நாங்குநேரி அருகே உள்ள ஏமன்குளத்தை சேர்ந்த அருள்தங்கராஜ் மகள் ஜெபமலரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    திருமணத்திற்கு பின் கணவன், மனைவி இருவரும் காட்டு மன்னார்கோவிலில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 1 ஆண்டுக்கு முன் அரவிந்த் தனது மனைவியின் சொந்த ஊரான ஏமன்குளத்திற்கு வந்து வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

    இதற்கிடையே சம்பவத்தன்று அரவிந்த் தான் வசித்து வந்த வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்த் தற்கொலை செய்ய காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது.
    • அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இன்றும் காலையில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகின்றது. பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியிலும் தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி எஸ்டேட்டுகளிலும் பரவலாக மழை பெய்து வருவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அம்பை, ராதாபுரம், களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாநகரில் பாளையில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணை பகுதிகளில் சேர்வலாறில் 3 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று மாலையில் இருந்து பெரும்பாலான இடங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றும் காலை முதலே ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அங்கு குளிர்ந்த சூழ்நிலை நிலவி வருகிறது. அதிகபட்சமாக ஆய்குடியில் 36 மில்லிமீட்டரும், தென்காசியில் 32 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    அணைகளை பொறுத்தவரை ராமநதி மற்றும் குண்டாறு அணை பகுதியில் விட்டுவிட்டு சாரல் பெய்தது. கடனா அணை பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பெய்தது. சங்கரன்கோவிலில் 11 மில்லிமீட்டர் மழை கொட்டியது. கொடுமுடியாறு மற்றும் அடவிநயினார் அணைகளில் லேசான சாரல் பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ததன் காரணமாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நேற்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் காலை முதலே மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று சிரமம் அடைந்தனர். உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. திருச்செந்தூர், காயல்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக திருச்செந்தூரில் 30 மில்லிமீட்டர் மழை கொட்டியது.

    இதேபோல் குலசேகரன்பட்டினம், கோவில்பட்டி, நாலாட்டின்புதூர், எட்டயபுரம், காடல்குடி, சூரன்குடி, சாத்தான்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கடம்பூர், கழுகுமலை ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. இரவில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.

    • அருள்ராஜ் தன்னை வக்கீல் என்று கூறியதும் பிபினுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • வக்கீலிடம் கடுமையாக நடந்து கொண்ட ஏட்டு பிபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு பணியில், பாளை போலீஸ் ஏட்டு அல்டஸ் பிபின்(வயது 44) என்பவர் இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வக்கீல் அருள்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் வேகமாக வந்ததாக கூறி ஏட்டு பிபின், அவரை தடுத்து நிறுத்தி உள்ளார். உடனே அருள்ராஜ் தன்னை வக்கீல் என்று கூறியதும் பிபினுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வக்கீலை, போலீஸ் ஏட்டு பிபின் தாக்கியதாகவும், அவருடைய செல்போனை பறித்துக் கொண்டதாகவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடனடியாக அங்கு போலீஸ் உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் விரைந்து வந்து வக்கீல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் வக்கீல்கள் சார்பில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து வக்கீல்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இதற்கிடையே சம்பவத்தில் இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் வக்கீல்கள் தன்னை தாக்கியதாக கூறி புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட வக்கீல்கள், வாகன சோதனையின் போது வக்கீலிடம் கடுமையாக நடந்து கொண்ட ஏட்டு பிபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியை நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    அதில் வக்கீலை அவதூறாக பேசி தாக்குதல் நடத்திய தலைமை காவலர் பிபின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நள்ளிரவில் புகார் மனு அளித்தோம். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏட்டு பிபின் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். எனவே இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    • பாளை மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் கருப்பசாமி பாண்டியன் கலந்துகொண்டு கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பாளை மற்றும் நெல்லை சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பூத் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு மகாலில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் அமைப்பு செயலாளரும், நெல்லை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான கருப்பசாமி பாண்டியன் கலந்துகொண்டு கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணைச்செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் கங்கை வசந்தி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முககுமார், திருத்து சின்னத்துரை, வக்கீல்கள் ஜெயபாலன், அன்பு அங்கப்பன், பகுதி மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், தகவல் தொழில்நுட்ப பிரிவு விக்னேஷ், கவுன்சிலர் சந்திரசேகர், வட்ட செயலாளர் பாறையடி மணி, பகுதி துணை செயலாளர் மாரீசன், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், நிர்வாகிகள் சம்சு சுல்தான், மணி, நத்தம் வெள்ளப்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
    • சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலை திடீரென கனமழை பெய்தது.

    நெல்லை

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால் அணை களுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. பிரதான அணையான 143 அடி கொள்ளவு கொண்ட பாப நாசம் அணையின் நீர்மட்டம் 85 அடியை கடந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அந்த அணைக்கு 348 கனஅடி நீர் வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 96.52 அடியும், மணிமுத்தாறில் 54.12 அடியும் நீர் இருப்பு உள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பிசான பருவ சாகுபடி பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அணை பகுதிகளை பொறுத்தவரை பாபநாசம் மற்றும் கொடு முடியாற்றில் தலா 6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கி சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. சேரன்மகாதேவி, முக்கூடல், அம்பை, களக்காடு, மூலக்கரைப்பட்டி, ராதாபுரம், நாங்குநேரி, சீதபற்பநல்லூர், சுத்தமல்லி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது. மாநகரிலும் அதேபோல் அதிகாலையில் சுமார் அரை மணி நேரம் பெய்த பலத்த மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. டவுன் வடக்கு ரதவீதி, சொக்கப்பனை முக்கில் இருந்து நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் பகுதி, டவுன் பாரதியார் தெரு, சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடந்தது. அதனை மின் மோட்டார் மூலம் வெளி யேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    மாவட்டத்தில் அதிகபட்ச மாக நாங்குநேரி யில் 15.6 மில்லிமீட்டரும், மூலக்கரைப் பட்டியில் 12 மில்லிமீட்டரும், ராதாபுரத்தில் 10 மில்லி மீட்டரும், அம்பையில் 5 மில்லி மீட்டரும்,சேரன்மகாதேவி, களக்காட்டில் தலா 8 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. மாநகரில் நெல்லை யில் 5.6 மில்லிமீட்டர், பாளையில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்தது. அதேநேரத்தில் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி

    தென்காசி மாவட்டத்திலும் இன்று அதிகாலை 5 மணி முதல் சுமார் 1 மணி நேரம் திடீரென கனமழை பெய்தது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், ஆழ்வார்குறிச்சி, செங்கோட்டை, தென்காசி, ஆய்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் சாலையோர பள்ளங்களில் மழைநீர் தேங்கி கிடந்தது. அதிகாலை பெய்த மழையினால், மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    செங்கோட்டையில் 11 மில்லிமீட்டரும், தென்காசியில் 9 மில்லிமீட்டரும், ஆய்குடியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    அணைகளை பொறுத்த வரை கருப்பாநதி, குணடாறு, அடவிநயினார் அணை பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. குண்டாறு அணை தனது முழு கொள்ளளவான 36 அடியை எட்டி தொடர்ந்து நிரம்பி வழிந்து வருகிறது. அங்கு இன்று காலை வரை 6.2 மில்லிமீட்டர் மழை பெய்தது. கருப்பாநதியில் 2.5 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் லேசான மழையினால் குற்றா லத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இன்று விடுமுறை நாளையொட்டி அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    தூத்துக்குடி

    தூத்துக்குடி, புதுக்கோட்டை யில் நேற்று இரவு முதல் இன்று காலை வரையிலும் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே சாலையோரங் களில் தண்ணீர் குளம்போல் தேங்கியது.அங்கு அதிகபட்ச மாக 6.1 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    உடன்குடி பகுதியில் நள்ளிரவில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. உடன்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியான குலசேகரன் பட்டினம், மணப்பாடு, சிறு நாடார் குடியிருப்பு, பெரிய புரம், மாதவன்குறிச்சி, தாண்ட வன்காடு, கொட்டங்காடு, செட்டியாபத்து, தண்டுபத்து, தைக்காவூர், நயினார்பத்து, சீர்காட்சி, பிச்சிவிளை, பரமன்குறிச்சி, லட்சுமிபுரம், வாகை விளை, வேப்பங்காடு மற்றும் சுற்றுப்புற பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் இடி - மின்னலுடன் மழை விட்டு விட்டு பெய்தது.

    இதனால் ஆங்காங்கே முக்கியமான ரோடுகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கியது. இந்த ஆண்டு தற்போதுதான் மழை பெய்து இருப்பதாகவும், இதுவரை மழை பெய்யவில்லை என்றும், இதைப் போல அடிக்கடி மழை பெய்து இப்பகுதியில் உள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் வர வேண்டும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

    கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிகாலையில் சுமார் 17 மில்லிமீட்டர் மழை பெய்தது. காயல்பட்டினத்தில் 20 மில்லிமீட்டர் மழை பதிவானது. திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், காடல்குடி உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மாரி விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.
    • 2 பேரையும் மீட்ட உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    நெல்லை:

    கல்லிடைக்குறிச்சி புது அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொம்பன். இவரது மனைவி மாரி (வயது 33). இவருக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

    இந்நிலையில் மாரி நேற்று இரவு தனது மகள் பேச்சியம்மாளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த உறவினர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதையில் தகராறு செய்த முகேசை மதன் தட்டிக்கேட்டுள்ளார்.
    • காயமடைந்த மதன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிங்கிகுளம் மலையடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மதன் (வயது 21). கடந்த சில நாட்களுக்கு முன் மலையடியில் உள்ள இவரது நண்பர் வீட்டில் சடங்கு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட அதே ஊரை சேர்ந்த முகேஷ் (25) மது அருந்தி விட்டு போதையில் தகராறு செய்தாராம். இதனை மதன் தட்டிக்கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டது.

    சம்பவத்தன்று மதன் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முகேஷ், ரமேஷ் (25), ஹரி (19), குமார் (27), முனியாண்டி (52) ஆகியோர் சேர்ந்து மதனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் காயமடைந்த மதன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகேஷ் உள்பட 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    • பிரியா 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி தங்கராஜ் உயிரிழந்தார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் 2-வது மகள் பிரியா (வயது 15). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். தங்கராஜின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டதால் 3 குழந்தைகளையும் தங்கராஜ் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி தங்கராஜ் உயிரிழந்தார்.

    இதையடுத்து 3 குழந்தைகளையும், தங்கராஜ் சகோதரி நேசமணி (35) என்பவர் கவனித்து வந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரியா சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரியா உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் பிரியா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது.
    • சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார்.

    நெல்லை:

    கூடங்குளம் அருகே இடிந்தகரை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்கு திரும்பும் போது கடற்கரையில் வாகனங்கள் செல்வதற்கு வழிப்பாதை சரிவர இல்லாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக படகுகளில் இருந்து தரையில் நிற்கும் வாகனங்களுக்கு மீன்களை எடுத்துச்செல்ல மீனவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர்.

    இதனால் அந்த பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தி தர உதவிடுமாறு மீனவர்கள் தி.மு.க. இளைஞரணி நிர்வாகியான விஜயாபதி ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனையின்பேரில் மீனவர்கள் நலனை கருத்தில் கொண்டு விஜயாபதி ரகுமான் தனது சொந்த செலவில் கடற்கரையில் சாலை வசதி அமைக்க ஏற்பாடு செய்தார். இடிந்தகரையில் தரையில் இருந்து கடல் வரையிலும் சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு தனது சொந்த செலவில் பாதை வசதி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த பணிகளை நேற்று அவர் ஆய்வு செய்தார். அப்போது மீனவர் பிரதிநிதிகள் இடிந்தகரை வெனிஸ்லாஸ், ரமேஷ், ராமு, செல்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுனில் அமைந்துள்ள சுவாமி நெல்லையப்பா் உடனுறை காந்திமதி அம்பாள் கோவில் பழைமை வாய்ந்தது.

    சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு ஆண்டு முழுவதும் ஒவ்வொரு மாதத்திலும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றது.

    அதன் ஒரு நிகழ்வாக காந்திமதி அம்பாள் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது.

    இதனை முன்னிட்டு தங்க சப்பரத்தில் காந்திமதி அம்பாள் கொடிமரம் அருகில் எழுந்தருளினாா். கொடிப்பட்டம் வீதி உலா வந்ததும், கொடிக்கு பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 7.20 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னா் கொடிமரம் அலங்காிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 15 நாட்கள் நடை பெறும். திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வேளைகளில் காந்திமதி அம்பாள் டவுனில் உள்ள 4 ரதவீதிகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்வுகள் நடைபெறுகின்றது.


    வருகிற 8-ந்தேதி அதாவது 11-ம் திருநாள் அன்று மதியம் 12 மணிக்கு கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர், அன்னை காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்வு நடக்க உள்ளது.

    அதன்பின் மறுநாள் 9-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடை பெறுகின்றது. அதனை தொடா்ந்து பகலில் பட்டின பிரவேசமும், பின்னா் 3 நாட்கள் மாலையில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெறுகிறது.

    முடிவாக வருகிற 12-ந்தேதியன்று சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினபிரவேச வீதிஉலா நடைபெறுகின்றது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் நிர்வாகத்தினா், உபய தாரா்கள் செய்து வருகின்றனா். 

    • போலீசார் மாயாண்டியையும், சிறுவனை கைது செய்தனர்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர்கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் பூதத்தான். இவரது மகன் பிரபு(வயது 31). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை.

    கல்லிடைக்குறிச்சி புது அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி(29). கூலி வேலை பார்க்கும் இவரும், பிரபுவும் நண்பர்கள். நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் அப்பகுதியில் புதிதாக ஒருவர் கட்டிவரும் வீட்டில் வைத்து மது அருந்தினர். அப்போது மாயாண்டியின் உறவினர் மகன் உள்பட மேலும் 2 சிறுவர்களும் அவர்களுடன் இருந்துள்ளனர்.

    அப்போது மதுபோதையில் இருந்த பிரபுவை சிறுவர்களுடன் சேர்ந்து மாயாண்டி அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கல்லிடைக்குறிச்சி போலீசார் விரைந்து சென்றனர். மேலும் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதிஷ்குமார் அங்கு வந்து ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர்கள் பிரபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பிரபு கொலைக்கான காரணம் குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பிரபுவுக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அதனை கைவிடுமாறு அந்த பெண்ணின் உறவினர்கள் எச்சரித்தும், அவர்கள் 2 பேரும் தங்களது கள்ளக்காதலை தொடர்ந்துள்ளனர்.

    இதனால் அந்த பெண்ணின் உறவினர்கள் மாயாண்டியிடம் தெரிவிக்கவே, அவர் பிரபுவை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக அவரை மது குடிக்க அழைத்து சென்று அதிக அளவில் மது ஊற்றி கொடுத்து அவரை போதையடைய செய்துள்ளார்.

    பின்னர் 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பிரபுவை தலை, கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாயாண்டியையும், 17 வயது சிறுவனையும் கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றொரு சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

    ×