என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை சோதனை சாவடியில் போலீஸ் ஏட்டு தாக்கியதாக கூறி வக்கீல்கள் நள்ளிரவில் சாலை மறியல்
    X

    நெல்லை சோதனை சாவடியில் போலீஸ் ஏட்டு தாக்கியதாக கூறி வக்கீல்கள் நள்ளிரவில் சாலை மறியல்

    • அருள்ராஜ் தன்னை வக்கீல் என்று கூறியதும் பிபினுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • வக்கீலிடம் கடுமையாக நடந்து கொண்ட ஏட்டு பிபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை கே.டி.சி. நகரில் உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு பணியில், பாளை போலீஸ் ஏட்டு அல்டஸ் பிபின்(வயது 44) என்பவர் இருந்தார்.

    அப்போது அந்த வழியாக வக்கீல் அருள்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அவர் வேகமாக வந்ததாக கூறி ஏட்டு பிபின், அவரை தடுத்து நிறுத்தி உள்ளார். உடனே அருள்ராஜ் தன்னை வக்கீல் என்று கூறியதும் பிபினுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஷ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் வக்கீல்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் வக்கீலை, போலீஸ் ஏட்டு பிபின் தாக்கியதாகவும், அவருடைய செல்போனை பறித்துக் கொண்டதாகவும் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    உடனடியாக அங்கு போலீஸ் உதவி கமிஷனர் ஆவுடையப்பன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் ஆகியோர் விரைந்து வந்து வக்கீல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    பின்னர் வக்கீல்கள் சார்பில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டது தொடர்ந்து வக்கீல்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இதற்கிடையே சம்பவத்தில் இரவு பணியில் இருந்த ஏட்டு பிபின் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்று அதிகாலை சிகிச்சைக்காக சேர்ந்தார். அவர் வக்கீல்கள் தன்னை தாக்கியதாக கூறி புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் நெல்லை மாவட்ட வக்கீல்கள், வாகன சோதனையின் போது வக்கீலிடம் கடுமையாக நடந்து கொண்ட ஏட்டு பிபின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறி வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஸ்வரியை நெல்லை மாவட்ட வக்கீல்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரன், செயலாளர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் ஏராளமான வக்கீல்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர்.

    அதில் வக்கீலை அவதூறாக பேசி தாக்குதல் நடத்திய தலைமை காவலர் பிபின் மீது நடவடிக்கை எடுக்க கோரி நள்ளிரவில் புகார் மனு அளித்தோம். அதன் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது வக்கீல் மீது பொய் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ஏட்டு பிபின் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். எனவே இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    Next Story
    ×