என் மலர்tooltip icon

    தேனி

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது.
    • வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் அனைத்து அணைகளும் நிரம்பி முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மழை முற்றிலும் நின்று விட்டதாலும், கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு குடிநீருக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.30 அடியாக உள்ளது. நீர் வரத்து 437 கனஅடி. நேற்று வரை 1500 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 500 கன அடி மட்டும் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 5469 மி.கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களும் இயக்கப்பட்டு 135 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது 2 ஜெனரேட்டர்கள் மட்டும் இயக்கப்பட்டு 46 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 68.77 அடியாக உள்ளது. வரத்து 1251 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 5513 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.40 அடி. வரத்து 29 கன அடி. திறப்பு 75 கன அடி. இருப்பு 403 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. வரத்து மற்றும் திறப்பு 29 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம் சார்பில் மாநில அளவிலான பெண் விவசாயிகள், பெண் தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழு அமைப்புகள் மற்றும் மா, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப கருத்தரங்கம் வருகிற 8ந் தேதி முற்பகல் 11.30 மணி அளவில் காமாட்சிபுரத்தில் நடைபெறுகிறது.

    இந்த கருத்தரங்கில் பங்கேற்க தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சின்னமனூர் வருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தருகிறார். விழாவிற்கு கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, அவிநாசி லிங்கம் பல்லைக்கழக துணை வேந்தர் பாரதிஹரிசங்கர், ஹைதராபாத் வேளாண்மை தொழில்நுட்ப பயன்பாட்டு இயக்குனர் சேக்மீரா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கருத்தரங்கில் தேனி, அரியலூர் மற்றும் பெரியகுளம், உத்தமபாளையத்தை சேர்ந்த வேளாண் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சென்டெக்ட் வேளாண் அறிவியல் மைய தலைவர் பச்சைமால் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    • கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது.
    • கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கிருஷ்ணகிரி மாவட்டம், காமன் தொட்டி உயர்நிலைப் பள்ளி தமிழாசிரியை ஜெயலட்சுமி, ஆகியோர் தொல்லியல்துறை சார்பில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தங்கம்மாள்புரத்தில் இருந்து வருசநாடு செல்லும் வழியில் உள்ள ஜி.ஆர்.டி. பண்ணை உச்சிப்பிள்ளையார் கோவில் இருக்கும் இடத்தில், கி.பி. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்கம், பேச்சியம்மன் சிலை, அய்யனார் சிலை, தட்சிணாமூர்த்தி சிலை போன்ற பழமையான சிற்பங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


    தலையில் ஜூவால கிரீடம், இடது கையில் ஒரு பெண்ணை பிடித்து வயிற்றைக் கீறிய நிலையிலும், வலது கையில் ஒரு குழந்தையை ஏந்திய நிலையிலும் பயமுறுத்தும் கண்கள், அகன்ற மூக்கு, நீளமான வாய், பெரிய காதுகள், பெரிய பரந்த பாதங்கள், மார்புக்கூடு எலும்புகள் தெரியும் வகையில், பார்ப்போரை பயமுறுத்தும் வகையில் பேச்சியம்மன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பேச்சு அம்மன் என்பதே பேச்சியம்மன் என்று மருவி விட்டது. கல்விக் கடவுளான சரஸ்வதியின் மறுத்தோற்றமாக கருதப்படும் இந்த அம்மனை வழிபட்டால் மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பான இடத்தைப் பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பேச்சி அம்மனுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளிலும் பேச்சியம்மன் வழிபாடு காணப்படுகிறது.

    பொதுவாக அய்யனார் நிலை மண்டலமர்வு எனும் உத்குடி ஆசனத்தில் சிற்பம் வடிவமைப்பதுண்டு. ஆனால் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள இச்சிற்பம் பேரரசமர்வு என்னும் மகாராஜாலீலாசனத்தில் சிற்பம் உள்ளது. தலையில் விரித்த அலங்கார ஜடாபாரம், தனித்தனி இழைகளாக சுருண்டு அழகுற அமைந்துள்ளது. முத்துப்பட்டம், வட்டமான பத்திர குண்டலம், கண்டசரம், சரபள்ளி, சவடி, பூணூல், உத்தரபந்தம், கடகம், கைவளை, காப்பு, இடைக்கச்சை போன்ற அணிகலன்கள் அணிந்து அழகுற அய்யனார் அமர்ந்திருக்கிறார்.

    இவர் சிவபெருமானின் மகன் என்றும் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களை காக்க வந்தவர் என்றும் நம்பப்படுகிறது. சங்க காலம் முதலே தமிழகத்தில் அய்யனார் வழிபாடு வழக்கத்தில் உள்ளது. கேரளா, இலங்கை, அந்தமான் போன்ற இடங்களிலும் அய்யனார் சிலை வழிபாடு வழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    சிவனின் அம்சமான தட்சிணாமூர்த்தி வடிவமானது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்ட சுகாசன நிலையில் அமர்ந்துள்ளார். பூணூல் அணியப்பட்டுள்ளது. கரந்தை மகுடம், கைகளில் வளையல், கால்களில் வீரக் கழல், கால்விரல் அணிகள், அபய வரத முத்திரையுடன் பின் வலது கையில் மழு உள்ளது. இடது மேற்கையில் மான் உருவம் சிதைந்துள்ளது. சாந்த சொரூப நிலையில் சிற்பம் உள்ளது.


    "தெக்கினான்" என்றும் தென்முகக் கடவுள் என்றும் அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சமாக கருதப்படுகிறார். மேற்கண்ட சிற்பங்கள் பாண்டியர் காலத்துக்கே உரிய சிற்ப நுட்பத்தோடும் உச்சபட்ச நயத்தோடும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

    மற்றொரு சிலையான சிவலிங்கம், பத்ம பீடம் (பிரம்மா பகுதி) அதாவது தாமரைப் பூ கவிழ்ந்த நிலை, அதற்கு மேல் ஆவுடை உள்ளது. பெருவுடையார் (லிங்கபாணம்) இல்லாமல் உள்ளது.

    கி.பி. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது. அதில், மதுரை சொக்கநாதருக்கும் பார்வதி அம்மனுக்கும் நெய்விளக்கு தானமாக வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட சிலைகள் மற்றும் கல்வெட்டு மூலம் இந்த இடத்தில் சிவன் கோயில் இருந்தது உறுதி செய்யப்படுகிறது. பாண்டியர் காலத்திலிருந்து நாயக்கர் காலம் வரை தொடர் வழிபாட்டில் இக்கோவில் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்று கூறினர்.

    • வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால் 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது மழை குறைந்ததால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி 134.20 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு 296 கன அடி நீர் மட்டுமே வருகிறது. இருந்தபோதும் தமிழக பகுதிக்கு 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து 1321 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 1769 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 69.16 அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.75 அடியாக உள்ளது. வருகிற 75 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. 29.29 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.
    • ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் அவரது மனைவி வளர்மதி.

    இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகாலட்சுமி என்ற மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்ற 9 வயது மகனும் உள்ளனர்.

    சிறிய அளவிலான விவசாய நிலம், 2 மாடுகளை வளர்த்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்த இந்த குடும்பத்தினருக்கு வளர்மதியின் உடல் நலக்குறைவால் நிலைமை தலைகீழாக மாறியது.

    வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் உள்ளூர் மற்றும் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியில் தனது மனைவி வளர்மதியை அழைத்துச் சென்று பெரும் செலவு செய்து சிகிச்சை பார்த்தார்.

    பரிசோதனை செய்து பார்த்தபோது அபூர்வ வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் குணமாகும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் கடந்த 1½ ஆண்டு காலமாக இந்த நோய் குணமாகவில்லை.

    இதையடுத்து பெங்களூருக்கு சென்று அங்கும் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர் சிகிச்சை காரணமாக குடும்ப வருமானம் பாதித்தது. மேலும் மருத்துவச் செலவிற்கு வீட்டை அடமானம் வைத்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றனர். ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.

    தொடர்ந்து சிகிச்சை பெற வழி இல்லாததால் அவர்கள் செய்வது அறியாது வேதனையில் தவித்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலை அறிந்து அவரது மகள் மகாலட்சுமி தானே வீட்டு வேலைகளையும் சமையல் வேலைகளையும் செய்து தாயை பராமரித்து விட்டு அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருகிறார்.

    அதேபோல சக்திவேலும் மாட்டையும் ஒரு கன்று குட்டியையும் தானே தீவனம் போட்டு பராமரித்து வளர்த்து பணிகளை முடித்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    மேற்கொண்டு சிகிச்சை பெற வழி இல்லாமல் வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர் தங்களுக்கு உதவ தமிழக முதலமைச்சரும் தமிழக அரசும் முன் வரவேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது.
    • வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் பருவமழை கைகொடுத்ததால் கடந்த மாதம் 70 அடிக்கு மேல் எட்டியது. அதன் பிறகு கடந்த 6-ந் தேதி முழு கொள்ளளவான 71 அடியை எட்டியதால் அணைக்கு வந்த தண்ணீர் முழுவதும் உபரியாக வெளியேற்றப்பட்டது.

    இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    மழை நின்ற பிறகும் அணையின் நீர் மட்டம் 71 அடியில் நின்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறையத் தொடங்கியது. இருந்த போதும் வைகை பூர்வீக பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 70.10 அடியாக உள்ளது. வரத்து 910 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5873 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.70 அடியாக உள்ளது. வரத்து 134 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6294 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.75 அடி. வரத்து 21 கன அடி. திறப்பு 30 கன அடி. இருப்பு 430.23 மி.கன அடி.

    சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.28 அடி. வரத்து 34 கன அடி. திறப்பு 25 கன அடி. இருப்பு 100 மி.கன அடி.

    • மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1469 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
    • முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் வைகை அணை நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியாக உயர்ந்தது. அதனை தொடர்ந்து நீர்வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 803 கனஅடியாக குறைந்துளளது.

    இருந்தபோதும் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1469 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக குறைந்துள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 137 அடியாக உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து 280 கனஅடியாக சரிந்துள்ளது. இருந்தபோதும் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 33 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 37.14 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.

    • பவதாரிணியின் உடல் அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
    • திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

    இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி புற்றுநோய் காரணமாக இலங்கையில் உள்ள ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் கடந்த 5 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலையில் அவர் உயிரிழந்தார்.

    பவதாரணியின் உடல் இலங்கையில் இருந்து நேற்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த இவரது உடல் நேற்று இரவு அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    பண்ணையபுரம், லோயர்கேம்ப் அருகே உள்ள இளையராஜாவின் குருகிருபா வேத பாடசாலை ஆசிரமத்தில் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஊர் மக்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்திய நிலையில், தொடர்ந்து அவரது இறுதி சடங்குகள் நடைபெற்றன. திருவாசகம் பாடப்பட்டு பவதாரிணியின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

    அதனைத்தொடர்ந்து, பவதாரிணியின் உடல் அவரது தாயார் ஜீவா மற்றும் பாட்டியின் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.


    • நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
    • இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் மதுரை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டியது.

    அதன்பின்னர் நீர்வரத்துக்கு ஏற்ப அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த 18 நாட்களாக அணையின் நீர் மட்டம் 71 அடியில் நீடித்தது. இந்தநிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் சற்று சரிந்து 70.85 அடியாக உள்ளது. அணைக்கு 916 கனஅடிநீர் வருகிறது. நேற்று 1169 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்று காலை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு 1369 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

    முல்லை பெரியாறு அணையின்நீர்மட்டம் 138 அடியாக உள்ளது. அணைக்கு 282 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1000 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.60 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 59 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. நேற்று 511 கனஅடியாக இருந்த நீர்திறப்பு இன்று காலை 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

    இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது. அணைக்கு 618 கனஅடிநீர் வருகிறது. அணையின்நீர்மட்டம் 138.70 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 1098 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 1169 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.90 அடியாக உள்ளது. 56 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 99.03 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது
    • பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர்.

    கூடலூர்:

    தமிழக எல்லையான குமுளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் பகுதிக்கு கேரள அரசு பஸ் சென்றது. இதில் 43 பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் குமுளி அருகே வண்டிபெரியாறு தேசிய நெடுஞ்சாலையில் 56-வது மைல் பகுதியில் அய்யப்பா கல்லூரி அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

    மேலும் ஓரத்தில் இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அபயக்குரல் எழுப்பினர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி பயணிகளை பத்திரமாக மீட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். பஸ் அந்தரத்தில் தொங்கிய இடத்தின் கீழ் ஒரு வீடு உள்ளது.

    பஸ் கவிழாமல் நின்றதால் அந்த வீட்டில் இருந்தவர்கள் உயிர்தப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்களான நகர செயலாளர் அப்துல்சமது தலைமையில் தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்று பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் கொடியேற்றினர்.

    மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது அ.தி.மு.க. மாவட்ட செயலாளரான முருக்கோடை ராமர், நகர செயலாளர் பழனியப்பன் தலைமையில் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

    அ.தி.மு.க. கொடிக்கம்பத்தில் நீங்கள் எப்படி கொடியேற்றலாம்? நீங்கள் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டக்கூடாது, கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உங்களுக்கு தெரியாதா? என அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் ஏற்றிய கொடியை கீழே இறக்கி விட்டு தங்களது சார்பில் அ.தி.மு.க. கொடியை ஏற்றினர். இதனால் ஓ.பி.எஸ். அணியினர் அவர்களுடன் தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமான சூழல் உருவானது. இது குறித்து பெரியகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தகராறில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாமல் தொடர்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பான சூழல் உருவானது.

    எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் அங்கு பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

    ×