என் மலர்tooltip icon

    தேனி

    • பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.
    • நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் குமணன் தொழு அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவுச் சின்னங்களை தொல்லியல் ஆய்வாளரும், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியருமான, செல்வம் கள ஆய்வின்போது கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    வருசநாடு குமணன்தொழு அருகில் அருவா தீட்டுப்பாறை பகுதியில், மொக்கை என்பவரின் காட்டில் 3000 ஆண்டுகள் பழமையான 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால கல்வட்டங்கள் மற்றும் 5 க்கும் மேற்பட்ட நெடுங்கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    பல கல்வட்டங்களும் நெடுங்கற்களும் சிதைக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் கல்வட்டங்கள் 13 அடி விட்டம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. நெடுங்கல் அமைப்பு 5 ½ அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாக உள்ளன.

    பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய அரவை கற்கள் மற்றும் உரல்கள் அதிக அளவில் இப்பகுதியில் காணக் கிடைக்கின்றன.

    குமணன் தொழுவிலிருந்து வெள்ளையம்மாள்புரம், சின்னமனூருக்கு கால்நடையாக செல்வதற்கு பழமையான பாதை ஒன்று இவ்வழியாக செல்கிறது. வழி நெடுகிலும் தீட்டுக்கற்கள் காணப்படுவதால் இப்பகுதி அருவா தீட்டுக் கணவாய் என இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது.

    பெருங்கற்காலம் தொட்டு தற்காலம் வரை தீட்டுக்கற்களில் அருவா உள்ளிட்ட ஆயுதங்களைத் தீட்டும் வழக்கம் இப்பகுதி மக்களிடையே தொடர்ந்து வருவது வியப்புக்குரியது.

    வருசநாட்டுப் பகுதியில் பெருங்கற்காலத்தில் அடர்த்தியாக மக்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றாக இந்த நினைவுச் சின்னங்கள் உள்ளன.

    • யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர்.
    • ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறை காப்பு காட்டில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி கூடலூர் வனவர் திருமுருகன் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவினர் 2 குழுக்களாக பிரிந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

    யானைபுகா அகழிவழியாக முடனாரி புதுப்பாலம் பகுதியில் அவர்கள் சென்றபோது மின்வேலி அமைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அங்கு சோதனையிட்டபோது மறைந்திருந்த குள்ளப்பகவுண்பட்டியை சேர்ந்த தோட்ட காவலாளியான ஈஸ்வரன் (55) என்பவரை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர் தப்பி ஓட முயன்றபோது வனத்துறையினரும் விரட்டி சென்று துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஈஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ரேஞ்சர் முரளிதரன் லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ஈஸ்வரன் வனத்துறையினரை கத்தியால் குத்த முயன்றதால் ஏற்பட்ட தகராறில் தற்காப்பிற்காக சுடப்பட்டபோது ஈஸ்வரன் பலியானதாக தெரிவித்தார்.

    ஆனால் ஈஸ்வரனின் உறவினர்கள் அவரது உடலை வைத்து போராட்டம் நடத்தியதோடு வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். மேலும் ஈஸ்வரனின் மகள் மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் புகார் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து வனவர், வனக்காவலர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் வனவர் திருமுருகன், வனக்காவலர் ஜார்ஜ்குட்டி என்ற பென்னியை போலீசார் கைது செய்தனர்.

    • கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் மகன் தங்கபாண்டி (வயது18). இவர் உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். உப்புத்துரை பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு உணவு தயாரிக்கும் பணிக்காக தங்கபாண்டி தனது நண்பர்களுடன் சென்றார். வேலை முடிந்ததும் அனைவரும் யானைகஜம் பகுதிக்கு குளிக்க சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் மூழ்கிய தங்கபாண்டி உதவி கேட்டு அலறினார். அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    இதனால் கடமலைக்குண்டு போலீசார் மற்றும் மயிலாடும்பாறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் வந்து நீண்ட நேரம் போராடி பாறை இடுக்குகளுக்கு இடையே சிக்கி இருந்த தங்கபாண்டியை பிணமாக மீட்டனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறிய காட்சி சோகத்தை ஏற்படுத்தியது. சதுரகிரி மலைக்கு செல்லும் வழியில் யானைகஜம் அமைந்துள்ளது. குளிர்ச்சியான நீர்வீழ்ச்சி என்றபோதும் பெருமளவில் ஆபத்துக்கள் உள்ளன. இந்த யானைகஜம் பகுதியில் வருடத்திற்கு சராசரியாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு நீர்வீழ்ச்சியின் ஆழமான பகுதி மற்றும் பாறை இடுக்குகள் தெரிவதில்லை. இதனால் தொடர்ந்து சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியில் பாதுகாப்பை மேம்படுத்தி சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர்.
    • தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பா.ஜ.க. நிர்வாகி திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார். பின்னர் அங்குள்ள காளாத்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும். திரு காளாத்தீஸ்வரர், ராகு, கேது பரிகார ஸ்தலமான இக்கோவிலுக்கு வந்துள்ளேன். இந்த கோவிலில் 1984 ஆண்டு சிலை கடத்தப்பட்டு அங்கு காவலுக்கு இருந்த மாணிக்க தேவரை கொலை செய்த வழக்கில் சிலை தடுப்பு பிரிவு போலீசார் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வெட்கக்கேடாக உள்ளது. தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை சிறப்பாக செய்துள்ளார். பிரதம மந்திரியின் நகர்ப்புற வீடு கட்டும் திட்டம் பேரூராட்சி பகுதியில் அமல்படுத்தப்பட்டு வீடுகள் கட்டப்பட்டு பணி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழக அரசு கிராமப்புற கலைஞர் வீடு கட்டும் திட்டம் என்று அறிவிப்பு செய்துள்ளனர். இதேபோல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தை இந்த அரசு முறையாக செயல்படுத்தவில்லை. 2024-ம் ஆண்டுக்கு மட்டும் ரூ.2 லட்சத்து 5 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தி.மு.க. அரசு பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கபடும். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் சீட்டு விவரங்கள் குறித்தும் பேசுவதற்கு அகில இந்திய அளவில் பாராளுமன்ற போர்டு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தான் கூட்டணி பற்றி முடிவு செய்வார்கள். நான் கூறுவதற்கு ஒன்றும் இல்லை. மக்களுக்கு உதவாத உதவாக்கரை அரசை மக்கள் உதறித்தள்ளும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. 71 அடி உயரம் கொண்ட அணை தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    மழை ஓய்ந்த நிலையில் முறைநீர் பாசனம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி 69 கனஅடி நீர் மதுரை மாநகர குடிநீருக்கு மட்டும் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் பாசனத்திற்கு 2 ஆயிரம் கன அடி என 2069 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 1034 கன அடி நீர் வருகிறது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.30 அடியாக உள்ளது. 4 கன அடி நீர் வருகிற நிலையில் 1500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 48.90 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. 75 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 123.16 அடியாக உள்ளது. 18.55 கன அடி நீர் வருகிறது. 25 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமமுக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும்.
    • அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் தினகரன் தனது கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த 3 ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக கூறுகின்றனர்.

    எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகள் ஆட்சி காலம் ஊழல், முறைகேடுகள் நிறைந்ததாக இருந்தது. ஓ.பன்னீர்செல்வம் தனது பழைய நண்பர். நாங்கள் 2 பேரும் மீண்டும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளோம். வருகிற 24ந் தேதி தேனியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவருடன் பங்கேற்பேன். அ.ம.மு.க. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மாற்று சக்தியாக இருக்கும். வரும் லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் சையதுகான், ஒன்றிய செயலாளர் நாகராஜ், பேரூர் செயலாளர் ராஜா, அ.ம.மு.க. அமைப்பு செயலாளர்கள் கதிர்காமு, ரபீக், மாவட்ட செயலாளர்கள் முத்துச்சாமி, காசிமாயன், ஒன்றிய செயலாளர்கள் தவசெல்வம், திருமலை, நாகராஜ், ஒன்றிய இணைச் செயலாளர் அய்யணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.
    • இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் கெங்குவார் பட்டியில் உள்ள பழமையான ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் அப்பாஸ் ஆகியோர் கள ஆய்வு செய்ததில் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தனர்.

    இது குறித்து ஆய்வாளர் செல்வம் கூறுகையில்

    திருப்பணி செய்பவர்கள், கோயிலைச் சுற்றியுள்ள புதர்களை அகற்றும் போது, மண்ணிற்குள் புதைந்திருந்த 2 கல்வெட்டுகளை எடுத்து வைத்திருப்பது கள ஆய்வில் தெரியவந்தது. முதல் கல்வெட்டு கோவில் அதிட்டான கல்பலகையில் 2 பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் 5 வரிகளில் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன. கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையாக வாசிக்க முடியாதவாறு உள்ளது.

    தவச்சதுர்வேதி மங்கலத்து பிரக்மரு நாட்டுச் செட்டியும் நீ என தொடங்கும் முதல் பகுதியில் இக்கோயிலில் இருக்கும் இறைவனின் பெயர் திருவகத்தீஸ்வர முடைய நாயனார் என்பது புலனாகிறது. சதுர்வேதி மங்கலம் என்பது பிராமணர்களுக்கு அரசு வழங்கிய நிலம். வடபகுதியில் இருக்கும் பிரக்மாரு நாட்டைச் சேர்ந்த செட்டி என்பவர் கொடுத்த வரியும், பிற நில வரிகளும் கூறுவதாக கல்வெட்டு செய்தி இருக்கலாம். மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் முன் கல்வெட்டு எழுதப்பட்டிருப்பது தெரிய வருகிறது.


    கல்லின் பக்கவாட்டில் உள்ள 2-ம் பகுதி கல்வெட்டில் ஆறு வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன. திருவரகத்தீஸ்வரர் உடைய நாயனார் கோவிலில் உள்ள விநாயகருக்கு தினமும் திருவமுது படைப்பதற்காக அரைக்காணி முந்திரிகை அளவுள்ள நிலத்தை மிழலைக் கூற்றத்து நடுநாட்டுச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் முன்னிலையில் தானமாக வழங்கப்பட்ட செய்தியை குறிப்பிடுவதாக உள்ளது. மிழலைக்கூற்றம் என்பது அறந்தாங்கி வட்டத்து தென்பகுதியும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கீழ் பகுதியும் கொண்டது ஆவுடையார் கோவில் வட்டாரப் பகுதி. இரண்டாவதாக உள்ள துண்டுக் கல்வெட்டு நிலதான அளவைகளை குறிப்பதாக உள்ளது. வைகை ஆற்றின் முக்கிய கிளை நதியான மஞ்சளாற்றின் வடகரையில் இக்கோவில் அமைந்திருப்பதால் பிற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் இப்பகுதி செழிப்புற்றிருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது என்றார்.

    • கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
    • காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே அய்யம்பட்டி ஏழை காத்த அம்மன், வல்லடிகார சுவாமி கோவில் திருவிழாவையொட்டி வருடம் தோறும் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.

    இணையதளம் வழியாக தேனி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், கரூர் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதியில் இருந்து 4500 காளைகள், 2100 மாடு பிடி வீரர்கள் பதிவு செய்திருந்தனர். தகுதி அடிப்படையில் காளைகள் மற்றும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 720 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

    மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதே போல் கால்நடை மருத்துவர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.

    பின்னர் ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அந்த காளையை யாரும் பிடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் சீறிப்பாய்ந்தன.

    இதனை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் களத்தில் நின்று வீரர்களுக்கு பிடி கொடுக்காமல் போக்கு காட்டியது. அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, அண்டா, கட்டில், தங்க காசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதே போல் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தனர். முன்னதாக உள்ளூர் காளைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கோரி சின்னமனூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    • பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர்.
    • காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை அமைந்துள்ளது. இதன் அருகே அமைந்துள்ள பூங்கா சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பொழுதுபோக்கு அம்சமாக உள்ளது. மேலும் உள்ளூர் மக்களுக்கும் இது சிறந்த பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

    இங்கு வாரம் தோறும் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். இது தவிர விடுமுறை நாட்களில் அதிக அளவு நபர்கள் வருகை தருவதுண்டு.

    இன்று காதலர் தினம் என்பதால் காதல் ஜோடிகள் வைகை அணை பூங்காவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நுழைவு வாயில் முன்பு அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    அவர்கள் பூங்காவுக்கு வந்த வாலிபர்கள் மற்றும் காதலர்களை திரும்பிச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். பொது இடங்களில் காதல் ஜோடிகளைப் பார்த்தால் அவர்களுக்கு மஞ்சள் கயிறு கொடுத்து திருமணம் செய்து வைக்கப்போவதாக பல்வேறு அமைப்புகள் தயார் நிலையில் இருந்தன.

    மேலும் காதல் ஜோடிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும், அவர்கள் அறிவித்திருந்தனர். இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கையாக பூங்காவுக்கு வந்தவர்களை தொடர்ந்து போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் சந்தோஷமாக பொழுதை கழிக்க வந்த காதல் ஜோடிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதே போல தேனி மாவட்டத்தின் மற்றொரு சுற்றுலா தலமாக குரங்கணி பகுதி உள்ளது. அங்கும் காதல் ஜோடிகள் குவியத் தொடங்கியதால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக காதலர்கள் சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இதனிடையே காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த இந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அனுப்பினர். இதனால் வைகை அணை பூங்கா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
    • பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை கல்வி அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி பள்ளி விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாக்களில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. மாணவர்களும் இதில் உற்சாகமாக கலந்து கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் தலைமை தாங்கினார். தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அப்போது கருப்பசாமி பாட்டுக்கு மாணவர் ஒருவர் உடல் முழுவதும் கருப்பு நிற சாயம் பூசி கையில் அரிவாளுடன் நடனமாட அந்த பாட்டுக்கு மற்ற மாணவர்கள் பாடல் பாடிக்கொண்டு இருந்தனர்.

    இதை பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த மாணவிகள் சிலர் உணர்ச்சிகரமாக அருள்வந்து ஆடினர். இதனால் ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிகளை அங்கிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் சென்று அமைதிப்படுத்தினர்.

    பள்ளி விழாவில் மாணவிகள் சாமியாடிய நிகழ்ச்சி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தி.மு.க. நிர்வாகி மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஜீவா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார்.

    தேனி:

    தேனி வடக்கு மாவட்ட விவசாய அணி அமைப்பாளராக இருந்தவர் ஜீவா. இவர் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வந்தார். இவர் சமூக வலைதளங்களில் தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் சரவணக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் மீதும் தி.மு.க. நிர்வாகிகள் மீதும் பல்வேறு அவதூறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.

    எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி.யிடம் தி.மு.க. நிர்வாகிகள் புகார் அளித்தனர். தி.மு.க. நிர்வாகி மீது அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ஜீவாவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கட்சி கட்டுப்பாட்டை மீறியும், அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்த ஜீவா அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.
    • போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    தேவதானப்பட்டி:

    மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சடகோபாலன் மகன் வெங்கடேன் (வயது 46). இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு வழக்கில் பிடிபட்டார். போலீசார் அவரை கைது செய்து பெரியகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    பின்னர் ஜாமீனில் வெளி வந்த வெங்கடேசன் தலைமறைவானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பெரியகுளம் உதவி அமர்வு நீதிபதி தலைமறைவான குற்றவாளியை பிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என தேவதானப்பட்டி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.

    அதன்படி இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் தலைமையிலான போலீசார் அவரை பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த 2 நாட்களாக அப்பகுதியில் முகாமிட்டு வெங்கடேசனை தேடி வந்தனர்.

    பின்னர் நேற்று இரவு அவரை கைது செய்து பெரியகுளம் அழைத்து வந்தனர். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பிடித்ததால் மாவட்ட எஸ்.பி. பாராட்டு தெரிவித்தார்.

    ×