என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தனியார் கம்பெனி அருகே பாலத்தின் அடியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ஆதரவின்றி மிகவும் மோசமான நிலையில் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் அனாதையாக கிடந்துள்ளார்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற செங்கிப்பட்டி போலீஸ் ஏட்டு ராஜகோபால் மற்றும் போலீசார் சிவலிங்கம், மோகன்ராஜ் ஆகியோர் கோழி கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கிடந்த அந்த முதியவரை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த முதியவரை மீட்டு அவரை குளிக்க வைத்து, ஆடைகள் அணிவித்தனர். பின்னர் அந்த முதியவருக்கு உணவு வழங்கி தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளித்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆதரவின்றி கிடந்த முதியவருக்கு செங்கிப்பட்டி போலீசார் முதலுதவி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

    மனிதாபிமானம் இன்னும் மரித்து போகவில்லை என்பதற்கு சாட்சியாகவும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை உணர்த்தும் விதமாகவும் நடந்து கொண்ட செங்கிப்பட்டி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். 

    • ஒன்பது தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் மாமன்னன் இராஜராஜன் சோழன் கட்டிய புகழ்பெற்ற ஹரித்ரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது.

    இங்கு மாதந்தோறும் பக்தர்கள் தங்களது கடன் தொல்லைகள் நீங்க வேண்டி ஹரித்ரா விநாயகருக்கு நவதானியங்கள் முடிச்சு சமர்ப்பித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தொடர்ந்து ஒன்பது சங்கடஹர சதுர்த்தி அன்று ஒன்பது தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இங்கு மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இக்கோவிலில் நேற்று ஐப்பசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ஹரித்ரா விநாயகருக்கு 16வகை செல்வங்களை வாரி வழங்கும் 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் சகஸ்ரநாம அர்ச்சனையும் தீபாராதனையும் நடந்தது. இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நம்ம சாலை செல்போன் செயலியை தொடங்கி வைத்தார்.
    • சாலை தொடங்கும் இடத்தில் விளக்கு ஏற்றப்பட்டு சாலை பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய, சாலையில் ஏற்படும் பள்ளங்களை பொதுமக்கள் துணையோடு கண்டறிந்து குறித்த காலத்தில் செப்பனிடும் திட்டத்திற்காக நம்ம சாலை என்ற புதிய மென்பொருள் மற்றும் செல்போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

    இந்த விழாவுக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, நம்ம சாலை செல்போன் செயலியை தொடங்கி வைத்தார்.

    மேலும் ரூ.198 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர்- மன்னார்குடி செல்லும் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் - மன்னார்குடி சாலை தொடங்கும் இடத்தில் விளக்கு ஏற்றப்பட்டு சாலை பயனாளர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சென்னை கன்னியாகுமரி தொழில் தடத் திட்ட தனி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சௌந்தரராஜன், கும்பகோணம் கோட்டப் பொறியாளர் நாகராஜன், உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயராமன், மன்னார்குடி உதவி பொறியாளர் வடிவழகன் மற்றும் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.
    • வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் சாரநாத் நகர், தைக்கால் தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் அந்த வழிதடத்தில் புதிய பஸ் சேவை தொடங்கப்பட்டது.

    இந்த புதிய பஸ் சேவையை தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் உடன் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கே.வீ.கலைச்செல்வன், அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தியாக.சுரேஷ், கும்பகோணம் போக்குவரத்து கோட்ட மேளாலர் பாலமுருகன், உதவி பொறியாளர் கருப்புசாமி, கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    • கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, வழிபடுவார்கள்.
    • கல்லறைகளில் வைப்பதற்கு என சிலுவைகளை வாங்கி சென்றனர்.

    பூதலூர்:

    உலகமெங்கிலும் கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினர்களை நினைவு கூறும் நிகழ்வாக அனுசரிக்கப்படுவது கல்லறை திருநாள். இந்த நாளில் இறந்து போன தங்கள் குடும்ப உறுப்பினர்களின் கல்லறைகளை தூய்மைப்படுத்தி மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி, வழிபடுவார்கள். கல்லறை திருநாளை முன்னிட்டு இன்று காலை பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இதில்பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் ,துணை அதிபர் ரூபன் அந்தோனிராஜ் ,தியான மையஇயக்குனர் ஆல்பர்ட் சேவியர், உதவிபங்குதந்தையர்கள்அமலவில்லியம், அன்பு ராஜ், ஆன்மிக தந்தை அருளானந்தம்ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றினார்கள். திருப்பலி முடிவடைந்ததும் பூண்டி மாதா பேராலயத்தில் அருட்தந்தையாக பணியாற்றி மறைந்து பூண்டி மாதா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை லூர்து சேவியர் அடிகளாரின் கல்லறை புனிதம் செய்து வழிபட்டனர்.இதனை முன்னிட்டு லூர்து சேவியர் கல்லறை மலர் அலங்காரம் செய்யப்பட்டு மெழுகு வர்த்தி ஏற்றி வைக்கப்பட்டு இருந்தது.பக்தர்கள் லூர்து சேவியர் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டனர்.பூண்டி மாதா பேராலய கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட அருட்தந்தை ராயப்பர் அடிகளார் கல்லறையும் மந்திரிக்கப்பட்டது. இன்று மாலைபூண்டி மாதா பேராலய பங்கு கிராமங்களில் அமைந்துள்ள கல்லறைகள் பூண்டி மாதா பேராலய அருட் தந்தையர்கள் நேரில் சென்று புனிதம் செய்து வழிபாடு நடத்துவார்கள். கல்லறை திருநாளைமுன்னிட்டு இந்த பகுதியில் உள்ள கிறித்துவ கல்லறைகள் தூய்மை செய்யப்பட்டு மலர் மாலை அணிவித்து சாம்பிராணி போட்டு உருக்கமாக வழிபட்டனர். திருக்காட்டுபள்ளியில் கல்லறைகளில் புதிய மரச்சிலுவை வைப்பதற்கு என சிறியதும் பெரியதும் ஆன சிலுவைகள் விற்பனை செய்ய வைத்து இருந்தனர். கல்லறைகளில் வைப்பதற்கு என சிலுவைகளை வாங்கி சென்றனர்.

    • ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் திருமணம் கைகூடிவரும் என்பது ஐதீகம்.
    • சுவாமிக்கு அம்பாள் சித்திலெட்சுமி, புத்திலெட்சுமியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    மெலட்டூர்:

    மெலட்டூர் ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயிலில் சுவாமி தெட்சணாமூர்த்திக்கு, சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் உள்ள ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் விவாஹ வரம் அருளக்கூடியவர். இங்கு ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகருக்கு நடைபெறும் திருக்கல்யாண வைபத்தில் திருமணமாகாத பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீதெட்சணாமூர்த்தியை பிரார்த்தனை செய்து கொண்டால் விரைவில் திருமணம் கைகூடிவரும் என்பது ஐதீகம்.

    நேற்று காலை சுவாமி தெட்சணாமூர்த்திக்கு சித்தி, புத்தியுடன் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருக்கல்யா ண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு, தாம்பலம் எடுத்து வந்தனர். அதனை தொடர்ந்து சகல சடங்கு, சம்பிரதாயங்கள்படி சுவாமிக்கு அம்பாள் சித்திலெட்சுமி, புத்திலெட்சுமியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

    திருக்கல்யாண வைப வத்தில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபவ ஏற்பாடுகளை எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை புறநகர் உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் வெளியி ட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-'

    ஈச்சங்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை(வெள்ளிக் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல் லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய் யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக் கோட்டை, வாண்டையார் இருப்பு, மடிகை, காட்டூர் மேலஉளூர், கீழ உளூர், பொன்னாப்பூர் கிழக்கு, பொன்னாப்பூர் மேற்கு, ஆழிவாய்க்

    கால் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதே போல் தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    110 கே.வி. துணை மின் நிலையத்தில் இருந்து வரும் உயர்அழுத்த மின் பாதைகளில் நாளை(வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வல்லம், சென்னம்பட்டி, மின்நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

    • கண்டன ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர்.
    • ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    மதுக்கூர் அருகே ஆலத்தூரில் பா.ஜ.க. சார்பில் கொடியேற்ற போலீசார் அனுமதி மறுத்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் உள்பட கட்சியினர் ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பா.ஜ.க. மாவட்ட பொருளாளர் விநாயகம் தலைமையில் மாநகர தலைவர்கள் சதீஷ் (வடக்கு), பாலா (கிழக்கு), வெங்கடேசன் (மேற்கு), மேற்கு மாநகர பொதுச்செயலாளர் மாயக்கண்ணன், கொள்கை பரப்பு பிரிவு மாவட்ட தலைவர் பொன்.மாரியப்பன், மாவட்ட மகளிரணி தலைவி கவிதா, சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் பாரத்ரவீந்திரன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், கூட்டுறவு பிரிவு தலைவர் நவீன் உள்பட கட்சியினர் ஏராளமானோர் திரண்டனர்.

    பின்னர் அவர்கள் அங்கிருந்து கண்டன ஊர்வலமாக புறப்பட்டு பழைய பஸ் நிலையம் முன்பு சென்றடைந்தனர். இதையடுத்து ஆலக்குடியில் கைதான பா.ஜ.க.வினரை விடுவிக்கக்கோரியும், கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • வெண்ணாற்றங்கரை பாலத்தில் வந்தபோது, எதிரே தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதின.
    • விபத்தில் மாணவன் ரித்திக் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சக்கரசாமந்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ரித்திக் (வயது 15).

    இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை ரித்திக் மோட்டார் சைக்கிளில் பள்ளி யக்ரஹாரத்துக்கு சென்று வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    வெண்ணாற்றங்கரை பாலத்தில் வந்தபோது, எதிரே தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ் மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதின.

    இந்த விபத்தில் மாணவன் ரித்திக் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிள் பஸ்சுக்கு அடியில் சென்றன.

    இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து விசாரணை பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் பலியான ரித்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.
    • இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

    வல்லம்:

    புதுக்கோட்டையில் இருந்து தஞ்சை நோக்கி இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். அந்த பஸ் திருக்கானூர்பட்டி அருகே வல்லம் - ஒரத்தநாடு 4 வழி சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது திருச்சி நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ்சும் லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

    லாரியில் இருந்த பார்சல்கள் சாலையில் சிதறியது. மேலும் லாரியின் டீசல் டேங்க் உடைந்து சாலையில் டீசல் ஓடியது.

    அதே போல் லாரி மீது மோதிய அரசு பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதில் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்தது.

    இதில் அரசு பஸ் டிரைவர் வினோதன், கண்டக்டர் கார்த்திகேயன் மற்றும் 5 பயணிகள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகி ன்றனர். இந்த விப த்தால் அந்த பகுதியில் போக்கு வ ரத்து பாதிக்க ப்பட்டது.

    • நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர்.
    • இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே நாஞ்சி க்கோட்டை கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் நாஞ்சி.கி.வ.சத்தியராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மழைக் காலங்களில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.

    நாஞ்சிக்கோட்டை ஊராட்சியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

    இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் மூலம் முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

    அதற்கு பழனியப்பன் நகரில் இடம் ஒதுக்கி உள்ளோம். நமது ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒத்துழை ப்புடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஊராட்சி செயலாளர் புண்ணியமூர்த்தி வரவேற்று, தீர்மானங்களை படித்தார்.

    கூட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வண்டார்குழலி நிம்மி, சகாயராணி, கல்பனா, வாசுதேவன், தாழம்பட்டி மதியழகன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி தோட்டக் கலை துறை உதவி இயக்குநர் முத்தமிழ் செல்வி பள்ளி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, விஜயரேவதி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.
    • அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் காசி ராமன் தெருவை சேர்ந்தவர் தொப்பையன் (வயது 57). இவர் கும்பகோணம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவதன்று இவர் வசூல் செய்வதற்காக ஆட்டோவில் மங்கநல்லூர் வரை சென்றுள்ளார்.

    பின்னர் பூம்புகார்- கல்லணை சாலை வழியாக ஊர் திரும்பி கொண்டிருந்தார். கல்யாணபுரம் மெயின் ரோட்டில் வந்தபோது ஆட்டோவை சாலை ஓரமாக நிறுத்த சொல்லி கீழே இறங்கி இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது சாலையை கடந்த போது அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோ அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தொப்பையனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருவிடைமருதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×