என் மலர்tooltip icon

    சேலம்

    • ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
    • இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதே போல மாநில நெடுஞ்சாலைகளும் செல்கிறது. இந்த சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடங்களில் விபத்தை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆய்வு

    அதன்படி ஓமலூர் பகுதியில் மோட்டார் வாகன ஆய்வாளர் கவிதா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை விபத்து நடந்த இடங்களை ஆய்வு செய்தனர். அங்கு விபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

    9 கோடியே 55 லட்ச ரூபாய் வருமானம்

    இதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் சரகத்தில் ஓமலூர், மேட்டூர், சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்தூர், சங்ககிரி, தர்மபுரி என 7 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இந்த பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 60 ஆயிரத்து 462 இருசக்கர வாகனங்கள், 8 ஆயிரத்து 800 4 சக்கர வாகனங்கள், பேட்டரி வாகனங்களில் 4 ஆயிரத்து 268 இருசக்கர வாகனங்கள், 128 4 சக்கர வாகனங்கள் என போக்குவரத்து விதி மீறல்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 9 கோடியே 55 லட்ச ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

    மேலும் சேலம் சரகத்தில் ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடந்த விபத்துகளில் 631 பேர் உயிரிழந்ததுடன் 4 ஆயிரத்து 118 பேர் காயமடைந்துள்ளனர். எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைபிடித்து வாகனங்களை இயக்குங்கள். விபத்துக்களை தவிர்த்திடுங்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிது.
    • காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    தும்பல் துணை மின் நிலையத்தில் நாளை (26-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியார்பாளையம், மணியார்குண்டம், தேக்கம்பட்டுபுதூர், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூர், குன்னூர், அடியனூர், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை,பனைமடல், குமாரப்பாளையம் மற்றும் இதர சிற்றூர்கள் ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

    • சங்ககிரிைய நோட்டமிட்டு மர்ம நபர்கள் சமீபகாலமாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஜெராக்ஸ் எடுப்பதற்காக பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு கடைக்கு சென்றார். அதற்குள் மர்ம நபர் மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார்.

    சங்ககிரி:

    தமிழ்நாட்டை பொறுத்தவரை நாமக்கல், சேலம், தருமபுரி, ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் லாரி கட்டுமானத் தொழில் பெரிதளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் ஏராளமான லாரி பாடி கட்டும் பட்டறைகள் இயங்கி வருகின்றன.

    அதுபோல் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களை இணைக்கும் எல்லை பகுதியான சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட சங்ககிரியில் லாரி பாடி பில்டிங் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. டாரஸ், எல்.பி.ஜி டேங்கர், டிரெய்லர், ரிக் வாகனங்கள், மணல் லாரிகள் என பல்வேறு சரக்குப் போக்குவரத்து வாகனங்க ளுக்கு பாடி கட்டுவதற்கு வருகின்றனர். இதேபோல் லாரிக்கு பெயிண்டிங் பூசும் தொழில், ஒர்க் ஷாப் அதிக அளவில் உள்ளன.

    இந்த தொழிலை நம்பி இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளும், அவர்களின் குடும்பத்தினரும் உள்ளனர்.

    நோட்டம்

    இந்த நிலையில் சங்ககிரிைய நோட்டமிட்டு மர்ம நபர்கள் சமீபகாலமாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்ககிரியில் உள்ள ஒரு வங்கியில் பயிர்கடன் செலுத்த சென்ற விவசாயி ஜெராக்ஸ் எடுப்பதற்காக பணத்தை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு கடைக்கு சென்றார். அதற்குள் மர்ம நபர் மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை எடுத்து சென்று விட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வரும் நிலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு நடந்துள்ளது.

    மோட்டார்சைக்கிள் திருட்டு

    சங்ககிரி அருகே உள்ள வைகுந்தத்தில் பிரபல தனியார் ஓட்டல் உள்ளது. அங்கு பணிபுரியும் ஒருவர் தனது மோட்டார்சைக்கிளை ஓட்டல் வெளியே நிறுத்தி விட்டு பணி முடிந்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியை பார்த்தபோது டிப்டாப் உடை அணிந்த 25 முதல் 32 வயதுக்குள் இருக்கும் மர்ம நபர் வாகனத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

    மற்றொரு சம்பவம்

    அதேபோல் சங்ககிரி எபினேசர் காலனியில் ஒரு லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் செல்போனை மறந்து டிரைவர் வைத்து விட்டு சென்றார். இந்த செல்போனை மர்ம நபர் எடுத்து செல்லும் காட்சியும் சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது.

    இது குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிள், செல்போன் திருடும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தொடர் திருட்டால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    • சேலத்தின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று நாளை மறுநாள் (27-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.
    • கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    சேலம்:

    சேலத்தின் காவல் ெதய்வமாக விளங்கி வரும் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணிகள் முடிவு பெற்று நாளை மறுநாள் (27-ந்தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது.

    முகூர்த்தக்கால்

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 2-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. தொடர்ந்து முளைப்பாலிகை இடுதல், புதிய கொடி மரம் பிரதிஷ்டை ஆகியவை நடந்தது. பின்னர் ராஜ கோபுரம் மற்றும் மணிமண்டப விமான கலசங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.

    நேற்று கணபதி வழிபாடு, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம், மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் ஆகியவை நடந்தது. பின்னர் சுகவனேஸ்வரர் கோவிலில் இருந்த யானை மற்றும் பக்தர்கள் புனித தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பாலிகையை ஊர்வலமாக கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.

    யாக சாலை பூஜைகள்

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பிரமாண்ட யாக சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 23 யாக குண்டம் மற்றும் 16 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை கணபதி வழிபாடு, சங்கல்பம், புண்யாகவாசனம், அக்னி சங்கரண வழிபாடு, தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கண் திறப்பு

    தொடர்ந்து மாலை சுதை விக்கிரகங்களுக்கு கண் திறப்பு வழிபாடு நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் கணபதி வழிபாடு, புண்யாகவாசனம், பூதசுத்தி, கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், வேள்வி சாலை பிரவேசம், துவார பூஜை மண்டபார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து முதற்கால வேள்வி வழிபாடு நடக்கிறது. பின்னர் இரவு 10 மணிக்கு முதற்கால பூர்ணாஹுதி, சதுர்வேத பாராயணம், தமிழ்முறை ஓதுதல்,மகா தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    2-ம் கால யாக வேள்வி

    நாளை (26-ந்தேதி) காலை 8 மணிக்கு மேல் கணபதி வழிபாடு, புண்யாகவாசனம் மற்றும் 2-ம் கால யாக வேள்வி வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மேல் ராஜகோபுரம், கருவறை விமானம் மற்றும் பரிவார சன்னதி விமானங்களில் கோபுர கலசங்கள் பொருத்தப்படுகிறது.

    தொடர்ந்து மதியம் 1 மணிக்கு மேல் 2-ம் கால திரவியாஹுதி மற்றும் சதுர்வேத பாராயணம், தமிழ் முறை ஓதுதல் மகா தீபாராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பஞ்சலோக தகடு வைத்து அஷ்டபந்தனம் சாத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு மேல் 3-ம் கால வேள்வி வழிபாடு நடக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் நாடி சந்தானம், கண் திறப்பு வழிபாடு, தமிழ் திருமுறை ஓதுதல், மகா தீபாராதணை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    கும்பாபிஷேகம்

    நாளை மறுநாள் (27-ந் தேதி) அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக வேள்வி வழிபாடு நடக்கிறது. பின்னர் காலை 7.35 மணிக்கு வேள்வி சாலையில் இருந்து தீர்த்தக்கலச குடங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 7.40 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெரிய மாரியம்மன் ராஜகோபுரம், கருவறை விமான கோபுரம், பரிவார சன்னதி விமான கோபுரங்கள் மற்றும் கொடி மரத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் மூல மூர்த்தி பெரிய மாரியம்மன், மகா கணபதி, மதுரைவீரன் சாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு மேல் மகா அபிஷேகம், ராஜ அலங்காரம், தசதரிசனம், தசதானம், மகா தீபாராதணை நடைபெறுகிறது. காலை 10.30 மணிமுதல் அன்னதானம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு தங்கரதம் புறப்படுகிறது.

    மின்னொளியில் ஜொலிக்கிறது

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் கோபுரங்கள் மற்றும் சேலம் நகரமே மின்னொளியில் ஜொலிக்கிறது. குடும்பம், குடும்பமாக கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்து வருகிறார்கள். கும்பாபிஷேக விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள குஞ்சு மாரியம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று நவராத்திரி நிறைவு விழாவையொட்டி அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளையும் சில்லறை நாணயங்களையும் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    • ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகத்தில் 4,470 உறுப்பினர்கள் உள்ளனர்.
    • இங்கு நூலகவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வருகின்றனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் பேரூராட்சி அருகே உள்ள பொது நூலகத்தில் 4,470 உறுப்பினர்கள் உள்ளனர். இங்கு நூலகவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் என தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் படிக்க வருகின்றனர்.

    1995-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூலக கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள சிமெண்ட் பூச்சு ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து சேதம் அடைந்து பராமரிப்பின்றி காணப்ப டுகிறது.

    இதுகுறித்து நூலகத்திற்கு வருபவர்கள் கூறுகையில், இந்த கட்டிடம் மிகவும் பழமை வாய்ந்த கட்டிடம் ஆகும்.

    இதனால் மேற்கூரை இடிந்து விழுவதால் மாணவ, மாணவிகள் அச்சம் அடைந்து படிக்க வருவதில்லை. மேலும் பொதுமக்கள் சார்பில் பல முறை அரசு அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

    மேலும் நூலகத்தை புதிய கட்டிடத்திற்கு மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    • கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சேலம்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் குமரேசன் என்பவர் அவதூறு செய்தி பரப்பி உள்ளனர். இதை பார்த்த தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56-வது வார்டு தி.மு.க. செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார் என்று விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் அவர் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த குமரேசன் (49) என்பது தெரிய வந்தது. இவர் டவுண் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் இவர் நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்து உள்ளார். இதையடுத்து அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சி மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 49.38 அடியாக அதிகரித்துள்ளது.
    • அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வந்தது. இதன் காரணமாக கடந்த 10-ந்தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 10-ந்தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் இன்று காலை 49.38 அடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் 19 அடி உயர்ந்து உள்ளது.

    நேற்று வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 4 ஆயிரத்து 334 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையில் இருந்து தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார்.
    • எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார்.

    சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "என்னை பற்றி பல்வேறு விமர்சனம் செய்துள்ளார்கள். அதில் ஒருசிலவற்றை குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கூட்டத்தின் நோக்கம், அந்த கட்சி சம்பந்தப்பட்டது. அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், அந்த கூட்டத்தில் என்னைப் பற்றி அதிக நேரம் பேசியுள்ளார்."

    "குறிப்பாக எடப்பாடி பழனிசாமி, பொய்யர் பழனிசாமி என்று குறிப்பிட்டுள்ளார். நான் இதுவரை ஊடகத்திலோ, பத்திரிகையிலோ பொய் செய்தி வெளியிட்டதில்லை. எனது அறிக்கையிலோ அல்லது ஊடகத்தில் பேட்டி அளிக்கும் போதோ, பொய்யான செய்தியை நான் எப்போதும் கொடுத்ததில்லை. ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு, திரு ஸ்டாலின் அவர்கள் என்னை பற்றி தவறான விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது."

    "இதோடு, இரண்டறை ஆண்டு திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக் கொண்டு தி.மு.க. ஆட்சியில் மக்கள் கொதித்துப்போய், வெறுத்துப் போய் இருக்கின்றார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், பயத்தில் என்னைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார் என்றுதான் நான் பார்க்கிறேன். அதுமட்டுமல்லாமல், நாங்கள் பா.ஜ.க. கட்சியுடன் கூட்டணியில் இருந்து விலகிவிட்ட பிறகு, எங்களை பற்றி அதிகளவில் விமர்சனம் செய்து வருகிறார்."

    "ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது, விலகுவது அந்த கட்சியை பொருத்தது. எங்களை பொருத்தவரை நாங்கள் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். விலகிவிட்ட காரணத்தினால் தி.மு.க. தலைவர் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சு மற்றும் அறிக்கையில் இருந்து இதனை புரிந்து கொள்ள முடிகிறது."

    "தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறுபான்மையினருக்கு நன்மை செய்வது போன்று தோற்றத்தை ஏற்படுத்தி வந்தார்கள். நாங்கள் கூட்டணியில் இருந்து விலகியதை அடுத்து, சிறுபான்மை மக்கள் அ.தி.மு.க.வை சேர்ந்த என்னையும், தலைமை கழக நிர்வாகிகளை சந்திப்பதை அவரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் தான் இதுபோன்ற வெறுப்பு பேச்சு வந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன்."

    "அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு முடிக்கும் தருவாயில் இருந்த போது தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு முதல்வர் ஆன மு.க. ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, முடிக்கப்பட்ட திட்டங்களைத் தான் திறந்து வைத்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியின் போது ஒரே ஆண்டில் மட்டும் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன."

    "இந்த மருத்துவ கல்லூரிகளின் பணிகள் 70 சதவீதம் முடிந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. பிறகு, மீதமுள்ள பணிகளை முடித்துவைத்து, அந்த கட்டிடங்களை தான் அவர் திறந்து வைத்துள்ளார். இதே போன்று, பல்வேறு பாலங்களுக்கான பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. அவற்றையும் திரு. ஸ்டாலின் தான் திறந்து வைத்தார்," என்று தெரிவித்தார்.

    • அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சேலம்:

    அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவனேரி, மணக்காடு சின்னதிருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங் போர்டு, கொல்லப்பட்டி, கோரிமேடு, கொண்டப்பநாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, பாரதி நகர், 4 ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா காலேஜ் ரோடு, செட்டிசாவடி, விநாயகம்பட்டி, நகரமலை அடிவாரம், ஏற்காடு ஆகிய பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது. இத்தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்தினி தெரிவித்துள்ளார்.  

    • தெற்கு கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    சேலம்:

    சேலம் தெற்கு கோட்டம் மின் செயற்பொறியாளர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மின் பகிர்மான தெற்கு வட்டம் செயற்பொறியாளர் தலைமையில் நாளை 25-ந் தேதி (புதன்கிழமை) வள்ளுவர் நகர், ஸ்டேட் பாங்க் எதிரில், அன்னதானப்பட்டியில் உள்ள தெற்கு கோட்ட அலுவலகத்தில் காலை 11 மணி மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தெற்கு கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மேற்பார்வைப் பொறியாளரிடம் நேரில் தெரிவித்து பயன் பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    • பெரிய புதூர் பாறை வட்டம் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • இந்த பகுதியில் சாக்கடை வசதி உட்பட அடிப்படை வசதி கேட்டு அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட பெரிய புதூர் பாறை வட்டம் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் சாக்கடை வசதி உட்பட அடிப்படை வசதி கேட்டு அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக போராடி வருகின்றனர். ஆனாலும் அவர்களது கோரிக்கை இது வரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கு மேற்பட்டோர் சாரதா கல்லூரி சாலையில் திரண்டனர். பின்னர் மறியலுக்கு முயன்றனர். தகவல் அறிந்த அருள் எம்.எல்.ஏ. அங்கு விரைந்து சென்றார். பின்னர் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டார். தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். தொடர்ந்து அருள் எம்.எல்.ஏ. பாறைவட்டம் பகுதியில் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சாரதா கல்லூரி அருகில் இருந்து பாறை வட்டம் பகுதி வரை ரூ.3.80 கோடியில் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை சாக்கடை கால்வாய் அமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் மறியலுக்கு முயன்று உள்ளனர்.

    மேலும் 3 மாதத்தில் மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கால்வாய் அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ளனர். அப்படி அமைத்து தராவிட்டால் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே அங்கு வந்த அஸ்தம்பட்டி மண்டல தலைவர் உமா ராணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.

    ×