என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சங்ககிரியில் இன்று மாலை நடைபயணம் தொடங்குகிறார் அண்ணாமலை
    X

    சங்ககிரியில் இன்று மாலை நடைபயணம் தொடங்குகிறார் அண்ணாமலை

    • ஒவ்வொரு மாவட்டமாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.
    • நாளை திருச்செங்கோடு பகுதியில் நடைபயண யாத்திரையை தொடங்குகிறார்.

    சங்ககிரி:

    தமிழகம் முழுவதும் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது பொதுமக்களை சந்தித்து பிரதமர் மோடி அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறார். குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    ஒவ்வொரு மாவட்டமாக நடைபயணம் மேற்கொண்டு வரும் அவர் நேற்று ஈரோடு மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து இன்று மாலையில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேலம் மாவட்டம் சங்ககிரியில் நடைபயணம் மேற்கொள்கிறார். சங்ககிரி-சேலம் மெயின்ரோடு சங்ககிரி லாரி உரிமையாளர்கள் சங்க வெள்ளி விழா கட்டிடம் பகுதியில் இருந்து தனது நடைபயண யாத்திரையை தொடங்குகிறார். பொதுமக்கள் பெருமளவில் திரண்டு மாநில தலைவர் அண்ணாமலைக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    முன்னதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை, லட்சுமணன், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துகிறார்.

    இந்த நடைபயணமானது வெள்ளிவிழா கட்டடத்தில் தொடங்கி அக்கம்மா பேட்டை, புதிய பஸ் நிலையம், வி.என் பாளையம் வழியாக பழைய பஸ் நிலையத்தில் முடிவடைகிறது. இதில் சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதி மற்றும் நாமக்கல் மாவட்டத்தின் பல பகுதியிலிருந்தும் பா.ஜ.க. தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்கின்றனர்.

    பின்னர் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகிறார். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமி, மத்திய மந்திரி எல். முருகன், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் சுதீர் முருகன், மாவட்ட துணை தலைவர் சி.பி.ரவி, சங்ககிரி சட்டமன்ற நடைபயண நிகழ்ச்சி பொறுப்பாளர் மாவட்ட செயலாளர் என். ரமேஷ் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    இதையடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்கிறார். எடப்பாடி சாலை, காவிரி பாலம் பிரிவு பகுதியிலிருந்து நடைபயணத்தை தொடங்குகிறார். இதில் நாமக்கல் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணராஜன், குமாரபாளையம் பகுதி மக்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். பின்னர் நாளை திருச்செங்கோடு பகுதியில் நடைபயண யாத்திரையை தொடங்குகிறார்.

    Next Story
    ×