என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    நாகையில் ஆசிரியர்கள் பிரம்பால் அடித்ததில் பள்ளி மாணவன் காயமடைந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த சலீம் ராஜா என்பவரது மகன் முஹம்மது அனஸ். நாகையில் உள்ள சி.எஸ்.ஐ அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர் வகுப்பில் இல்லாத காரணத்தால் பள்ளி வளாகத்தில் சக நண்பர்களுடன் விளையாடி உள்ளார்.

    இதனை கண்ட தலைமை ஆசிரியர் தன்ராஜ் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஸ்டீபன் ஆகியோர் முஹம்மது அனஸ், யூசுப், ஹரி பாலன் ஆகிய மூவரையும் பிரம்பால் அடித்துள்ளனர். இரண்டு ஆசிரியர்களும் மாறி மாறி அடித்ததில் தொடை, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் காயமடைந்த முஹம்மது அனசை பெற்றோர் மீட்டு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நாகை டவுன் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு ஆசிரியர்களையும் உடனே கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நாகையில் மாட்டுக்கறி சாப்பிட்ட விவகாரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே மாட்டு இறைச்சி சாப்பிட்டது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. சிக்கல் பகுதியில் தற்காலிக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

    இந்த நிலையில் முஸ்லிம் இளைஞர்களை போலீசார் கைது செய்ததாக கூறி நாகை புதிய பஸ் நிலையம் அருகே அவுரி திடலில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதனால் நேற்று துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராதாகிருஷ்ணன், சுப்பிரமணியன் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் நாகை புதிய பஸ் நிலைய பகுதியில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் திரண்டு போலீசாரை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். அதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றினர். அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பெண்கள் உள்பட 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மினி பஸ் சக்கரம் ஏறி சிறுவன் பலியான சம்பவம் குத்தாலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக மினி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மகன் விஸ்வா (வயது 5).

    இந்த நிலையில் விஸ்வாவும், சிவானந்தம் அக்காள் மகள் மோனிசாவும் குத்தாலத்தில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு மினி பஸ்சில் வந்து இறங்கினர்.

    அப்போது மோனிசா முதலில் பஸ்சில் இருந்து இறங்கினார். அடுத்ததாக சிறுவன் விஸ்வா, இறங்கிய போது டிரைவர் கவனிக்காமல் பஸ்சை கிளப்பினார்.

    இதில் சிறுவன் நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது கண் இமைக்கும் நேரத்தில் சிறுவன் விஸ்வா மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஸ்வா பரிதாபமாக இறந்தான்.

    இந்த சம்பவம் பற்றி குத்தாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் மினி பஸ் டிரைவர் விக்னேசை போலீசார் கைது செய்தனர்.
    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே கள்ளக்காதலன் வீட்டில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள சிங்கனோடை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சண்முக வடிவேல் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரிதா. இவர் களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் சண்முகவடிவேல், கள்ளக்குறிச்சியில் தங்கி ஒரு செங்கல்சூளையில் வேலை பார்த்தார். அப்போது அங்கு காஞ்சனா (32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. காஞ்சனாவுக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். சண்முக வடிவேலின் கள்ளக்காதல் விவகாரம், அவரது மனைவி சரிதாவுக்கு தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த அவர் கோபித்துக்கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இதன்பிறகு சண்முக வடிவேல், கள்ளக்காதலி காஞ்சனாவுடன் சிங்கனோடையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சண்முக வடிவேலும், காஞ்சனாவும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். பின்னர் காலையில் சண்முக வடிவேல் எழுந்து பார்த்த போது, வீட்டில் காஞ்சனா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருக்கடையூர் போலீசுக்கு தகவல் கொடுக்கார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் காஞ்சனா உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் விசாரணையில் மன உளைச்சலால் காஞ்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. கள்ளக்காதலன் சண்முக வடிவேல், தன்னை கைவிட்டு சென்று விடுவாரோ என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    நாகை பகுதியில் சாராயம்-மதுபானம் கடத்திய 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வருவதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் உத்தரவிட்டதின் பேரில் போலீசார் தீவிர ரோந்து சென்று சாராயம் மது பாட்டில்கள் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் நாகை மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம், மது பாட்டில்கள் கடத்தி வந்த கடம்பர வாழ்க்கை கீழத் தெருவை சேர்ந்த மாரியம்மாள் (வயது 48), மாந்தை மெயின் சாலையை சேர்ந்த சாந்தி (46) உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ஆயிரத்து 435 லிட்டர் சாராயமும், 205 மது பாட்டில்களும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி செம்பனார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோவில் அடுத்த மேமாத்தூரை சேர்ந்தவர் சீதளாதேவி(வயது 17). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் குளியலறைக்கு சீதளாதேவி சென்றார். அப்போது அங்கிருந்த சுவீட்சை போட்ட போது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி செம்பனார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகை அருகே செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கோகூர் தெற்கு பாப்பாகுடி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் தீனதயாளன் (வயது 19). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் தனக்கு செல்போன் வாங்கி தர சொல்லி அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்துள்ளார். அவரது பெற்றோர் வாங்கி தர மறுத்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்து வீட்டில் வைத்திருந்த எலி மருந்தை தின்று மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தீனதயாளன் இறந்தார்.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். இதன்பின்னர் ஜவாஹிருல்லா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் விளைநிலங்களில் போலீஸ் பாதுகாப்புடன் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக கெயில் நிறுவனம் குழாய் பதித்து வருவது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை தரணியை சுடுகாடாக்கும் முயற்சியாக தெரிகிறது.

    தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் கூலியாளாக மத்திய-மாநில அரசு விளங்குவதை வன்மையாக கண்டிக்கிறோம். வருகிற ஆகஸ்டு 18-ந் தேதி மயிலாடுதுறையில் நடைபெற உள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாட்டில் ம.ம.க. மற்றும் த.மு.மு.க. நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள்.

    தமிழகத்தில் சில வாரங்களாக தேசிய புலனாய்வு விசாரணை என்ற பெயரில் பலரை கைது செய்வதும் அவர்கள் பரப்பி வரும் செய்திகளும் அமைதியாக வாழும் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்கி வருகிறது.

    மயிலாடுதுறையை தலை நகராக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என நீண்டநாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்பொழுது அறிவித்துள்ள புதிய மாவட்டங்கள் போல் அனைத்து தகுதிகளும் கொண்ட மயிலாடுதுறையை தமிழக அரசு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொறையாறு அருகே மாமியார் கொடுமையால் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள உத்திரங்குடி கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 40). இவரது மனைவி தேவி(32). இந்த தம்பதியினருக்கு ஜனனி(8), ஜெயமித்திரன்(3) என்ற குழந்தைகள் இருந்தனர்.

    ரமேஷ், சென்னையில் தங்கி ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். தேவி தனது குழந்தைகளுடன் உத்திரங்குடியில் வசித்து வந்தார். தேவிக்கும், அவரது மாமியார் மல்லிகா(65) என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேவி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.

    நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் மாமியார் மல்லிகா மற்றும் அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் தேவி மற்றும் அவரது குழந்தைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குழந்தைகள் ஜெயமித்திரன், ஜனனி ஆகியோர் பிணமாக மிதந்தனர். மேலும், அந்த குளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் தேவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், பொறையாறு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேவி மற்றும் அவரது குழந்தைகள் ஜனனி, ஜெயமித்திரன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய தேவி, தனது குழந்தைகளை குளத்தில் உள்ள தண்ணீரில் அமுக்கி கொலை செய்து விட்டு பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    நாகையில் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை புதிய கடற்கரை சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. அங்கு வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வெளிப்பாளையம் கவரை தெருவை சேர்ந்த முரளி (வயது 34) என்பதும், தஞ்சை-காரைக்கால் ரெயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது.

    இதேபோல் நாகூர் ரெயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகை ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவர் வெள்ளை நிற அரைக்கை சட்டை அணிந்திருந்தார். இறந்தவர் யார்? எந்த ஊர்? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே திருமணத்துக்கு வாங்கிய நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஆர்.எம்.எஸ். காலனியை சேர்ந்தவர் ரவி(வயது 60). டிரைவர். தற்போது பணி ஓய்வு பெற்று வீட்டில் இருக்கிறார். இவரது மனைவி ஜெயந்தி.

    ரவி தனது மகளுக்கு திருமணம் பேசி முடிவு செய்தார். மாப்பிள்ளை வீட்டுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம், புதிய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வாங்கி வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வெளியூர் சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள்புகுந்து 9 பவுன் தங்க நகை, ரூ. 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த 2 லட்சம் மதிப்புள்ள புது மோட்டார் சைக்கிள்களையும் திருடி சென்று விட்டனர்.

    இதற்கிடையே வீடு திரும்பிய ரவி கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மகள் திருமணத்துக்காக வாங்கிய நகை, பணம் கொள்ளை போனது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.

    இது குறித்து மயிலாடுதுறை போலீசில் ரவி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    மயிலாடுதுறை அருகே மனைவியின் கள்ளக்காதலை கண்டித்ததால் கூலிப்படையை ஏவி காரை ஏற்றி தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள உக்கடை மெயின்ரோட்டை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 52). தொழிலாளி. இவரது மனைவி ஷீலா (40).இந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7-ந் தேதி மர்மமான முறையில் மணல்மேடு அருகே நாரணமங்கலம் பகுதியில் தலை நசுங்கியநிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் அருகே அவர் ஓட்டிச்சென்ற மொபட்டும் கிடந்தது. மேலும் அங்குள்ள புளிய மரத்தில் ஒரு கார் மோதிய நிலையில் கிடந்தது.

    இதுபற்றி மணல்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் மணல்மேடு போலீசார் சித்தமல்லி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பட்டவர்த்தியை சேர்ந்த ராஜேஷ்(32), சேத்தூரை சேர்ந்த சிவசிதம்பரம் (23) ஆகியோரை விசாரித்தனர். இதில் அவர்கள் 2 பேரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்றும்,ராஜ கோபாலை காரை ஏற்றி கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து 2 வாலிபர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். இதில் ராஜகோபால் அவரது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டப்பட்டது தெரியவந்தது.

    ராஜகோபாலுக்கும், அதே பகுதியை சேர்ந்த அமீர்ஹைதர்கானுக்கும் இடையே நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது. அமீர் ஹைதர்கான் மயிலாடுதுறை பகுதியில் உள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் அமீர் ஹைதர்கானுக்கும், ராஜ கோபாலின் மனைவி ஷீலாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதல் விவகாரம், அவரது மனைவிக்கு தெரியவந்தது. இதனால் மன முடைந்த அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் அமீர் ஹைதர்கானின் மகனும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    மனைவி- மகன் இறந்த பிறகும் அவர் திருத்தவில்லை. தொடர்ந்து ஷீலாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார்.

    மேலும் ஷீலாவுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அமீர் ஹைதர்கான், தனது சில சொத்துக்களுக்கு ராஜ கோபாலை பினாமியாக நியமித்து இருந்தார்.

    இதற்கிடையே மனைவி ஷீலாவின் கள்ளக்காதல் விவகாரம் ராஜகோபாலுக்கு தெரியவந்தது. பலமுறை நேரில் பார்த்த அவர் மிகவும் மனமுடைந்தார். இதனால் அவர் அமீர் ஹைதர்கான் மற்றும் மனைவி ஷீலாவையும் கண்டித்தார்.

    இதையடுத்து அமீர் ஹைதர்கான், ராஜகோ பாலை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி அவர் கூலிப்படையை ஏவி காரை ஏற்றி ராஜகோபாலை கொலை செய்தது தெரிய வந்தது. இந்த கொலையை ஒரு விபத்து போல் அரங்கேற்றி நாடகமாடியதும் தெரியவந்தது.

    தற்போது கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், சிவ சிதம்பரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் அமீர் ஹைதர்கான் மற்றும் ஷீலா உள்பட 4 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ×