search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wife wrong relationship"

    தூத்துக்குடியில் மனைவியிடம் கள்ளத்தொடர்பு வைத்ததால் ஆத்திரத்தில் ஆசிரியரை வெட்டி கொலை செய்தேன் என்று கைதான சப்-இன்ஸ்பெக்டர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ்(வயது 59). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சத்யா தியேட்டர் அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் தாளமுத்துநகர் டி.சவேரியார்புரத்தை சேர்ந்த பிரான்சிஸ்(52) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

    இவர் மத்திய ரிசர்வ் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்று வந்துள்ளார். இவர் திடீரென முன்னால் சென்று கொண்டு இருந்த அந்தோணி துரைராஜின் மோட்டார் சைக்கிள் மீது தனது மோட்டார் சைக்கிளை வைத்து மோதி உள்ளார். இதில் நிலை தடுமாறிய அந்தோணி துரைராஜ் கீழே விழுந்தார்.

    உடனடியாக பிரான்சிஸ் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் அந்தோணி துரைராஜை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அந்தோணி துரைராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளியை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஓய்வு பெற்ற அந்தோணி துரைராஜூம், பிரான்சிஸ் மனைவி அந்தோணி பவுலினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரே பள்ளியில் வேலை பார்த்து வந்தனர்.

    அப்போது அவர்களுக்கிடையே தொடர்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்தோணி பவுலின் மகள் ஜெனோ செல்வமோனிசா கடந்த ஆண்டு மார்ச் மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் அந்தோணி துரைராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதனிடையே புதூர் பாண்டியாபுரம் பகுதியில் பதுங்கி இருந்த பிரான்சிசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைதான பிரான்சிஸ் போலீசாரிடம் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் மத்திய ரிசர்வ் போலீசில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தேன். எனது மனைவி தனியார் பள்ளியில் வேலை செய்து வந்தார். அவருடன் வேலை செய்த அந்தோணிதுரைராஜூக்கும் எனது மனைவிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த நான் அவர்களை கண்டித்தேன். இந்த நிலையில் எனது மகளுக்கு திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்தோம். எனது மனைவியின் கள்ளத்தொடர்பு காரணமாக மகளின் திருமணம் தள்ளிப் போனது.

    இதனால் வேதனையில் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள். இதனால் நான் எனது வேலையில் இருந்து விருப்ப ஓய்வுபெற்று ஊருக்கு வந்தேன். என் வாழ்க்கையில் இதுபோன்ற பிரச்சினைக்கெல்லாம் காரணம் அந்தோணிதுரைராஜ் என்பதால் அவர்மீது ஆத்திரத்தில் இருந்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து வெட்டி கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×