என் மலர்
மயிலாடுதுறை
- வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
சீர்காழி:
சீர்காழி மின்சார வாரிய செயற்பொ றியாளர் லதா மகேஸ்வரி வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிப்பதாவது:
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால், சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, புங்கனூர், சட்டநாதபுரம், மேலச்சாலை, கதிராமங்கலம், ஆத்துக்குடி, திருப்புங்கூர், தென்பாதி, பனமங்கலம், கோவில்பத்து, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, கற்பகம் நகர், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை வியாழக்கிழமை 29-ம் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா?
- ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த எருக்கூரில் உள்ள ரேசன் கடையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் அமுதவல்லி மற்றும் கலெக்டர் லலிதா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ரேசன் கடையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் மற்றும் அரிசி நல்ல முறையில் வழங்கப்படுகிறதா என்றும், அத்தியாவசிய பொருட்கள் அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தனர்.
அதனை தொடர்ந்து கொள்ளிடம் அருகே திருமயிலாடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ப எடை அளவு சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி நிருபர்களிடம் கூறுகையில்:-
முதல்-அமைச்சர் ஆலோசனைபடி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கண்காணிப்பாளர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாதம் ஒரு முறை எல்லா துறைகளிலும் ஆய்வு செய்ய முதல்-அமைச்சர் உத்தரவிட்டதன் பேரில், ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் விடுதி, பிற்படுத்தப்பட்டோர் விடுதி, ரேஷன்கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகளை ஆய்வு செய்து குறைபாடுகளை களைந்து சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், குடிமை பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர் மணிகண்டன், ஒன்றிய ஆணையர் ரெஜினாராணி, பிடிஓ அருள்மொழி, ஒன்றிய பொறியாளர் தாரா, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அமலாராணி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத்தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.
- தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
- உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசும்போது ;-
நாம் தமிழர் கட்சி என்பது மாற்றத்திற்கான கட்சி. குறைகளை கேட்டு வந்த கட்சி அல்ல தீர்க்க வந்த கட்சி. தமிழகத்தை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்று எல்லோருடைய கனவாக உள்ளது. எல்லோரும் சிறப்பாக வாழ வேண்டும் என்பது தான் நாம் தமிழர் கட்சியின் எண்ணம்.
இன்று நிவாரணம் கேட்டு விவசாயிகள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு உரிய நிவாரணம் அரசு உடனடியாக வழங்க வேண்டும். உயிர் காப்பீடு செய்வது போல் பயிர் காப்பீடு செய்வது முக்கியம் ஆகும். விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து நம் முன்னோர்கள் செய்த இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட விவசாயி–களுக்கு உரிய நிவாரண வழங்கவில்லை என்றால் நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.
இதில் நிர்வாகிகள் காளிதாசன், காளியம்மாள், காசிராமன், ஜவஹர், சுபாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
- மண், நீர் மற்றும் காற்று மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
தரங்கம்பாடி:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமம் அகரகீரங்குடி பகுதியில் நானோ யூரியா ட்ரோன் மூலம் தெளிப்பது குறித்து செயல் விளக்கம் வேளாண்மை உதவி இயக்குனர் சுப்பையன் தலைமையில் தர கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்கு சுபவீரபாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.
நானோ யூரியா இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கின்றது.
நானோ யூரியா உரத்தின் பயன்பாட்டுத்திறன் குருணை வடிவ யூரியாவை விட அதிகமாக உள்ளது. மண் நீர் மற்றும் காற்று மாசு அடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து 8 சதவீத மகசூலை நெற்பயிரில் அதிகரிக்கிறது.
500 மில்லி நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பலனை அளிக்கிறது. ஒரு ஏக்கர் நெல் வயலுக்கு 500 மி.லி நானோ யூரியா மற்றும் 20 மி.லி ஒட்டுப்பசை தேவைப்படுகிறது.
அனைத்து வகையான உதவி பயிர்களுக்கும் யூரியா மேலுறத்திற்கு பதிலாக நானோ யூரியாவை பயன்படுத்தலாம் என்று அட்மா திட்ட வட்டார தொழிற்நுட்ப மேலாளர் திருமுருகன் கூறினார்.
பின்னர் டிரோன் மூலம் நானோ யூரியா தெளிப்பு செயல் விளக்கம் வயலில் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
வேளாண்மை உதவி அலுவலர் சுகுமார், அட்மா திட்ட உதவி மேலாளர்கள் விஜய் மற்றும் மதுமனா ஆகியோர் நிகழ்ச்சி செயல் விளக்க ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.
- வரும் நாடாளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும்.
- மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப்படுத்த வேண்டும்.
சீர்காழி;
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத் தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வைத்தார்.
தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முத்துமகேந்திரன், ஜி. என்.ரவி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் வரவேற்றார். மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்.எல்.ஏ.வுமான நிவேதா முருகன் கலந்து கொண்டு பேசுகையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியை தி.மு.க. வெற்றி பெறபாடுபட வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர படுத்த வேண்டும் என்றார்
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி மாவட்ட அவைத் தலைவர் சீனிவாசன் ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன் மலர்விழி திருமாவளவன்,ரவிக்குமார் ரவிக்குமார் மாவட்டத் துணைச் செயலாளர் ஞானவேலன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர்கள் ஆனந்தன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜிபையர் அகமது, நிர்வாகிகள் துரைராஜன், சசிகுமார், குலோத்துங்கன், ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
- மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 43) மீனவர். இவர் இன்று காலை அதே கிராமத்தை சேர்ந்த நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோருடன் பைபர் படகில் கொட்டாயமேட்டில் இருந்து மீன் பிடிக்க புறப்பட்டார். கரையில் இருந்து 1 கி.மீ. தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்ததில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதில் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார்.
நடராஜன், சூரிய மூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்தனர். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என கூக்குரலிட்டனர். அப்போது அங்கு மற்றொரு படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக நடராஜன், சூரியமூர்த்தியை மீட்டு தாங்கள் வந்த படகில் ஏற்றினர். மேலும் பைபர் படகை கயிறு கட்டி கரைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து காயமடைந்த நடராஜன், சூரியமூர்த்தியை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது பற்றி கடலோர காவல் குழும போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் உதவியுடன், கடலோர காவல் படை குழும போலீசார் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடி வருகின்றனர். இன்று மதியம் வரை பெருமாளை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே பெருமாள் கதி என்ன ஆனது என தெரியாமல் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர்.
மாண்டஸ் புயல், கடல் சீற்றம் உள்ளிட்டவைகளால் 10 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி மாயமான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி.
- ஊர்வலமாக சென்று நினைவு ஸ்தூபி மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி.
தரங்கம்பாடி:
தமிழக கடலோர கிராமங்களை கடந்த 2004 ம் ஆண்டு ஆழிப்பேரலை தாக்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிர் நீத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிர் நீத்ததுடன், மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
ஆழிப் பேரலை தாக்கியதன் 18ம் ஆண்டு நினைவு தினமான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி, சந்திரபாடி, சின்னங்குடி, பூம்புகார், திருமுல்லைவாசல், பழையாறு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் கடற்கரையில் கூடி சிறப்பு ஹோமங்கள் செய்து ஆழிப் பேரலையின் தாக்குதலில் உயிர் நீத்த தங்களது உறவினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து கடலில் நீராடினர்.
தொடர்ந்து ஊர்வலமாக சென்ற மீனவர்கள் ஆழிப் பேரலை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்ப ட்டுள்ள நினைவுச்சின்னம் மற்றும் நினைவிடத்தில் 18 ஆண்டுகளாகியும் மறையாத சோகத்தில் பூஜைகள் செய்து அஞ்சலி செலுத்தி வழிபட்டனர்.
தரங்கம்பாடியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கடற்கரையில் மீனவர்கள் யாகம் செய்து உயிர் நீத்தவர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
அங்கிருந்து மலர் வளையத்துடன் 500க்கும் மேற்பட்டோர் மௌன ஊர்வலமாக நினைவு ஸ்தூபி மற்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் சந்திரபாடி மீனவ கிராம பஞ்சாயத்தார்கள், மௌன ஊர்வலமாக வந்து சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதில் எம்எல்ஏ. நிவேதா முருகன், முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ், பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், முன்னாள் எம் எல் ஏ பாலாஅருட்ச்செல்வன், உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
- குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
- தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரெட் தினேஷ்.ரவுடியான இவர் மீது சீர்காழி, புதுப்பட்டினம், செம்பனார்கோவில் காவல் நிலையங்களிவ் பல்வேறு குற்ற வழக்குககள் நிலுவையில் உள்ளது.
ரவுடியான ரெட் தினேஷ் சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட இவர் தற்போதுதான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு ரெட் தினேஷ் கோவில்பத்து பகுதியில் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து தினேசை அரிவாளால் வெட்டி கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொலையாளிகளை விரைந்து கண்டுபிடிக்க மூன்று தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரர் நிஷா உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர் எதற்காக வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
- 50 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின்கலன் தெளிப்பான், தார்ப்பாய், நானோ யூரியா வழங்கல்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே விளந்திட சமுத்திரம் ஊராட்சியில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை, பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நெற்பயிரில் அதிக மகசூல் பெற ஆதிதிராவிட விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.
மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் முன்னிலை வகித்தார்.
வேளாண்மை கல்லூரி பேராசிரியர் சாமிநாதன் வரவேற்று பேசினார்.
முகாமில் இந்திய நெல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சுந்தரம், வேளாண் கல்லூரி பேராசிரியர் மோகன், வேளாண்மை கல்லூரி பூச்சிகள் துறை பேராசிரியர் கான்டீபன் ஆகியோர் கலந்து கொண்டு நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து ஒன்றிய குழு துணை தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், ஊராட்சி மன்ற தலைவர் ரமணி ராஜ் ஆகியோர் 50 ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மின்கலன் தெளிப்பான், தார்ப்பாய், நானோ யூரியா, பாஸ்போர்ட், யூரியா, அசோஸ்பைரில்லம், ஜிங் சல்பேட் கொண்ட தொகுப்பினை வழங்கினர்.
இதில் வேளாண் உதவி இயக்குனர் ராஜராஜன், வேளாண் அலுவலர்கள் தமிழரசன், ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேளாண் கல்லூரி பேராசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.
- பன்னீர், பால் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை.
- பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி காத்திருப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மகா அஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீ சொர்ணகால பைரவருக்கு அஷ்ட பைரவர் யாகம் நடைபெற்றது.
ஒன்பது யாக குன்டங்கள் அமைத்து சிவாச்சார்யர்கள் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சந்திரசேகர சிவம் தலைமையில் வேதகோஷங்கள் முழங்க யாகபூஜைகள் நடைபெற்று. மகா பூர்ணா ஹூதி நடைபெற்றது. தொடர்ந்து கடங்கள் புறப்பட்டு ஸ்ரீ பைரவர் சன்னதியை வந்தடைந்து 18 வகை திரவியங்கள், பன்னீர், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. ஹம்ஸத்வணி இசைப்பள்ளி மாணவ-மாணவியர்கள் ஆசிரியர் பரணீதரன் தலைமையில் தேவார இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துக்கொண்ட பக்தகோடிகளுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆலய அறங்காவலர் ராஜராஜன், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் செந்தில்குமார், சதானந்தன், பா.ஜ.க. நிர்வாகிகள் அழகிரிசாமி, இளங்கோவன், சேவாபாரதி நிர்வாகிகள் ரங்கதுரை, மும்மூர்த்தி. சமூக ஆர்வலர் ராஜதுரை, கருப்பசாமி, ஆலய நிர்வாகி சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
- முகாமில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே அரங்கக்குடி-வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் அரவிந்தநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் மஜினா பர்வீன் ஷேக் அலாவுதீன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அர்ஷத் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல்அன்சாரி வரவேற்றார்.
இதில் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
முகாமில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட மருத்துவ குழுவினர், ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், பொதுமருத்துவம், இசிஜி, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை களை செய்தனர்.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர். இந்த முகாமில் இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவுகள், குழந்தை களுக்கான ஊட்டச்சத்து தரக்கூடிய உணவுகள் குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டி ருந்தது.
இதில் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், அரங்கங்குடி குட்டி ராஜா மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதாரம் மேற்பார்வையாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
- மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் பெண் சமூகச் சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வெண்கலச் சிலை அமைய உள்ள இடத்தில் சிலைவைக்க பீடம் அமைக்கும் பணி மற்றும் தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு சிலை மற்றும் அரங்கம் அமைய உள்ள இடம், சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர் மற்றும் தில்லைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2010ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.
இந்த மணிமண்டபம் கடந்த காலங்களில் சரிவர பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு வரப்பெற்றது. இதணை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ47,02,500க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம். முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) சரவணன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகர் மன்றத் தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பாலரவிக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






