search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் - அமைச்சர் சாமிநாதன்
    X

    சிலை வைக்க பீடம் அமைக்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு செய்தார்.

    தமிழிசை மூவர் மணிமண்டபம் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் - அமைச்சர் சாமிநாதன்

    • மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணியை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம், நகராட்சிக்குட்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் பெண் சமூகச் சீர்திருத்தவாதி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வெண்கலச் சிலை அமைய உள்ள இடத்தில் சிலைவைக்க பீடம் அமைக்கும் பணி மற்றும் தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு சிலை மற்றும் அரங்கம் அமைய உள்ள இடம், சீர்காழி தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்க்கும் பணி ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த முத்துத் தாண்டவர், பதினெட்டாம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர் மற்றும் தில்லைவிடங்கள் கிராமத்தில் பிறந்த மாரிமுத்தாப் பிள்ளை ஆகிய மூவரின் நினைவாக 2010ஆம் ஆண்டு கருணாநிதியால் தமிழிசை மூவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.

    இந்த மணிமண்டபம் கடந்த காலங்களில் சரிவர பராமரிக்கப்படாததால், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது என பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு வரப்பெற்றது. இதணை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின்படி, தமிழிசை மூவர் மணி மண்டபத்தில் சிறப்பு பழுது பார்ப்பதற்கும், புதிய கழிப்பறை மற்றும் அலங்கார கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கும், பொதுப்பணித்துறையின் மூலம் திட்ட மதிப்பீடு பெறப்பட்டு ரூ47,02,500க்கு நிதியொப்பளிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இவ்வாய்வின்போது மாவட்ட கலெக்டர் லலிதா, எம்.எல்.ஏ.க்கள் நிவேதா எம். முருகன், பன்னீர்செல்வம், ராஜகுமார், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) சரவணன், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை நகர் மன்றத் தலைவர் செல்வராஜ், சீர்காழி நகர் மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டிடம்) பாலரவிக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் (கட்டிடம்) ராமர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×