என் மலர்
மதுரை
- அனைத்து வகுப்புகளுக்கும் திருக்குறள் பாடமாக்கப்பட்டுள்ளது.
- தேர்வுகளில் திருக்குறள் வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மதுரை:
மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பால் அதிகாரங்களில் உள்ள திருக்குறள்களை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில் முழுமையாக பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 2017-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு 1050 திருக்குறள்களை 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டத்தில் சேர்க்க அரசாணை வெளியிட்டது. ஆனால் இந்த உத்தரவு பெயரளவிலேயே உள்ளது.
எனவே 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலின் 1050 திருக்குறள்களை இடம் பெறச்செய்ய உத்தரவிட வேண்டும். இது தேர்விலும் கேள்விகளாக இடம் பெற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அனைத்து வகுப்புகளுக்கும் திருக்குறள் பாடமாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், அதன் பொருள் விளக்கம் போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளது. தேர்வுகளிலும் வினாக்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
- வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ராஜ்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார்.
- ராஜ்குமார் கொடுத்த புகார் பெயரில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
மதுரை:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 31). இவர் சென்னை அமைந்தகரை போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார். வாரம் ஒருமுறை சொந்த ஊருக்கு அவர் வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை பணி முடிந்து சொந்த ஊர் செல்வதற்காக மதுரை வந்த ராஜ்குமார், இரவில் மதுரை மண்டேலா நகர் சந்திப்பு பகுதியில் காரியாபட்டி பஸ்சுக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
இதற்கிடையே மதுரை சோளங்குரணி பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (39) என்பவர் தனது காரில் மண்டேலா நகர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்தார். அப்போது ஆறுமுகத்திற்கும் பெட்ரோல் பங்க் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த காவலர் ராஜ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆறுமுகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரர் ராஜ்குமாரை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ராஜ்குமார் கொடுத்த புகார் பெயரில் அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டி வழக்கு பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தார்.
- 2 கோடி தொண்டர்கள் சார்பில் நான் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன்.
- முதலமைச்சர் செய்த திட்டங்களை பேச தயாரா? என்று சவால் விடுத்தார்.
மதுரை:
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று கூறியதாவது:-
மாவட்டங்கள்தோறும் ஆய்வுக் கூட்டம் என்கிற பெயரிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோ நடத்தி வருவது தமிழக மக்களுக்கு பலன் தரவில்லை. இதுகுறித்து எடப்பாடியார் மக்களுக்கான கேள்விகளை அரசிடம் முன் வைக்கின்ற போது அதை கவனத்தில் எடுத்து செயல்படுத்த வேண்டுமே தவிர, எள்ளி நகையாடுவதும் வரம்பு மீறி பேசுவதும் நாகரீக அரசியலுக்கு ஏற்றவையாக இருக்காது.
எதிர்கட்சித்தலைவர் எடப்பாடியார் ஆதாரத்தோடு சொல்லுகிற குற்றச்சாட்டுகளை எல்லாம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார் என்று, மக்களை திசை திருப்புகிற வேலையில் முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார். எடப்பாடியார் என்ன சொன்னார்? அரசு செலவிலே, அரசு பங்களிப்பிலே செயல்படுகின்ற திட்டங்களுக்கு நீங்கள் தொடர்ந்து உங்கள் தந்தையார் பெயரை சூட்டுகிறீர்கள், உங்கள் டிரஸ்டின் மூலமாக செய்யப்படும் திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைக்க ஆட்சேபனை இல்லை, ஆனால் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் திட்டங்களுக்கு உங்கள் தந்தையார் பெயரை இன்றைக்கு நீங்கள் தொடர்ந்து சூட்டுவதால் மக்கள் முகம் சுளிக்கிறார்கள் என்று மக்களின் எண்ணத்தை எடப்பாடியார் கேள்வியாக கேட்டு உள்ளார்.
எடப்பாடியார் முன்வைத்த அந்த கோரிக்கைகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாமல் மு.க.ஸ்டாலின், எடப்பாடி யாரை பார்த்து உங்களுக்கு என்ன திறமை இருக்கிறது? என்று ஒரு தரம் தாழ்ந்த கேள்வியை கேட்கிற போது, அதற்கு எடப்பாடியார் நான் கடந்த நான்கரை ஆண்டு காலம் முதலமைச்சராக இருந்து மக்களுக்கு செய்த திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.
ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 புதிய மாவட்டங்கள், குடிநீர் திட்ட பணிகள், கால்நடை பூங்காக்கள், சாலை பணிகள், 7.5 சதவீத இட ஒதுக்கீடு, குடிமராமத்து திட்டங்கள், 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு, மேட்டூர் அணை தூர்வாருதல், அம்மா திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், கிராமப்புறம் மேன்மை அடைய கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், மடிக்கணினி திட்டம், தடுப்பணை கட்டி அதன் மூலம் நீர்நிலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை புள்ளி விவரத்துடன் என்னால் பேச முடியும். முதலமைச்சர் செய்த திட்டங்களை பேச தயாரா? என்று சவால் விடுத்தார்.
ஆனால் இன்றைக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எடப்பாடியாரை பார்த்து சவால் விடுகிறார். 2 கோடி தொண்டர்கள் சார்பில் நான் உதயநிதி ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். முதலமைச்சர் ஸ்டாலின் மகனான உங்களோடு விவாதிப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் எந்த இடத்திற்கு அழைத்தாலும் நாங்கள் தயார்?
எடப்பாடியாருக்கு சவால் விடும் அளவிற்கு உதயநிதிக்கு தகுதியும், அனுபவம் இன்னும் வரவில்லை. சவால் விடுவது என்பது முக்கியமில்லை, மக்களை காப்பது தான் முக்கியம் என்பதை உதயநிதி நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது.
- அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
பிராமண சமூகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி திராவிடர்கள் குறித்தும், தெலுங்கு மக்கள் குறித்தும் அவதூறாக பேசினார். குறிப்பாக, தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசிய கருத்தானது தெலுங்கு அமைப்புகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நடிகை கஸ்தூரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தான் பேசிய பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார். ஆனாலும் பல மாவட்டங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார்.
இந்நிலையில், மதுரை திருநகரில் நாயுடு மகாஜன சங்கம் அளித்த புகாரில், கஸ்தூரி மீது 6 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், "தெலுங்கு மக்கள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் அரசியல் உள்நோக்கத்தோடு, என் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுப்படுகிறேன். ஆகவே, எனக்கு இந்த வழக்கில் போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நாளை விசாரணைக்கு வர உள்ளது.
- மர்ம தேசம் உள்ளிட்ட படைப்புகளை கொடுத்த எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் காலமானார்.
- என் பெயர் ரங்கநாயகி, மர்மதேசம், விடாது கருப்பு உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன.
பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் மதுரையில் உள்ள தன் இல்லத்தில் குளியலறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்திரா சௌந்தர்ராஜனின் இயற்பெயர் சௌந்தர்ராஜன். 1958-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி சேலத்தில் பார்த்தசாரதி -இந்திரா தம்பதியினருக்குப் பிறந்தார். நாற்பது ஆண்டுகாலமாக மதுரையில் வசிக்கிறார்.
நாவல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு போன்ற பல துறைகள் மூலம் புகழ்பெற்றவர்.
இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர். இவருடைய கதைகள் பொதுவாக அமானுஷ்ய நிகழ்வு, தெய்வீக தலையீடு, மறுபிறவி, பேய்கள் போன்ற விஷயங்களை உள்ளடக்கியிருக்கும். இவர் கதைகள் தமிழ் நாட்டின் பல பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டன.
என் பெயர் ரங்கநாயகி, மர்மதேசம், விடாது கருப்பு, சொர்ண ரேகை, உள்ளிட்ட புகழ்பெற்ற கதைகளை எழுதியுள்ளார். என் பெயர் ரங்கநாயகி, மர்ம தேசம், விடாது கருப்பு உள்ளிட்ட படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாக வந்துள்ளன. இந்த தொடர்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது வரைக்கும் யாருமே மறக்க முடியாத தொடர்களாக இது உள்ளது. சிங்காரம், அனந்தபுரத்து வீடு ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதையும் எழுதியுள்ளார்.
- மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
- இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஐப்பசி மாத பவுர்ணமி (15-ந்தேதி), பிரதோஷத்தை (13-ந்தேதி) முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 13-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட 4 நாட்களில் மலையேற வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டும் அனுமதி 11-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
பாலித்தீன் கேரிப்பை, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு வர அனுமதி இல்லை. அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.
பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.
வருகிற 16-ந்தேதி கார்த்திகை மாத பிறப்புன்று பக்தர்கள் வருகை அதிகளவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழக அரசின் நீர்வளத்துறை அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மதுரை:
மதுரை பீ.பி.குளம் முல்லை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நிலத்திற்கு பட்டா இல்லை யென கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேற்கண்ட குடியிருப்புகள் நீர்பிடிப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த வீடுகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் நீர்வளத்துறை மூலம் குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில் 48 ஆயிரத்து 990 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பீ.பி.குளம் கண்மாய் நீர்பிடிப்பின் ஒரு பகுதியினை ஆக்கிரமிப்பு செய்து உள்ளீர்கள்.
ஆக்கிரமிப்பை காலி செய்வது தொடர்பாக ஏற்கனவே அதற்கான படிவங்கள் மூலம் 2 முறை அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால் இதுவரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே நாளை 10-ந்தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றி கொள்ள காலகெடு வழங்கப்படுகிறது.
அதற்குள் அகற்றாத பட்சத்தில் மறுநாள் (11-ந்தேதி) நீர்வளத்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அப்போது உடமைகளுக்கு சேதம் ஏற்பட்டால் நிர்வாகம் பொறுப்பேற்காது. மேலும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக அரசின் நீர்வளத்துறை அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீடுகளை காலி செய்ய மேலும் கால அவகாசம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் நீர்வளத்துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் விருதுநகருக்குவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மனு கொடுக்க முடிவெடுத்தனர்.
அதன்படி இன்று காலை பீ.பி.குளம் முல்லை நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் வேன், கார், ஷேர் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களில் சென்று முதலமைச்சரை சந்தித்து மனு கொடுக்க புறப்பட தயாரானார்கள்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். முதலமைச்சரிடம் மனு கொடுக்க உரிய அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை அவர்கள் ஏற்க மறுத்தனர்.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- 20 நாட்களாக சாக்கடை நீர் நிரம்பி இருக்கிறது.
- பொதுப்பணி துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கும் முதலமைச்சர் ஏன் முன்பே செய்யவில்லை.
மதுரை:
மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை ஆய்வு மேற்கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஏன் பணிகள் மந்தமாக நடைபெறுகிறது என்று அதிகாரிகளை கடிந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சொல்லி இருக்கிறது என்றால் உயர்நீதிமன்றம் முல்லை நகருக்கு மட்டும் சொல்லவில்லை. மதுரையில் இருக்கும் எல்லா இடங்களுக்கும் தான் சொல்லி இருக்கிறது.
அப்படி செய்ய வேண்டும் என்றால் முதலில் உயர்நீதிமன்றத்தை தான் அகற்ற வேண்டும். அதுவும் நீர்நிலையில் தான் இருக்கிறது.
20 நாட்களாக சாக்கடை நீர் நிரம்பி இருக்கிறது. ஏன் அமைச்சர்கள் வந்து பார்க்கக்கூடாதா?
இந்த பகுதியில் தொற்று நோய் பரவி வருகிறது. எல்லோரும் எளிய மக்கள்.
இப்போது பொதுப்பணி துறைக்கு ரூ.11 கோடி ஒதுக்கும் முதலமைச்சர் ஏன் முன்பே செய்யவில்லை.
முதல்வர் ஆய்வு கூட்டம் நடத்தி இருப்பார். மதுரையில் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இடங்களை சொல்லி இருப்பார்கள். அதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த அரசாங்கம் வெறும் பெயரளவுக்குதான். கூட்டணி பலம் இருக்கிறது.
என்ன கூட்டணியாக இருந்தாலும் இந்த அரசாங்கத்தின் மீது உள்ள வெறுப்புணர்ச்சி காரணமாக இந்த கூட்டணியில் சேரும் கட்சிகள் எல்லாமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்போகிறார்கள். இதுதான் நடக்கப்போகிறது என்று கூறினார்.
- பிரேத பரிசோதனை அறிக்கையில் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.
- போலீசார் ராணுவத்தில் பணியாற்றிய மருதுபாண்டியை ஓராண்டுக்கு பின் கைது செய்தனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் மருதுபாண்டி (27). இருவரும் நண்பர்கள்.
ராணுவத்தில் வேலை பார்த்து வந்த மருதுபாண்டி ஊருக்கு வரும்போது ராஜபாண்டியுடன் வெளியே செல்வது வழக்கம். மேலும் 2 பேரும் சேர்ந்து அடிக்கடி மதுகுடித்து வந்தனர். கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி புலியூர் பகுதியில் ராஜபாண்டி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவரது நண்பர் மருது பாண்டியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக ராஜபாண்டிக்கு மதுவில் விஷம் கலந்து மருதுபாண்டி கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் ராணுவத்தில் பணியாற்றிய மருதுபாண்டியை ஓராண்டுக்கு பின் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
- இப்போது பந்தல்குடி வாய்க்காலில் வேலை பார்ப்பவர்கள் மழை வருவதற்கு முன் ஏன் செய்யவில்லை.
- கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக்கூடியது.
மதுரை:
திமுக கூட்டணி புயலில் அடித்துக்கொண்டு போகும் என்று சொல்கிறீர்களே...
துளி கூட அசையாது... ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு... ஆலமரத்தை அழிக்க சில பேர் வேரெடுத்துக்கொண்டு வருகிறார்கள் என்று உதயநிதி சொல்கிறார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சொல்வது எல்லாம் சரிதான். வெள்ளத்தில் ஆலமரமே பிடுங்கிக்கொண்டு போயிருக்கிறது.
உலகமே அழிந்திருக்கிறது. உதயநிதிக்கு தெரியவில்லை.
எத்தனை கூட்டணி பலம் இருந்தாலும் மக்கள் பலம் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் தான் நமக்கு எஜமானர். அந்த மக்களுக்கு செய்யாமல், கூட்டணி பலத்தோடு மக்களை போய் சந்திப்போம் என்று சொன்னால் என்ன அர்த்தம்.
பந்தல்குடி வாய்க்காலில் எத்தனை ஜேசிபி கொண்டு வேலை நடக்கிறது என்று பாருங்கள்.
இப்போது பந்தல்குடி வாய்க்காலில் வேலை பார்ப்பவர்கள் மழை வருவதற்கு முன் ஏன் செய்யவில்லை.
மக்கள் பணியை மட்டும் பாருங்கள் என்று பொதுச்செயலாளர் சொல்லி இருக்கிறார்.
மக்களுக்கான திட்டங்கள் சென்றடைகிறதா?, கட்டமைப்பை வலுப்படுத்துங்கள், மக்கள் குறைகளை எடுத்துச்சொல்லுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் பாமக கட்சி கூட்டணி குறித்து எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். 10 நாளைக்கு முன்பு எங்களுடன் தான் கூட்டணி என்றார்கள். 10 நாளில் எல்லாம் மாறி விட்டது.
கூட்டணி என்பது இப்போது பேசக்கூடிய தருணம் இல்லை. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கக்கூடியது. இப்போது கூட்டணி பற்றி பேசுவது வேஸ்ட்.
கிழக்கு பகுதியில் உள்ள 28 வார்டுகளில் மாநகராட்சி பணி மெத்தனமாக உள்ளது. 100 வார்டுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
அமைச்சர் மூர்த்தி இருக்கும் தொகுதியிலே இதுபோல் இருக்கிறது என்று கூறினார்.
- 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
- மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.
திருப்பரங்குன்றம்:
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 2-ம் தேதி தொடங்கியது.
விழாவினை முன்னிட்டு தினமும் காலையிலும், மாலையிலும் சண்முகர் சன்னதியில் சண்முகர் வள்ளி தெய்வானைக்கு சண்முகார்ச்சனைகள் நடைபெற்றன.

விழாவின் 5-ம் நாள் நிகழ்ச்சியாக கடந்த 6-ந்தேதி வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார லீலை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழை யையும் பொருட்படுத்தாமல் சூரசம்கார லீலையை கண்டு களித்தனர். தொடர்ந்து கோவிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதையடுத்து பூ சப்பரத்தில் எழுந்தருளி சுப்ரமணிய சுவாமி தெய்வானை உடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
விழாவின் நிறைவு நாளான இன்று காலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு பால், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடன் தங்கமயில் வாகனத்தில் சிறிய சட்டத்தேரில் எழுந்தருளினார். காப்பு கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் தேரை வடம் பிடித்து கிரிவலப் பாதை வழியாக இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து இன்று மாலை 3 மணி அளவில் பாவாடை தரிசனமும் அதனைத் தொடர்ந்து மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு தங்க கவச அலங்காரமும் நடைபெறுகிறது.
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அதிகாலையில் மாவிளக்கு எடுத்து தங்களது கந்த சஷ்டி விரதத்தை முடித்துக் கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடு களை கோவில் அறங்கா வலர் குழு தலைவர் சத்திய பிரியா பாலாஜி, அறங்கா வலர்கள் சண்முகசுந்தரம், மணி செல்வம், பொம்ம தேவன், ராமையா, கோவில் துணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
- வாசுதேவனும் மது போதையில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மதுரை:
மதுரை செல்லூர் நந்தவனம் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 62). இவருக்கு ராமன், லட்சுமணன் என இரண்டு மகன்கள் இருந்தனர். இதில் லட்சுமணன் (22) படித்துவிட்டு, எந்தவித வேலைக்கும் செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி சுற்றித்திரிந்தார்.
மேலும் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு தந்தை மற்றும் உறவினர்களிடையே தகராறிலும் ஈடுபட்டு வந்துள்ளார். பலமுறை பெற்றோர் அவரை கண்டித்தும் லட்சுமணன் திருந்தவில்லை. பல சமயங்களில் மது பாட்டிலை வாங்கி வந்து வீட்டிலேயே குடிக்கும் நிலைக்கு வந்ததால் அவரது பெற்றோர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் நள்ளிரவில் வீடு திரும்பிய லட்சுமணன், மேலும் தனக்கு மது வேண்டும் என்று வற்புறுத்தி தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாசுதேவன் தனது வீட்டில் உள்ள கிரைண்டர் கல்லை எடுத்து லட்சுமனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் நிலைகுலைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து இறந்த லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மகனை கொடூரமாக கொலை செய்த வாசுதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் வாசுதேவனும் மது போதையில் இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் செல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






