என் மலர்tooltip icon

    மதுரை

    • எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக இருந்தாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல.
    • பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை:

    திருவண்ணாமலையைச் சேர்ந்த அரங்கநாதன், தமிழக அரசின் தமிழ் வழியில் அர்ச்சராக பயின்று தற்போது திருவண்ணாமலை கோவிலில் அர்ச்சராக பணி புரிந்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி கடந்த ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி கடந்த ஆண்டு மே மாதம் 18-ந்தேதி நடைபெற்ற நிகழ்வில், எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணமும் செய்யப்பட்டது.

    2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப் பிரதட்சணம் செய்யும் நிகழ்வுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை மறைத்து ஐகோர்ட்டில் எச்சிலையில் அங்க பிரதட்சணம் செய்ய அனுமதி பெறப்பட்டது.

    இந்த உத்தரவு பலராலும் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்க பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.

    இதே போல தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக கரூர் மாவட்ட கலெக்டரும் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்குகளை நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பை இதே நீதிபதிகள் சென்னை ஐகோர்ட்டில் இருந்து இன்று பிறப்பித்தனர்.

    அந்த தீர்ப்பில், எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்வது வழிபாட்டு முறையாக இருந்தாலும், அது சுகாதாரத்திற்கும், மனித மாண்புக்கும் உகந்தது அல்ல. ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

    இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், அது போன்ற நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    • வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் இருந்தனர். 19 வயதான மகன் அழகர்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கட்டிட வேலை உட்பட கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது கதவை திறந்து தம்மை அழைத்தது யார் என்று பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அழகர்சாமியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்ட தொடங்கினர்.

    இதில் நிலைகுலைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிய அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.அர்விந்த் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறில் அழகர்சாமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    வேலைக்கு அழைப்பது போல் அழைத்து வீட்டின் வாசலிலேயே வைத்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார்.
    • வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.

    மதுரையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை குறைக்க மும்மொழிக் கொள்கை கொண்டு வரப்படுகிறது.

    * மத்திய பா.ஜ.க. அரசின் மும்மொழிக் கொள்கையை அறிவுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    * பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றாமல் குறுக்கு வழியில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது.

    * 1968-ம் ஆண்டு தேசிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை என சட்டம் இயற்றப்பட்டது.

    * 1968-ல் இருந்து மும்மொழி கொள்கை பேசப்பட்டு வந்தாலும் இதுவரை எங்கேயும் அமல்படுத்த முடியவில்லை.

    * கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்தி தெரியாது என்கிறார். அதனால் அவருக்கு ஏதாவது பாதிப்பு வந்ததா?

    * வெற்றிகரமான ஒரு கல்வி முறையை நீக்கிவிட்டு தோல்வி அடைந்த கல்வி முறையை அறிவுள்ளவர்கள் ஏற்பார்களா?

    * தமிழ்நாடு பின்பற்றிய இருமொழி கொள்கையால் சிறப்பான விளைவுகளை பெற்றுள்ளோம்.

    * கல்வியில் தேசிய சராசரியை விட தமிழகத்தில் சராசரி அதிக அளவில் உள்ளது.

    * வட மாநிலங்களில் இருமொழி கொள்கையை அமல்படுத்தியிருந்தால் 3-வது மொழி தேவைப்படாது.

    * வட இந்தியாவில் 2-வது மொழியை முழுமையாக கற்று கொண்டிருந்தால் 3-வது மொழி தேவைப்பட்டிருக்காது.

    * இருமொழி கொள்கையை கூட அமல்படுத்த முடியாதவர்கள் நம்மை 3-வது மொழி கற்க சொல்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்பது இல்லை.
    • ஒவ்வொரு மாநிலத்தின் அரசுப்பணியாளர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்து இருப்பது அவசியம்.

    மதுரை:

    தேனி மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெய்குமார். இவர் தேனி மாவட்ட மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக 2018-ம் ஆண்டில் சேர்ந்தார். இவர் சி.பி.எஸ்.இ. பள்ளியில் படித்தவர். இதனால் பணியில் சேர்ந்த 2 ஆண்டுக்குள் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் தமிழ் மொழித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவர் இந்த நிபந்தனையை நிறைவேற்றாததால் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    இந்த உத்தரவை ரத்து செய்து தன்னை மீண்டும் பணியில் சேர்க்கக்கோரி ஜெய்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழகத்தில் அலுவல் மொழி தமிழ். அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழில்தான் நடைபெறுகின்றன. மின்வாரியத்திலும் இந்த நடைமுறை உள்ளது. இதனால் ஒவ்வொரு ஊழியருக்கும் தமிழ் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டும் என்ற மின்வாரியத்தின் நிலைப்பாட்டில் தவறு கிடையாது.

    இருந்தபோதும் மனுதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதால் மீண்டும் தமிழ் தேர்வு எழுத ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி மீண்டும் நடந்த தேர்விலும் ஜெய்குமார் வெற்றி பெறாததால் அவரை பணி நீக்கம் செய்து மின்வாரிய பொறியாளர் உத்தரவிட்டார். இதையடுத்து மீண்டும் மதுரை ஐகோர்ட்டில் ஜெய்குமார் வழக்கு தொடர்ந்தார்.

    அதனை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழக அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்து இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் மனுதாரர் தமிழகத்தை சேர்ந்த பச்சை தமிழன் என்று கூறி இவருக்கு பணி வழங்க வேண்டும் என 2022-ம் ஆண்டில் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவு, அரசு ஊழியர்களின் பணி வரன்முறை விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், பூர்ணிமா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தமிழ் வழியில் கல்வி கற்பது இல்லை. தமிழ் மொழி தேர்வில் வெற்றி பெறுவதும் இல்லை. இந்த சூழ்நிலையில் மனுதாரர் தமிழ்த்தேர்வில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசு பணியில் மட்டும் எப்படி நீடிக்க முடியும்? சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்துவிட்டு தமிழக அரசு வேலைக்கு வருவது ஏன்? தமிழக அரசு துறைகளில் தமிழ்மொழி தெரியாதவர்களை ஏன் வேலையில் சேர்க்க வேண்டும்? என கேள்வி எழுப்பினர்.

    மேலும், ஒவ்வொரு மாநிலத்தின் அரசுப்பணியாளர்கள் அந்தந்த மாநில மொழியை தெரிந்து இருப்பது அவசியம். அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசுப்பணியாளர்கள் தமிழ் மொழியை பேசவும், எழுதவும் தெரிந்திருக்கவும் வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கில் தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • இன்றைக்கு தி.மு.க.வும், பன்னீர்செல்வம் உட்பட பலர் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதாக ஒரு தவறான பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள்.
    • நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும்.

    மதுரை:

    மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் எந்தவித சாதி பாகுபாடும் கிடையாது. அனைவரும் சம தர்மமாக இயக்கத்தில் உள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பின்பு பன்னீர்செல்வம் தர்மயுத்தம் தொடங்கினார். ஆனால் ஒட்டுமொத்த தொண்டர்களும், நிர்வாகிகளும் எடப்பாடியார் பின்னால் அணிவகுத்து நின்றார்கள்.

    எடப்பாடியாரிடம் ஆளுமை திறன் உள்ளது. இதே பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும், அமைச்சராகவும் இருந்தார். ஆனால் எந்த ஒரு முடிவையும் உடனே எடுக்கமாட்டார். பன்னீர்செல்வத்தை இரண்டாம் இடத்திற்கு தகுதியானவராக இருந்தாரே தவிர, முதல் இடத்திற்கு தகுதி அவரிடம் இல்லை. அதே போன்று முடிவெடுப்பதில் ஆளுமை அவரிடம் எதுவும் இருக்காது.

    பன்னீர்செல்வம் அமைச்சராக இருந்தபோது, அவரை பார்க்க சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சிக்காரர்கள் என அனைவரும் காத்திருப்பார்கள். அவர்களிடம் 10 நிமிடம் கழித்து பார்த்துக் கொள்ளலாம் என்று போய்விடுவார். இதே எடப்பாடியார் அமைச்சராக இருந்த பொழுதும் சரி, முதலமைச்சர் இருந்த போதும் சரி உடனடியாக அதற்கு தீர்வு காண்பார்.

    ஜெயலலிதா இருக்கும்போது ஒரு வேலையை மற்றவர்களை பார்க்க வைத்து அதை தான் செய்தது போல அம்மாவிடம் பேர் வாங்கிக் கொள்வார். அவர் இருக்கும்போதே பன்னீர்செல்வத்தின் மீது கட்சியினர் நம்பிக்கை இழந்தனர். அவரது மறைவுக்குப் பின்பு இந்த ஆட்சி ஒரு மாதம் கூட தாங்காது என்று கூறினார்கள். ஆனால் நான்கரை ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை எடப்பாடியார் செய்தார்.

    அதுமட்டுமல்ல 18 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கவர்னரை சந்தித்தார்கள். உடனடியாக அவர்களை தகுதி நீக்கம் செய்து இடைத்தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார். தினகரனை நம்பி சென்ற அந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் பாதி பேர் கடனாளியாக உள்ளனர், பாதி பேர் கட்சியில் இல்லை, மீதி பேர் தி.மு.க.வில் சேர்ந்து விட்டார்கள்.

    இன்றைக்கு தி.மு.க.வும், பன்னீர்செல்வம் உட்பட பலர் அ.தி.மு.க. பலவீனமாக இருப்பதாக ஒரு தவறான பொய் பிரசாரத்தை பரப்பி வருகிறார்கள். கட்சி பலவீனமாக இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கோபி, சிவகாசியில் தான் வெற்றி பெற்றார்.

    அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு செல்வாக்கு இல்லை என்று சொல்லி கருணாநிதி அப்போது மத்திய அரசிடம் கூறி ஆட்சியை கலைத்தார். பின்னர் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். மறையும் வரை முதலமைச்சராக இருந்தார்.

    அதேபோன்று 1996 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தோல்வி அடைந்த பின்பு கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்று கூறினார்கள். ஆனால் 2001, 2011, 2016 தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். அதேபோல் இன்றைக்கு பழைய பல்லவியைதான் பாடி வருகிறார்கள். நிச்சயம் 2026 சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் ஜெயலலிதா ஆட்சி மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு.
    • வேளாண் துறைக்கு புகார் அளித்தும் எந்த பதிலும் இல்லை.

    ராமநாதபுரம்:

    நாட்டின் முதுகெலும்பாக விவசாயிகள் கூறப்பட்டபோதிலும், இன்னும் அவர்கள் நிமிர முடியாத நிலையிலேயே உள்ளனர். சிறு விவசாயிகள் அயராத உழைத்த போதிலும் அதற்கேற்ற பலன் முழுமையாக கிடைக்கவில்லை.

    இதற்கிடையே கந்துவட்டிக்காரர்களிடம் விவசாயிகள் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய மத்திய அரசால் கடந்த 2009-ம் ஆண்டு பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் தொடங்கப்பட்டது.

    பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் இத்திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்து அதனை சரிசெய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.

    அதன்படி பயனாளிகள் பட்டியல் சரிசெய்யப்பட்டதாக அரசால் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் 2019-ம் ஆண்டிற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் அடிப்படையில் விவசாயியின் பெயரில் இருந்தால் மட்டுமே ஆதாரத் தொகையை பெறமுடியும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் அளவீடானது குறைக்கப்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்த வரை ஒன்றரை லட்சம் ஹெக்டர் அளவிற்கு நெல் விவசாயம் செய்யப்பட்டு வரும் நிலையில் வெறும் 72,426 விவசாயிகளுக்கு மட்டுமே 19-வது தவணையாக பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டத்தில் ஆதாரத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு அந்த தொகையும் போய் சேர வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அந்த அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த வாலாங்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட புலிக்குளம் கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வட்டார செயலாளரும், விவசாயியுமான தட்சிணாமூர்த்தி என்பவருக்கு இந்த ஆண்டு 19-வது தவணை ஆதாரத் தொகை வரவு வைக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்தது.

    இருந்தபோதிலும் வங்கியை அணுகி கணக்கை சரிபார்த்தபோது மத்திய அரசின் ஆதாரத்தொகை வந்து சேரவில்லை என்று கூறப்பட்டது. இதனை அடுத்து அவர் வங்கி வரவு-செலவு கணக்கு புத்தகத்தோடு வேளாண் துறை அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது கடந்த முறை வந்த வங்கி கணக்கிற்கு தான் தவணைத்தொகை வரும் என்று சொல்ல முடியாது. ஆதார் எண்ணை எந்தெந்த வங்கிகளில் இணைத்து வைத்துள்ளீர்களோ அந்த கணக்குகளையும் ஆய்வு செய்யும்படி கூறியுள்ளனர்.

    இதையடுத்து தனது பெயரில் உள்ள மற்றொரு வங்கி கணக்கை ஆய்வு செய்தும் கூட தவணை ஆதாரத் தொகை வந்து சேர வில்லை என்று உறுதி செய்த அவர், இது தொடர்பாக வேளாண் துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்திருப்பதாகவும், ஆனால் முறையான பதில் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    மத்திய அரசால் விவசாயி களுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் திட்டம் மூலம் விவசாயிகள் நல்ல பலனை பெறுவதாகவும், இந்த திட்டம் வேளாண் காப்பீட்டு இழப்பீட்டு திட்டத்தை விட சிறந்தது என உலக வங்கி உட்பட பல்வேறு அமைப்புகளும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு வரவேண்டிய பயணத்திற்கு பதில் குறுஞ்செய்தி மட்டுமே வந்திருப்பதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    • பிரசாந்த் கிஷோரின் சொந்தக் கட்சியே படுதோல்வி அடைந்திருக்கிறது.
    • கட்சி தொடங்கி தன்னுடைய கொள்கை சித்தாந்தங்களை சொல்லி இருக்கிறார்.

    மதுரை:

    மதுரையில் ம.தி.மு.க. தலைமை முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரசாந்த் கிஷோர் ஒரு தேர்தல் வியூக வகுப்பாளர் தான். யார் பணம் கொடுத்தாலும் அவர்கள் கட்சிக்கு சென்று ஆலோசனை நடத்தி தேர்தல் வெற்றிக்கு வழி சொல்லுவார். பீகாரில் பிரசாந்த் கிஷோரின் சொந்தக் கட்சியே படுதோல்வி அடைந்திருக்கிறது.


    தமிழகம் குறித்த பிரசாந்த் கிஷோரின் கருத்தில் உடன்பாடு கிடையாது. அது நடக்கப்போவதுமில்லை. விஜய் மிகப்பெரிய நட்சத்திரம். அவருக்கு பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர் கட்சியை தொடங்கி தன்னுடைய கொள்கை சித்தாந்தங்களை சொல்லி இருக்கிறார். அதனை வரவேற்கிறோம்.

    ஒரு அரசியல் கட்சி தலைவராக மக்களிடம் செல்ல வேண்டும், பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும். அவருடைய செயல்பாடுகளை வைத்து தான் அரசியல் எதிர்காலம் உள்ளது.

    2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து தி.மு.க. ஆட்சியை மாற்றுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவராக தி.மு.க.வை எதிர்க்கும் ஒரு கட்சியின் தலைவராக விஜய் அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார்.

    அதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அது வருகின்ற தேர்தலில் தெரிந்து விடும். மக்கள்தான் அதற்கான தீர்ப்பை கொடுக்கப் போகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அ.தி.மு.க.வினர் இந்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறார்கள்.
    • நேற்று மாலை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    மதுரை:

    மதுரை மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் ஒவ்வொரு பகுதிகளிலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திண்ணைப் பிரசாரம் என்ற பெயரில் நடந்து வருகிறது. மதுரை மாநகர் பகுதியில் பேரவை மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். எஸ். சரவணன் தலைமையில் இந்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறார்.

    வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அ.தி.மு.க.வினர் இந்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து வருகிறார்கள். நேற்று மாலை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் செல்லூர் ராஜூ தலைமையில் அ.தி.மு.க. வினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது பொதுமக்களும் ஆர்வமாக இந்த துண்டு பிரசுரங்களை பெற்றனர். கடைகள், மார்க்கெட் பகுதியில் இந்த துண்டு பிரசுரங்களை அ.தி.மு.க.வினர் பொது மக்களுக்கு வினியோகம் செய்த போது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாவட்ட செயலாளர் எஸ்.எஸ். சரவணன், கவுன்சிலர் ரவி உள்ளிட்ட 15 பேர் மீது ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அ.தி.மு.க. துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியில் போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    • மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

    திருப்பரங்குன்றம் மலையுடன் சர்ச்சைக்குரிய வாசகம் அடங்கிய பதிவை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வழக்கில் கனல் கண்ணனுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

    திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக இந்து முன்னணியை சேர்ந்தவரும், சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கனல் கண்ணன் மனுதாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பில் தெரிவிக்கப்ட்டது.

    இதனையடுத்து, "மனுதாரர் இதுபோன்று பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். இதுபோன்ற சமூக ஊடகப் பதிவுகளுக்கு வழக்குப்பதிவு செய்வதால்தான், இதுபோன்ற நபர்களுக்கு தேவையற்ற விளம்பரம் கிடைக்கிறது" என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

    வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் கனல் கண்ணனுக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டது

    • சாலையோரங்களில் கட்சி கொடி மரங்கள் அமைப்பதை அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது.
    • சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த அமாவாசை, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருப்பதாவது:-

    மதுரை விளாங்குடி பகுதியில் அ.தி.மு.க. கொடிக்கம்பத்தை சாலையோரம் நட்டு வைக்க அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, தமிழகத்தில் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி, சாதி, மத மற்றும் பிற அமைப்புகளின் நிரந்தர கட்சி கொடிக் கம்பங்களை அகற்றவும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களோ, சாதி, மத அமைப்பினரோ அவர்களுக்கு சொந்தமான இடங்களில் முறையாக அனுமதி பெற்று நிரந்தரமாக கொடி கம்பங்களை வைத்துக் கொள்ளலாம்.

    தமிழக அரசு தனியார் நிலங்களில் கொடிக்கம் பங்களை வைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவு சட்டவிரோதமானது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து சாலைகளில் கொடி மரங்கள் வைக்க கட்சிக்கொடி ஏற்ற அனுமதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தனிநீதிபதியின் உத்தரவில் என்ன தவறு உள்ளது? சம்பந்தப்பட்டவர்கள் அவர்களுக்குச் சொந்தமான இடங்களில் வைத்துக் கொள்ளட்டும் என்றனர்.

    பின்னர் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் உள்ளன. சாலையோரங்களில் கட்சி கொடி மரங்கள் அமைப்பதை அரசியல் கட்சிகள் தங்களின் ஜனநாயக உரிமையாக பார்க்கப்படுகிறது. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் கட்சி கொடி மரங்கள் வைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க கூடாது என வாதாடினார்.

    விசாரணை முடிவில், தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதால் அவ்வப்போது உயிரிழப்புகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்து உள்ளோம். சாலைகள் என்பது தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

    ஆனால் இதுபோன்று கட்சி கொடி கம்பங்கள் நிறுவப்படுவதால் போக்குவரத்து தடை ஏற்படுகிறது. எனவே ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம். மேலும் சட்ட விதிகளின்படி பொது இடங்களில் அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அமைப்புகளுக்கோ அனுமதி வழங்க அரசுக்கு அதிகாரமில்லை. இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரி தான்.

    திருப்பூர் கொடிகாத்த குமரன் சுதந்திர போராட்டத்தை வலியுறுத்தி கையில் தான் கொடிகளை ஏந்தி சென்றார், எந்த தெருவிலும் சாலையிலும் நட்டு வைக்கவில்லை. இதனை ஜனநாயக உரிமையாக பார்க்க முடியாது. இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

    • அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.
    • நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா ஆஜராகி விளக்கம் அளித்தார்.

    அப்போது நீதிபதிமன்றம் "கடந்த 2 மாதங்களில் மட்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 550 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு உயர் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாட்டோம் என உறுதிமொழி எடுத்து பணியாற்றி வருகின்றனர்.

    நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற ஆட்சியர் உள்ளிட்ட வருவாய் துறையினர் 3 ஆண்டுகள் காலதாமதம் செய்கின்றனர்" என கருத்து தெரிவித்தது.

    அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

    • ஆண்டு முழுவதும் விதவிதமான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்குவது வழக்கம்.
    • மரம் முழுவதும் நீல வண்ண மலர்களாக பூத்து குலுங்குகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அருவிகள், நீரோடைகள் போன்றவை வருடம் முழுவதும் ரம்யமாக காட்சியளிக்கிறது.

    மேலும் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்களும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும். இதுதவிர ஆண்டு முழுவதும் விதவிதமான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்குவது வழக்கம்.

    12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் உள்பட சீசன் காலங்களில் பூத்துக்குலுங்கும் விதவிதமான மலர்கள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்களும், கொடைக்கானல் போன்ற மலை வாழ் சுற்றுலா தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் மிகவும் விரும்புவது கோடை காலமாகும்.

    இந்த கோடை வசந்த காலம் தொடங்குவதன் அறிகுறியாக தற்போது மலைப்பகுதிகளில் ஜெகரண்டா மலர்கள் பூத்துக் குலுங்கத் துவங்கியுள்ளது.

    கொடைக்கானலில் இருந்து பழனி மற்றும் வத்தலக்குண்டு செல்லும் சாலைகளான பெருமாள்மலை, வடகவுஞ்சி, ஊத்து உள்ளிட்ட வெப்பம் அதிகமுள்ள கீழ்மலைப்பகுதிகளில் இந்த மரங்களின் இலைகள் முழுவதும் உதிர்ந்து, மரம் முழுவதும் நீல வண்ண மலர்களாக பூத்து குலுங்குகிறது. இது காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.

    தற்பொழுது பூக்கத்துவங்கும் இம்மலர்கள் இன்னும் சில மாதங்கள் முழுமையாக பூக்கும் தன்மையை அடைந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கோடை காலத்தில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர்களை வெகுவாக ரசித்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

    ×