என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    ஊத்தங்கரை அருகே மது விற்பனையை தடுக்க சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை இரும்பு கம்பியால் தாக்கிய மளிகை கடைக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஊத்தங்கரை:

    கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஜெய்கீர்த்தி (வயது 40). இவர் தற்போது ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ஊத்தங்கரை அடுத்த கோவில் புதுப்பட்டி என்ற இடத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி சாதாரண உடையிலும், உடன் 2 போலீசார் சீருடையிலும் அங்கு சென்று, சுமன்(25) என்பவருக்கு சொந்தமான மளிகை கடையில் சோதனை செய்துள்ளனர். அப்போது சுமனுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுமன், அங்கிருந்த இரும்பு கம்பியால் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தியின் தலை உள்ளிட்ட பகுதியில் தாக்கினார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் சென்ற போலீசார், சுமனை பிடித்துள்ளனர். அவருக்கு ஆதரவாக வந்த அவரது உறவினர்களான அண்ணாமலை (41), அவரது மனைவி பரிமளா(35) ஆகியோரும் போலீசாரை ஆபாசமாக பேசி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். இதுதொடர்பான புகாரின் பேரில் ஊத்தங்கரை போலீசார், சுமன் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மளிகை கடையில் பதுக்கி வைத்திருந்த 80 பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    சுமன் தாக்கியதில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்து, சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கிருஷ்ணகிரி அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள கே.கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 24). லாரி டிரைவர். இவரும், பெரிய பொம்மரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் மகள் பவானி (18) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சுரேசின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சுரேசுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டனர். இதனால் காதலர்கள் இருவரும் மனமுடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி காதல் ஜோடி சுரேசும், பவானியும் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குந்தாரப்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருக்கும் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்து உடனடியாக 2 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு காதல் ஜோடிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவானி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். சுரேசை மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள ஒரு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் சுரேஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    காதல் ஜோடி விஷம் குடித்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, காரணம் இல்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த 81 பேரை போலீசார் கைது செய்தனர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆகஸ்டு மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் தளர்வில்லா முழு ஊரடங்கை கடைப்பிடிக்க தமிழக அரசு அறிவித்தது. இதனால் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்தில் தளர்வில்லா ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டனர். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, காரணம் இல்லாமல் சாலையில் சுற்றித்திரிந்த 81 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கிருஷ்ணகிரி அருகே அங்கன்வாடி பெண் பணியாளருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக அவருடைய அண்ணன் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியை அடுத்த பெரியகுந்தாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 50). கணவரை இழந்த இவர், அங்கன்வாடி பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்தநிலையில் இவர் குடியிருக்கும் வீட்டை, தனக்கு எழுதி கொடுக்குமாறு இவரது அண்ணன் கோவிந்தன் (55) என்பவர் நீண்ட நாட்களாக கேட்டு தகராறு செய்து வந்தார்.

    இதேபோல் நேற்று முன்தினம் இரவு மீண்டும் வீட்டை தனது பெயருக்கு எழுதி கொடுக்கும்படி அவர், லட்சுமியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தன், தனது தங்கையின் கை மற்றும் முதுகில் கத்தியால் குத்தினார். இதில் லட்சுமி படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கத்திக்குத்து குறித்து லட்சுமி குருபரப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கோவிந்தனை தேடி வருகிறார்.
    பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கிருஷ்ணகிரி:

    காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பெண்ணேஸ்வரமடம் ஆற்று படுகை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ராசன் கொட்டாய் பகுதியை சேர்ந்த முனியப்பன் (வயது 38), பெத்தனப்பள்ளி ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ராஜேஷ்(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் ஊத்தங்கரை போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகாந்தன் மற்றும் போலீசார், அப்பிநாயக்கம்பட்டி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (39), ரவிபிரசாத் (28), விஸ்வநாதன் (40) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் இருந்து ரூ.16,640-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.
    ஊத்தங்கரை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியிடம் உல்லாசம் அனுபவித்த கட்டிட மேஸ்திரி கைது செய்யப்பட்டார்.
    ஊத்தங்கரை:

    ஊத்தங்கரை அருகே கல்லாவியை அடுத்த வீரணகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 26). கட்டிட மேஸ்திரி. இவர் கல்லாவி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி அருகில் உள்ள ஈச்சம்பாடி அணை பாசன கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார். 

    இந்த நிலையில் அந்த சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பெற்றோர்கள் அந்த சிறுமியை நேற்று முன்தினம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். 

    இது குறித்து அந்த சிறுமியிடம் விசாரித்த போது, இதற்கு காரணம் அரிதாஸ் என்றும் கூறினார். இதையடுத்து அந்த சிறுமி கல்லாவி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் வழக்குப்பதிவு செய்து, அரிதாசை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அதியமான்கோட்டை, கிருஷ்ணகிரியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி அதியமான்கோட்டை வானொலி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் காமராஜ் மற்றும் வட்டார தலைவர் சரவணன், விவசாய அணி நிர்வாகி மணிகண்டன், பிற்பட்டோர் அணி நிர்வாகி நவீன், மாணவர் காங்கிரஸ் நிர்வாகி சக்தி மணிகண்டன், பென்னாகரம் தொகுதி தலைவர் ஜீவா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி அருள்குமார், வட்டார துணைத்தலைவர் கிருஷ்ணன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நேற்று காலை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நீட் தேர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். நகர தலைவர் வின்சென்ட் வரவேற்றார். நகர துணைத்தலைவர் இருதயம், மாவட்ட செயலாளர்கள் லண்டன் கோபால், சங்கர், வட்டார தலைவர் ஜகாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, கொரோனா நோய் தொற்று காலத்தில், அனைத்து விதத்திலும் பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைக்கு எதிராக நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தேர்வை நடத்த முயற்சி செய்யும் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் துரைசாமி, ரமேஷ், மணிரத்தினம், சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

    காவேரிப்பட்டணம் அருகே போலி மதுபானங்கள் தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே போலி மதுபானங்கள் தயாரிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து வேலூர் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று காவேரிப்பட்டணம் அருகே உள்ள வீடு கொளுத்தி கொட்டாய் கிராமத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் வீட்டில் போலி மதுபானங்கள் தயாரிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பெரியசாமி (வயது 40), தர்மபுரி ஒட்டப்பட்டி ராமகவுண்டர் தெருவை சேர்ந்த சரவணன் (46) ஆகிய 2 பேரையும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்களிடம் இருந்து போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய 25 லிட்டர் எரிசாராயம், மதுபாட்டில்கள் சீல் வைக்கும் எந்திரம், காலி மதுபாட்டில்கள், எசன்ஸ், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான பெரியசாமி 10 ஆண்டுகளுக்கு முன்பு போலி மதுபானங்கள் தயாரித்த வழக்கில் கைதானவர்கள். இவர்கள் 2 பேர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என போலீசார் தெரிவித்தனர்.

    காவேரிப்பட்டணம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கருக்கன்சாவடியை சேர்ந்தவர் உதயன்னன் (வயது 60). இவர் சாப்பர்த்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் கையாடல் செய்த சம்பவத்தில் கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அதே சங்கத்தில் மீண்டும் தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் தனது பாட்டி வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமியை மிரட்டி கடந்த ஒரு ஆண்டாக உதயன்னன் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். இதனால் கர்ப்பம் ஆன அந்த சிறுமி அச்சத்தின் காரணமாக இதுகுறித்து வெளியில் சொல்லாமல் இருந்து வந்தார். மேலும் சிறுமியின் பாட்டி வயிற்றில் கட்டி பிரச்சினை இருக்கலாம் என்று இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே அவரை காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அழைத்து சென்று பரிசோதனை செய்ததில் சிறுமி 8 மாதம் கர்ப்பிணியாக உள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து ஊர் பொதுமக்கள் சார்பில் சிறுமியிடம் விசாரித்ததில் உதயன்னன் அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக பொதுமக்கள் உதயன்னனை பிடித்து காவேரிப்பட்டணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயன்னனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    வேப்பனப்பள்ளி:

    வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மாதையன் வரவேற்றார். முகாமில் கொரோனா விழிப்புணர்வு குறித்தும், டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினர். முகாமில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    மேலும் பொதுமக்களுக்கு கண், மூக்கு, தொண்டை பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் சுகாதார மேற்பார்வையாளர் ஜெயசீலன், சுகாதார ஆய்வாளர்கள் இக்பால் பாஷா, சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    மத்திய, மாநில அரசுகளின் தனியார் மயமாக்கும் போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கிருஷ்ணகிரி நகர கிளை பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க மத்திய சங்க பொருளாளர் சேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தொ.மு.ச. மத்திய சங்க துணை பொதுச்செயலாளர்கள் முருகன், வரதராஜன், துணைத்தலைவர் பார்த்தீபன் மற்றும் பணிமனை நிர்வாகிகள் ராஜேந்திரன், சிவக்குமார், ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ. உமர்பாரூக், ஜான் லுயிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழ்நாடு மோட்டார் வாகன விதி 288ஏ-வை கைவிட வேண்டும். தனியார் பஸ்சை வாடகைக்கு எடுக்கும் முறையை புகுத்த வேண்டாம். போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி வழங்க வேண்டும். தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்க வேண்டும். பிடிக்கப்பட்ட ஊதியத்தை திரும்ப வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

    ஊத்தங்கரை அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. சங்க செயலாளர் தவமணி, ஏ.ஐ.டி.யு.சி. வரதராஜ், ஏ.ஏ.எல்.எப். அண்ணாமலை, டி.டி.எஸ்.எப். மயில்சாமி மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    மத்தூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 38). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் , மனமுடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×