என் மலர்tooltip icon

    கிருஷ்ணகிரி

    • மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர்.

    ஓசூர்:

    ஓசூர் அருகே உள்ள ஜூஜூவாடியில் கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்களுக்கு பர்மிட் போடும் உள்வழி ஆர்டிஓ சோதனை சாவடி உள்ளது.

    இந்த உள்வழி சோதனை சாவடியில் இன்று காலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் சோதனை சாவடியில் இருந்த கணக்கில் வராத 2 லட்சத்து 25 ஆயிரத்து 950 ரூபாய் ரொக்க பணம் சிக்கியது. அப்போது அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் நிர்மல் குமார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

    பணம் பறிமுதல் செய்யப்பட்ட நேரத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அருப்பு மில் அருகே இருந்த ஊராட்சி மன்ற தலைவரை மக்கள் முற்றுகை இட்டனர்.
    • ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சரியாக வராததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

    இந்நிலையில் அகரம் ஊராட்சியின் துணை தலைவர் இரவோடு இரவாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் குழாயிலிருந்து நேரடியாக 2 இன்ச் பைப் அமைத்து தனது வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பது கிராம மக்களுக்கு தெரிய வந்தது.

    இதையடுத்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் ஊராட்சி தலைவர் துணை தலைவரின் வீட்டிற்கு சென்ற பைப் லைனை துண்டிப்பு செய்தார். இந்நிலையில் இரவோடு இரவாக மீண்டும் அதே இடத்தில் பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அகரம் அருப்பு மில் அருகே இருந்த ஊராட்சி மன்ற தலைவரை திடீர் கிராம மக்கள் முற்றுகை இட்டனர்.

    அப்போது அங்கு வந்த நாகரசம்பட்டி போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மீண்டும் பைப் லைனை துண்டிப்பு செய்து, ஒகேனக்கல் கூட்டு குடிநீரை முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை அடுத்து பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது குறித்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நேற்று முன்தினம் துணை தலைவரிடம் நேரடியாக சென்று, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குழாயிலிருந்து தண்ணீர் எடுப்பது சட்டப்படி குற்றம் என தெரிவித்து எச்சரித்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் அதே தவறை செய்துள்ளார். இதே நிலை நீடித்தால் அவர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.
    • பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள சென்னானூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில் புதிய கற்கால கருவி, சூடு மண்ணால் ஆன முத்திரை, சங்கு வளையல் துண்டுகள், வட்டசில்லுக்கள், கண்ணாடி வளையல் துண்டுகள், தக்கலை போன்ற தொல்பொருள் பொருட்கள் கண்டுபிடிக்கபட்டது.

    இந்த நிலையில் மேலும் ஏ 2 அகழாய்வு குழியில் 75 செ.மீ ஆழத்தில் இரும்பிலான கலப்பையின் கொலுமுனை கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் எடை 1.292 கிகி, நீலம் 32 செ.மீ, அகலம் 4.5 செ.மீ, தடிமன் 3 செ.மீ உள்ளது. இக்கொழுமுனை பண்டைய காலத்தில் விவசாயம் மேற்கொள்ள ஏர் கலப்பையில் பயன்படுத்தப்பட்ட பொருளாக தெரிகிறது.

    தொல்லியல் சூழ்நிலை கொண்டு இவற்றின் காலம் இடைக்கால வரலாறு காலமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.
    • முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்தவர் குமார் (வயது 34). அரசுப்பள்ளி ஆசிரியர். இவரது வாட்ஸ்அப்பிற்கு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி ஒரு குறுந்தகவல் வந்தது.

    அதில் சில கம்பெனிகளின் பங்கு முதலீட்டு விவரங்கள் கொடுக்கப்பட்டு, அதில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என இருந்தது. அதில் ஒரு இணையதள முகவரியும் இருந்தது. அந்த 'லிங்க்'கை கிளிக் செய்த குமார், தன் விவரங்களை பதிந்து தனக்கான பக்கத்தை உருவாக்கினார்.

    மேலும் அதில், சிறிதளவு முதலீடு செய்த குமாருக்கு அதிகளவு லாபமும் கிடைத்தது. இதையடுத்து தன்னிடம் இருந்த, 20 லட்சத்து, 85 ஆயிரம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு மொத்தமாக அனுப்பினார்.

    இவரது முதலீடு, லாபத்துடன் இணையதள பக்கத்தில் காண்பித்த போதும், அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இவரை தொடர்பு கொண்ட மொபைல் எண்களும் 'சுவிட்ச் ஆப்' ஆனது. ஓரிரு நாளில் குறிப்பிட்ட அந்த இணையதள பக்கமும் முடங்கியது.

    இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குமார், இது குறித்து நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
    • தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஆவலப்பள்ளி சாலையில் உள்ள பாரத் நகரை சேர்ந்தவர் நாகராஜ், இவர் கம்பி கட்டும் தொழிலாளி ஆவார். இவரது மனைவி ஜோதி (35). இவர்களுக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இதில் மூத்த மகளான தன்யா ஸ்ரீ என்ற சிறுமி, நேற்று வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று குழந்தை தன்யா ஸ்ரீயை துரத்தி துரத்தி கடித்தது. இதனை பார்த்து . அதிர்ச்சியடைந்த அவளது தாய் ஜோதி, நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற போராடினார். அப்போது, அவரையும் அந்த நாய் கடித்து விட்டது.

    தெரு நாய் கடித்ததில் தாய், மகள் என 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் தெரு நாயை விரட்டி விட்டு, படுகாயம் அடைந்த தாய், மகள் இரண்டு பேரையும் மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஓசூர் மாநகர பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை மற்றும் அட்டகாசம் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தெருவில் விளையாடும் குழந்தைகள், தெருவில் நடந்து செல்வோர் என பொதுமக்களை நாள்தோறும் அச்சுறுத்தி வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புதிய கற்காலத்தில் தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது.
    • இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம், சென்னானூரில் இதற்குமுன் நடைபெற்ற அகழாய்வின்போது பழங்காலப் பொருள்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இங்குள்ள மலையடிவாரத்தின் மேற்பரப்பில் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள், புதிய கற்கால கைக்கோடாரிகள், இரும்புக் காலத்தைச் சோ்ந்த கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் எனப் பொருள்கள் கிடைத்துள்ளன.

    இங்குள்ள ஒரு கிணற்றில் கிடைத்த செங்கற்கள் 2,000 ஆண்டுகள் பழமையானவை என்பதால் இந்த இடம் சங்ககால மக்களின் வாழ்விடமாக இருக்கக் கூடும் என கருதப்படுகிறது. இதையடுத்து இங்கு அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக இங்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திங்கள்கிழமை, உடைந்த நிலையில் புதிய கற்காலத்தைச் சோ்ந்த கருவி ஒன்றை அகழாய்வுக் குழுவினா் கண்டெடுத்தனா்.


    இதுகுறித்து சென்னானூா் அகழாய்வு இயக்குநா் பரந்தாமன் கூறியிருப்பதாவது:-

    சென்னானூரில் நடைபெறும் அகழாய்வுப் பணியின்போது பி2 எனும் அகழாய்வுக் குழியில் 53 செ.மீ. ஆழமுள்ள குழியில் உடைந்த புதிய கற்கால வெட்டுக் கருவி ஒன்று எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்தக் கருவியின் நீளம் 6 செ.மீ., அகலம், 4 செ.மீ. உள்ளது. இந்தக் கருவி 4,000 ஆண்டுகள் பழமையானது. புதிய கற்காலத்தில் தான் முதன்முதலில் விவசாயம் தொடங்கியது. அப்போது விவசாயத்திற்கு 30 செ.மீ.முதல் 25 செ.மீ., நீளமுள்ள கற்கருவியைத்தான் மக்கள் பயன்படுத்தினா்.

    இந்தக் கருவி அதைவிட அளவில் சிறியது என்பதால் மரக்கிளை, இறைச்சிகளை வெட்டவும், வேட்டையாடுவதற்கும் ஆயுதமாக இதை மனிதன் பயன்படுத்தியிருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பவித்ரா-ஏழுமலை தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
    • இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு (வயது 48). இவருக்கு ஏழுமலை (20), சேட்டு (18) என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் அலமேலுவின் மூத்த மகன் ஏழுமலை கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அலமேலுவின் அண்ணன் நடேசனின் மகள் பவித்ரா (20) என்பவரை, ஏழுமலைக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

    இதில் பவித்ரா-ஏழுமலை தம்பதியினருக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன், ஊத்தங்கரை தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி 2 பேரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இதை அறிந்த அலமேலு 2 பேரையும் கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்ற பவித்ரா மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி ஆடு மேய்க்கும் இடத்திற்கு மாமியார் அலமேலு சென்றுள்ளார். அப்போது பவித்ரா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோர் ஒன்றாக இருந்துள்ளனர். இதனை கண்ட அலமேலு அவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் வழக்கம்போல் 2 பேரும் வீட்டுக்கு சென்று அவரவர் வேலையை செய்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் அலமேலுவின் இளைய மகன் சேட்டு வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது நீண்ட நேரம் ஆகியும் தாய் வீடு திரும்பாததால் அக்கம் பக்கம் உறவினர்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் தேடி வந்துள்ளார்.

    எங்கும் அவர் கிடைக்காததால் விரக்தி அடைந்த அவர் மீண்டும் தனது நண்பர் ராஜேந்திரன் என்பவருடன் இரவு தனது தாயார் அலமேலுவை தேடி சென்று உள்ளனர்.

    இந்த நிலையில் காட்டு பகுதியில் ஓர் இடத்தில் தீ எரிவதைக் கண்ட சேட்டு மற்றும் அவரது நண்பர் ராஜேந்திரன் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் இருந்த அலமேலுவின் உடலைக் கண்டு மிரண்டு போன 2 பேரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அலமேலு உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவப் பகுதிக்கு சென்று ஊத்தங்கரை டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் கடந்த 22-ந் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாட முடியாத கள்ளக்காதலர்கள் நேற்று கொண்டாடிய பொழுது மாமியார்களிடம் சிக்கியதும். அதை மாமியார் அலமேலு கண்டித்தையும், இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா 2 பேரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொன்று தீ வைத்து எரித்தது தெரிய வந்தது. இதையடுத்து 2 பேரையும் சிங்காரப்பேட்டை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர்.மேலும் இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    மத்தூர்:

    மத்தூர் அருகே உள்ள சின்ன ஆலேரஹள்ளி பகுதியில் கள்ளத்தனமாக மாந்தோப்பில் சாராய ஊரல் வைத்திருந்த சாராயம் விற்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சின்னலேரஅள்ளி பகுதியில் மாந்தோப்பில் சாராய ஊறல் வைத்திருந்து கள்ளச்சாராயம் விற்று வருவதாக மத்தூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் சின்னஆலேரஅள்ளி பகுதியில் உள்ள மாந்தோப்பு பகுதியில் சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராய ஊறலை வைத்திருந்து மத்தூர் அருகே உள்ள மூக்கா கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது36 ), அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (44) ஆகிய 2 பேரும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே மத்தூர் போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 150 லிட்டருக்கும் மேற்பட்ட சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். பின்னர் கைதான 2 பேரையும் போச்சம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
    • குட்கா விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை போலீஸ் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 26 கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.

    ஊத்தங்கரை போலீஸ் டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையில், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து, ஊத்தங்கரையில் 6 கடைகளும், கல்லாவியில் 8, சிங்காரப்பேட்டையில் 9, மத்தூரில் 2, சாமல்பட்டியில் 1 கடைகள் என மொத்தம், 26 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதில், உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் முத்துக்குமார், முத்து மாரியப்பன், ராஜசேகர், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், சிங்காரப்பேட்டை சந்திரகுமார், மத்தூர் பாலமுருகன், கல்லாவி எஸ்.ஐ., அன்பழகன், ஊத்தங்கரை எஸ்.ஐ., கணேஷ்பாபு, மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டு சீல் வைத்தனர்.

    மேலும் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

    • போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
    • போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், மருந்து, மாத்திரை தயாரிக்கும் கம்பெனிகளும் அடங்கும்.

    இந்த நிலையில், தங்கள் தயாரிப்புக்கு எத்தனால் மற்றும் ஆல்கஹால் பயன்படுத்தும் அங்குள்ள 2 மருந்து, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பூனப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலை என மொத்தம் 3 தொழிற்சாலைகளில் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது, எத்தனால் மற்றும் ஆல்கஹால் இருப்பு சரியாக உள்ளதா, என்றும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் காலக்கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.

    • 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
    • கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    சிங்காரப்பேட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காரப்பட்டு அண்ணா நகர் பகுதியில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்வதாக ஊத்தங்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் சோதனை செய்தபோது அங்கு உள்ள ஒரு பெட்டிக் கடையில் அனுமதியின்றி அரசு மதுபான பாட்டில்களை அதிக விலையில் விற்பனை செய்த கருமாண்டபதி பகுதியை சேர்ந்த முருகேசன் (59), அவரது மனைவி குணா (54) என்பது தெரியவந்தது.

    உடனே 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 175 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். கைதான 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
    • தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு 100 அடி உயரத்திற்கு கரும் புகையுடன் எரிய தொடங்கியது.

    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் பகுதியை சேர்ந்தவர் தங்கதுரை. இவருக்கு சொந்தமாக ஜெகதேவி சாலையில் குடோன் உள்ளது. இந்த குடோனை சின்ன பர்கூரைச் சேர்ந்த வடிவேல் என்பவர் வாடகைக்கு எடுத்து அதில் ஜவுளி பண்டல்களை அடுக்கி வைத்திருந்தார்.

    நேற்று இரவு 12 மணியளவில் திடீரென அந்த குடோன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் பர்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இருந்தாலும் தீ கட்டுக்குள் அடங்காமல் கொழுந்து விட்டு 100 அடி உயரத்திற்கு கரும் புகையுடன் எரிய தொடங்கியது.

    இதனால் சுமார் ரூ.6 கோடி மதிப்பிலான துணி பண்டல்கள் எரிந்து சாம்பல் ஆனது. இது குறித்து கடையின் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×