என் மலர்
காஞ்சிபுரம்
படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே உள்ள விவேகானந்தர் நகரில் வசித்து வருபவர் லதா. இவர் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று இரவு அவர் படப்பை பஜார் வீதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள் லதாவின் கழுத்தில் கிடந்த நகையை பறித்து தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து மணிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போரூர்:
வளசரவாக்கம் லட்சுமி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேஷ். ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மணிமேகலை.
இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ராஜேஷ் தினந்தோறும் மது குடித்து வந்து மனைவி மணிமேகலையை தாக்கி வரதட்சணை பணம் கேட்டு வந்தார்.
இதுகுறித்து கடந்த 19-ந்தேதி வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் மணிமேகலை புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குபதிவு செய்து ராஜேசை கைது செய்தார்.
பல்லாவரத்தை அடுத்த பம்மல் - பொழிச்சலூர் சாலையில் தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. நேற்று இரவு இந்த மையத்துக்குள் நுழைந்த வாலிபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயன்றார். இது அங்கிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் தெரிந்தது.
இதை மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் பார்த்தனர். உடனே சென்னை சங்கர் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை கைது செய்தனர். அவர் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த அருள்மணி (25) என்பது தெரிய வந்தது. அவர் வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டாரா? என்று விசாரணை நடந்து வருகிறது.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பிரிவு மற்றும் குழந்தைகள் காய்ச்சல் பிரிவு ஆகியவற்றை சுகாதாரத்துறை செயலர் பியூலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.
அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் வீடுவீடாக சென்று ஏடிஎஸ் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் 3 தளங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தளத்திலும் மகப்பேறுக்கு தனியாக 40 படுக்கைகளும் உள்ளன. மகப்பேறுக்கென்றே தனியாக புது கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த புது கட்டிடத்தில் கூடுதலாக 50 படுக்கைகள் அமைக்கப்படும்.
தமிழகம் முழுவதும் 2000 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மிக விரைவில் அது சரி செய்யப்பட்டு புதிய செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா, ஆஸ்பத்திரி முதல்வர் ஹரிகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்குகிறது. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்களில் நீர் இருப்பு அதிகரித்து வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 1022 ஏரிகள் உள்ளன. தொடர் மழை காரணமாக 7 ஏரிகள் முழுவதும் நிரம்பி விட்டன. இதே போல் 13 ஏரிகள் 70 சதவீதமும், 60 ஏரிகள் 50 சதவீதமும், 246 ஏரிகள் 20 சதவீதமும் நிரம்பி இருக்கின்றன. இந்த தகவலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை நீடித்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் ஒரு வாரத்தில் ஏரிகள் அனைத்தும் நிரம்பி விடும்.
ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று காலை 8.55 மணிக்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் வரவில்லை. இதேபோல் சென்னையில் இருந்து டெல்லிக்கு காலை 9.55 மணிக்கு புறப்படக் கூடிய ஏர் இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டது.
போதிய பயணிகள் இல்லாததால் இந்த 2 விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது.
காஞ்சிபுரத்தில் நேற்று இரவு 10 மணி முதல் தொடர்ந்து நல்ல சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் முக்கிய பகுதிகளான கங்கைகொண்டான் மண்டபம், மேட்டுத்தெரு, காந்தி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
மாவட்டத்தில் அதிக பட்சமாக மாமல்லபுரத்தில் 42.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
காஞ்சிபுரம்- 4.2
செங்கல்பட்டு- 18.42
ஸ்ரீபெரும்புதூர்- 6.4
திருக்கழுக்குன்றம்- 28.2
திருப்போரூர் - 16.5
மகாபலிபுரம் - 42.2
இதற்கிடையே காஞ்சிபுரம் பெருநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா இன்று காலை திடீர் ஆய்வு செய்தார்.
கொட்டும் மழையில் அவர் குடைபிடித்தப்படி மழை நீர் வெளியேறி செல்லும் வேகவதி ஆறு கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.
அப்போது அங்கு கரையோரங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். இதே போல் காவலன் கேட், ஓரிக்கை, சின்னையன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் செல்ல பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது காஞ்சிபுரம் பெருநகராட்சி பொறுப்பு ஆணையர் மகேந்திரன், நகர்நல அலுவலர் முத்து மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவில்கள், ரதங்கள், பாறைச்சிற்பங்கள் போன்றவை உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவை யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்களாகவும் விளங்குகின்றன.
சமீபத்தில் இங்கு நடந்த சீன அதிபர் ஜின்பிங்-பிரதமர் மோடி சந்திப்பால் மாமல்லபுரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. வரலாற்று சிறப்புமிக்க அந்த சந்திப்புக்காக இங்குள்ள புராதன சின்னங்கள் அனைத்தும் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டன. மேலும் வண்ண விளக்கு அலங்காரத்தால் மெருகூட்டப்பட்டன. இதனால் இரவு நேரத்திலும் மாமல்லபுரம் சிற்பங்கள் மின்னொளியில் ஜொலித்தன.
ஆனால் பிரதமர் மோடி-ஜின்பிங் சந்திப்பு நடந்த ஒரு நாள் மட்டுமே கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களில் விளக்குகள் எரிய விடப்பட்டன. பின்னர் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

இதை ஏற்றுக்கொண்ட தொல்லியல் அதிகாரிகள், மாமல்லபுரத்தில் சில பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் தினந்தோறும் இரவு 9 மணி வரை விளக்கு வெளிச்சத்தில் பயணிகள் சிற்பங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முதல் மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, கணேசரதம், கிருஷ்ண மண்டபம், பஞ்சபாண்டவர் மண்டபம் உள்ளிட்ட பாரம்பரிய நினைவு சின்னங்களில் வண்ண விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன.
இதையறிந்து மாமல்லபுரம் வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் ரூ.40 பார்வையாளர் கட்டணம் செலுத்தி விளக்கு வெளிச்சத்தில் புராதன சின்னங்களை கண்டுகளித்தனர்.
மாமல்லபுரத்தில் இதுவரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதால் இனிமேல் இரவு 9 மணி வரை விளக்கு வெளிச்சத்தின் பின்னணியில் சிற்பங்களின் அழகிய தோற்றத்தை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம். இதனால் இரவு நேரத்திலும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாமல்லபுரம் புராதன சிற்பங்களை கண்டுகளிக்க உள்நாட்டு பயணிகளுக்கு தலா ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600-ம் கட்டணமாக தொல்லியல் துறை வசூலிக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு மாமல்லபுரத்திற்கு உள்நாட்டு பயணிகள் 25 லட்சம் பேரும், வெளிநாட்டு பயணிகள் 1 லட்சம் பேரும் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டதாலும், இரு நாட்டு தலைவர்கள் வருகையால் முக்கியத்துவம் பெற்றுள்ளதாலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இந்திய அளவில் முதலிடம் பிடிக்கும் என்றும் சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்தில் சமீபத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்கள் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணை உருண்டை பாறை ஆகிய இடங்களை சுற்றி பார்த்தனர்.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பையொட்டி மாமல்லபுரத்தை அழகுபடுத்தும் பணிகள் நடந்தன. இதையடுத்து சுற்றுலா தலங்களை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இரு தலைவர்கள் சந்திப்பு முடிந்தபிறகு சுற்றுலா பயணிகளுக்கான தடை நீக்கப்பட்டது. இதையடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா இடங்களை காண தினமும் பொதுமக்கள் வருகிறார்கள்.

இந்த நிலையில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றி பார்க்கவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வெண்ணை உருண்டை பாறை அருகே டிக்கெட் கவுண்டர் அமைக்கப்பட்டது. இதில் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ.600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மாமல்லபுரத்தில் ஐந்து ரதம், கடற்கரை கோவில் ஆகியவற்றை சுற்றி பார்க்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெண்ணை உருண்டை பாறையை பார்க்கவும் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது குறித்து தொல்லியல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பிரதமர் மோடி-சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரம் வருகையையொட்டி சுற்றுலா இடங்கள் அழகுபடுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டன. இதில் வெண்ணை உருண்டை பாறையை சுற்றியுள்ள பகுதிகளில் கொரியன் புல் தரைகள் அமைக்கப்பட்டது. இது போன்று பல வசதிகள் செய்யப்பட்டன. இதையடுத்து வெண்ணை உருண்டை பாறை பகுதியை கூடுதல் கவனத்துடன் பராமரிப்பு செய்வதற்காக இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது” என்றார்.
புராதன சின்னங்களில் அறிவியல் நிபுணத்துவம் உடைய சிற்பமாக வெண்ணை உருண்டை பாறை திகழ்கிறது. இந்த பாறையை தாங்கி பிடிப்பது போல் போட்டோ எடுக்க உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆசை படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






