search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை செயலர் சந்தித்தார்.
    X
    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை செயலர் சந்தித்தார்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேருக்கு டெங்கு காய்ச்சல்- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பியூலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் பிரிவு மற்றும் குழந்தைகள் காய்ச்சல் பிரிவு ஆகியவற்றை சுகாதாரத்துறை செயலர் பியூலா ராஜேஷ் ஆய்வு செய்தார்.

    அப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 256 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும் வீடுவீடாக சென்று ஏடிஎஸ் கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு பிரிவில் 3 தளங்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தளத்திலும் மகப்பேறுக்கு தனியாக 40 படுக்கைகளும் உள்ளன. மகப்பேறுக்கென்றே தனியாக புது கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த புது கட்டிடத்தில் கூடுதலாக 50 படுக்கைகள் அமைக்கப்படும்.

    தமிழகம் முழுவதும் 2000 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர். இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மிக விரைவில் அது சரி செய்யப்பட்டு புதிய செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா, ஆஸ்பத்திரி முதல்வர் ஹரிகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
    Next Story
    ×