search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kings Engineering college"

    • சென்னை கிங்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் முற்றிலும் இலவசமாக பயில்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு சான்று வழங்கும் விழா ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடைபெற்றது.
    • தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இந்த வருடம் 25 மாணவ, மாணவியர்களுக்கு இலவச என்ஜினீயரிங் கல்வி பயில்வதற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    மறைந்த ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., ஊர்வசிசெல்வராஜ் தொகுதியிலுள்ள ஏழை-எளிய மாணவ, மாணவிகளின் என்ஜினீயரிங் கல்லூரி கனவை நனவாக்கிடும் பொருட்டு கடந்த 2006-ம் ஆண்டு முதல் சென்னையிலுள்ள தனது கிங்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆண்டுதோறும் 10 மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக என்ஜினீயரிங் கல்வி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வந்தார்.

    இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு ஊர்வசிசெல்வராஜ் எம்.எல்.ஏ., திடீரென காலமானார். ஆனால், அவரது மறைவிற்குப்பிறகு அவரது மகன் ஊர்வசிஅமிர்தராஜ் தனது தந்தையின் வழியில் இலவச என்ஜினீயரிங் கல்வி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.

    வாக்குறுதி

    இதற்கிடையே சட்டமன்ற தேர்தலின்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஊர்வசிஅமிர்தராஜ், தான் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது கிங்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் செயல்படுத்திவரும் ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கான இலவச கல்வித்திட்டம் 10 மாணவர்கள் என்ற நிலையில் இருந்து 25 மாணவ, மாணவிகளாக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.

    சான்று வழங்கும் விழா

    இந்த வாக்குறுதியின் அடிப்படையில், சென்னை கிங்ஸ் என்ஜினீயரிங் கல்லூரியில் முற்றிலும் இலவசமாக பயில்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழை-எளிய மாணவ, மாணவிகளுக்கு சான்று வழங்கும் விழா ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு ஊர்வசிஅமிர்தராஜ் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாணவ, மாணவிகளுக்கான இலவச என்ஜினீயரிங் கல்வி பயில்வதற்கான சான்றுகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:- ஏழை, எளிய மக்களின் குழந்தைகளும் என்ஜினீயரிங் கல்வி பயிலவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த இலவச கல்வி திட்டத்தை எனது தந்தை தொடங்கி செயல்படுத்தினார்.

    அவரது மறைவிற்கு பின்னர் இந்த திட்டம் எனது தந்தையின் வழிகாட்டுதல்படி ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி இந்த வருடம் 25மாணவ, மாணவியர்களுக்கு இலவச என்ஜினீயரிங் கல்வி பயில்வதற்கான சான்று வழங்கப்பட்டுள்ளது.

    நான் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் முற்றிலுமாக நிறைவேற்றித்தரப்படும். ஸ்ரீவைகுண்டம் தொகுதியை வளர்ச்சி பெற்ற தொகுதியாக நிச்சயமாக மாற்றிடுவேன் என்றார்.

    இதில், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணைஅமைப்பாளர் பாலமுருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் சங்கர், பொதுச்செயலாளர்கள் அலங்காரபாண்டியன், சீனிராஜேந்திரன், சிவகளைபிச்சையா, எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், வட்டாரத்தலைவர் நல்லகண்ணு, பொருளாளர் சந்திரன் மற்றும் நிர்வாகிகள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×