என் மலர்
காஞ்சிபுரம்
ஆலந்தூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுவன் சுஜித் உயிர் காப்பாற்றப்படவில்லை என்பது வேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கிறது. உயிரை காப்பாற்ற தமிழக அரசு செய்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்கள், காவல்துறை, வருவாய்துறை, தீயணைப்பு துறை ஆகிய அரசு துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு பாதுகாப்பு படை ஆகியவை உயிரை காப்பாற்ற பெரும் முயற்சி செய்தனர். தனியார் நிறுவனங்களும், என்.எல்.சி. நிறுவனமும் முயற்சியில் பெரும் பங்கு வகித்தன. ஆனாலும் சிறுவனை காப்பாற்ற இயலவில்லை.
இது அறிவியல், தொழில் நுட்ப துறைக்கு விடப்பட்டுள்ள சவால். இனி சுஜித் போன்ற உயிர்களை இழக்க கூடாது. மத்திய-மாநில அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
சுஜித் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணமும் ஒருவருக்கு வேலையும் அரசு வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டுவது தொடர்பாக தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். 600 அடிகளுக்கு மேலாக தோண்டியும் தண்ணீர் கிடைக்க வில்லை. இதில் அறிவியல் உண்மை என்னவென்றால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பாறைகள் நிறைந்த மணப்பாறை மட்டுமின்றி பாறைகள் இல்லாத மற்ற பகுதிகளிலும் 500 அடிக்கு மேல் ஆழம். ஆழ்துளை கிணறை தோண்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறிவிட்டோம்.

சுஜித் உயிரை காப்பாற்ற இயலவில்லை. எஞ்சி உள்ள உயிர்களை காப்பாற்ற சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். பூமியின் பாதுகாப்பு முக்கியமானது. சுஜித் உயிரிழப்பில் உணர வேண்டிய உண்மை. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசும் பொது மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
மத்திய-மாநில அரசுகள் தண்ணீர், மீத்தேன், கனிம வளங்களை எடுக்கிறோம் என்ற பெயரில் சுற்றுச்சூழல் சிதைவதற்கு காரணமாக இருக்க கூடாது. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் முற்றிலும் கைவிடப்பட வேண்டும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
பேரிடரில் ஏற்படும் சேதங்களை விபத்தாக மட்டும் பார்க்க வேண்டும். யார் மீதும் குற்றம், பழி சொல்ல இயலாத நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 13 மழலைகள் பலியாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறுகளை தோண்டுபவர்கள் மட்டுமல்ல அரசு அதிகாரிகளும் பொறுப்பாக இருந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரைகுறையாக விடப்பட்ட ஆழ்துளை கிணறு சுஜித் பாட்டனார் தோண்டியது. மூடப்பட்ட நிலையில் அதன் மீதே விவசாயம் செய்து வந்துள்ளனர்.
காலப்போக்கில் மழையில் கரைந்து சரிந்ததால் உயிர் இழப்பு நேர்ந்து உள்ளது. மணல் அள்ளுவதால் ஏற்படும் குழிகள், தூர்வாருகிறோம் என்ற பெயரால் ஏற்படும் குழிகள், தொழிற்சாலைகள் அமைக்க வெட்டப்படும் குழிகள் பற்றி எண்ணற்ற குழிகளில் குழந்தைகள் விழுந்து மடிந்து வருகின்றன. பெரியவர்களும் சிக்கி உயிர் இழக்க கூடிய சூழல் ஏற்படுகிறது. பேரிடர்களில் இருந்து மக்களை காக்க அரசு எச்சரிக்கையாகவும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
சுஜித் 100 அடிக்கு கீழ் சென்று உயிர் இழந்துள்ளான். இதற்கு மேல் யாருக்கு எதிராகவும் விவாதிக்க வேண்டியதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் அம்பேத்கார் நகர் 10-வது தெருவில் வசித்து வருபவர் வேதவல்லி. வீட்டு வேலை பார்த்து வருகிறார். இவரது மகன்கள் பாபு, மாதவன். இவர்களில் பாபுவுக்கு திருமணமாகி ஈக்காட்டுதாங்கலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
வேதவல்லியின் தம்பியும் அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். இதையடுத்து அவர்களது மகள் சோபனாவை வேதவல்லி தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தற்போது சோபனாவுக்கு 11 வயது ஆகிறது.
அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் வேதவல்லிக்கு உதவியாக இருந்தார். அவர் மீது வேதவல்லி அதிக பாசத்துடன் இருந்தார். இது வேதவல்லியின் மகன் பாபுவுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக அவர் தாய் வேதவல்லியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டில் சோபனா மட்டும் தனியாக இருந்தார். அப்போது பாபு அங்கு வந்தார். அவர் சோபனாவிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினார். மேலும் தான் வைத்திருந்த கத்தியால் சோபனாவின் மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் கொடூரமாக வெட்டினார். மேலும் கழுத்தை அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சோபனா சரிந்தார். உடனே பாபு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் வேதவல்லி வீட்டிற்கு வந்தபோது, சோபனா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவரை மீட்டு ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சோபனா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் வேதவல்லி, அவரது மகன் மாதவன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய பாபுவை போலீசார் தேடி வருகிறார்கள்.
மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் 4 நாட்களுக்கு பிறகு இன்று பிணமாக மீட்கப்பட்டான்.
இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்து கணக்கெடுக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூட வேண்டும். இனிமேல் மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டுவதற்கு முன் மாவட்ட நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெற்று பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கிணறு தோண்ட வேண்டும்.
கிணறு தோண்டும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். பணி நடக்கும் பகுதியை சுற்றி முள்வேலி கம்பி அல்லது தடுப்பு கட்டாயம் அமைக்க வேண்டும்.
அதில் தண்ணீர் கிடைக்காத பட்சத்தில் ஆழ்துளை கிணற்றை முறையாக மூட வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டும் பணி முடிந்த பிறகு மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை கணக்கெடுக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக உள்ளாட்சி அமைப்புகள், வி.ஏ.ஓ.க்கள் மற்றும் நிலஅளவை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியை தொடங்கி உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் கடந்த 11-ந் தேதி பிரதமர் மோடியும்-சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினார்.
தலைவர்களின் இந்த சந்திப்புக்கு பிறகு மாமல்லபுரம் பகுதி மேலும் பிரபலம் அடைந்து உள்ளது. இதனால் தற்போது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் வருகிறது.
இதனால் அங்குள்ள புராதன சின்னங்களை கூடுதலாக பராமரிக்க வேண்டும் என்பதை காரணம் காட்டி தொல்லியல்துறை இதுவரை நுழைவு கட்டணம் வசூலிக்காத வெண்ணை உருண்டை பாறைக்கு உள் நாட்டவர்களுக்கு 40ரூபாயும், வெளிநாட்டவர்களுக்கு 600ரூபாயும் கட்டணம் வசூலித்து வருகின்றன.
இந்த புதிய கட்டண நடைமுறைக்கு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் தற்போது மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் வழியாக கிரிடிட் கார்டு பயன்படுத்தி நுழைவு சீட்டு வாங்கினால் உள்நாட்டவருக்கு 5ரூபாய் தள்ளுபடியும் வெளிநாட்ட வருக்கு 50ரூபாய் தள்ளுபடியும் கொடுத்து வருகிறார்கள்.
இந்த வசதி இருப்பதை பயணிகளுக்கு தெரிய படுத்தும் வகையில் தற்போது டிக்கட் கவுண்டர்கள் அருகே அதற்கான போர்டுகளை தொல்லியல்துறையினர் வைத்து உள்ளனர். அதில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. மாமல்லபுரம் வந்த தமிழ் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அறிவிப்பில் தமிழிலும் விபரம் இருக்க வேண்டும் என்று தொல்லியல்துறைக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம், காமராஜர் சாலையில் காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை பணி முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியே வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளி வங்கி அதிகாரிகளுக்கும், விஷ்ணு காஞ்சி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தீயணைப்பு வீரர்கள் வரைந்து வந்தனர். அவர்கள் வங்கி ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது வங்கியில் உள்ள கேஷியர் அறையில் இருந்த முக்கிய ஆவணங்கள், பொருட்கள், கம்ப்யூட்டர்கள் முழுவதும் எரிந்து கிடந்தது. வங்கியின் ஒரு பகுதியில் எரிந்து கொண்டிருந்த தீயை தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.
வங்கியில் நள்ளிரவே தீப்பிடித்து இருப்பதாக தெரிகிறது. இது உடனடியாக காவலாளிக்கு தெரியவில்லை. இன்று அதிகாலைதான் அவர் கரும்புகை வெளியே வருவதை பார்த்து உள்ளார்.
தீ பெரிய அவளில் பரவாததால் அதிகமாக பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் நிம்மதி அடைந்தனர்.
வங்கியில் தீப்பிடித்தது பற்றி தெரிந்ததும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆலந்தூர்:
பரங்கிமலை போலீசில் ஆயுதப்படை போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் நல்லுசாமி (வயது 32). இவர் நேற்று இரவு அதே பகுதி பட்டுரோடு கரையான் கோவில் தெருவை சேர்ந்த பிகாஷ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போரூர் நோக்கி சென்றார்.
ராமாபுரம் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை தடுப்பு சுவரில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த போலீஸ்காரர் நல்லூசாமி பரிதாபமாக இறந்தார். பலத்த காயம் அடைந்த பிகாசுக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
படப்பை:
படப்பை அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.
கடந்த 23-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு வெளியூர் சென்று இருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 பவுன் தங்க நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தார். கொள்ளை போன வீட்டின் அருகில் இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான வீடியோவை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருந்தது. மேலும் கொள்ளையர்கள் முகமூடி அணிதிருந்தனர்.முகமூடி அணிதிருந்ததால் கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், மணிமாறன், தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு முகமூடி கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்திய-சீன உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து, பிரதமர் நரேந்திரமோடி கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-

உச்சி மாநாட்டிற்கு சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்தமைக்கு தமிழ்நாட்டு பொது மக்களுக்கும், கலாசார, சமூக, அரசியல் அமைப்புகளுக்கும், தமிழ்நாடு அரசிற்கும், முதல்-அமைச்சருக்கும் என்னுடைய பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் எழுதி உள்ளார்.
படப்பை:
படப்பை அருகே உள்ள ஆனூர் வரதராஜா புரத்தில் குடியிருப்பவர் பிரபாகரன் ஓய்வுபெற்ற ஆசிரியர்.
நேற்று முன்தினம் பிரபாகரன் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். இந்த நிலையில் நேற்று வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.
இதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பிரபாகரனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் ஊர் திரும்பினார். மணி மங்கலம் போலீசாருக்குப் புகார் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மணி மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது கொள்ளையர்கள் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பீரோவையும் உடைத்து அதில் இருந்த 70 பவுன் தங்க, நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். காஞ்சிபுரத்தில் இருந்து மோப்ப நாயும் கொண்டுவரப்பட்டது. அது மோப்பம் பிடித்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. வீடுபுகுந்து நகை கொள்ளையடித்தவர்களை மணி மங்கலம் போலீசார் தேடி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பகுதியில் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின் பேரில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் கே.மகேந்திரன், நகர் நல அலுவலர் டாக்டர் முத்து மற்றும் சுகாதாரத்துறையினர் காஞ்சிபுரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் பழையஇரும்பு பொருட்களை விற்கும் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு 4 டன் பழைய பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்கள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பது தெரிய வந்தது. உடனே அதனை அங்கிருந்து அகற்ற உத்தர விடப்பட்டது.
இதையடுத்து அதன் உரிமையாளர் பலராமன் ஒரு வண்டி மூலம் அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்த நிலையில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக கூறி இரும்பு கடை உரிமையாளர் பலராமனுக்கு நகராட்சி சுகாதாரத்துறையினர் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ‘ஏ.டி.எஸ்.’ கொசுக்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் காஞ்சிபுரம் பெருநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. பயணிகளுக்கு நகராட்சி ஆணையர் கே.மகேந்திரன், நகர்நல அலுவலர் டாக்டர் முத்து மற்றும் சுகாதார துறையினர் நிலவேம்பு கசாயத்தை வழங்கினர். நிலவேம்பு கசாயத்தை பயணிகள் ஆர்வத்துடன் வாங்கி குடித்தனர்.
போரூர்:
ராமாபுரம், ஸ்ரீகங்கை அவின்யூ 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ராணி (60). இவர் நேற்று மாலை கடைக்கு செல்வதற்காக பேரன் பாபுவுடன் மொபட்டில் சென்றார்.
அதே பகுதி ராயலா நகர் 1-வது தெருவில் வேகமாக சென்றபோது வேகத்தடை மீது மொபட் ஏறி இறங்கியது. இதில் வண்டியின் பின்னால் அமர்ந்திருந்த ராணி நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.
தலையில் படுகாயம் அடைந்த ராணியை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பாண்டி பஜார் போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






