search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமாவளவன்
    X
    திருமாவளவன்

    மணல் அள்ளுவதால் உருவாகும் குழிகளும் குழந்தைகள் உயிரை பறிக்கின்றன- திருமாவளவன்

    மணல் அள்ளுவதால் உருவாகும் குழிகளும் குழந்தைகளின் உயிரை பறிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிறுவன் சுஜித் உயிர் காப்பாற்றப்படவில்லை என்பது வேதனையையும் தலைகுனிவையும் ஏற்படுத்தி இருக்கிறது. உயிரை காப்பாற்ற தமிழக அரசு செய்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.

    அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்கள், காவல்துறை, வருவாய்துறை, தீயணைப்பு துறை ஆகிய அரசு துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு பாதுகாப்பு படை ஆகியவை உயிரை காப்பாற்ற பெரும் முயற்சி செய்தனர். தனியார் நிறுவனங்களும், என்.எல்.சி. நிறுவனமும் முயற்சியில் பெரும் பங்கு வகித்தன. ஆனாலும் சிறுவனை காப்பாற்ற இயலவில்லை.

    இது அறிவியல், தொழில் நுட்ப துறைக்கு விடப்பட்டுள்ள சவால். இனி சுஜித் போன்ற உயிர்களை இழக்க கூடாது. மத்திய-மாநில அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

    சுஜித் குடும்பத்தினருக்கு ரூ. 1 கோடி நிவாரணமும் ஒருவருக்கு வேலையும் அரசு வழங்க வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டுவது தொடர்பாக தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். 600 அடிகளுக்கு மேலாக தோண்டியும் தண்ணீர் கிடைக்க வில்லை. இதில் அறிவியல் உண்மை என்னவென்றால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. பாறைகள் நிறைந்த மணப்பாறை மட்டுமின்றி பாறைகள் இல்லாத மற்ற பகுதிகளிலும் 500 அடிக்கு மேல் ஆழம். ஆழ்துளை கிணறை தோண்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறிவிட்டோம்.

     

     ஆழ்துளை கிணறு

    சுஜித் உயிரை காப்பாற்ற இயலவில்லை. எஞ்சி உள்ள உயிர்களை காப்பாற்ற சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும். பூமியின் பாதுகாப்பு முக்கியமானது. சுஜித் உயிரிழப்பில் உணர வேண்டிய உண்மை. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசும் பொது மக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

    மத்திய-மாநில அரசுகள் தண்ணீர், மீத்தேன், கனிம வளங்களை எடுக்கிறோம் என்ற பெயரில் சுற்றுச்சூழல் சிதைவதற்கு காரணமாக இருக்க கூடாது. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் முற்றிலும் கைவிடப்பட வேண்டும். மணல் அள்ளுவது நிறுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.

    பேரிடரில் ஏற்படும் சேதங்களை விபத்தாக மட்டும் பார்க்க வேண்டும். யார் மீதும் குற்றம், பழி சொல்ல இயலாத நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 13 மழலைகள் பலியாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்தியாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

    ஆழ்துளை கிணறுகளை தோண்டுபவர்கள் மட்டுமல்ல அரசு அதிகாரிகளும் பொறுப்பாக இருந்து மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரைகுறையாக விடப்பட்ட ஆழ்துளை கிணறு சுஜித் பாட்டனார் தோண்டியது. மூடப்பட்ட நிலையில் அதன் மீதே விவசாயம் செய்து வந்துள்ளனர்.

    காலப்போக்கில் மழையில் கரைந்து சரிந்ததால் உயிர் இழப்பு நேர்ந்து உள்ளது. மணல் அள்ளுவதால் ஏற்படும் குழிகள், தூர்வாருகிறோம் என்ற பெயரால் ஏற்படும் குழிகள், தொழிற்சாலைகள் அமைக்க வெட்டப்படும் குழிகள் பற்றி எண்ணற்ற குழிகளில் குழந்தைகள் விழுந்து மடிந்து வருகின்றன. பெரியவர்களும் சிக்கி உயிர் இழக்க கூடிய சூழல் ஏற்படுகிறது. பேரிடர்களில் இருந்து மக்களை காக்க அரசு எச்சரிக்கையாகவும் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

    சுஜித் 100 அடிக்கு கீழ் சென்று உயிர் இழந்துள்ளான். இதற்கு மேல் யாருக்கு எதிராகவும் விவாதிக்க வேண்டியதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×