என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    • பிரியதர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
    • பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார்.

    பூந்தமல்லி:

    மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திப்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது 2½ வயது மகள் பிரணிகாஸ்ரீ. பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று மாலை பிரிய தர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பிரிய தர்ஷினியை வீட்டின் வெளியே வந்து தேடியபோது அருகில் உள்ள காலி மைதானத்தில் தேங்கி இருந்த மழைநீரில் மகள் பிரணிகாஸ்ரீ கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக மகளை மீட்டு மலையம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை பிரணிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    வீட்டில் தாயுடன் தூங்கியபோது எழுந்த பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார். அப்போது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாங்காடு போலீசார் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தை பிரணிகா ஸ்ரீ உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    தொடர் கனமழை காரணமாக சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து முதற்கட்டமாக 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    செம்பரப்பாக்கம் ஏரிக்கு தற்போது விநாடிக்கு 980 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதனால் அடையாறு ஆற்றங்கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் தற்போது 21 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
    • இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன

    காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 28 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரூ. 12 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், மீதமுள்ள ரூ. 16 கோடி உபயதாரர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

    திருப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஆன்மீகவாதிகளில் பொற்காலம் எனப் போற்றுகின்ற வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோயில்களைக் கணக்கெடுத்து, இதுவரை 3707 கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், மன்னர்கள் விட்டுச் சென்ற திருக்கோயில்களைப் பாதுகாக்கும் வகையில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைக்க ஆண்டுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 425 கோடி செலவில் 527 கோயில்கள் பட்டியலிடப்பட்டு, புனரமைக்கப்படுகின்றன.

    ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியில் 844 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதில், கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளையும் சேர்த்து 65% நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசின் முக்கிய திட்டமான தங்க முதலீடு திட்டத்தின் மூலம், இறைவனுக்குத் தேவைப்படாத பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி, ஒன்றிய அரசுக்குச் சொந்தமான மும்பையில் உள்ள உருக்காலுக்கு அனுப்பி வைத்து, இதுவரை 1074 கிலோ தங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் ஆண்டிற்கு ரூ. 17 கோடி வைப்பு நிதி வருவாயாகப் பெறப்படுகிறது. தற்போது நான்கு திருக்கோவில்களில் இருந்து 53 கிலோ தங்கம் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 18 கோயில்களில் இருந்து 308 கிலோ தங்கம் இந்த மாத இறுதிக்குள் அனுப்பப்பட உள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்ததன் மூலம் ஆண்டுக்கு ரூ. 17 கோடி வளர்ச்சிப் பணிகளுக்குச் செலவிடப்படுகிறது. உபயதாரர்களிடமிருந்து இந்த ஆட்சியில் சுமார் ரூ. 1512 கோடி நிதி வந்துள்ளது என்றும், இது வேறு எந்த ஆட்சியிலும் வரவில்லை.

    காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில் கும்பாபிஷேகம் வருகின்ற டிசம்பர் மாதம் எட்டாம் தேதி நடைபெற உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வது, அவர்களுக்கான மதிப்பை அவர்களே குறைத்துக் கொள்வதாகவும், இது இந்து அறநிலையத் துறைக்கு இழுக்கான சூழலை ஏற்படுத்தவில்லை, அவர்களுக்குத் தான் இழுக்கான நிலை ஏற்படுகிறது.

    எனவே, பிரச்சனை செய்யாமல் இரு பிரிவினரும் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும் என்றும், விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

    சமயபுரம் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சையில் சிக்கியவர் நீக்கப்பட்டுள்ளார், அவருக்கு பதில் வேறு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    • தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

    மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசமடைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

    கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இறப்புகளுக்குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 'ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு வந்துள்ளது.

    இந்நிலையில், கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்குவார்சத்திரத்தில் மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் அவரை, மத்திய பிரதேச போலீசார் கைது செய்தனர்.

    சென்னை போலீசார் உதவியுடன் கைது செய்யப்பட்ட ரங்கநாதனை சுங்குவார்சத்திரம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான்.
    • நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம்.

    காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் கைத்தறி மற்றும் டெக்ஸ்டைல்ஸ் துறை அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் வந்தா போதும்ய்யா.. அவன் அவன் ரோட்ல வந்துடுறான். அவன் அவன் இஷ்டத்துக்கு பேசுறான். எங்களுக்கு கட்டளையிட்டுள்ளனர் தலைமையிலிருந்து. என்ன கட்டளை தெரியுமா? நாங்கள் எல்லாம் அமைச்சர்களாம். நாங்களும் அமைச்சர்கள். நீங்களும் அமைச்கர்கள்தான்.

    நாங்கள் மட்டும் அவர்களுக்கு பதிலே பேசக் கூடாதாம். எங்களுக்கு நிஜமாக இந்த கட்டளை. நேற்று கூட வாட்ஸ்அப்பில் போட்டிருக்கிறார்கள். அவர்கள் எது வேண்டுமென்றாலும் பேசிக்கிட்டு போவார்கள். நாங்கள் எதுவும் பேசவில்லை. அது கூட கரெக்ட்தான். தெருவுல நாய் குலைக்குது, அது பின்னாடி நாம் போக முடியுமா? இல்ல.

    என்னுடைய நெசவுத்துறையில் அரசு ஏராளமா செய்திருக்கிறது. யார் யாரோ வந்து என்னமும் பேசுங்கள். ஒன்னும் வேலைக்காகாது. யாரும் முதல்வரை தொட்டுக்கூட பார்க்க முடியாது.

    இவ்வாறு அமைச்சர் ஆர். காந்தி பேசினார்.

    • என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.
    • 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.

    ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே சில காலமாக கருத்து மோதல் நிலவி வந்தது.

    இதற்கிடையே விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

    துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த மாதம் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

    கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைமைக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

    கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.

    32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.

    இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் வைத்து மல்லை சத்யா புதிய கட்சியை துவங்கி உள்ளார். கருப்பு-சிவப்பு நிறங்களில், 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார்.

    கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் புலவர் சே.செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    இதற்கிடைய அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் இன்று திருச்சியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.

    காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சார்பில் சி.பி.ஐ.யில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கவில்லை. இதைத் தொடர்ந்து வங்கி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த ஐகோர்ட்டு கடந்த ஜூன் மாதம் இது தொடர்பாக பிறப்பித்த உத்தரவில் சி.பி.ஐ. அதிகாரிகள் உரிய விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட்டது.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் காஞ்சிபுரம் சர்க்கரை ஆலை மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது சர்க்கரை ஆலையின் வங்கி கணக்குகள் மற்றும் ஆலையின் ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ரொக்கமாக ரூ.450 கோடி வரை கொடுத்து காஞ்சிபுரத்தில் உள்ள பத்மாவதி சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கி இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதும் அதில் சர்க்கரை ஆலையின் உரிமையாளர்கள் கையெழுத்து போட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகுதான் சசிகலா ரூ.450 கோடியை ரொக்கமாக கொடுத்து சர்க்கரை ஆலையை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    2019-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் ஏற்கனவே சசிகலா வீட்டில் சோதனை நடத்தி உள்ளனர். ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலையை விலைக்கு வாங்கியது தொடர்பாக உரிய கணக்கு கேட்டு சசிகலாவுக்கு அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீசும் அனுப்பி இருந்தனர்.

    சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வழக்கில் மேற்கண்ட தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர்.
    • போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    பூந்தமல்லி:

    காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், மணிகண்டன் நகர், காந்தி சாலையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி அபிதா(59), ராஜேந்திரனின் தாய் வள்ளியம்மாள்(88). இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ராஜேந்திரன் வேலை பார்த்த இடத்தில் தங்கி விட்டார்.

    வீட்டில் மாமியார் வள்ளியம்மாளும், மருமகள் அபிதாவும் மட்டும் இருந்தனர். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், அபிதாவையும் மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டார்.

    இதுகுறித்து குன்றத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அபிதாவே தனது கள்ளக்காதலனை வரவழைத்து இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து அபிதாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

    அபிதாவிற்கு குழந்தைகள் இல்லை. இதனால் அவர் அடிக்கடி அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தபோது அங்கு வந்த திருநெல்வேலியை சேர்ந்த 35 வயதுடைய வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    வயது வித்தியாசம் அதிகம் இருந்தாலும் கள்ளக்காதலர்கள் தங்களது நட்பை வளர்த்து அடிக்கடி தனியாக சந்தித்து வந்து உள்ளார். அந்த வாலிபர் அபிதாவிடம் பணம் கேட்கும் போதெல்லாம் தன்னிடம் பணம் இல்லை. ஆனால் வீட்டில் நகைகள் உள்ளது. அதுவும் தனது மாமியாரிடம் உள்ளது என்று கூறி உள்ளார். செலவுக்கு பணம் இல்லாததால் அந்த நகையை திருடி இருவரும் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்று திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று கணவர் வீட்டில் இல்லாததை அபிதா தனது கள்ளக்காதலனிடம் தெரிவித்தார். திட்டமிட்டபடி அந்த கள்ளக்காதலன் வந்து அபிதாவையும், மாமியார் வள்ளியம்மாளையும் கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்று விட்டார். ஆனால் இதில் கள்ளக்காதலர்களின் திட்டம் சொதப்பியதால் அபிதா சிக்கிக் கொண்டார். முதலில் மாமியார் வள்ளியம்மாளை மட்டும் தாக்கி நகையை பறித்து உள்ளார். பின்னர் போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக தன்னையும் கட்டிப்போட்டு விட்டு செல்லுமாறு அபிதா கூறி இருக்கிறார். இதன் பின்னர் அபிதாவையும், வள்ளியம்மாளையும் கட்டிப் போட்டு கள்ளக்காதலன் தப்பி இருக்கிறார்.

    போலீசார் வந்து விசாரணை செய்தபோது மாமியார் வள்ளியம்மாள் உட லில் மட்டும் காயங்கள் இருந்தன. ஆனால் அபிதாவின் உடலில் சிறிய காயங்கள் கூட இல்லை. விசாரணையின்போது அபிதா முன்னுக்குபின் முரணான பதில்களை கூறி உள்ளார். மேலும் வள்ளியம்மாள் அணிந்து இருந்த நகையை மட்டுமே கள்ளக்காதலன் பறித்து சென்று இருந்ததால் போலீசாருக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

    பின்னர் போலீசார் தங்களது பாணியில் விசாரித்தபோது அபிதா கள்ளக்காதலனை வரவழைத்து மாமியாரை கட்டிப்போட்டு நகை பறித்து இருப்பது தெரிய வந்தது.

    ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு இதே போல் நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது. இதனை சமாளித்து போலீசில் புகார் கொடுக்காமல் கள்ளக்காதலனை அபிதா காப்பாற்றி உள்ளார். அதேபோல் தற்போதும் நகை பறித்து போலீசில் சிக்காமல் உல்லாசமாக செலவு செய்யலாம் என்று நினைத்து நகை கொள்ளையில் ஈடுபட்டபோது போலீசாரின் விசாரணையால் அபிதாவின் கள்ளக்காதல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

    இதேபோல் கொள்ளை நடந்த நேரத்தில் அப்பகுதியில் அபிதா, கள்ளக்காதலனிடம் நின்று பேசிக் கொண்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சியும் போலீசாருக்கு கிடைத்து உள்ளது. அபிதா போலீசில் சிக்கியது பற்றி அறிந்ததும் தற்போது அவரது கள்ளக்காதலன் தலைமறைவாகி விட்டார். அவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சாதித்தது என்ன?
    • எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது.

    மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றினார்.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

    நான் உங்கள் முன் பேசுகிறேன் என்றால் எனது அரசியல் வாழ்க்கை 51 ஆண்டு காலம். 1976-ல் கிளைக்கழகச் செயலாளராக பொறுப்பேற்றேன் அதிலிருந்து படிப்படியாக உயர்ந்து உங்கள் முன் நிற்கிறேன், இது உழைப்பால் நிற்கிறேன். சிலர் உழைப்பே கொடுக்காமல் பலனை எதிர்பார்க்கிறார்கள், அது நிலைக்காது. ஏனெனில், உழைப்புதான் நிரந்தரம்.

    திமுகவை வீழ்த்தும் சக்தியுள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. தமிழகத்தில் அதிக உறுப்பினர் கொண்ட இயக்கம் அதிமுக. தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்தது அதிமுக அரசு. பொன்விழா கண்ட கட்சி. ஆக அதிமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

    இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சாதித்தது என்ன? எடுத்தவுடன் எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் கிடையாது. எம்ஜிஆர், அண்ணா, அம்மா எல்லோரும் எடுத்ததுமே முதல்வர் ஆகவில்லை. மக்கள் நன்மதிப்பைப் பெற்றபின்னர்தான் முதல்வராக வர முடிந்தது.

    அதிமுகவில் எங்களுக்கு அடையாளம் என்றால் உழைப்பு, சேவை, விஸ்வாசம். மற்றவர்களைப் போல திரைப்படங்களில் நடித்து அதன்மூலம் வருமானத்தைப் பெற்று, ஓய்வுபெறும் காலத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலை கிடையாது. இளமைப் பருவத்திலே எம்ஜிஆரால் ஈர்க்கப்பட்டு 51 ஆண்டுகாலம் அதிமுகவுக்காக பாடுபட்டு படிப்படியாக வந்து பொதுச்செயலாளராக ஆனேன். சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அடுத்து உங்களால் முதல்வர் ஆக்கப்பட்டேன். இதற்கு ஒரே அடையாளம் உழைப்பு, விஸ்வாசம், சேவை. இதற்குக் கிடைத்ததுதான் பொதுச்செயலாளர், முதல்வர் பதவி.

    ஒரு திரைப்படத்தில் நடித்தவுடனே ஹீரோ ஆகமுடியாது, பல படத்தில் நடித்த பிறகே ஸ்டார் ஆக முடியும். சினிமாவிலே அப்படி என்றால் அரசியலில் எப்படியிருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். அதிமுகவில் நான் இருந்ததால்தான் சேவை செய்ய வாய்ப்புக் கிடைத்தது. இது சிலருக்குப் பொறுக்கவில்லை. எடுத்தவுடனே எல்லாம் கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். சேவை செய்தால்தான் நிரந்தரமாக இருக்கும், நிலைக்கும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காக்கிறது யார்?.
    • அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?.

    மதுரை மாநில மாநாட்டில் த.வெ.க. தலைவர் விஜய் பேசும்போது, "எம்ஜிஆர் யார் தெரியும்ல.., அவரது மாஸ்னா என்னதுன்னு தெரியும்ல.., அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும் முதலமைச்சர் சீட் குறித்து யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியல.., கனவு கூட காண முடியல.., எப்படியாவது முதலமைச்சர் பதவியை தன்னிடம் கொடுங்கள். எம்.ஜி.ஆர். வந்த உடன் அவரிடம் கொடுக்கிறேன் என தன்னுடைய எதிரியையும் கெஞ்ச வைத்தவர். கெஞ்ச வைத்தவர். அதனால..,

    சிறிது நேரம் பேச்சை நிறுத்தி, ஆனா இப்போ அவர் ஆரம்பித்த அந்த கட்சியை, கட்டிக்காக்கிறது யார்?. அந்த கட்சி இப்போ எப்படி இருக்கிறது. நான் சொல்லிதான் உங்களுக்கு தெரியனுமா என்ன?. அப்பாவி தொண்டர்கள் வேதனையை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்கு போடனும், எப்படி பட்ட ஆட்சி அமையனும் அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் பாஜக என்ன வேசம் போட்டு வந்தாலும், தமிழ்நாட்டில் அவர்கள் வித்தை வேலைக்கு ஆகாது" எனக் கூறியிருந்தார்.

    இதற்கு மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எழுச்சி பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உரையில் எடப்பாடி பழனிசாமி பதில் கொடுத்துள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் புனிதமான பூமி. அதிமுக என்பதே அண்ணாவின் பெயரையும், கொடியில் அண்ணாவின் உருவத்தையும் கொண்டது. இந்த புனித பூமியில் பேசுவதே என் பாக்கியம். காஞ்சிபுரமே குலுங்கும் அளவுக்கு கடல் போல் காட்சியளிக்கிறது. அடுத்தாண்டு அதிமுகவின் வெற்றிக்கு இங்கிருக்கும் மக்களின் ஆரவாரமே சாட்சி.

    அதிமுக மக்களுக்கு சேவை செய்ய தொடங்கப்பட்ட இயக்கம். தீயசக்தி திமுக-வை வீழ்த்த இந்த கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் எண்ணத்தை நிகழ்த்தி காட்டியவர் எம்ஜிஆர். அண்ணா, எம்ஜிஆர், அம்மா மறைந்தாலும் மக்கள் மனதில் பூமி உள்ளவரை நிலைத்து நிற்பார்கள். எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றியவர்கள்.

    யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் துவங்க முடியும். சிலர், அதிமுக யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். பாவம் அறியாமையில் பேசுகிறார்கள். இதுகூட தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால் உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்.?

    இங்கிருக்கும் அவ்வளவு பேரும் அதிமுக தொண்டர்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பேசி வருகிறார்கள். அதிமுக அப்படியல்ல, ஏழை ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்குத் திட்டங்களைத் தீட்டி அதன்மூலம் ஏற்றம் பெற்ற கட்சி. மரம் உடனே வளராது, செடி வைத்து தண்ணீர் ஊற்றி பின்னர் தான் பூப்பூத்து காய்காய்க்கும். அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் மக்களுக்கு நன்மை செய்துவிட முடியாது.

    எம்ஜிஆர் கட்சி தொடங்கி 5 ஆண்டுகாலம் தன்னுடைய உழைப்பைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தார், அம்மாவும் அப்படித்தான் எடுத்தவுடன் முதல்வர் ஆகவில்லை, மக்களுக்கு உழைத்துதான் முதல்வரானார். பேறறிஞர் அண்ணா எடுத்தவுடனே முதல்வர் ஆகவில்லை. நிறைய போராட்டங்களை சந்தித்தார், மொழிக்காக சிறை சென்றார். நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு தன்னையே அர்ப்பணித்தார்.

    நம் தலைவர்கள் எல்லாம் அர்ப்பணித்து வாழ்ந்து அதிமுகவை அடையாளம் காட்டிச் சென்றனர். அதனால்தான் அதிமுக நிறைய திட்டங்களைக் கொடுத்தது. தமிழகம் இந்தளவு உயர்ந்ததிருப்பதற்கு 31 ஆண்டுகள் மக்களுக்காக நாட்டுக்காக அதிமுக உழைத்ததுதான் காரணம்.

    அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொடுத்திருக்கிறோம். கல்வியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தினார் அம்மா, அதிக நிதி ஒதுக்கினார். அதிமுக ஆட்சியில்தான் நிறைய கல்லூரிகளைக் கொண்டுவந்து கல்வியை உயர்த்தினோம். 10 ஆண்டுகளில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம். 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, பொறியியல், வேளாண், கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் என நிறைய கல்லூரிகளைத் திறந்த ஒரே அரசு அதிமுக அரசு.

    ஏழை மாணவர்கள் பட்டப்படிப்பு படிக்க அடித்தளமிட்டது அதிமுக அரசு. அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுறாங்க, நாங்க அப்படியல்ல, இங்கிருப்பவர்கள் உழைப்பால் அடையாளம் காட்டப்பட்டவர்கள், உழைப்புதான் நிலைக்கும். தொழிலிலும், அரசியலிலும் உழைத்தால்தான் ஏற்றம் பெற முடியும், அதுவும் அதிமுகவில் மட்டும்தான், வேறு எந்தக் கட்சியிலும் வரமுடியாது.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
    • வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல மெடிக்கல் கடை உரிமையாளர் ஞானம். இவரது மனைவி ஜீவா நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சினிமா பாட்டிற்கு உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மராப்டைப்பு ஏற்பட்டதால் நடனமாடிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஜீவாவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தும் கண் முழிக்காததால் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜீவாவை பரிசோததித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். நடனமாடிக்கொண்டு இருக்கும் போது பெண் ஒருவர் மரணம் அடைந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் குறித்து அங்கு இருந்தவர்கள் பதிவு செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் மகிழ்ச்சியாக நடனமாடும் ஜீவா திடீரென தலை சுற்றுவதை போல் தலையில் கை வைத்து விட்டு, அப்படியே மேடையில் மயங்கி விழுந்தார்.

    இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கூறுகையில், பாடகர் வேல்முருகன் அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியாக பாடலுக்கு நடனம் ஆடும்படி அழைத்தார். அதன் அடிப்படையில் சென்ற ஜீவாவிற்கு இந்த சோகம் நேர்ந்ததாக தெரிவித்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர்.
    • கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேவலூர் குப்பத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். அதே பகுதியில் பிரியாணி கடை வைத்து உள்ளார். இவரது மனைவி பவானி (39). இவரும் பிரியாணி கடையில் கணவனுக்கு உதவியாக இருந்து வந்தார்.

    அரிகிருஷ்ணன் பிரியாணி கடைக்கு இறைச்சி மற்றும் பொருட்கள் வாங்க அடிக்கடி மனைவி பவானியை கடையில் விட்டு சென்றார். அப்போது கடையில் வேலை பார்த்த மதன் குமார் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.

    இதனை அறிந்த அரி கிருஷ்ணன் கடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தார். இதில் மனைவி பவானி, கள்ளக்காதலன் மதன் குமாருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பதிவானது. இதையடுத்து அரிகிருஷ்ணன் தனது மனைவி பவானியை கண்டித்து கடையில் வேலைபார்த்த மதன் குமாரை இனிமேல் கடைக்கு வரவேண்டாம் என்று நிறுத்தி விட்டார்.

    இதனால் கள்ளகாதலர்கள் ஒன்றாக சந்திக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதையடுத்து தவிப்புக்குள்ளான பவானி கள்ளகாதலன் மதன்குமாருடன் சேர்ந்து இடையூறாக இருக்கும் கணவன் அரிகிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதற்காக கள்ளகாதலர்கள் இருவரும் சேர்ந்து திருவாரூர் பகுதியை சேர்ந்த கூலி படையினரைஅணுகி ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் முன்பணம் கொடுத்தனர். இதனை அறியாத அரிகிருஷ்ணன் வழக்கம்போல் மனைவியுடன் பேசியபடி பிரியாணி கடைக்கு சென்று வந்தார்.

    இந்தநிலையில் மேவலூர் குப்பம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற அரிகிருஷ்ணனை கூலிப்படை கும்பல் கார் ஏற்றி கொல்ல முயன்றனர். இதில் அரிகிருஷ்ணன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    அப்போது கூலி படையினர் அரிகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசிய போது, "உன் மனைவி கள்ளகாதலனுடன் சேர்ந்து உன்னை கொலை செய்ய ரூ.15லட்சம் பேரம் பேசி ரூ.2லட்சம் கொடுத்து உள்ளார். நீ எங்களுக்கு ரூ.5லட்சம் கொடுத்தால் உன்னை உயிரோடு விட்டு விடுகிறோம்" என்று மிரட்டி உள்ளனர்.

    இதனால் அதிர்ந்து போன அரிகிருஷ்ணன் இது பற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் வழக்கு பதிவு செய்து அரிகிருஷ்ணனின் மனைவி பவானி, அவரது கள்ளக்காதலன் மதன்குமார் ஆகியோரை பிடித்து அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூலிப் படையை ஏவி அரிகிருஷ்ணனை கொலை செய்ய முயன்றதை ஒப்புக் கொண்டனர்.

    இதையடுத்து பவானி, கள்ளக்காதலன் மதன்குமார் மற்றும் அவர்கள் கொடுத்த தகவலின் படி கூலிப் படையை சேர்ந்த திருவாரூர் மாவட்டதை சேர்ந்த விக்னேஷ், விஜய், மணிகண்டன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களி டம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    அரிகிருஷ்ணனை கூலிப்படையினர் காரை ஏற்றி தீர்த்து கட்ட முயன்ற முதல் முயற்சி பலிக்காததால் அவர்கள் தங்களது திட்டத்தை மாற்றி உள்ளனர். கொலை செய்து விட்டு கைதாகி சிறைக்கு செல்லாமல் அரிகிருஷ்ணனையே மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    அப்படி மிரட்டியபோது தான் மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்றது அரிகிருஷ்ணனுக்கு தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர் போலீசில் புகார் செய்ததால் மனைவி, கள்ளக்காதலன் மற்றும் கூலிப்படையினர் கூண்டோடு சிக்கிக் கொண்டனர்.

    கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவியே கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×