என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாங்காட்டில் மழை நீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
- பிரியதர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார்.
- பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார்.
பூந்தமல்லி:
மாங்காடு, ஜனனி நகர் இணைப்பு பகுதியைச் சேர்ந்தவர் சந்திப்குமார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர்களது 2½ வயது மகள் பிரணிகாஸ்ரீ. பிரியதர்ஷினி அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை பிரிய தர்ஷினி, தனது மகள் பிரணிகாஸ்ரீயுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு பிரியதர்ஷினி எழுந்து பார்த்தபோது அருகில் இருந்த மகளை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பிரிய தர்ஷினியை வீட்டின் வெளியே வந்து தேடியபோது அருகில் உள்ள காலி மைதானத்தில் தேங்கி இருந்த மழைநீரில் மகள் பிரணிகாஸ்ரீ கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக மகளை மீட்டு மலையம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை பிரணிகாஸ்ரீ இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
வீட்டில் தாயுடன் தூங்கியபோது எழுந்த பிரணிகாஸ்ரீ விளையாடுவதற்காக வீட்டின் வெளியே வந்து உள்ளார். அப்போது வீட்டின் அருகே தேங்கி இருந்த மழைநீரில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மாங்காடு போலீசார் பலியான குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தை பிரணிகா ஸ்ரீ உயிரிழப்புக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






