என் மலர்
ஈரோடு
கரூர் கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி வீரணாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் திருப்பதி (வயது 23). பொக்லைன் டிரைவராக உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைக்காக சென்றபோது அங்குள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சிவசங்கிரி (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
அவர்கள் 2 பேரும் கடந்த 4-6-2014 அன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் ஈரோடு திண்டல் மாருதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
திருப்பதிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதால் அவருக்கும், சிவசங்கிரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. கடந்த 7-1-2015 அன்று வழக்கம்போல் திருப்பதி மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் மனவேதனை அடைந்த சிவசங்கிரி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் மேல்விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டியதாக திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதியின் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக திருப்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.
ஈரோடு:
ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதி, மஜீத் வீதி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், மேலும் 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக மாநகராட்சிக்கு புகார் வந்தது.
இதையொட்டி மாநகராட்சி கமிஷனர் சீனிஅஜ்மல்கான் உத்தரவுப்படி அங்கு நகர் நல அலுவலர் சுமதி, துப்புரவு ஆய்வாளர்கள் நாச்சிமுத்து, நல்லசாமி ஆகியோர் சோதனை நடத்தினர்.
அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
அந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ. 3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இது குறித்து நகர் நல அலுவலர் சுமதி கூறும்போது, ‘‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் அதையும் மீறி சிலர் விற்று வருகிறார்கள். இனி தொடர்ந்து அப்படி விற்று வந்தால் கடை உரிமத்தை ரத்து செய்வதை தவிர வேறு வழியில்லை’’ என்று கூறினார்.
முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை அதிகாரிகள் ஒரு வேனில் ஏற்றி கொண்டு சென்ற போது அந்த பகுதி வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேனையும் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப் பான சூழ்நிலை நிலவியது.
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 28). கூலி தொழிலாளி.
நேற்று இரவு தண்டபாணி குள்ளம்பாளையத்தில் இருந்து முத்துக்காளிமடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
ஈரோடு-சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் குள்ளம் பாளையம் பிரிவில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ்சும், மோட்டார் சைக்கிளும் மோதின. இதில் தூக்கி வீசப்பட்ட தண்டபாணி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே தண்டபாணி பரிதாபமாக இறந்தார். பலியான தண்டபாணிக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்துள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மணி (வயது 24). இவர் கட்டிட வேலைக்கு சென்று வருகிறார்.
மணியின் குடும்பத்தினர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கரூர் அருகே பெரியாயிபாளையம் பகுதியில் வசித்து வந்தனர். அப்போது இவர்கள் குடியிருந்த வீடு அருகில் ஆனந்த் என்பவரின் குடும்பமும் வசித்து வந்தது.
ஆனந்தின் மகள் சவீதா (19). இவர் கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மணியின் குடும்பம் கரூரில் இருந்தபோது மணிக்கும் சவீதாவுக்கும் காதல் ஏற்பட்டது.
தற்போது மணியின் குடும்பம் சென்னிமலை பகுதிக்கு குடி வந்த பிறகும் மணிக்கும் சவீதாவுக்கும் காதல் நீடித்தது. இவர்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.
எனவே மணியும், சவீதாவும் வீட்டைவிட்டு வெளியேறினர். பின்னர் சென்னிமலை மலை அடி வாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் பாதுகாப்பு கேட்டு சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு சென்றனர்.
சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் இருவரின் பெற்றோர்களையும் வர வழைத்து சமாதானம் செய்து காதல் ஜோடியை மணியின் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
ஈரோடு, மாணிக்கம் பாளையம், ஹவுசிங் யுனிட் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது44). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி முத்துகுட்டி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று இரவு அந்தோணிராஜ் கடைக்கு சென்றார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. வீட்டின் அருகே சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராத வகையில் அந்தோணிராஜ் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அந்தோணிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்தோணிராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திங்களூரை அடுத்த மாச்சாபாளையம், தச்சந்தோட்டம், வேப்பங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது53). பனை மரம் ஏறும் தொழிலாளி.
சம்பவத்தன்று சின்ன வீரசங்கிலியில் உள்ள ஒரு தோட்டத்தில் ராஜேந்திரன் பனைமரம் ஏறினார். அப்போது எதிர்பாராத வகையில் பனைமரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்து விட்டார்.
இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடைமழை கொட்டி வருகிறது. நேற்றும் வழக்கம் போலவெயில் வறுத்தெடுத்தாலும் மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தன.
மாலை 6 மணிக்கு மேலும் இரவு 8 மணிக்கு மேலும் இடி-மின்னலுடன் மழை கொட்டத்தொடங்கியது.
பவானி, மொடக்குறிச்சி மற்றும் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல் பெருந்துறை, பவானிசாகர் மற்றும் வனப்பகுதியான தாளவாடியிலும் பரவலாக மழை பெய்தது. சூறை காற்றுடன் மழை பெய்ததால் இக்களூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டமரங்கள் முறிந்து விழுந்தது. மின்சார கம்பம் மீது மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.
தாளவாடி பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக கோடைமழை கொட்டி வருகிறது. அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த இடியும்- மின்னலுமாக இருந்தது. கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிதமான மழை மட்டுமே பெய்தது.
எனினும் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோபி:
கோபி ஊராட்சி ஒன்றியம் அளுக்குழி ஊராட்சி கோபி பாளையம் பகுதியில் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.
இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதியடைந்தனர். இது குறித்து பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதன் காரணமாக அந்த பகுதி பெண்களும், ஆண்களும் இன்று கலை திடீர் போராட்டத்தில் குதித்தனர். ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் கோபிபாளையம் பிரிவில் அவர்கள் திரண்டனர்.
பெண்கள் காலி குடங்களுடன் வந்திருந்தனர். திடீரென ரோட்டில் அமர்ந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் வசதி கேட்டு அவர்கள் கோஷம் எழுப்பினர்.
இந்த போராட்டத்தால் ஈரோடு-சத்தியமங்கலம் ரோட்டில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் நிலவியது. முக்கியமான சாலை என்பதால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் நின்றன.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் அங்கு வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களும், பெண்களும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கொளத்துப்பாளையம் அருகே வரிசையாக இருந்த 3 மின் கம்பங்கள் நடுரோட்டின் குறுக்கே விழுந்துள்ளது.
இதில் 2 கம்பங்கள் முறிந்தும், ஒரு கம்பம் அடியோடு கீழே விழுந்தது. மின் கம்பங்கள் முறிந்து விழும் போது தானாகவே மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்தால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். இந்த பகுதியில் மேலும் ஒரு மின் கம்பம் கீழே விழும் அபாய நிலையில் சாய்ந்தபடி உள்ளது. இந்த வழியே தினமும் சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கும் அங்கிருந்து சென்னிமலைக்கும் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது.
மின் கம்பங்கள் ரோட்டில் விழுந்ததால் அந்த வழியே பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால்பஸ், கார், வேன் உள்பட அனைத்து வாகனங்களும் அந்த வழியாக செல்ல முடியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதி உள்ள பல மின் கம்பங்களை ஆழமாக குழி தோண்டி நடாமல் மேலோட்டமாக நட்டுள்ளனர். இதனால் லேசான காற்று வீசியதற்கே மின் கம்பங்கள் கீழே விழுந்துள்ளது.
இந்த கம்பங்கள் கீழே விழுந்ததும் ஊத்துக்குளி மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் யாரும் மதியம் வரை வரவில்லை. சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்தோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரையில் முதியோர் இல்லம் உள்ளது. தனியாருக்கு சொந்தமான இந்த இல்லத்தில் ஏராளமான பெண்கள் தங்கி உள்ளனர்.
பவானி பெரிய புலியூரை சேர்ந்த ரத்தினம் (வயது 60) என்பவரும் இங்கு தங்கி இருந்தார். நேற்று மதியம் அவர் வெளியே சென்றார்.
ஆனால் அவர் முதியோர் இல்லத்துக்கு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
அவர் மாயமானது குறித்து கோபி போலீஸ் நிலையத்தில் முதியோர் இல்ல நிர்வாகி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ரத்தினத்தை தேடி வருகிறார்கள். #Tamilnews
கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குழந்தையை கடத்துபவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் அப்பாவி நபர்களையும், முதியோர்களையும் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கும் நிலை உருவானதற்கு காவல் துறையின் மெத்தனமான செயல்பாடுகளும், நடவடிக்கைகளுமே காரணம்.
இந்த தாக்குதலில் குற்றமே செய்யாத அப்பாவி நபர்கள் உயிரிழந்திருப்பதும், காயமடைந்திருப்பதும் மிகுந்த வேதனையளிக்கிறது. காவல்நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கும், பணம் படைத்தவர்களுக்கும் கிடைக்கும் மரியாதை ஏழை மக்களுக்கு கிடைப்பதில்லை.
காவல்நிலையங்களுக்கு வரும் ஏழை மக்களிடத்தில் காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்ளும் விதம் காவல்துறை மீது வெறுப்பை உண்டாக்குகிறது. குற்றம் செய்தவர்களை பிடித்து காவல்துறையிடம் பொது மக்கள் ஒப்படைத்தாலும் ஒருசில காவல்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து தண்டனைகளை பெற்றுத் தராமல் குற்றவாளிகளை வெளிவிடுவதால்ஏற்பட்ட விளைவுதான் தற்போது பொதுமக்களின் கொடூர தாக்குதலாக மாறியிருக்கிறது.
144 தடை உத்தரவு, சட்டத்தை கடுமையாக்குதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்றவைகளால் மக்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்தி விட முடியாது. காவல்துறை அதிகாரிகளின் நேர்மையான தொடர்ச்சியான செயல்பாடுகளின் மூலம் தான் காவல்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
லஞ்சமும், ஊழலும் வாழ்க்கை முறையாகமாறி வருவது நல்லதல்ல. பணம் படைத்தவர்கள் லஞ்சம் கொடுத்து எந்தவொரு துறையிலும் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் நிலை இருக்கிறது. லஞ்சமும், ஊழலும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. தற்போது சந்தேகத்தின்பேரில் குழந்தை கடத்துபவர்கள் என்று நடுரோட்டில் மக்கள் நடத்தும் தாக்குதலைப்போல, ஊழல்வாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட ரொம்ப நாள் ஆகாது.
இந்த தாக்குதல்சம்பவம் மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கின்ற பெரும் புரட்சியின் முன்னோட்டத்தை வெளிக்காட்டுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலில் ஆளுங்கட்சியினரின் வேட்புமனுவை மட்டும் பெற்றுக்கொண்டு மற்றவர்கள் மனுவை பெற மறுப்பதும், நிராகரிப்பதும் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சக்கட்டம்.
இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார். #Tamilnews
பெருந்துறை அடுத்த சீனாபுரம் பட்டக்காரன் பாளையம் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டப்பட்டது.
ஆனால் 2014-ம் ஆண்டு அந்த பகுதியில் ரேசன் கடை அமைப்பதற்காக இந்த கட்டிடத்தில் இருந்த நூலகம் இடமாற்றம் செய்யப்பட்டு ரேசன் கடை அமைப்பதற்கான மராமத்து பணிகள் நடைபெற்றது. ஆனால் இதுவரை இந்த இடத்தில் ரேசன் கடை திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த கட்டிடத்தை மீண்டும் நூலகமாக மாற்றுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இதுவரை இந்த பகுதியில் ரேசன் கடை அமைக்காததை கண்டித்தும் பட்டக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-
கடந்த பல வருடங்களாகவே இந்த பகுதியில் ரேசன் கடை இல்லை. இதனால் அருகில் உள்ள ஆயிக்கவுண்டன் பாளையம் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வருகின்றோம்.
இங்கு ரேசன் கடை அமைக்க பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால் தற்போது ரேசன் கடைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தை மீண்டும் நூலகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் வீடுகளின் முன்பு கருப்பு கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #Tamilnews






