என் மலர்
ஈரோடு
ஈரோடு:
கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நசலச்சங்கத்தின் 3-வது மாநில மாநாடு மற்றும் புதிய கட்சி தொடக்க விழா ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடந்தது. மாநாட்டுக்கு சங்க மாநில பொதுச் செயலாளர் கே.எஸ்.ராஜ்கவுண்டர் தலைமை தாங்கினார். மாநாட்டில் புதிய திராவிட கழகம் என்கிற புதிய கட்சி தொடங்கப்பட்டது.
மாநாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-
புதிய திராவிட கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்கி இருப்பதே , வருங்கால தமிழகம் எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்கிறது. பெரியார் பிறந்த மண்ணில் இந்த கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலம் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் கோட்டையாக இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தை முதல்-அமைச்சராக பதவியில் அமர்த்தியவர் சசிகலா தான்.
தமிழகத்தில் மதவாத கட்சி உள்ளே வர அவர் காரணமாக இருந்தவர் பன்னீர்செல்வம். அந்த துரோகத்தால் தான் அவரை கட்சி பதவியில் இருந்து நீக்க வேண்டியிருந்தது.
கடந்த 15-ந் தேதி கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவு வந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து கடிதம் எழுதினார். அதில் தென்னிந்தியாவில் பா.ஜ.க. மலர கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதில் இருந்தே அவர் துரோகத்தை ஒப்பு கொண்டு உள்ளார்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் வரும் சட்டமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற வாய்ப்பில்லை என்றும், பகல் கனவு காண்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு நான் சொல்லுவது, வரும் சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.
காரணம் மக்கள், குறிப்பாக தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்று கூட நான் எடப்பாடிக்கு சென்ற போது அங்குள்ள பொதுமக்கள், பெரியவர்கள் தமிழகத்தில் இன்று நடக்கும் துரோக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றனர். இந்த மாநாடு நடத்த பல்வேறு தடைகள் வந்தது. அதை தாண்டி தான் நடந்து வருகிறது.
அதன் பின்னர் தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது.-
கர்நாடகாவில் பெரும் பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதுபோல் எங்களது கட்சியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது மக்களாட்சி அமையும்.
கமல்ஹாசன் மாற்றத்தை கொண்டு வருவேன் என்கிறார். அவரால் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும். மக்கள் தானே மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார். #dinakaran #opanneerselvam
கோபி:
தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபி அருகே உள்ள கொடிவேரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக அரசு அறிவித்தபடி ஜூன் 1-ந்தேதி முதல் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும். இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 1,6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் சிறந்த முறையில் படைக்கப்பட்டு பல வண்ணங்களில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை பார்க்கும் போதே மாணவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை தூண்டும். அடுத்த மாதம் அரசு அறிவித்தபடி அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 தேர்வு முடிந்து முடிவுகளும் நல்ல முறையில் அறிவிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. வருகிற 23-ந்தேதி காலை 9 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு வெளியிடப்படும்.
புதிய பாடத்திட்டம் ஆண்டுக்கு 185 நாட்கள் நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 170 நாட்கள்தான் பாடம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக 15 நாள் வகுப்புகள் நடத்தப்படும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க செப்டம்பர் மாதம் வரை சேர்க்கை நீடிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் வெற்றிபெறும் மாணவ- மாணவிகளுக்கு இப்போதே எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். கல்விதுறை மூலம் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும், புதிய பாடத்திட்டங்களையும் அரசு அறிவித்துள்ளது.
எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக கல்விதுறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இதுவரை பிளஸ்-2 பாடத்தில் 6 பாடங்களுக்கு தலா 200 மதிப்பெண்கள் மூலம் 1200 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த மதிப்பெண்கள் முறை இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளதாக கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இனி வரும் கல்வி ஆண்டு முதல் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 100 மதிப்பெண்கள் வீதம் 600 மதிப்பெண்கள் மட்டும் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என கல்விதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முறையை செயல்படுத்த கல்விதுறை முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
அந்தியூர்:
ஈரோடு அருகே உள்ள சேனாதிபதிபாளையத்தை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 33). இவர் ஈரோடு மாநகராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் அந்தியூர் அருகே உள்ள கரட்டூரை சேர்ந்த ராஜசேகரன் என்பவருடைய மகள் தமிழரசிக்கும் (30) கடந்த 6 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்றது.
இவர்களுக்கு நந்திதா (5), கிருத்திகா (2½) ஆகிய 2 மகள்கள் உள்ளார்கள். இதில் நந்திதா ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.
கோடை விடுமுறையையொட்டி கடந்த 20 நாட்களுக்கு முன்பு கரட்டூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் மோகனசுந்தரம் சென்றார். பின்னர் அங்கிருந்தபடியே ஈரோட்டுக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை தமிழரசி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றுவிட்டார். மோகனசுந்தரம் மட்டும் வீட்டில் இருந்தார். சாமி தரிசனம் செய்துவிட்டு தமிழரசி குழந்தையுடன் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் கயிறால் தூக்குப்போட்டு மோகனசுந்தரம் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தமிழரசி சத்தம் போட்டு கதறி அழுதார்.
இதுபற்றி அறிந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோகனசுந்தரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தூக்கில் தொங்கிய மோகனசுந்தரம் குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. எனவே போலீசார் மோகன சுந்தரத்தின் மனைவியிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது குடும்ப தகராறு ஏதும் தங்களுக்குள் இல்லை என்று மோகனசுந்தரத்தின் மனைவி கூறியதாக தெரிகிறது. எனவே மோகனசுந்தரத்தின் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள பனப்பாக்கத்தில் இருந்து 23 பேர் டிராவல்ஸ் வேனில் கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா புறப்பட்டனர்.
வேனை பனப்பாக்கத்தை சேர்ந்த சுதாகர் (வயது 35) என்பவர் ஓட்டினார். அந்த வேனும் அவருக்கு சொந்தமானதாகும்.
கேரளாவுக்கு போகும் வழியில் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள் வந்த வேன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இன்று அதிகாலை வேன் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை நெருங்கியது. பெருந்துறை அருகே டீச்சர்ஸ் காலனியில் உள்ள பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்பினர்.
பின்னர் அங்கிருந்து வேன் கிளம்பியது. அருகில் உள்ள மேம்பாலத்தில் வேன் ஏறியது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் வேன் பயங்கரமாக மோதியது.
இதில் டிரைவர் இருக்கும் பக்கம் வேன் பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் இருக்கை மற்றும் அதற்கு பின்னால் உள்ள 2 இருக்கைகள் நொறுங்கியது.
இதில் டிரைவர் சுதாகர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது பின்பக்கத்தில் 2 இருக்கையில் இருந்தவர்கள் பலத்த காயம் அடைந்தனர். வேனில் இருந்த மற்றவர்களும் காயம் அடைந்தனர்.
மொத்தம் 20 பேர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர். 6 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்களில் திருமூர்த்தி, லட்சுமி ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
4 பேர் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் காயம் அடைந்த மகேந்திரன் (13), கீர்த்தனா (17), பவ்யா (13), போகேஸ் (13), மவுனிகா (20) ஆகிய 5 பேர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
காயம் அடைந்த மற்றவர்கள் லேசான காயத்துக்கு சிகிச்சை பெற்று திரும்பினர். இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மைய திறப்பு விழா இன்று நடந்தது.
இதை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜூன் மாதத்தில் 4 வகை சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறிப்பிட்ட தேதியில் வெளியிடப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னதாகவே வெளியிட தயார் நிலையில் தேர்வு முடிவுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் ‘‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லையே’’ என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன் ‘‘அங்கு முழுமையாக தெலுங்கு பேசுபவர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆகையால் அங்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெலுங்கு தெரிந்த, பேசும் ஆசிரியர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்’’ என்று கூறினார்.
கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தை சேர்ந்த வாலிபர்கள் கவுதம் (வயது 18). கார்த்திக் (21). பிரவீன் (19). விக்னேஷ் (19), பில்கிளிண்டன் (20).
இவர்கள் 5 பேரும் நண்பர்கள். இவர்களில் நேற்று கார்த்திக் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருடன் அவரது நண்பர்களும் சேர்ந்து கார்த்திக்கின் பிறந்த நாளை கொண்டாடி கொண்டிருந்தனர்.
அப்போது கார்த்திக் தனது மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் குஷியுடன் சென்று கொண்டிருந்தார். வளைந்து... வளைந்து பைக்கை ஓட்டினாராம்
இதை கண்ட அப்பகுதியை சேர்ந்த நிதி நிறுவன அதிபரான நந்தீஸ்வரன் (31) என்பவர், “ஏன் தம்பி இப்படி பயமுறுத்துவது போல் வண்டி ஓட்டுகிறாய்?” என்று கேட்டார்.
இது தொடர்பாக அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. பிறகு அது மோதலாக வெடித்தது.
இந்த மோதலில் ஆத்திரம் அடைந்த கார்த்திக் மற்றும் பில் கிளிண்டன் ஆகிய 2 பேரும் நந்தீஸ்வரனை சரமாரியாக கத்தியால் குத்தினார்களாம்.
இதில் அவருக்கு இடுப்பு கழுத்தில் கத்திக்குத்து விழுந்தது. ரத்த வெள்ளத்தில் துடித்தார். அவரை தாக்கிய 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்களாம். கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த நிதிநிறுவன அதிபர் நந்தீஸ்வரன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான 5 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள். #Tamilnews
பெருந்துறை:
காஞ்சிக்கோவில் அருகே உள்ள கருங்கரடு, கரிச்சிக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 70). இங்கு இவருக்கு சொந்தமான விவசாய தோட்டமும், வீடும் உள்ளது. வாரத்துக்கு ஒருநாள் மட்டும் இந்த வீட்டுக்கு சின்னம்மாள் வருவார். மற்ற நாட்களில் ஈரோடு அவல் பூந்துறை, கஸ்பாபேட்டையில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருப்பார்.
வழக்கம்போல கடந்த 15-ந் தேதி கரிச்சிக்காடு தோட்டத்து வீட்டுக்கு சின்னம்மாள் வந்தார். வீட்டின் முன்பக்க கதவில் அவர் போட்டிருந்த பூட்டை திறந்தார்.
ஆனால் கதவை திறக்க முடியவில்லை. உள் பக்கமாக கதவு மூடப்பட்டிருப்பதை சின்னம்மாள் உணர்ந்தார். எனவே இது தொடர்பாக கஸ்பாபேட்டையில் இருந்த தனது பேரன் கோகுலிடம் (சின்னம்மாள் மகளின் மகன்) செல்போனில் தொடர்பு கொண்டு கூறினார்.
அதற்கு கோகுல், ‘‘கதவின் பூட்டு பழுதுபட்டிருக்கும். நீங்கள் கஸ்பாபேட்டைக்கு வந்து விடுங்கள். நாளை (அதாவது 16-ந் தேதி) கார் பெண்டரை அழைத்து சென்று பழுது நீக்கிக்கொள்ளலாம்’’ என்று பாட்டியிடம் கூறினார்.
இதையடுத்து சின்னம்மாள் கஸ்பாபேட்டைக்கு வந்தார். நேற்று பேரன் கோகுலுடன் கரிச்சிக்காடு தோட்டத்து வீட்டுக்கு சென்றார். பழுது நீக்கி கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
எனவே பூட்டை உடைத்து கதவை திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறக்கப்பட்டு பொருட்கள், துணிமணிகள் சிதறி கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னம்மாள் வீட்டில் வைத்திருந்த நகைகள் இருக்கிறதா? என்று பார்த்தார்.
ஆனால் அவற்றை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து அங்கிருந்த 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மேலும் 2 கிலோ வெள்ளி பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர்.
கொள்ளை போன தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே தோட்டத்து வீட்டுக்கு சின்னம்மாள் வருகிறார் என்பதை நோட்ட மிட்டே மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து வந்து மாடியில் ஏறி அங்கு கிரில் கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
கொள்ளையடிக்கும் போது யாரும் உள்ளே வந்து விடக்கூடாது என்பதற்காகவே உள் பக்கமாக கதவை தாழிட்டுக் கொண்டு நகை, பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து காஞ்சிக்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கவுந்தப்பாடி:
ஈரோட்டில் இருந்து அலுமினிய பீடிங் வேலை செய்யும் நாகராஜ் (வயது 50) என்பவர் சரத்குமார் (22) என்பவருடன் மொபட்டில் ஆப்பக்கூடலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
மொபட்டை நாகராஜ் ஓட்டினார். கவுந்தப்பாடி அருகே வளையக்காரபாளையம் குட்டை பக்கம் வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளும், நாகராஜ் ஓட்டி வந்த மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வளையக்கார பாளையத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (35), நாகராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். சரத்குமாருக்கு கால் முறிந்தது. ராமச்சந்திரனின் மகன் அருணுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சை பலனின்றி நாகராஜ், ராமச்சந்திரன் ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். மற்ற 2 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கவுந்தப்பாடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 31). பால் கம்பெனி ஊழியர். இவரது மனைவி நந்தினி (25).
குடும்ப சூழ்நிலை காரணமாக சம்பத்நகரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 15 ஆயிரம் கடன் பெற்றார்.
அதில் பாதி பணத்தை பெருமாள் கொடுத்து விட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் ஸ்கூட்டரில் பெருமாள் அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் அங்கு வந்து கந்து வட்டி கேட்டதாக தெரிகிறது. பணம் கேட்டு பெருமாளை அவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
நிதி நிறுவனத்துக்கு பெருமாளை தூக்கி சென்று தாக்கி மிரட்டல் விடுத்ததாகவும், ஆபாசமாக பேசியதாகவும் தெரிகிறது.
இதனால் பெருமாள் மன விரக்தியில் இருந்தார். வீட்டில் இருந்த அவர் விஷம் குடித்தார். இதை பார்த்த அவரது மனைவி மற்றும் அக்கம் பக்கத்தினர் பெருமாளை மீட்டனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு பெருமாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட்டதால் அணையின் நீர்மட்டம் 4 அடியிலிருந்து 5 அடி வரை குறைந்தது.
இதற்கிடையே நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததையொட்டி அணைக்கு கணிசமாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது நேற்று குறைந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று அணையின் நீர்பிடிப்பு பகுதியான ஊட்டி மலை பகுதியில் மழை பெய்தது. இதையொட்டி அணைக்கு நீர் வரத்து இன்று அதிகரித்துள்ளது.
இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1244 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிக்கிறது. அணையின் நீர்மட்டம் 48.69 அடியாக உள்ளது.
குடிநீருக்கு பவானி ஆற்றுக்கு 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
நீர்பிடிப்பு பகுதியில் இதே போல் தொடர்ந்து மழை பெய்தால் ஓரிரு நாட்களில் அணையின் நீர்மட்டம் 50 அடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 45). தறிப்பட்டறை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு ஈரோடு நசியனூர் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ், ஸ்கூட்டரின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அந்தோணிராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அந்தோணிராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வீதிகளில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் மருத்துவக்கழிவுகளை கொட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு சில தனியார் ஆஸ்பத்திரிகளின் மருத்துவ கழிவுகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டப்படுவதாக ஈரோடு மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. எனவே மருத்துவக்கழிவுகளை குப்பையில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில் ஈரோடு பெரியார்நகர் பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நேற்று காலை ரோந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பை தொட்டியில் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். அவருடைய உத்தரவின்பேரில் நகர்நல அதிகாரி டாக்டர் சுமதி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அங்கு மருந்து பாட்டில்கள், பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் கிடந்தன. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சீனிஅஜ்மல்கான் நடவடிக்கை எடுத்தார். மேலும், குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளும் அகற்றப்பட்டது.
ஆஸ்பத்திரிகளில் இருந்து மருத்துவ கழிவுகள் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.






