என் மலர்tooltip icon

    ஈரோடு

    பவானி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகேயுள்ள குருப்பா நாயக்கன் பாளையம் விதைப்பண்ணை அருகே வசித்து வருபவர் செல்லமுத்து. இவரது மகன் சக்திவேல் (வயது 47). இவர் பவானி அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு தாவரவியல் பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் ரீதியான சில்மி‌ஷங்கள் செய்தும் பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவதாக மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து சம்பவத்தன்று காலை வகுப்பு நேரத்தில் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியைச் சார்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவியிடம் ஆசிரியர் சக்திவேல் இரட்டை அர்த்தத்தில் பேசிய தாகவும் மேலும் வேண்டுமென்றே ஒரு மாணவியை கீழே தள்ளி தூக்கி விடுவது போல அவர் முதுகில் கைவைத்து மாணவியை தூக்கி விட முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியை மோகனாவிடம் இது குறித்து புகார் அளித்தனர்.

    மேலும் தலைமை ஆசிரியை சக்திவேல் குறித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் மாணவியின் பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட ஆசிரியர் சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் பள்ளியை விட்டு வெளியே செல்ல மாட்டோம் என்று சொல்லி தலைமை ஆசிரியை அறையில் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் அங்கு வந்து மாணவியின் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் ஏற்படாத நிலையில் மாணவியின் பெற்றோர் இதுகுறித்து பவானி காவல் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந் திரன் விசாரணை நடத்தினார்.

    பின்னர் புகார் குறித்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர் சக்திவேல் பள்ளிக்கு வந்த பின்பு யாரிடமும் சொல்லாமல் பள்ளியை விட்டு வெளியேறி விட்டார் என்றும் ஆசிரியர் சக்திவேல் பள்ளி மாறுதல் பெற்று விட்டார் என்றும் மேலும் அவர் தலைமறைவாகி விட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதை அடுத்து அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாடகை வீட்டில் வட மாநில பெண்களை வைத்து விபசாரம் நடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் கண்ணகி வீதியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு அடிக்கடி சந்தேகப்படும் படியாக வெளி நபர்கள் வந்து செல்வதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு புகார் வந்தது.

    அதன்பேரில் கருங்கல் பாளையம் போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர். அப்போது 2 வாலிபர்கள் 2 பெண்களுடன் உல்லாசமாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த 2 வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் மதுரையைச் சேர்ந்த பாபு கான் என தெரியவந்தது.

    இவர்கள் இருவரும் கர்நாடகாவை சேர்ந்த 19 வயது பெண் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது.

    பெண்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விபசாரத்தில் தள்ளினார்களா? என்று குறித்தும் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுகுறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் மீட்கப்பட்ட 2 பெண்களையும் கோவையில் உள்ள காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

    மேலும் ஈரோடு பகுதியில் இதே போல் இன்னும் பலர் வாடகை வீடு பிடித்து வீட்டின் உரிமையாளர்களுக்கு தெரியாமல் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி சம்பாதித்து வருவதாக பல புகார்கள் வந்துள்ளது. இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

    ஈரோடு அருகே ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு காவேரி ரெயில் நிலையத்திற்கும், ஆனங்கூர் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாளத்தில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் சிவகாமி ராணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில் இறந்த வாலிபர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த காசி காடு, சாந்தி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது20) என தெரியவந்தது.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கார்த்திகேயன் அந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தை ரெயில் வருவதை கவனிக்காமல் கடந்தபோது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட கார்த்திகேயன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    உடல்நலக்குறைவு காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெருந்துறை தொகுதி முன்னாள் எம்எல்ஏ டி.கே.நல்லப்பன் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வாக (இந்திய கம்யூனிஸ்டு) இருந்தவர் டி.கே.நல்லப்பன் (வயது 87).

    இவர் 1980 முதல் 1984 வரை எம்.எல்.ஏ.வாக பணிபுரிந்தார். 1986 முதல் 1991 வரை யூனியன் சேர்மனாகவும் 1996 முதல் 2006 வரை கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி தலைவராகவும் பணியாற்றினார். மேலும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினராகவும் இருந்தார்.

    உடல்நலம் சரியில்லாமல் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இன்று அதிகாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி முன்னாள் எம்.எல்.ஏ டி.கே.நல்லப்பன் மரணம் அடைந்தார்.



    ஈரோட்டில் கடன் தொல்லையால் சிரமப்பட்டு வந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு சின்ன சடையம்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(45). ஸ்பின்னிங் மில் லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சங்கீதா(40). இவர்களுக்கு கண்ணன்(21) என்ற மகன் உள்ளார்.

    செந்தில்குமார் அவருக்கு தெரிந்தவர்களிடம் கடன் அதிகம் வாங்கியிருந்ததாலும், தொழில் நஷ்டம் அடைந்ததாலும், கடனை திரும்ப செலுத்த முடியாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு சென்று விட்டார்.

    இதனால், கடன் தொல்லையால் சங்கீதா சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், மன வேதனையில் இருந்த சங்கீதா சம்பவத்தன்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல், அந்தியூர் பருவாச்சி பிச்சனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம்(50). தொழிலாளி. இவர் கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் கடந்த 15ம் தேதி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதையடுத்து அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அந்தியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு அருகே தண்டவாளத்தை கடந்தவர் ரெயில் மோதி பலியானார். அவர் யார் என்பது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த மாவிலிபாளையம் ரெயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அந்த நபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது. ரெயில் மோதி இறந்தவர் நீலம் கலர் லுங்கி அணிந்திருந்தார்.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதைப் போல் நேற்றும் மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதைப் போல் நேற்றும் மழை பெய்தது.

    கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. இதைப்போல் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் நல்ல மழை கொட்டியது.

    கொடிவேரி அணை பகுதியில் 19. 2 மி.மீ மழையும், கோபியில் 19 மி.மீ மழையும் பெய்தது.

    இதைப்போல் பவானி, கவுந்தப்பாடி, நம்பியூர் பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    எலந்த குட்டை மேட்டில் 10.2 மி.மீ , கவுந்தப்பாடியில் 7 மி.மீ, பவானியில் 6.4 மி.மீ, நம்பியூரில் 3 மி.மீ, தாளவாடியில் 2 மி.மீ மழையும் பெய்தது.

    பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இன்று (புதன்கிழமை) காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2383 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 60.79 அடியாக உள்ளது.

    பெருந்துறை அருகே வயிற்று வலி காரணமாக மாட்டு தொழுவத்தில் பள்ளி மாணவன் தூக்கில் பிணமாக தொங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஈரோடு:

    பெருந்துறை அடுத்த ரைஸ்மில் புதூரை சேர்ந்தவர் சோலையரசன்(வயது 38). விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி சந்தான லட்சுமி(வயது 35). இவர்களுக்கு கவுதம்(வயது 17), நிருபன்(வயது 13) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    இதில் கவுதம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதேபள்ளியில் நிருபன் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கவுதம் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சோலையரசன் உட்பட அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். மறுநாள் காலை(நேற்று) சந்தானலட்சுமி எழுந்து, வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தபோது, கவுதம் மாட்டு தொழுவத்தில் தூக்கு மாட்டிய நிலையில் தொங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.

    சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, கவுதமை மீட்டு பெருந்துறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஆனால், டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கவுதமின் உடல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    கவுதம் எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை இது குறித்து திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாளவாடி அருகே கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி விவசாயி இவர் 4 மாடு 3 ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    ஆடு மற்றும் மாடுகளை கொட்டகையில் வழக்கம் போல கட்டி வைத்துதுள்ளார் காலை 7 மணியளவில் தனது ஆடு தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டது. வந்து பார்த்த போது தன ஆட்டை சிறுத்தை ஒன்று கடித்து தூக்கிசென்று கொண்டிருந்தது. சத்தம் போடவே சிறுத்தை ஆட்டுடன் சேர்த்து ஒடையில் குதித்து ஓடியது. இதே போல் நேற்று அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் ஆட்டை சிறுத்தை கடித்து படுகாயம் ஏற்பட்டது.

    இதுபற்றி தாளவாடி வனத்துறையினர்க்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் அந்த பகுதியில் வந்து கால் தடங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் ரங்கசாமி ஆட்டை சிறுத்தை கொன்றுள்ளது குறிப்பிடதக்கது. கடந்த 10 நாட்களில் மட்டும் தொட்டகாஜனூர் தோட்டத்துசாலை பகுதியில் 6 ஆடுகளை சிறுத்தை கொன்றுள்ளது.

    தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்பு வனத்துறையினர் சிறுத்தையை கூண்டுவைத்து பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என அந்த பகுதி மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

    சம்பவ இடத்தில் இன்று தாளவாடி வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

    மொடக்குறிச்சி அடுத்த கோவில்பாளையம் செல்லும் வழியில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள குறுகிய பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால், பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தாலுகா குலவிளக்கு ஊராட்சிக்குட்பட்ட கோவில் பாளையத்திலிருந்து ராக்கியா பாளையம் செல்லும் சாலையில் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள பாலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பாலம் மிகவும் குறுகலாக உள்ளது.

    தற்போது, ராக்கியா பாளையத்திலிருந்து கோவில் பாளையம் பகவதியம்மன் கோவில் வரை தார்சாலை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே உள்ள சிறுபாலத்தை விரிவாக்கம் செய்து பணிகளை தொடர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தை விரிவுபடுத்தி பணிகளை தொடர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ.1,00,000-க்கான காசோலையினை கலெக்டர் கதிரவன் வழங்கினார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றுக்கொண்டு பரிசீலித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்த கோபி வட்டத்தைச் சார்ந்த மோகனாம்பாள் என்பரின் கணவர் வெங்கடேசனுக்கு ரூ.1,00,000-க்கான காசோலையினையும், நீரில் மூழ்கி உயிரிழந்த பெருந்துறை வட்டத்தைச் சார்ந்த செல்வன் லிங்கேஸ்வரன் என்பவரின் தந்தை முருகன் என்பருக்கு ரூ.1,00,000 -க்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.

    வருவாய் துறையின் சார்பில் கோபி வட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்பவருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாவினையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) நிசாந்த் கிருஷ்ணா உள்பட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாலையும் இரவும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான திண்டல், வீரப்பன் சத்திரம், கருங்கல் பாளையம், கொல்லம் பாளையம், மூலப்பாளையம், ஆணைக்கல் பாளையம், லக்காபுரம், சோலார், முள்ளாம் பரப்பு ஆகிய பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்தது.

    மழை பெய்த அளவு மி.மீட்டரில் வருமாறு:- கவுந்தப்பாடி -5.8, கோபி -4.2, பவானிசாகர் -3.4, குண்டேரிபள்ளம்-3.4, ஈரோடு -3.

    ×