என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் எம்எல்ஏ"

    • ராஜேந்திரன், இடுக்கியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியது உள்பட பல்வேறு புகார்களுக்கு உள்ளானார்.
    • பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன் சந்தித்தார்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிகுளம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ராஜேந்திரன். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த இவர், இடுக்கியில் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியது உள்பட பல்வேறு புகார்களுக்கு உள்ளானார். இதனை தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்திய கம்யூனிஸ்டு, கட்சியில் இருந்து சஸ்பெண்டு செய்தது.

    இந்த சூழலில் முன்னாள் எம்.எல்.ஏ.ராஜேந்திரன், பாரதிய ஜனதாவில் இணைய போவதாக கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த 10-ந் தேதி பா.ஜ.க. மாநில தலைவர் ராஜீவ் சந்திரசேகரை திருவனந்தபுரத்தில் ராஜேந்திரன் சந்தித்தார்.

    பின்னர் நிருபர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதாவில் இணைவது தொடர்பாக விவாதித்தேன். அந்தக் கட்சியின் முடிவுக்கு காத்திருக்கிறேன் என்றார். மேலும் பா.ஜ.க.வில் சேர்வதற்கு எந்த தனிப்பட்ட கோரிக்கையோ, சிறப்பு நிபந்தனையையோ முன்வைக்கவில்லை என்றும், மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்துள்ளேன் என்றும் அவர் கூறினார்.

    இந்த நிலையில் அவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமையகத்திற்கு வந்து பாரதிய ஜனதாவில் இணைந்தார். அவருக்கு மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், கட்சி உறுப்பினர் பதவியை முறையாக வழங்கினார்.

    3 முறை கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வான அவர், கடந்த 4 ஆண்டுகளாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து பிரிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க. பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பண்ருட்டிக்கு வந்தார்.
    • சத்யா பன்னீர்செல்வம் கணவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வருபவர் சத்யா பன்னீர்செல்வம். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம். இவர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆவார்.

    கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை். இதனால் சத்யா பன்னீர்செல்வமும் அவரது கணவர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

    பின்னர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொள்ளுமாறு தலைமை அலுவலகத்துக்கு மனு அளித்தனர். இதனை தொடர்ந்து சத்யா பன்னீர்செல்வத்தையும், அவரது கணவர் பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இணைத்து உத்தரவிட்டார். மேலும் சத்யா பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பண்ருட்டிக்கு வந்தார். அவருக்கு சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6.30 மணிக்கு பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றனர்.

    அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்ததும் சத்யா பன்னீர்செல்வம் வீட்டு முன் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சத்யா பன்னீர் செல்வம் கணவர் பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் மீண்டும் அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.
    • எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.

    தேமுதிக கட்சியில் இருந்து தான் விலகுவதாக எந்த இடத்திலும் சொல்லவில்லை என அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நல்லதம்பி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேமுதிக பொதுக்குழுவில் நான்கு பேர் துணை பொது செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

    அதில் ஒரு பதவி எனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்தேன். அது கிடைக்கவில்லை என்பதால் வருத்தம் அடைந்தேன்.

    உயர்மட்ட குழு பொறுப்பில் இருந்து என்னை விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

    ஆனால், எந்த இடத்திலும் தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறவில்லை.

    என்னுடைய உயிர் மூச்சு உள்ளவரை தேமுதிகவில் தான் இருப்பேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார்.
    • எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி நேற்று கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சனை புகார் அளித்திருந்த நிலையில், இன்று கணவர் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் ஸ்ருதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

    1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார் அளித்திருந்த நிலையில் சதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

    அந்த புகாரில், "எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் பணத்தை பறிப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான புகாரை தனது மனைவி கொடுத்துள்ளார் என சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், "கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு தாங்கள் பிரிந்த நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தன் மீது பொய்யான புகார் தெரிவித்து வரும் ஸ்ருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் சதீஷ் குமார் கூறியுள்ளார்.

    • திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
    • வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். இவருடைய உறவினர் நவீன் குமார் (வயது 42).

    இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசித்து வருகிறார்.

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று இரவு வருமானவரி துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.

    மேலும் நவீன் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
    • அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல்.

    அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    கடந்த 2001- 2006 வரையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்.
    • தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்த முற்றேன்.

    மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்; பழகு தற்கினிய உள்ளம் கொண்டவர் அவர்.

    தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது.

    அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×