அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

அ.தி.மு.க. பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பண்ருட்டிக்கு வந்தார். சத்யா பன்னீர்செல்வம் கணவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை
Published on

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வருபவர் சத்யா பன்னீர்செல்வம். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம். இவர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆவார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை். இதனால் சத்யா பன்னீர்செல்வமும் அவரது கணவர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.

பின்னர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொள்ளுமாறு தலைமை அலுவலகத்துக்கு மனு அளித்தனர். இதனை தொடர்ந்து சத்யா பன்னீர்செல்வத்தையும், அவரது கணவர் பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இணைத்து உத்தரவிட்டார். மேலும் சத்யா பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பண்ருட்டிக்கு வந்தார். அவருக்கு சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6.30 மணிக்கு பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்ததும் சத்யா பன்னீர்செல்வம் வீட்டு முன் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சத்யா பன்னீர் செல்வம் கணவர் பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மீண்டும் அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com