என் மலர்tooltip icon

    ஈரோடு

    டிஎன்.பாளையம் அருகே அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கத்தியால் குத்திய வாலிபர் விரைவில் கைது செய்யப்படுகிறார்.

    டிஎன்.பாளையம்:

    டிஎன்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி பாரதி வீதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர் தனது மனைவி அன்னக்கொடி (37) மகன் மவுலிதரனுடன் வசித்து வருகிறார்.

    தேவராஜின் சகோதரர் சரவணன் (39) தனது தாயுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில், அன்னக்கொடியின் கொழுந்தனார் சரவணன் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக பேசி வருவதாக தனது கணவர் தேவராஜிடம் கூறினார்.

    தேவராஜ் தனது தம்பி சரவணனிடம் இது குறித்து கண்டித்து திட்டியுள்ளார்.

    இந்த சூழ்நிலையில் தேவராஜ் தனது மாமியார் வீடான கவுந்தப்பாடி வேலம்பாளையத்திற்கு மனைவி மற்றும் மகனையும் அனுப்பி வைத்தார்.

    அன்னக்கொடி தனது அம்மா வீட்டிலிருந்து கொண்டே மகனை கள்ளிப் பட்டி அருகே உள்ள வரப்பள்ளம் தனியார் பள்ளிக்கு அனுப்பி வைத்து கூட்டி வந்தார்.

    இதையறிந்த சரவணன் சம்பவத்தன்று மாலை வரப்பள்ளம் பஸ்டாப் அருகே காத்திருந்தார்.

    பள்ளியில் இருந்து தனது மகனை வீட்டிற்கு கூட்டி செல்ல வரப்பள்ளம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி நடந்த அன்னக்கொடியை சரவணன் திட்டியவாறே தான் மறைத்து வைத்திருந்து சூரிக்கத்தியால் வயிறு, மார்பு பகுதி, தோல்பட்டை, முதுகு என மாறி மாறி சரமாரியாக குத்தியுள்ளார்.

    இதனை எதிர்பாராத அன்னக்கொடி படுகாயம் அடைந்தார்.

    சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்ததை பார்த்த சரவணன் தன்னை தானே குத்திக் கொண்டு தனது பைக்கில் சென்று விட்டார்.

    அருகில் இருந்தவர்கள் தேவராஜ்க்கு தகவல் கொடுத்து 108-ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவ மனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக அன்னகொடி கோவை தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சரவணனும் சிகிச்சை பெற்று வருவதால் விரைவில் சரவணன் கைது செய்யப்படுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரோட்டை கடக்க முயன்ற விவசாயி கார் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், ஆவரங்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 65). விவசாயியான இவர் சொந்த வேலையாக பெருந்துறைக்கு வந்தார்.

    மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் காஞ்சிக்கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். இவர் காஞ்சிக்கோவில் ரோடு பைபாசை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக இவரது இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட சோம சுந்தரம் சுமார் 50 அடி தூரத்தில் கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விபத்தில் பலியான சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    விபத்து குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்தில் பலியான சோமசுந்தரத்துக்கு சாமியாத்தாள் என்ற மனைவி, மாலதி, கவுதமி என்ற 2 மகள்கள் உள்ளனர்.
    கட்சியை பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டு இருப்பதால், வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தீரன் சின்னமலை நினைவுநாளையொட்டி, ஓடாநிலையில் உள்ள அவரது மணிமண்டபத்தில், தீரன் சின்னமலை சிலைக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தீரன் சின்னலை நினைவுநாளில் 10 அமைச்சர்கள் பங்கேற்பதாக அறிவித்து இருந்த நிலையில், ஒருவர் மட்டும் ஏன் பங்கேற்றார்? என்று அவர்களைத் தான் கேட்க வேண்டும்.

    கட்சியை பதிவு செய்யும் வேலையில் ஈடுபட்டு இருப்பதால், வேலூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. ஒரு தேர்தலில் தோல்வி அடைந்தால் அதனை பின்னடைவு என்று சொல்ல முடியாது. சிலர் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்திற்காக கட்சியை விட்டு சென்றுள்ளனர். கட்சியை விட்டு சுயநலத்திற்காக சிலர் வெளியேறினர். அ.தி.மு.க. ரத்தம், பரம்பரை என்று சொல்லிவிட்டு தி.மு.க.விற்கு போயுள்ளனர்.

    முத்தலாக்

    பெண்களின் பாதுகாப்பிற்காக முத்தலாக் சட்டம் கொண்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. எந்த ஒரு சட்டமும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது. அரசு கொண்டு வரும் எந்த ஒரு சட்டமும் அரசியல் காரணங்களுக்காக தவறாகப் பயன்படுத்தப்படுமோ என்ற அச்ச உணர்வை இந்தியாவில் இன்று பல்வேறு தரப்பு மக்களும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    அதனால்தான், எந்த ஒரு சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டிய நோக்கம் என்பது, சட்டப்படியான நடவடிக்கையாக இருக்க வேண்டுமே தவிர, விருப்பு வெறுப்பு அடிப்படையிலான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய வேண்டுகோள்.

    முத்தலாக் விவகாரத்தில் மக்களவையில் ஒரு நிலைப்பாடும், மாநிலங்களவையில் ஒரு நிலைப்பாடும் அ.தி.மு.க. எடுத்துள்ளது. உலகிலேயே இது போன்ற நிலைப்பாடு எடுக்கும் கட்சி குறித்து நான் கேள்விப்பட்டதில்லை. இரட்டைத்தலைமை என்ற பெயரில் மக்கள் விரும்பாத ஆட்சி நடத்தும், ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்தி ஆட்சி நடத்திக் கொண்டு இது போன்ற இரட்டை நிலைப்பாட்டை எடுத்து எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவிற்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

    உள்ளாட்சித்தேர்தல் வருமா? என்று தெரியவில்லை. வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம். தமிழகத்தை குறிப்பாக விவசாயிகளை பாதிக்கிற திட்டங்களை மத்திய அரசு கொண்டு வரக்கூடாது என்பது தமிழக மக்களின் எண்ணம். ஆனால், மத்திய அரசு அதனைப் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது வருத்தமளிக்கிறது.

    இவ்வாறு தினகரன் கூறினார்.
    இன்று ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறையில் குவிந்தனர். பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.
    தமிழக மக்கள் கொண் டாடும் பண்டிகைகளில் ஒன்று ஆடிப்பெருக்கு மழை பெய்து ஆறுகளில் கரைபுரண்டோடி வரும் வெள்ளப்பெருக்கை கண்டு மகிழும் மக்கள் அதில் நீராடி மகிழ்வர்.

    இந்த நீர்நிலைகளில் புதுமண தம்பதிகள் திரண்டு வந்து புது தாலி கயிறு மாற்றி நீர் நிலைகளில் வழிபட்டு செல்வார்கள்.

    ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறையில் காவிரி, பவானி, அழுதா நதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் ஆண்டு தோறும் பக்தர்கள், புதுமண தம்பதிகள், திருமணம் ஆகாத கன்னி பெண்கள் திரண்டு காவரி ஆற்றில் நீராடி மகிழ்வார்கள்.

    அதே போல் இன்று ஆடிப்பெருக்கையொட்டி அதிகாலையில் இருந்தே பக்தர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பவானி கூடுதுறையில் குவிந்தனர்.

    பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர்.

    இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த புதுமண தம்பதிகள் ஆற்றில் புனித நீராடி மண மாலையை காவிரி ஆற்றில் விட்டு விட்டு தங்கள் வாழ்வு சிறக்க காவிரி தாயை வழிபட் டனர்.

    சுமங்கலி பெண்கள் புது தாலி கயிற்றில் மஞ்சள் தடவி தங்கள் கணவன் கையால் கழுத்தில் அணிந்து கொண்டனர்.

    நீண்ட காலமாக திருமணம் ஆகாத கன்னி பெண்களும் தங்கள் பெற்றோருடன் வந்து தங்களுக்கு வரன் அமைய காவிரி தாயை வழிபட்டு நீராடி சங்கமேஸ்வரர்- வேத வல்லி நாயகி அம்மனை மனமுருகி வழிபட்டு சென்றனர்.

    புதுமண தம்பதிகள் மண மாலைகளை பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் விட்டு வழிபட்ட காட்சி.

    கடந்த அண்டு இதே நாளில் தென் மேற்கு பருவ மழை கொட்டி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு காவிரி ஆற்றின் இரு கரைகளிலும் வெள்ளப் பெருக்கு கரை புரண்டு ஓடியது.

    ஆனால் இந்த ஆண்டு போதிய மழை பெய் யாததால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட வில்லை. இதனால் ஆற்றில் சிறிதளவே தண்ணீர் சென்று கொண்டிருந்தது. எனினும் ஆற்றின் மத்தியில் ஆழம் அதிகம் உள்ளதால் அந்த பகுதிக்கு யாரும் சென்று விட வேண்டாம் என போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் ஒலி பெருக்கி மூலம் கேட்டு கொண்டே இருந்தனர்.

    ஆடிப் பெருக்கு விழா வில் ஈரோடு மாவட்டம் மட்டுமில்லாமல் கோவை, திருப்பூர், நாமக்கல் உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் என சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடு துறையில் நீராடி வழிபட்டு சென்றனர்.

    இதே போல் ஈரோடு கருங்கல் பாளையம் காவிரி ஆற்றிலும் காலையில் இருந்தே பக்தர்கள் குவிந்த னர்.

    புதுமண தம்பதிகள் குவிந்து தங்கள் வாழ்வு சிறக்க வழிபட்டனர். புது தாலி கயிற்றை மாற்றி கொண்டனர். மண மக்கள் தங்கள் மண மாலையை பத்திரமாக கொண்டு வந்து ஆற்றில் விட்டு வணங்கினர்.
    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் தீரன் சின்னமலைக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அரச்சலூர் ஓடாநிலையில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவுநாள் ஆடிபெருக்கு விழாவாகவும் நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று காலை அரசு சார்பில் ஓடா நிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு தமிழக கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    விழாவுக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தீரன் சின்னமலை வாரிசுகளை கவுரவித்தார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஓ பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமி


    மறைந்த ஜெயலலிதாவுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ஒருங்கிணைந்து நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். இந்த ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

    இந்த அரச்சலூர் ஓடாநிலையில் நமது சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு மறைந்த ஜெயலலிதா மணிமண்டபம் கட்டினார். மக்கள் திரண்டு வந்து அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்தி அவரது தியாகத்தை வீரத்தை போற்றி வழிபட்டு செல்கிறார்கள்.

    மேலும் இங்கு மார்பளவில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு பதில் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 17-ந் தேதி புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டு அந்த சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பார்.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

    விழாவில் எம்.எல்.ஏ.க்கள் சிவசுப்பிரமணி தனியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    பெருந்துறை அருகே மனைவிக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதால் மனமுடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அருகே உள்ள வெங்கமேட்டை சேர்ந்தவர் வடிவேல் (வயது 40). இவர் ஈரோடு பழைய பாளையத்தில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

    இவரது முதல் மனைவி பெயர் சாந்தி (வயது 35). திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை.

    இதனால் தனது அத்தை மகள் உமா மகேஸ்வரியை அவர் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதனால் மனவேதனையில் இருந்த வடிவேல் வீட்டில் கதவை பூட்டி கொண்ட தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பொருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த 10 அமைச்சர்கள் நாளை ஈரோடு வருகிறார்கள்.
    ஈரோடு:

    சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் நாளை (சனிக்கிழமை) கடைப்பிடிக்கப்படுகிறது.

    ஈரோடு அடுத்த அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் நாளை காலை இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தமிழக அரசு சார்பில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

    அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், சரோஜா, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 10 அமைச்சர்கள் கலந்து கொண்டு தீரன்சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள்.

    மேலும் விழாவில் எம்.எல்.ஏ.க்கள் தோப்பு வெங்கடாச்சலம், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, சிவசுப்பிரமணி, ராஜாகிருஷ்ணன், ஈஸ்வரன், கணேச மூர்த்தி எம்.பி.யும் கலந்து கொள்கிறார்கள்.

    முன்னதாக மாவட்ட கலெக்டர் கதிரவன் வரவேற்று பேசுகிறார்.

    இதே போல் தி.மு.க. சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அரச்சலூர் ஓடாநிலையில் உள்ள தீரன்சின்னமலை மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி நாளை பிற்பகல் 12 மணிக்கு நடக்கிறது. ஈரோடு வரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க தி.மு.க. அனைத்து அணியினரும், தொண்டர்களும் திரண்டு வர வேண்டும் என முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

    மேலும் தீரன் சின்னமலை நினைவு தினத்தில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்று தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
    சத்தியமங்கலத்தில் வாலிபரை கல்லால் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த கொலையாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அடுத்த மேட்டூரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 30). இவர் சத்தியில் உள்ள ஒரு மெக்கானிக் பட்டறையில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் வாலிபர் ஜெகதீசன் நேற்று அதிகாலை சத்தி-கோவை ரோட்டில் பழைய போக்குவரத்து கழகம் அருகே பிணமாக கிடந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    வாலிபர் ஜெகதீசனை கொலையாளிகள் அவரது இடுப்பு பகுதிக்கு கீழ் கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்திருப்பது அதிர்ச்சியை அளித்தது.

    அவருடன் பழகிய நண்பர்களே இந்த கொடூர கொலையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

    ஜெகதீசன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு பதறியடித்தப்படி ஒடி வந்தனர்.

    கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை எடுக்க கூடாது என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அவர்களிடம் போலீசார் இன்னும் ஓரிரு நாளில் கொலையாளியை பிடித்து விடுவோம் என்று கூறிய பிறகே கலைந்து சென்றனர்.

    இந்த நிலையில் கொலை பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிருஷ்ணசாமி தலைமையில் கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை நியமிக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் அதிரடியாக விசாரித்து வருகிறார்கள். போலீசார் கூறும்போது கொலை பற்றி எங்களுக்கு துப்பு கிடைத்து உள்ளது. கொலையாளியை நெருங்கி விட்டோம் இன்று அல்லது நாளைக்குள் பிடித்து விடுவோம் என்று கூறினர்.

    வாலிபர் ஜெகதீசன் படுகொலை செய்யப்பட்டதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. 

    ஈரோட்டில் காதல் மனைவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக அவரது கணவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்புரம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகள் சுகுணா (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மே மாதம் 17ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் கணவன் மனைவி இருவரும் ஈரோடு நாடார் மேடு விநாயகர் கோவில் வீதியில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி மதியம் சுகுணா வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் சுகுணாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் வேல்முருகன் திடீரென மாயமாகி விட்டார்.

    இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுகுணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் சுகுணாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேல்முருகனை தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் வேல்முருகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் தலைமறைவாக இருந்த வேல்முருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வேல்முருகனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் சூரம்பட்டி போலீசார் வேல்முருகனை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர்.

    டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் வேல்முருகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் திருமணமாகி மூன்று மாதமே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ முருகேசனும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    கோபி அருகே வீட்டில் இருந்த பள்ளி மாணவி திடீரென மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    கோபி சிவசண்முகம் வீதியை சேர்ந்தவர் ஹரிராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 18). கோபியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். இதற்கிடையே அப்பகுதியில் உள்ள கோவிலில் திருவிழா நடப்பதால் மாணவி பள்ளிக்கு போகவில்லை. வீட்டில் இருந்தார்.

    இந்த நிலையில் வெளியே போய் வந்த அவரது தாயார் வீட்டில் இருந்த மகளை காணாதது கண்டு திடுக்கிட்டார். பல இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை. இது குறித்து மாணவியின் தாயார் கோபி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகிறார்.
    ஈரோடு மாவட்டத்தில் 1500 தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றன.
    ஈரோடு:

    இந்திய மருத்துவ கழகத்தை கலைப்பதை எதிர்த்தும், மருத்துவ துறைக்கும், பொது மக்களுக்கும் எதிரான தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

    இதனை ஏற்று இன்று இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் 24 மணி நேரம் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆனால் அவசர சிகிச்சை நடந்தது.

    ஈரோடு மாவட்டத்திலும் தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு நாள் வேலை நிறுத்தம் இன்று தொடங்கியது.

    ஈரோடு மாவட்டத்தில் 1500 தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

    இன்று புறநோயாளிகளுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இதனால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால் அவசர கால சிகிச்சை பிரிவு இன்று வழக்கம் போல் இயங்கின.

    மேலும் இந்திய மருத்துவ சங்கத்தின் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் ரவிச்சந்திர பிரபு கூறியதாவது:-

    தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தை சேர்ந்த அரசு டாக்டர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள் அனைவரும் இன்று ஒருநாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தனியார் ஆஸ்பத்திரியில் இன்று ஒரு நாள்அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி, பெருந்துறை உள்ளிட்ட பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை இன்றி அவதி அடைந்தனர்.

    கோபி பகுதியில் உள்ள 50 தனியார் ஆஸ்பத்திரிகள் இன்று இயங்கவில்லை. அதே சமயம் அவசர சிகிச்சை வழக்கம்போல் நடந்தது.

    தனியார் ஆஸ்பத்திரி ஸடிரைக் தெரியாமல் நோயாளிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    காஞ்சிக்கோயில் துணை மின்நிலையத்தில் வரும் 2-ந்தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    காஞ்சிக்கோயில் துணை மின் நிலையத்தில் வரும் 2-ந் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி 2-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    காஞ்சிக்கோயில், பள்ளப்பாளையம், கவுண்டம் பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம்பாளையம், அய்யன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம்பாளையம், காந்தி நகர், நடுவலசு, கருக்கம்பாளையம், துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான் வலசு, சூரியம்பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம்பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன் பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனூர் மற்றும் கோயில்காட்டுவலசு.

    இத்தகவலை ஈரோடு மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்தார்.

    ×