என் மலர்
செய்திகள்

காதல் மனைவி மர்ம மரணம்- தறைமறைவான கணவர் திண்டுக்கல் கோர்ட்டில் சரண்
ஈரோடு:
திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்புரம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகள் சுகுணா (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த மே மாதம் 17ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் கணவன் மனைவி இருவரும் ஈரோடு நாடார் மேடு விநாயகர் கோவில் வீதியில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி மதியம் சுகுணா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வேல்முருகன் சுகுணாவை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். பின்னர் வேல்முருகன் திடீரென மாயமாகி விட்டார்.
இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுகுணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அவர்கள் சுகுணாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான வேல்முருகனை தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் வேல்முருகனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த வேல்முருகன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். வேல்முருகனிடம் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் சூரம்பட்டி போலீசார் வேல்முருகனை ஈரோட்டுக்கு அழைத்து வந்தனர்.
டவுன் டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் வேல்முருகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் திருமணமாகி மூன்று மாதமே ஆவதால் இதுகுறித்து ஈரோடு ஆர்.டி.ஓ முருகேசனும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.






